விதிசமைப்பவர்கள்- கடிதங்கள்

ஆசிரியருக்கு,
அடுத்த வரி, அடுத்த வரி எனக் கண்கள் தாவ, மனமும் மூளையும் கண்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓய்ந்து நிற்க, வாசித்து முடித்தவுடன், பரபரக்கும் கைகளுடன் நான் எழுதும் மடல் இது. இந்த தேர்வு செய்யப் பட்ட சிலர், கல் எறியப்பட்ட கடிதங்கள், பதில்கள் மற்றும் அதன் நீட்சியான இக்கட்டுரை ஆகியவை ஒரு அமோகமான சிந்திக்கும் அனுபவத்தை எனக்கு வழங்கியது.

நான் உங்களை முதன் முதலில் சந்தித்த போது கேட்ட கேள்விகளும், நீங்கள் வழங்கிய பதில்களும், நமது கொடைக்காணல் மற்றும் வயநாடு பயணத்தில் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தொடர்பான கேள்விகளும் உங்களது கூரிய பதில்களும், ‘குற்றம்கும் தண்டனையும்’ இல் ரச்கல்நிகோவின் தேர்வு செய்யப்பட்ட சிலர் குறித்த அவனின் கட்டுரையும், அது குறித்த சிந்தனைகளும் என மனம் முறைசிதறி தாவித் தாவி ஓடுகிறது.

இதைப் படித்தால் நான் ஒரு தனித் தன்மை வாய்ந்த ஒருவன் என்ற எண்ணம் எந்த ஒரு குமாஸ்தாவுக்கும் வரும், அனால் எந்த ஒரு குமாஸ்தாவும் இதைப் படிக்கப் போவதில்லை, படித்தாலும் விளங்கிக் கொள்ளப் போவதில்லை. தனித் தன்மையுடையோரே இதைப் படிப்பர், தங்கள் தனித் தன்மையை தக்கவைத்துக் கொள்வர், பெருமை கொள்வர்.

நான் தனித் தன்மை வாய்ந்தவன் என்பதை ஒருவன் கர்வத்துடன் உரக்கச் சொல்ல, துணிவுடன் இக்குமாஸ்தாக்களை நோக்கி ஏளன
த்துடன் எள்ள, இவர்களின் கருத்து வாந்திகளை கழிவறையில் கொட்ட, அபார தன் நம்பிக்கையும் ஆற்றலும் வழங்கும் போதையூட்டும் கட்டுரை இது.
நான் மன்னனாக இருந்தால் 1000௦௦௦ பொற்க் காசுகளை இதற்கு பரிசளித்து, நானும் ஒரு விதி சமைப்பவனே என நிரூபித்துக் கொள்வேன்.

விடியலுக்காக காத்திருப்பதற்கல்ல, விடிவை வழங்குவதற்கே படைக்கப் பட்டது சூரியன்.

விதி சமைப்பவர்கள்-தித்திக்கும் மிளகாய்ச் சுவை.

கிருஷ்ணன்.

அன்புள்ள ஜெ
“தேர்வுசெய்யப்பட்டவர்கள்” குறித்து….
”இங்கே ஒவ்வொரு தளத்திலும் தனித்தகுதி கொண்டவர்களை, சாதனையாளர்காளை, அதற்காக போராடுபவர்களை மட்டம் தட்ட எத்தனை குரல்கள்.” ….
எத்தனை சத்திய வாக்கு!!!!! தேர்வுசெய்யப்பட்டவர்கள் / விதிசமைப்பவர்கள் ….. எந்த ஒரு வார்த்தையாலும் அதை விளக்க முனைந்தாலும் அவை நிறைவுபெறா.
பிரபஞ்சத்தின் பல கோடி சிருஷ்டிகளில் ஒவ்வொன்றும் ஒரு விதமே. Survival காரணங்களுக்காக கூடி வாழும் இயல்பிணான மனிதனும் ஒரு தனித்திருக்கும் மிருகமே.
துரதிஷ்டவசமாக “கூடி வாழும்” இயல்பு ஒரு சமூக அடிப்படையாக, அளவுகோலாக, தேவையாக ஆனபிறகு தனித்துவத்தின் மகத்துவம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டது. பத்து பேர் சேர்ந்து ஒரு பொதுப்படையான சிந்த்னை / வாழ்வுமுறைக்கு ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது அதில் தனித்திருப்பவன் புறந்தள்ளபடுகிறான்.
Survival fear காரணமாக, தன்னைவிட பலம் (உடல்/மனம்) வாய்ந்த, குணாம்சங்கள், பண்புகள், உடைய, survival tactics அறிந்த ஒரு உயிரினத்தை எதிர்கொள்ளும்பொழுது ஏற்ப்படும் அச்சம்/ பொறாமை காரணமாகவும் இவர்களின் பால் அடக்குமுறைகள் நடக்கின்றன.
Democracy’s “அனைவரும் சமம்” (அது எதனால் நிறுவப்பட்டது, அதன் உட்கூறுகள் எல்லாம் பிற விஷயங்கள்) “தனித்துவத்தை” நிறுவன (institution) ரீதியாக நிராகரித்தன. extremism & eccentricity associated with that uniqueness was not recognized in order to favor / support the moderateness or commonness.
ஒரு பாடல் ஞாபகத்திற்க்கு வருகிறது.. “ஆயிரம் கைகள் கூடினாலும் ஆதவன் மறைவதில்லை”
ஒரு வாக்கியமும் கூட “ தனித்திரு, விழித்திரு, பசத்திரு”
உங்கள் கட்டுரை சத்தியம் சொல்கிறது..

அன்புடன்
சதீஷ் (மும்பை)

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

விதிசமைப்பவர்கள் கட்டுரை கண்டேன். ஆவேசமான பாய்ச்சல். மிகவும் தேவையான, முக்கியமான கட்டுரை.
அதையொட்டிய, பல நாட்களாக மனதை அரித்துக் கொண்டேயிருக்கும் ‘சராசரிகளின் அழுத்தம்’ பற்றியதே இக்கடிதம். பிழையிருப்பின் மன்னிக்கவும்.
(ஒவ்வொரு கதையிலும் ஏதாவதொரு வாக்கியம் இதைத் தூண்டிக்கொண்டே இருந்தது. இக்கடிதத்தின் இறுதியில், கதைகளும் தூண்டல்களும் என்ற பத்தியில் சேர்த்திருக்கிறேன்).

மிஷிகன் மாகாணத்தில் இருந்த போது, ஒரு குளிர் நிறைந்த சனிக்கிழமை, அருகில் இருக்கும் ஒரு யுனிவர்சிடிக்கு சும்மா வேடிக்கை பார்க்க நானும் நண்பர்களும் சென்றோம். பொதுவாக மாணவர்கள் கலந்துகொள்ளும் ஏதாவது ஓவியக் கண்காட்சியோ, கலந்துரையாடலோ நடக்கும். இந்த முறை, மாணவர்கள் அளிக்கும் ஒரு இசை நிகழ்ச்சி. மேலை சாஸ்த்ரிய சங்கீதம்.

தேர்ந்த வாசிப்பிலிருந்து, உடை அணிவது, நிகழ்ச்சியை வழங்குவது என்று எல்லாவற்றிலும் அப்படியொரு அழகான நேர்த்தி. நிகழ்ச்சி முடிந்து, யுனிவர்சிடி காஃபிடேரியாவில் அவர்களில் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தோம். வெளியில் கடும் பனிப்பொழிவு, அதனால் ஒரு 2 மணி நேரத்திற்கும் மேல் நீண்டது உரையாடல். எங்களது வீட்டிற்கு அருகிலேயே தங்கி இருந்த இருவர் நண்பர்களானார்கள். அத்தனை பேரும், இசைத்துறையை விரும்பித் தேர்ந்தெடுத்தவர்கள். கடினமான நுழைவுத் தேர்வுகளை ( 50 பேர் கொண்ட சபையின்முன் 3 நிமிடம் வாசிக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் நேர்காணல்) தாண்டி வந்தவர்கள். அந்தத் துறையைத் தவிர வேறு எதையும் அறியாதவர்கள்.

அமெரிக்க வரைபடத்தில், நியுயார்க், வாஷிங்டன், மிஷிகன் எங்குள்ளது என்று தெரியாத அமெரிக்க மாணவர்களை அங்குதான் முதலில் கண்டேன். அவர்களின் அறியாமை திகைப்பூட்டியது. அவர்களிடம் தெரிந்தது, ஒரு குழந்தைத்தனமான ஆர்வமும் (அதை அரித்வாரமங்கலம் பழனிவேலிடமும், கிடார் ஜான் மெக்லாக்லினிடமும் பார்க்கலாம்), அப்பாவித்தனமும் தான். இசையைத் தவிர வேறெதிலும் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை, தெரியவும் இல்லை. படித்து முடித்து இவர்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள் என்று தோன்றியது.

ஆனால், 5 வருடங்கள் கழித்து, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றறியும்ஆவல் வந்து, இமெயில் ஐடியைக் கண்டடைந்து தொடர்பு கொண்டேன். அன்று பேசிக்கொண்டிருந்த அத்தனை பேரும், இன்று வெவ்வேறு இடங்களில், நிலைகளில் ஆனால் அதே இசைத்துறையில் உள்ளனர். சிலர், பிரபலமாகவும் உள்ளனர், தனியாக இசைக்கோப்பும் வெளியிட்டுள்ளனர்!

அங்கே, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்குமா என்று அஞ்சாமல் ஒருவன் தனக்கு பிடித்த விளையாட்டை தன் வாழ்வின் அர்த்தமாகக் கொள்ள முடிகிறது. அந்த விளையாட்டிலேயே, நிபுணத்துவம் பெற்று, சாதனைகள் செய்து, மற்றவர்களுக்கு வழங்கி, அதிலேயே திளைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

அதே போல, பிரின்ஸ்டன் யுனிவர்சிடியில், சிறந்த ஆரய்ச்சி மணவர்களுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. முதலில் முகத்தில் அறைந்தது, அவர்களின் அப்பாவித்தனம் தான். ஆனால், அவர்கள் தான், சந்தேகம் இல்லாமல், சமூகத்தை அடுத்த நிலைக்கு நகர்த்திச்செல்கின்றனர்.

அவர்களை அந்த சமூக அமைப்பு பேணுகிறது, இயலாமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான், இத்தனை கண்டுபிடிப்புகளோ, இத்தனை சாதனைகளோ என்று தோன்றுகிறது.

அவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை/ மாணவர்களை இந்தியாவில் பார்க்கிறேன். அவர்களை நம் சமூகம் ‘பழம்’ என்றும் ‘பிழைக்கத்தெரியாதவன்’ என்றும் முத்திரை குத்துவதில் சந்தோஷம் கொள்வதையும் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒருவன், தன் குடும்பம், நண்பர்கள், உறவினர் எல்லாரையும் பகைத்துக்கொள்ள வேண்டும். அதையும், தாண்டி மேலே வரமுடிந்தவருக்கு நாம் அளிக்கும் பட்டம் ‘ என்ன பெரீய்ய… நீயும் நானும் ஒண்ணுதான்’.

ஆனால் வேறு ஒரு கோணத்தில் பார்த்தால், ஏறத்தாழ 250 வருடங்களுக்குப்பின் நாம் இப்போதுதான் எழ ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். சமனிலைக்கு வருவதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம். அதற்கு, சமூகத்தை நோக்கிப் பேசும் முக்கியமான குரல்கள் தேவை. அவற்றின் மூலமாகவே சமூகம் தன் விழுமியங்களை வளர்தெடுத்துக்கொள்ளும் அல்லவா? அதனாலேயே உங்களின் இக்கட்டுரை முக்கியமான கட்டுரையெனெப் படுகிறது.

ராஜன் சோமச்சுந்தரம்

 

 

முந்தைய கட்டுரைகடிதங்கள் சில
அடுத்த கட்டுரைஇசை, வாசிப்பு-கடிதங்கள்