வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை

திம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்ளி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச் சரிந்துகொண்டே இருந்தன. சாலையில் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. ஆள் வைத்து ஒவ்வொருநாளும் அள்ளாவிட்டால் சாலை மறிக்கப்பட்டுவிடும்.

திம்பு நினைவுச்சின்னம்-யுவன்

 

சாலையோரமாக ஒரு ஆறு. குளிர்நீலமாகச்சுழித்துக் கொப்பளித்துச் சென்றுகொண்டிருந்தது. காரை நிறுத்தி அந்த ஆற்று மீது கட்டப்பட்ட பாலத்தில் ஏறி நின்றோம். மரப்பாலம். அருகே பழைய இரும்பு தொங்குபாலம் கிழிந்து நின்றது. அதில் தொற்றி ஏறி அரங்கசாமி உயிரைப் பணயம் வைத்துக் காட்சிதந்தார். எந்த இலட்சியத்தைவிடவும் புகைப்படத்துக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களே உலகில் அதிகம். மிக அமைதியான மலைகள் நடுவே ஒரு செம்மண் பாதை பாலம் தாண்டிச் சென்றது . எங்கே? அது சென்று சேரும் ஊர் எப்படி இருக்கும்? வசீகரமான மர்மம்

பரோ சமவெளியில் இருக்கும் பரோ பூட்டானின் இரண்டாவது பெரிய நகரம். நகரம் என்று ஓர் அலங்காரமாகச் சொல்லவேண்டியதுதான். பரோ உண்மையில் ஒரே ஒரு பெரிய சாலையும் சில கிளைச்சாலைகளும் கொண்ட ஒரு தாழ்நிலம். சுற்றிலும் பனிமுடிகள் கொண்ட மலைகள் சூழ்ந்துள்ளன. நடுவே மிகச்சுத்தமான இருபட்டைச் சாலை. இருபக்கமும் பூட்டான் பாணிக்கட்டிடங்கள் கொண்ட கடைவீதி, விடுதிக்கட்டிடங்கள். கௌபாய் படங்களில் வரும் ஒரு சினிமா செட்டுக்குள் சென்றதுபோல பிரமை.

திம்புவுக்கும் பரோவுக்குமான வேறுபாடு மனதைக் கவர்ந்தது.பரோ ஐம்பது வருடம் முன்பத்திய திம்பு. கட்டிடங்கள் பழையவை, குட்டையானவை. ஆனால் நேர்த்தியானவை. பரோவின் ஓர் ஓட்டலில் நுழைந்து சாப்பிட்டோம். அவசரமாகச் சொன்னதனால் ரொட்டி மட்டும்தான். மது அருந்தாமைக்காக விடுதிக்கார அம்மாள் மனம் வருந்தியிருப்பாள் என்று தோன்றியது

 

பரோவின் எல்லா பழைய கட்டிடங்களும் மடாலயங்கள்தான். பரோவின் நெடுஞ்சாலையிலேயே ரின்பங் ஜோங் என்ற பெரிய மடாலயம் இருக்கிறது. இது இன்று அரசு அலுவலகமாக உள்ளது. பரோ நகரை நடுவாக வகிர்ந்து செல்லும் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் வழியாக உள்ளே சென்று அதைப் பார்க்கவேண்டும்.  உள்ளே பதினான்கு  புத்தர் சன்னிதிகள் உள்ளன. ஆனால் வழக்கம்போல ஒரே ஒருநாள்தான் பரோவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே செல்லவில்லை.

எங்கள் திட்டப்படி நாங்கள் டா ஜோங் என்ற மடாலயத்தையும் தேசிய அருங்காட்சியகத்தையும் மட்டுமே காணமுடிந்தது. டா ஜோங் ஒரு பிரம்மாண்டமான கோபுரம். ஒரு மையத்தைச்சுற்றிச் சுழன்றுசெல்லும் பாதைகள் கொண்டது. பதினாறாம் நூற்றாண்டில் மண்ணாலும் மரங்களாலும் கட்டப்பட்ட இக்கட்டிடம் இன்றும் மிக உறுதியாகவே உள்ளது. அதன் இடப்பக்கமாக ஒரு பெரிய மடாலயம். அதுவும் இன்று அருங்காட்சியகமாகவே உள்ளது.

டா ஜோங் வாசலில் ஏராளமான சின்ன லாமாக்கள் அமர்ந்திருந்தார்கள். அடர்சிவப்பு ஆடை. மொட்டைத்தலை. மஞ்சள் முகம். உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தை அதன் அண்ணனை பெஞ்சில் இருந்து எழுப்பி விளையாட்டுக்குக் கொண்டுசெல்ல முயன்றது. படிகளிலமர்ந்திருந்த அதன் அம்மாவும் தோழியரும் சீனச்சாயல் இல்லாமல் பர்மியச் சாயலுடன் இருந்தார்கள். வசந்தகுமாரின் படங்களுக்குச் சிரித்துக்கொண்டே காட்சியளித்தார்க்ள்.

பரோவின் தேசிய அருங்காட்சியகம் திபெத்துக்கு வெளியே திபெத் பண்பாட்டைக் காட்டும் அரிய மையம். திபெத்திய கலைப்பொக்கிஷங்களின் சேகரிப்பு என இதைச் சொல்லலாம். திபெத்தின் கலை,முற்றிலும் தனித்தன்மை கொண்டது. மூன்று ஊற்றுக்களின் கலவைப் பெருக்கு அது. ஒன்று , இந்திய பௌத்தம். இன்னொன்று திபெத்திய மலைப்பழங்குடிகளின் தொல்மரபுகள். மூன்று சீனக்கலை. நெடுங்காலம் புற உலகில் இருந்து தனித்திருந்தமையாலேயே திபெத்திய கலை அபாரமான தனியுலகமாக ஆகிவிட்டிருக்கிறது

திபெத்திய மலைக்குடிகளுக்குப் பூசாரிகள் முக்கியமானவர்களாக இருந்திருக்கலாம். பூசாரியே மன்னராகவும் இருந்திருக்கலாம். பௌத்தம் சென்றபோது பௌத்த பிட்சுக்களும் பூசாரிகளும் கலந்த ஒரு ஆளுமை அங்கே உருவாகி வந்தது. அவர்களையே ஒட்டுமொத்தமாக லாமாக்கள் என்கிறார்கள். வேறெங்கும் பௌத்த பிட்சுக்களுக்கு இத்தகைய ஒரு அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கவில்லை. திபெத்திய பண்பாட்டில் ஒரு லாமா மானுடதெய்வம். பௌத்ததில் உள்ள போதிசத்வர் என்ற உருவகம் அதனுடன் இணைகிறது. போதிசத்வர் என்பவர் கிட்டத்தட்ட புத்த நிலையை அடைந்தவர். மானுடர்பொருட்டு மானுடராக சிலகாலம் இங்கே வாழ்ந்தவர். அதாவது அவதூதர் அல்லது பரமஹம்சர்.

 

திம்பு, அமுதகலச புத்தர்

திபெத்தில் ஏராளமான போதிச்த்வர்கள்- லாமாக்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வழிபடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மேல் அதிமானுடத்தன்மை புனைந்தேற்றப்பட்டுள்ளது. அவர்கள் மெல்லமெல்ல புராணக்கதாபாத்திரங்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். அந்தப் புராணங்களின் ஒட்டுமொத்தம் இந்திய, கிரேக்க புராணங்களுக்கு நிகரான ஒரு தனி உலகம். அவற்றை முழுக்க அறியாமல் அந்தக் கலையுலகை நன்கறிய இயலாது. ஒட்டுமொத்தமாக ஒரு பிரமிப்புடன் பார்த்துச்செல்லவேண்டிய நிலைதான்

திபெத்திய கலை,இரு ஊடகங்களில் சாதனைகளை நிகழ்த்தியது. ஒன்று டாங்கா எனப்படும் பட்டுத்திரைச்சீலை. புத்தர் மற்றும் போதிசத்வர்களின் விதவிதமான வண்ணப்படங்களை வரைந்து வழிபடுவது திபெத்திய மரபு.  பரொ தேசிய அருங்காட்சியகத்தில் நூற்றுக்கணக்கன டாங்கா சீலைகள் உள்ளன. பெரும்பாலும் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. துலக்கமாக இருப்பவை சில. சிதைந்தவும் சிலவே. ஆனால் நானூறாண்டுகளாக அழியாமலிருக்கும் வண்ணங்கள் ஒரு மனக்கிளர்ச்சியை உருவாக்கின. பெரும்பாலானவை திபெத்தில் இருந்து திபெத் சீனாவால் கைப்பற்றப்பட்டபோது கொண்டுவரப்பட்டவை. அந்த ஓவியங்களை முழுமையாகப் பார்க்கவே ஒரு நாள் ஆகும்

 

பனிமலைகள்

திபெத்தியக் கலையின் இரண்டாவது ஊடகம் மரம். மரச்சிலைகளுக்கு பொன்னிறம் சிவப்புநிறம் நீலநிறம் ஆகியவை துலங்கும் வண்ணப்பூச்சுகள் அளித்திருக்கிறார்கள். புராதனச் சீன களிமண் சிலைகளில் உள்ள சிறப்பம்சம் என்பது அவற்றின் குரூர முக வெளிப்பாடுகளும் அலங்காரங்கள் மிக்க உடைகளும்தான். அந்த அம்சங்களை திபெத்திய மரச்சிற்பக்கலை அப்படியே உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. புத்தருக்கே அதியுக்கிரமான பிசாசுத்தோற்றம் கொண்ட ஒரு அவதாரவடிவம் அளிக்கப்பட்டிருக்கிறது. போதிசத்வர்கள் , காவல்தேவதைகள் எனப் பல உக்கிரமான சிற்பங்கள் உள்ளன. அவர்களின் உடைகள் மடிந்து வளைந்து சுழன்று நிறைந்திருக்க அவற்றில் பூவேலைகளும் சரிகைவேலைகளும் அடர்ந்துள்ளன

இந்த அருங்காட்சியகத்தின் மிகச்சிறந்த கலைப்பொருள் என்பது மூன்றாவது மாடியில் இருக்கும் ஒரு சிற்பத்தொகை. திபெத்திய பௌத்த மதத்தை ஒரு மரமாக உருவகித்திருக்கிறார்கள்.  அந்த மரத்தின் கிளைகள் முழுக்க நூற்றுக்கணக்கான சிற்பங்கள். அதைச் சரியாகப் பார்த்து முடிக்கவே பலமணிநேரம் ஆகக்கூடும். நாங்களே மீளமீளப் பார்த்துக்கொண்டிருந்தோம். கொடூரத்தோற்றமுள்ள புத்தரையும் போதிசத்வர்களையும் பார்ப்பதென்பது மனதை அசைக்கச்செய்யும் ஒர் அனுபவம்

 

திம்பு நினைவுச்சின்னம்

திபெத்தியக் கலையில் பித்தளை- செம்புச்சிலைகளும் முக்கியமானவை. புத்தர்சிலைகளே எண்ணிக்கையில் அதிகம். இந்தியாவில் அதிகமும் புத்தர்சிலைகள் தர்மபிரபோதன முத்திரை [அறவுரை ]  தர்மசக்கர முத்திரை [அறவாழி ] அருள் முத்திரை  ஆகியவற்றுடனும் தியான முத்திரையுடனும்தான் இருக்கும். அபூர்வமாக பூமிஸ்பர்சம் [ஞானமடைந்தமைக்குச் சான்றாக பூமியைத் தொடும் முத்திரை]  காணப்படும். திபெத்திய பௌத்தத்தில் வஜ்ராயுதம் அல்லது அந்த முத்திரை ஏந்திய புத்தரே அதிகம். திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது. அது தாந்த்ரீக பௌத்தம். மறைச்சடங்குகள் கொண்டது

இதைத்தவிரப் பரவலாக உள்ளது அமுதகலசம் ஏந்திய புத்தர் மற்றும் பூமிஸ்பர்ஸ முத்திரை கொண்ட புத்தர். ஆனால் நம்மை அதிரச்செய்வது பெண்ணுடன் புணர்ந்த நிலையில் உள்ள புத்தரும் போதிசத்வர்களும்தான். இந்நிலை மிதுனநிலை எனப்படுகிறது. கிட்டத்தட்ட நம் சிவசக்தி லய சிற்பத்தின் அதே இலக்கணம்தான். மேதாதேவி அல்லது தாரா தேவியைப் புணர்ந்த புத்தர் ஞானமும் செயலூக்கமும் லயிக்கும் நிலைக்கான குறியீட்டு வடிவம்.

 

திம்பு

இச்சிலையின் பலநூறு வடிவங்கள் உள்ளன. ஞானம் ததும்பும் முகத்துடன் மடியில் தேவியை அமர்த்திய புத்தர் அந்த தேவிக்கு பின்பக்கம் அமுத கலசங்களை வைத்திருக்கிறார்.  உக்கிரமான பன்னிரு தலைகளுடன் பேயுருவத்தில் நிற்கும் புத்தர் எதிரே நிற்கும் தேவியுடன் தழுவிப்புணர்ந்த நிலையில் அவள் முதுகுக்குப் பின்னால் வஜ்ராயுதம் ஏந்தியிருக்கிறார். பல நிலைகள். இவையெல்லாம் வஜ்ராயன பௌத்தத்தில் நுட்பமான உட்பொருட்கள் கொண்டவை.

சிலைகளைப் பார்த்து முடிக்கவே நெடுநேரம் ஆகியது. எங்கள் பயணத்தின் சிக்கலே இதுதான். மிகக்குறைவாகவே நாட்களைத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அனைவருமே மிக விரிவாக ரசித்துப் பார்க்கும் மனநிலை கொண்டவர்கள். ஆகவே சட்டென்று நேரம் கைமீறிச்சென்று ஒன்றிரண்டு இடங்களுடன் நிறுத்திக்கொள்ளவேண்டியிருந்தது. அருங்காட்சியகத்தில் இருந்த ஆயுதங்களையும் புராதன பாத்திரங்களையும் பார்த்தோம். பூட்டானின் எருமைகளின் பாடம் பண்ணப்பட்ட தலைகளைக் கண்டபோது வசந்தகுமார் அன்றாடப்பொருட்களின் அருங்காட்சியகத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்தது.  அத்தனை பெரிய மதுக்குடுவைகளை எப்படி அமைக்க முடிந்தது ? நம்முடைய எருமைகளின் கொம்புகளைவிட ஐந்துமடங்கு கனமான கொம்புகள் கொண்டது பூட்டானிய எருமை.

 

ஏழு சகோதரிகளின் அருகே- யுவன்

மடாலயத்தை அவரசரமாகச் சுற்றிவிட்டுக் கிளம்பப் புலிக்கூடு நோக்கிச் சென்றோம்

[மேலும்]

புகைப்படங்களின் முழுத்தொகுப்பு

 

 

பழைய கட்டுரைகள்


வடகிழக்கு நோக்கி,7-மடாலயங்களில்

வடகிழக்கு நோக்கி-6,திம்பு

வடகிழக்குநோக்கி-5 பூட்டான்

வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி

வடகிழக்கு நோக்கி 3- காங்டாக்

வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்

வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்

தேவியர் உடல்கள்

காந்தியும் காமமும்

 

முந்தைய கட்டுரைமொழி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபனிவெளியிலே