ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?

// கிரேக்க புராணங்கள், காவியங்கள் காலத்தால் முந்தையவை.  ஆகவே அவற்றின்
கவித்துவம் எளிமையானது, அவற்றின் தத்துவார்த்தம் முழுமைநோக்கி
விரியாதது.//

// தத்துவார்த்தமான பெருமதங்கள் உருவாகிக் குறியீடுகள் பிரம்மாண்டமாகப் பெருகியபிறகு உருவாகும் காவியங்களில் இருக்கும் கவித்துவச்செறிவை இவற்றில்
நாம் காணமுடியாது //

ஜெ,

கிரேக்க புராணங்கள் ராமாயண, மகாபாரதங்களின் ஆதி வடிவை விடவும் முந்தையவை என்று கருதுகிறீர்களா? எனக்கென்னவோ அவற்றில் இருக்கும் primitive  தன்மையினால் அவை இந்திய இதிகாசங்களுக்கும் முந்தைய காலத்தவையாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் வலிந்து கொள்வதாகப் படுகிறது.

வலுவான அகழ்வுச் சான்றுகள் கிரேக்க வரலாற்றைப் பொறுத்தவரை கிடைத்துள்ளன.பண்டைய இந்திய வரலாற்றில் அகழ்வில் கிடைத்ததையும் இலக்கியச் சான்றுகளையும் வைத்துப் புதிர்த்தன்மையுடன் கூடிய வரலாற்றையே நம்மால்
கட்டமைக்க முடிகிறது. ஆனால், அதனாலேயே கிரேக்க வரலாறு தொன்மையானதாகி விடாது அல்லவா?

குறிப்பாக, வரலாற்றில் இரண்டு கலாசாரங்களும் சந்திக்கும் காலகட்டம்.
அலெக்சாண்டரும், மெகஸ்தனிசும் நன்கு வளர்ந்த ஒரு கலாசாரத்தையே இந்தியாவில் கண்டு பதிவு செய்துள்ளார்கள். அந்த இடத்திற்கு வர, கிரேக்கத்தை விட முந்தையதாக இல்லாவிட்டால் கூட கிரேக்கம் அளவுக்கே தொன்மையானதாகவாவது பண்டைய இந்தியப் பண்பாட்டு வளர்ச்சி இருந்திருக்க வேண்டும்.

ரிக்வேதத்திலிருந்து ராமாயணம் வரை வருவதற்குக் குறைந்தது 500 ஆண்டுகள் பிடித்திருக்கும்.ராமாயணத்தில் கோசலம், மிதிலை, கிஷ்கிந்தா போன்ற சிறு அரசுகளே கதைக் கருவில் உள்ளது. அதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் பிறகே மகாபாரதம் கூறும் பேரரசுகள் வந்திருக்கின்றன.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இலியட்டும் ராமாயணத்தின் முதல் வடிவமும் சமகாலத்தவை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஜடாயு

[இலியட்]

அன்புள்ள ஜடாயு,

பண்பாட்டின் வரலாற்றையும் தொன்மங்களின் வரலாற்றையும் காவியங்களின் வரலாற்றையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்ளக்கூடாதென நினைக்கிறேன்.

இந்தியப்பண்பாடு, கிரேக்கப்பண்பாடு இரண்டையும் ஒப்பிட்டு எது காலத்தால் முந்தையது என்று கேட்டால் எவராலும் இறுதியான பதிலைச் சொல்லிவிடமுடியாது. இரண்டும் ஒரே காலத்தவை, ஒரே தொன்மை கொண்டவை என்பதே சரியாக இருக்கும்.
சொல்லப்போனால் ரிக்வேதத்தின் பலபகுதிகள் கிரேக்க நாகரீகத்தைவிடத் தொன்மைகொண்டவையாக இருக்கக்கூடும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

[வான்மீகி]

ஆனால் நம் மரபில் இதிகாசங்கள் காவிய வடிவில் உருவானது வெகுவாகப் பிந்தித்தான். சம்ஸ்கிருத மொழிக்கட்டுமானத்தை வைத்து நோக்கினால்கூட ரிக்வேதத்துக்கும் வான்மீகி ராமாயணத்துக்கும் ஆகக் குறைந்தது ஆயிரம் வருட இடைவெளி இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. அதைப் பலர் எழுதியிருக்கிறார்கள்.

ரிக்வேத காலகட்டத்திலேயே குலக்கதைப் பாடகர்கள் இருந்திருக்கிறார்கள்.வேதங்களிலேயே பாடகர்கள் ரிஷிகள் என்ற பிரிவினை இருந்திருக்கிறது.
மகாபாரதமும் ராமாயணமும் நிகழ்ந்த காலகட்டத்தில் சூதர்கள் குலத்தொழிலாகவே பாடகர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் தொன்மக்கதைகளையும், குலமுறைகளையும், வீரகதைகளையும் பாடியிருக்கிறார்கள்.

[மகாபாரதம்]

ஆனால் அவை தொகுக்கக்கப்பட்டு இன்றுநாம் காணும் இதிகாச காவியங்களின் வடிவுக்கு வந்தது பல நூற்றாண்டு கழித்துத்தான். சூதர்களின் பாட்டுக்கள் எளிய மொழியில் நேரடியான உணர்ச்சிகளுடன் நாட்டார் தன்மையுடன்தான் இருந்திருக்கும். ஆனால் ராமாயணமும் மகாபாரதமும் எழுதப்பட்ட காலகட்டத்தில் அவை செவ்வியலாக்கம் பெற்றுவிட்டன. நுட்பமும் செறிவும் அடைந்துவிட்டன.

பேசுபொருளாகப் பிரபஞ்ச தரிசனமும் எக்காலத்திற்கும் உரிய மாறா அறமும் முன் எழுந்து விட்டன.

காலவரிசைப்படிச் சொல்லப்போனால் வேதங்கள், முதற்கால உபநிடதங்
களுக்குப் பின்னரே இதிகாசங்கள் இன்றைய மாகாவிய வடிவில் தொகுத்து எழுதப்பட்டிருக்கும் என்பதை அந்த மொழிக்கட்டுமானம் காட்டுகிறது என்பதே நான் அறிந்தது.

[ஹோமர்]

ஆனால் கிரேக்க ஆதிகாவியமான இலியட், ஒடிசி ஆகியவை ஆரம்ப காலத்திலேயே நேரடியாக வாய்மொழி வீரகதைப்பாடல்களில் இருந்து காவியமாக ஆகிவிட்டன. ஆகவே அவற்றில் செவ்வியல் அம்சத்தைவிடவும் நாட்டார் அம்சம் மேலோங்கி இருந்தது.

தத்துவத்தை விடவும்  உணர்ச்சிகள் மேலோங்கி நின்றன. முழுமைநோக்கை விடவும் நடைமுறை நோக்கு விஞ்சி நின்றது

பல்வேறு காரணிகளை வைத்து இலியட், ஒடிசி இரண்டும் வேதயுகத்தின் கடைசி காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றே நான் நினைக்கிறேன். அவற்றின் பேசுபொருளில் குல அறம் மட்டுமே இருப்பது முதல் வெண்கலமே உலோகமாக இருப்பது வரை ஏராளமான அக, புறச் சான்றுகளைக் காணமுடியும். அதாவது ராமாயணம் மகாபாரதம்
ஆகியவற்றை விட எப்படியும் ஐநூறாண்டுக்காலம் முந்தையவை அவை.

அதற்குப்பொருள் கிரேக்க நாகரீகம் இந்திய நாகரீகத்தை விடப் பழைமையானது என்பதல்ல. இந்திய இதிகாச நிகழ்வுகளின் வரலாற்றுக் காலகட்டம் இலியட்,ஒடிசி காவியங்களின் வரலாற்றுக் காலகட்டத்தைவிடப் பிந்தையது என்றும் அல்ல. அவை
அப்படிச் சொல்லிவிடக்கூடியவை அல்ல. ராமாயணமும் மகாபாரதமும் இன்றுள்ள காவிய வடிவில் எழுதப்பட்ட காலம்,இலியட் ஒடிசியை விட ஐந்து நூற்றாண்டுப் பிறகு என்று மட்டும்தான்

ஜெ

முந்தைய கட்டுரைபுனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?
அடுத்த கட்டுரைஉனக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்பந்தம்?