கல்வி- கடிதம்

அன்புள்ள ஜெ..
பல வரைவுகள் கண்டேன். என் எண்ணங்கள். சில பொதுவானவையே. யாரையும் புண் படுத்தும் நோக்கமல்ல.

விவாதங்களில், எண்ணங்களைப் பரப்பி விட்டு, உபயோகமானவற்றைப் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில்..
எனக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. தம்பி, தங்கைகளின் குழந்தைகளின் வளர்ச்சிகளை சற்று தூரத்திலிருந்து களிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் என் பார்வை சற்று சாய்ந்து (skewed) இருக்கலாம்.

ஆசிரியர் முன்னுருவம்
மாணவன் பின்னுருவம்
கல்வியோ பிணைப்புருவம்
கட்டுரையே பொருளுருவம்

(தைத்திரீய உபநிஷதின் சுமாரான மொழி பெயர்ப்பு )

ஆசிரியர், மாணவன், கல்வி மற்றும் கட்டுரை மொத்தமாக நகர்கிறதோ (paradigm shift) என தோன்றுகிறது. காலத்தே இருந்த சமன்பாடுகள் – குரு குலம், வீட்டுக் கல்வி (Home Schooling), சமூகக் கல்வி எனப் பல வகைகள் தோன்றுகின்றன. ஒரு சில, கொள்கைகளை நிரப்பி மனதிற்கு சமாதானம் அளிக்கின்றன.

அண்ணா பொறியியல் கல்லூரியில் பணி புரியும், என் மனைவி சொல்லும் ஆச்சரியமான விஷயம் ஒன்று, 80  பேர்களில் உள்ள ஒரு வகுப்பில், வெறும் 5 பேர்களே பொறியியலில் விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களின் நோக்கம் பற்றிப் பிறிதொரு சமயம் விவாதிக்கலாம். மாணவர்களின் கல்வி பற்றிய நோக்கத்தில் பெரும் மாற்றம் உள்ளது. நான், அன்றாடம் பழகும் சிறுவர்  மற்றும் சிறுமியரிடம் காண்கிறேன். 5 நிமிடங்களுக்கு மேல் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் (TV யாலோ?) கஷ்டப் படுகிறார்கள். தியானம், உற்சாகமான வேறு உலகச் செய்திகள் என ஊக்குவித்தாலும் சற்று கடினம்தான்.

வித விதமான குறிப்புகள் – இதோ …
கல்வியையே விளையாட்டு முறைகளில் (games approach) கற்றுக் கொடுக்கலாமோ என ஆராய்ச்சி நடந்து வருகின்றது.
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மாணவர்களின் கைகளில் கைபேசி வேறு – SMS  செய்தது போக மீதி கவனம் – அல்லது செய்து கொண்டே..
வகுப்பில் – உரையாடல்களாக க்(interactive session)  கேட்கும் கேள்விகளுக்குப் பதில் மௌனம், அல்லது ஒத்துழையாமை.
உலக நடப்பில் அக்கறையின்மை (தொழில் நுட்பமோ – சமூகமோ – அரசியலோ).

இதனைத் தவிர்த்து ஒரு சில சிறந்த மாணவர்கள் இருக்கிறார்கள். நான் சொல்லியது பொதுவான நோக்கே.

மாணவர்கள் – ஆசிரியர்கள் – கல்வி – கட்டுரைகள் பற்றி நீண்ட நேரம் விவாதித்தாலும் – சிக்கலான சமூக நிஜங்கள் பெருகிக் கொண்டே போகும்.

ஆசிரியர்களின் (மனத் தாங்கல்களை மீறிய) அன்பும், மாணவர்களின் (எளிமையான) மரியாதையும், இந்த நிலப் பரப்பை (landscape)  மாற்றலாம்.

இதற்கென்று மந்திர மாத்திரை (magic pill)  ஏதும் இல்லையோ என தோன்றுகிறது.

இந்த மொத்த நகர்தலை (paradigm shift) உள்நிறுத்தி விவாதித்தால், தொடர்ந்து கடுமையான உழைப்பில் முயற்சி செய்தால் – சமூகம் பயனுறலாம் எனத் தோன்றுகிறது

அன்புடன்
முரளி

முந்தைய கட்டுரைபத்மநாபனின் நிதியும் பொற்காலமும்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் (2011) – 1