குடி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நமக்குள் இருக்கும் பேய் –நான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை( மேடையில் நீங்கள் ஆற்றிய உரையாக இருப்பினும்).

பொதுவாக இது போன்று வரும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்று எல்லோருக்கும் தெரிந்த நீதிபோதனை விஷயங்களையே சொல்வர்.(குடி குடியைக் கெடுக்கும்)
அல்லது புரியாத விஷயங்களைக் கூறி பயமுறுத்துவர்.குறிப்பாக மருத்துவர்கள்–(லிவர் சிர்ரோஸிஸ் ஹெப்பாட்டிக் என்கெஃபலோபதி யை உண்டாக்கும்).

ஆனால் ஒரு கலைஞனுக்கு நுண்ணறிவு அதிகம்.அவன் கூர்ந்து அவதானித்ததை நன்கு விளக்கும் ஆற்றலும் பெற்றிருந்தால் எந்தத் தளத்திலும் மிகச் சிறப்பான ஒரு பங்களிக்க முடியும் என்பதை உணர்த்தியது தங்கள் உரை.சமூகத்தின் மீது தாங்கள் கொண்ட அக்கறையின் விளைவாக எழுந்த உணர்வு அது. அன்றாடம் குடிப்பழக்கத்திற்கு ஆளான நோயாளிகளைப் பார்க்கும் எனக்கு மிகவும் பயன்படும் கட்டுரை.
இந்தியர்களின் மரபணுக்களில் மதுவிற்கு அடிமையாகும் தன்மை அதிகமாக இருக்கிறது.எப்படி வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் சர்க்கரை நோய் அதிகமாக வருகிறதோ அதே போல் பழக்கத்தின் காரணமாக மதுவிற்கு அடிமையாவதும் அதிகமாக இருக்கிறது.
எனினும் குடிப்பழக்கத்தை ஒழுக்கத்தோடு தொடர்பு படுத்தி அதனை ஒரு அதிகாரத்திற்கெதிரான கலகச் செயல் ஆக்குபவர்களிடமிருந்து எதிர்ப்பு வருவது துரதிர்ஷ்டமானது

சோற்றுக்கணக்கைப் போல் இதையும் எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடன்
ராமானுஜம்

***

சார்

ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் நிகழ்ச்சிக்கு நானும் வந்திருந்தேன். உங்கள் தளத்தை நிறைய படிப்பேன். அறிவிப்பை கண்டதும் மகிழ்ச்சி. ஆகவே வந்தேன். நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று தெரியாது. ஆனால் அந்த அமைப்பிலே இலக்கியம் தெரிந்தவர்கள் இல்லை. வடசென்னை மக்கள் சாமான்யமானவர்கள்.

நானும் பெரிய வாசகன் ஒன்றும் கிடையாது. ஆனால் நீங்கள் எப்படி இங்கே பேசமுடியும் என்று நினைத்தேன். சீரியஸாகப்பேசிப்போய் அவமானப்படுவீர்களோ என்ற நினைப்பு இருந்தது. கூட்டத்துக்கு வந்தேன். ஐநூறு அறுநூறுபேர். நானும் இந்த அளவுக்கு பெரியகூட்டத்தை பார்த்ததே இல்லை. முக்கால்வாசிபேர் கீழ்த்தட்டு மக்கள். அப்புறம் அவர்களின் குடும்பங்கள். அவர்கள் எதையுமே கவனிக்கிறமாதிரி தெரியவில்லை.

வந்தவர்களிலே அந்த டாக்டர் சொக்கலிங்கம் என்பவர் வழக்கமாக அதே பேச்சை அப்டியே எல்லா இடத்திலும் பேசக்கூடியவர்போல. ஒரே மாதிரியான ஜோக்குகளாக போட்டுத்தாக்கினார். ஜனங்கள் சிரித்து கைதட்டி மகிழ்ந்தார்கள். அதைக்கண்டதும் இன்னும் பயமாகியது. பாதிரியார் வழக்கம்போல பேசினார். ஆனால் நீங்கள் பேச ஆரம்பித்ததுமே ஜனங்கள் அலெர்ட் ஆகிவிட்டார்கள். அபப்டியே ஸ்தம்பித்து இருந்தார்கள். ஒரு பேச்சுமுச்சு இல்லை.

ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒருபேச்சை அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். திகிலில் இருந்தார்கள். பேச்சுமுடிந்ததும் கொஞ்ச நேரம் கைதட்டக்கூட இல்லை. இந்த அளவுக்கு சீரியஸாகவும் ஆத்மார்த்தமாகவும் ஒரு பேச்சை நானும் கேட்டதில்லை. அவர்களை மதித்து அவர்களுக்காக தயாரித்துக்கொண்டுவந்து உணர்ச்சிகரமாக பேசினீர்கள். உணர்ச்சியும் அறிவும் கலந்த பேச்சு சார்.

பேச்சுமுடிந்ததும் உங்களை சுற்றி அத்தனைபேர் வந்து கூடியதும் எல்லாருமே உங்களிடம் பேச விரும்பியதும் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. ஆத்மாவில் இருந்து வந்த பேச்சு. கனிவான பேசு. வாழ்க சார்

பெயர் சொல்லக்கூடாது மன்னிக்கவும்

___

முந்தைய கட்டுரைஅஞ்சலி,ர.சு.நல்லபெருமாள்
அடுத்த கட்டுரைபிறந்தநாள்