கிருஷ்ணன், புலனடக்கம் :கடிதங்கள்

ஐயா,

புலனடக்கம் குறித்த உங்கள் பிரகடனத்தை படித்ததும் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தாங்கள் சார்ந்துள்ள துறையில் மட்டுமல்லாது அனைத்து தளங்களிலும் இருப்பவர்கள் பலரால் இப்படி ஒரு பிரகடனத்தை கொடுப்பது சாத்தியமில்லாததே. இதில் உங்கள் தனி மனித குணத்ததவிட தந்தையின் வளர்ப்பு அதிகம் தென்படுகிறது.

சில ஐயங்கள். தெளிவுபடுத்தவேண்டும். புலனடக்கம் ஒரு சோஷியல் கண்டிஷனிங் என்று புரிந்துகொள்கிறேன். அதன் அவசியம்தான் என்ன? அருணகிரியும், கண்ணதாசனும் மற்றும் பலரும் இதற்கு மாறானவர்கள்தானே? அவர்களின் வெற்றிகள் புலனடக்கத்தின் மீது அமைந்தவையல்லவே?

காமத்தை கடக்காதவன் மோக்ஷத்தை அடையமாட்டான் என்று சொல்லப்படுகிறதே? மனிதன் புலனடக்கம் சார்ந்து செயல்படுவது இயற்கைக்கு எதிரானதாகாதா? புலனடக்கியவர்கள் (உதா: ஆதிசங்கரர், விவேகானந்தர்) வெகுநாள் வாழ்வதில்லையே? ரமணர் போன்ற விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்.

தனிமனிதனுக்கு புலனடக்கம் என்பது ஒரு சமூக கற்பிதம் என்று எண்ணுகிறேன் இது சரியானதுதானா?

ஒரே குழப்பமாக இருக்கிறது.

-ராம்

அன்புள்ள ராம்,

ஏதாவது ஒரு வகையில் புலனடக்கம் பேசப்படாத பழங்குடிச் சமூகம் கூட மண்மீது இல்லை. ஏன் என்றால் மனித மனம்தான். மனிதனுக்கு ஐம்புலன்கள். அவை செயற்புலன்கள். [கர்ம இந்தியங்கள்] அவற்றுக்கு மேல் புத்தி, மனம் என்னும் இரு அறிவுப்புலன்களும் [ஞான இந்த்ரியங்கள்] உண்டு என்று இந்து–பௌத்த-சமண மரபுகளில் சொல்லப்படுகின்றது. பிற உயிர்களில் இந்த இரு அறிவுப்புலன்களும் இல்லை. அவை செயற்புலன்களாலேயே இயக்கப்படுபவை. எந்த மிருகமும் சீசனுக்கு அப்பால் காம இச்சை கொள்வதில்லை. எந்த மிருகமும் மனதாலும் அறிவாலும் காமத்தை வளர்த்துக்கொள்வதில்லை.

மனிதனைப் பொறுத்தவரை செயற்புலன்களை அறிவுப்புலன்கள் ஆள ஆரம்பிக்கின்றன. செயற்புலன்கள் ஐந்து சாளரங்கள். உள்ளே இருக்கும் கலைடாஸ்கோப் போன்ற இரட்டைக் கண்ணாடிச் சுவர்கள்தான் அறிவுப்புலன்கள். உள்ளே வரும் காட்சிகளை அவை மாறி மாறி பிரதிபலித்து முடிவின்மை வரை பெருக்கிக் கொள்கின்றன. மனிதனின் காமம்-குரோதம்–மோகம் மூன்றுமே எல்லையில்லாமல் பெருகும் தன்மை கொண்டவை.

ஆகவே அவற்றுக்கு சுதந்திரம் என்பதே சாத்தியமல்ல. அவற்றைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். முடிவில்லாத புலன் விழைவுகளை மனித உடல் தாங்காது. மனித உறவுகள் தாங்காது. மானுட சமூகமும் தாங்க முடியாது. இதுவே உண்மை.

மேலைநாட்டு உளவியலாளர்கள் மனித மனத்தை சமூகம் அடக்குகிறது என்றும் அவ்வடக்குமுறை மனநோயை உருவாக்குகிறது என்றும் மிக குறைபட்ட, ஒரு பக்கம் சார்பான, கோட்பாட்டை முன்வைத்தார்கள். எளிமையான ஒருகேள்வி, மனித விழைவுகளுக்கு சமூகம் அனைத்து சுதந்திரமும் கொடுத்துவிட்டது என்றே கொள்வோம். அவன் உடல் அந்த சுதந்திரத்தைக் கொடுக்க முடியாதல்லவா? அப்படியானால் மனிதன் மனநோயாளியாக மட்டும்தான் இருக்க முடியுமா? என்ன கேனத்தனமான சிந்தனை!

ஐரோப்பாவில் இருந்து வந்தது என்ற ஒரே காரணத்துக்காக நாம் அதை  நம்பி அதையே பேசிக்கொண்டிருக்கிறோம்.

மனிதனின் விழைவுகளை பிரம்மாண்டமாக ஆக்கும் அறிவுப்புலன்களை கட்டுப்படுத்துவதும் அதன் மூலம் செயற்புலன்களை கட்டுப்படுத்துவதும் தவிர்க்கவே முடியாத மானுடத்தேவைகள். சொல்லப்போனால் கட்டற்ற இச்சைதான் இயற்கைக்கு மாறானது. மனித உடலை இயற்கை கட்டுப்படுத்தும் தன்மையுடன், கட்டுப்படுத்தல் இன்றி வாழ முடியாததாகவே படைத்துள்ளது.

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

தாங்கள் பூரி ஜகன்னாதர் கோவில் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த விக்கிரகத்தில் கிருஷ்ணரின் எரிந்து போகாத இதயம் இருப்பதாக சொல்லுகிறீர்கள். சிலர் புத்தரின் பல் இருப்பதாக. அதே போல் ஜகன்னாதர், சுபத்ரா, பலராம் என்று ஹிந்துக்கள் சொல்கிறோம். ஆனால் புத்தர்கள் அது புத்தம், தர்மம், சங்கம் ஆகியவற்றை குறிப்பதாக சொல்லுகிறார்கள். ஜைன கதையும் உண்டு. கிருஷ்ணர் அம்பு பட்டு இறந்த பின் நடந்த நிகழ்வுகளாக சொல்வது எத்தனை உண்மை? அதை பற்றி தங்களால் சொல்ல முடியுமா?

பன்னீர்செல்வம்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

எனக்கு பொதுவாக புரணங்கள் மற்றும் நம்பிக்கைகளில் ஈடுபாடு கிடையாது. கிருஷ்ணர் என்பது ஒரு புகழ்பெற்ற ஐதீகம். அதன் மீது நூற்றாண்டுகளாக மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் கதைகளையும் சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். கிருஷ்ணன் என்ற மாபெரும் ஞானாசிரியனை அறியாத நிலையில் அந்த விக்ரகத்தை நம்புவதற்கு மக்களுக்கு கதைகள் பல தேவையாகின்றன.

கிருஷ்ணன் ஒரு வரலாற்று கதாபாத்திரம். அவரது பிறப்பு மரணம் இரண்டுமே ஏற்கனவே நன்றாக அறியப்பட்டவையாக இருக்கலாம். ஆகவேதான் அவர் பின்னர் இறைவடிவமாக ஆக்கப்பட்ட பின்னரும் அந்தக்கதையை மாற்ற முடியவில்லை. அதை ‘கர்ம வினைக்’ கோட்பாட்டின்படி விளக்கம் கொடுத்துவிட்டார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைநான் கடவுள், மேலும் இணைப்புகள்
அடுத்த கட்டுரைசிற்பங்கள்:கடிதங்கள்