பிரபஞ்சம்,மகாபாரதம்,பார்ப்பனமதம்-கடிதங்கள்

ஜெ,

ஒரு சந்தேகம். வெவ்வேறு பல விஷயங்களைக்குழப்பிக்கொள்கிறேன் என்று உறுதியாகத் தெரிகிறது. இருந்தாலும் உங்களிடம் ஒரு தெளிவு கிடைக்கும் என்று எண்ணிக் கேட்கிறேன்.
மனிதன், மிருகங்கள் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பகுதியே என்னும்போது மனிதனின் பேராசையும் அகங்காரமும் அவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கி அளிக்கப்பட்டைவை தானே. அன்பும் கருணையும் நல்ல குணங்கள் என்றும் பேராசை தீயது என்றும் எப்படி வகைப் படுத்துகிறோம்?

மதி

அன்புள்ள மதி

இதற்கான பதில், அந்தத்தீயகுணங்களை விட்டு விலகினால் மேலான வாழ்க்கை உண்டு என்ற அறிதலும் பிரபஞ்சத்தில் உள்ளதுதானே? அதுவும் பிரபஞ்ச இயக்கத்தின் பகுதிதானே?

மனித வாழ்க்கை பிரபஞ்ச விதிகளின் முன்னால் நிராதரவாக விடப்பட்டிருக்கவில்லை. அவன் மூளையை உருவாக்கிக்கொண்டிருக்கிறான். சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இக்கருவிகளைக்கொண்டு மேலும் மேலும் தன்னுடைய வாழ்க்கையைச் சிறப்பாக ஆக்கிக்கொண்டு செல்கிறான். அதற்கு உதவும் குணங்களை நல்லவை, உதவாதவற்றைக் கெட்டவை என்கிறான். கனியையும் விஷத்தையும் அவன் பகுத்தறிந்தது போல இதுவும் ஓர் அறிவே

மனிதனின் பரிணாமத்தில் கைகால்கள் மட்டும் அல்ல இந்த ஞானமும் விவேகமும் கூடப் பரிணாமம் அடைந்து வந்தவையே.அந்தப்பரிணாமம்தான் பிரபஞ்ச விதி

ஜெ

மரியாதை மிக்க ஜெயமோகன் அவர்களுக்கு…

இரண்டு நாட்களுக்கு முன்பு M . T . வாசுதேவ நாயர் எழுதிய இரண்டாம் இடம்(தமிழ் மொழிபெயர்ப்பு ) நாவல் படித்தேன். பீமன் பார்வையில் மகாபாரதக் கதை. வேறு சில மகாபாரதக் கதைகளையும் படித்துள்ளேன். ஆனால் இதில் ஒரு விசேஷம்,மகாபாரதக் கதை மாந்தர்கள் யாவரும் -முக்கியமாகப் பாண்டவர்கள் ஒரு புனித பிம்பமாகவோ கடவுள் அவதாரமாகவோ காட்டப்படவில்லை. சராசரி மனிதனுக்கு இருக்கக்கூடிய அத்தனை பலவீனங்களையும் உள்ளடக்கிய மனிதர்கள்தான் கதையில் வருகிறார்கள். கிருஷ்ணன் உட்பட. இதற்கு M . T . வாசுதேவ நாயர் பின்னுரையில் சில விளக்கங்களும், குறிப்புகளும், கொடுக்கிறார்.

விசயத்திற்கு வருகிறேன். கதையின் இறுதியில் தர்மன்  கர்ணன் மற்றும் பீமன் இவர்களுடைய பிறப்பு ரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகிறது.

குந்திக்கும் குந்திபோஜனின் தேரோட்டிக்கும் பிறக்கும் குழந்தை கர்ணன். குந்திக்கும் விதுரருக்கும் பிறக்கும் குழந்தை தர்மன் . குந்திக்கும் ஒரு காட்டு அரக்கனுக்கும் பிறக்கும் குழந்தை பீமன். ஆனால் இதில் அர்ஜுனனைப் பற்றி எங்கும் வரவில்லை…அனேகமாக நீங்க வியாசரின் மகாபாரதம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . கதாசிரியர் இப்போது நாம் படிக்கும் மகாபாரதம் நிறைய இடைச்செருகல்கள் கொண்டவையாக உள்ளது என்று குறிப்பிடுகிறார். மேலும் சில இடங்களில் மிகவும் விரசமாகக் கூட இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். மகாபாரதம்-இடைச்செருகல் பற்றி உங்கள் கருத்து என்ன? இப்படி முழுப் பூசணிக்காய் சோறோடு மறைந்துள்ளதா ? அர்ஜுனன் பிறப்பு ரகசியம் என்ன? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். விளக்கவும். நன்றி .

P NATARAJAN

நடராஜன்,

மகாபாரதத்தில் உள்ள சில சாத்தியங்களைக் கொண்டு புனைவுச்சுதந்திரத்துடன் சில ஊகங்களைச் செய்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். அந்த ஊகங்கள் ஏதும் மகாபாரதத்தில் இல்லை. அவர்கள் குந்தி- பாண்டுவின் மைந்தர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள். அர்ஜுனன் இந்திரனின் அம்சம். ஆகவே இந்திரனின் மைந்தன் என்று சொல்லப்படுகிறது

ஜெ

வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பைக் கடந்த ஒரு வாரமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதன் சாத்தியங்கள் என்னை வியக்க வைக்கின்றன.
ஒரு பணிவான வேண்டுகோள். தாங்கள் இப்போது “மானுட உச்சம் அல்லது சான்றோர்” குறித்துத் தொடர் சிறுகதைகள்  எழுதுவதுபோல, மகாபாரதத்தை முன்வைத்து  ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் எழுதுவீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

நன்றி
ராமசந்த்ர சர்மா

அன்புள்ள சர்மா

அப்படி ஓர் எண்ணம் நெடுங்காலமாக உண்டு. அதற்கான தொடக்கம் நிகழவேண்டும்

ஜெ

அன்பிற்குரிய ஜெயமோகன்!

சமீபகாலமாக இந்து மதத்தைப் பார்ப்பன மதம் என்று அழைத்து பார்ப்பன துவேஷத்தையும் இந்து துவேஷத்தையும் ஒன்றாகக் கலந்து வருகிறார்கள். இந்து மதம் என்பது பார்ப்பன மதமா? விளக்குவீர்களா?

அன்புடன்
ராம்குமார்

அன்புள்ள ராம்குமார்

தர்க்கபூர்வமாக வரலாற்றுபூர்வமாக ஒன்றை எதிர்க்கமுடியாதவர்கள் காழ்ப்பை மட்டுமே கொண்டு அதை எதிர்கொள்ளும்போது செய்யும் முக்கியமான வழிமுறை என்பது இதுதான். திரிப்பது, முத்திரை குத்துவது, பெயர்கள்சூட்டுவது. பின்னர் அதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பது.

கொஞ்சம் யோசிக்கும் திராணி கொண்டவர்களுக்குத் தெரியும், இந்து மதம் என்று இன்று சொல்லப்படும் அமைப்பு என்பது,பல்லாயிரம் வருடங்களாக ஒன்றுக்கொன்று விவாதித்து வளர்ந்து வந்த பல்வேறு ஞானமரபுகளும் வழிபாட்டுமுறைகளும் இணைந்த ஒரு பெருந்தொகுப்பு என்று. அதில் உயர்தத்துவமான வேதாந்தமும் உண்டு. நூற்றுக்கணக்கான பழங்குடி வழிபாட்டுமுறைகளும் உண்டு.

திரும்பத்திரும்ப முட்டாள்களிடம் பேச நேர்வதே தமிழ்ச்சூழலில் நாம் எதிர்கொள்ளும் துரதிருஷ்டம். நம்மை எரிச்சல் கொள்ளச் செய்து உண்மையான சிந்தனைகளே எழாமல் செய்துவிடுகிறார்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்
அடுத்த கட்டுரைமொழி-கடிதங்கள்