பெருவலி-கடிதங்கள்

அன்பு

ஜெயமோஹன், வணக்கம். தங்களது இணைய தளத்தில் சமீபத்தில் நீங்கள் எழுதிய சிறு கதைகளை வாசித்து வருகிறேன். நூறு நாற்காலிகள் என்னை மிகவும் பாதித்தது. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு கதைக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்தது இந்தக் கதை. பெரிய மன மாற்றம் ஏதும் நிகழாத சூழல் இன்னும் தொடர்வதே மிகவும் வேதனை தரும் விஷயம்.

பெருவலி கதையை வாசித்ததும் பெரியவர் கோமலை ஏழாவது மனிதன் என்னும் சினிமா அரங்கில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. கதையின் முடிவைப் பற்றிக் குறிப்பிட்டு போராட்டங்கள் தான் தீர்வு என்கிறீர்களா என்று கேட்டதும் இப்போதைக்கு அதுதான் தீர்வு என்றார். அவரும் வாத்தியார் ராமனும் நடந்து சென்றது எனக்கும் என் நண்பர்களுக்கும் வியப்பாக இருந்தது.

மான சரோவர் நாவலை மறு வாசிப்புச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஆன்மீக நாட்டம் தாண்டி தேடலில் மூழ்கும் போது எழுத்தும் லௌகீகம் என்றே ஆகிவிடுமோ ? வலி பற்றிய அவரது நிலை ரமணரை நினைவு படுத்துகிறது. நீளம் என்னும் அலகில் அடங்காது உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்தக் கதைகள் குறுநாவல் என்னும் அனுவத்தைத் தருகின்றன. நன்றி.

அன்பு

சத்யானந்தன்.

அன்புள்ள சத்யானந்தன்

நன்றி.

வலியை எதிர்கொள்ள ஒரே வழி அதைக் கவனிப்பது மட்டுமே என்று பல தருணங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னதான் சொன்னாலும் அது மனிதனை அவனுடைய பாவனைகளை எல்லாம் கழற்றிக் கையறுநிலையில் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு விஷயம்

ஜெ

அன்புள்ள ஜெமோ,

அறம் கதைகளைப் படித்து வருகிறேன்.. ஒரு எண்ணம்..
இந்த கதைகளை மையமாக வைத்து ஒரு கதைப்பட்டறை
உங்களால் செய்ய இயலுமா..? நேரம் ஒதுக்க முடியுமா..?
தமிழில் கதையை ரசிக்க அல்லது கதை எழுத நினைப்பவருக்கு
உதவும் வகையில்.. ஒரு சந்திப்பு .. ஒரு நாள் அல்லது
இரண்டு நாள்..

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

மகேஷ்.

அன்புள்ள மகேஷ்

பார்ப்போம்

நான் சினிமா வேலைகளில் நிறைய சிக்கிக்கொள்ளப்போகிறேன், வரும் மாதங்களில்

ஜெ

ஜெ,

பெருவலி கோமலுடன் எனக்கு கடிதப்போக்குவரத்து இருந்த அந்நாட்களை நினைவூட்டியது. எனக்கெல்லாம் அவர் ஒருமுறை திருச்செந்தூரில் அமர்ந்துகொண்டே மேடையில் பேசியபோதுதான் அவருக்கு நோய் இருக்கும் தகவலே தெரிந்தது. அவரது பேச்சு சிரிப்பு எல்லாவற்றையும் கண்ணில் நிறுத்தியது கதை. சமீபத்திலே ஒரு சினிமா பார்த்தேன். ஒரு நோயாளிப்பெண் ஊர் ஊராக ஓடிக்கொண்டே இருப்பாள். எங்காவது நின்றால் நோய்வந்து பிடித்துவிடும். போய்க்கொண்டே இருந்தால் வராது என்று நினைத்ததாகச் சொன்னாள். கோமலின் கதை அதை நினைவூட்டியது

விஜயகுமார்

அன்புள்ள ஜெ,

மாபெரும் வல்லமையின், உன்னதத்தின் முன் நிற்கும் போது தன் சிறுமைகளை உணர்வதே, மனம் கொந்தளிப்பதே உச்சம் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி உயிரைத் தின்னும் கொடும் வலியை, எல்லா மனிதர்களின் -அவர்களின் எட்டு தலைமுறைகளின் ஒட்டுமொத்தமான வலியை தான் எடுத்துக் கொள்வதாக, அவர்கள் எல்லாருக்கும் அந்த மகா வல்லமையின் பொன் கிரீடம் கிடைக்கட்டும் என்று நினைக்கும் போது அவர் மற்றவர்கள் கண்ணுக்கு தெய்வமாக தெரிகிறார் என்று புரிந்தது. என் மனதின் ஒரு கேள்விக்கு விடை கிடைத்தது.
இது சொல்லும் அறம் எனக்கு மிக மிக முக்கியமாகப் படுகிறது.
மறுபடியும் ஒரு முறை, மனமார்ந்த வணக்கம் ஜெ.
பிரகாஷ்.

அன்புள்ள ஜெ,

மீண்டும் ஒரு நுட்பமான கதை. படிமங்களால் மட்டுமே பேசக்கூடிய கதை, கிட்டத்தட்ட தாயார்பாதம் மாதிரி. மனிதனின் சாதாரணமான ’மனித’த்தன்மையை சுட்டிககட்டிக்கொண்டே இருக்கிறது வலி. அவனை வெறும் ஒரு மிருகம் மட்டும்தான் என்று வலி சொல்லிக்கொண்டே இருக்கிறது. வலி வரும்போது நம்முடைய ஞானம், கல்வி, செல்வம், அதிகாரம் எல்லா இழவையும் இழந்து நாம் வெறும் மிருகம் மாதிரி கிடக்கிறோம். மிருகம் மாதிரி அலறுகிறோம். வெறும் மிருகம் மட்டும்தானா நாம் என்று ஆச்சரியம் வருகிறது. ஆமாம் ஆமாம் என்று உறுதியாகவே தோன்றிவிடுகிறது. இசைக்கலைஞன் அப்போது பாட்டை மறந்துவிடுவான். ஓவியன் ஓவியத்தை மறந்துவிடுவான். ஆன்மீகவாதி ஆன்மீகத்தை விட்டுவிடுவான்.

அந்த மாதிரி ஒரு நிலையில் இருந்துதான் கோமல் மேலே செல்கிறார் என்று நினைக்கிறேன். கைலாசத்துக்குச் செல்வது என்ற முடிவினை அவர் எடுப்பதற்கான காரணமே தன்னை கீழே இழுக்கும் நோயில் இருந்தும் வலியில் இருந்தும் மேலே செல்வதற்காகத்தான் இல்லையா? அந்தக் கனவு என்றோ அவருக்குள்ளே வந்து விட்டது. ஆனால் வலி அதன் உச்சிக்குச் செல்வது வரை அவருக்கு அப்படி கிளம்பிச் செல்லவேண்டுமென்று தோன்றவே இல்லையே. வலியை குணப்படுத்திக்கொள்வதற்காக அவர் கடவுளை வேண்டியதே இல்லை என்ற வரியை ஒரு நடுக்கத்துடன் வாசித்தேன். எல்லாராலும் அது முடியக்கூடிய காரியமே இல்லை.

மேலே சென்று அவர் கைலாசத்தை பார்க்கிறார். கைலாசம் மனிதகுலம் மீது இயற்கை தூக்கி வைத்த மணிமுடி. மனிதனின் அத்தனை ஆன்மீகமான ஞானச்சிறப்புகளையும் அப்படி உருவகம்செய்துவிடலாம். அப்படி ஒரு மணிமுடியை சூடுவதற்கு மனிதன் தகுதி உடையவன் தானா என்ற எண்ணம் அங்கு வருவது நியாயம்தான். அவர் அந்த அளவுக்கு வாழ்க்கையைக் கண்டிருப்பார். ஆனால் நான் அந்த அளவுக்கு வலியை தாங்கிவிட்டேன் என்று அவர் சொல்லும் இடமும் உச்சமானது. அவர் ஏசு அளவுக்கு சிலுவையை தூக்கி விட்டார். இந்த ஏசு அனாலஜி நுட்பமாகவும் நன்றாகவும் வந்திருக்கிறது. மூன்றுலட்சம் ஆணிகளை உடலில் அறைவது மாதிரி வலி. கோமல் அவருக்கான கல்வாரி மலையில் அவரது சொந்த சிலுவையுடன் ஏறி வந்தார். ஆகவேதான் ஞானத்தின் மணிமுடியை சூடுவதற்கு உரிமை உண்டு என்று நினைக்கிறார். சூடியதுமே ஏசு போல அவர் உலகையே மன்னிக்கும் உச்சிக்கு போகிறார். அதுதானே ஞானம் என்பது

அதன்பின் மரணம் ஒரு அழகிய கன்றுக்குட்டிதான். இனிமையான விளையாட்டுத் தோழன்தான். அந்த நீளமான மோனோலாக் பலவகையில் கவிதையை சிதறடித்துக்கொண்டே செல்கிறது

நன்றி

சிவம்

அன்புள்ள சிவம்

மீண்டும் ஒரு நல்ல கடிதம்

நன்றி

ஜெ

அன்பின் ஜெ.எம்.,

வலி என்ற உணர்வுக்கு ஒரு தூல வடிவம் பெருவலி…!

மாவலிக்கு முன்பு பேருரு எடுத்து நின்ற வாமனனைப்போல வலியினால் உடல் படும் வாதையும் படிப்படியாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்குப் போய்க்கொண்டே இருந்ததைக் கதை படிக்கும் கணங்களில் உணர்ந்து கொண்டே தொடர முடிந்ததை இக் கதை எனக்களித்த பேரனுபவமாக நான் கருதுகிறேன்..
கதையின் மையத்தை விட நான் பெற்ற துய்ப்பு அதிலேதான்.

வாழ்நாளில் ஏதேனும் ஒரு கொடிய வலியை அது தரும் துன்பத்தைச் சில நாட்களாவது அனுபவித்துப் பார்த்திருக்கும் எவரும் இக் கதை தரும் மேற்குறித்த உணர்வில் ஒன்ற முடியும்.
என் அனுபவமும் அது சார்ந்ததே.

தங்கள் வீடு கட்டும்போது ஒரு சிறு விபத்தால் உங்களுக்கு ஏற்பட்ட வலியின் கொடுமையை இணையத்தில் பகிர்ந்தபோது கோமலின் வலி,மேலும் கைலாசக் கனவு பற்றி நீங்கள் எழுதியதாக ஒரு நினைவு…
உண்மையில் கோமல் கைலாசம் வரை பயணம் மேற்கொள்ளவில்லை,அது புனைவாக இருக்குமென்றே எண்ணுகிறேன்.

எம்.ஏ.சுசீலா

அன்புள்ள சுசீலா

கோமல் முதுகுப்புற்றுநோயுடன் கைலாயமலைக்குச் சென்றது உண்மையான நிகழ்வுதான். அவரே அதை சுபமங்களாவில் எழுதியிருக்கிறார்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த எருமைக்கன்றுக்குட்டியின் புகைப்படத்தை நான் மிக நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். அந்நாளில் ஏராளமான பேரை மிகவும் கவர்ந்த போட்டோ அது. [அடுத்த வாரம் வாசகர் கடிதத்தில் அட்டையில் யார் நீர்தானே என்று ஒரு கடிதம் வந்திருந்ததாக ஞாபகம்] அந்த போட்டோவை உண்மையிலேயே கோமல் பார்த்தாரா? அவருக்கு அது அப்படிப்பட்ட எண்ணங்களை அளித்ததா? ஏனென்றால் அந்த படத்தை பார்த்தபின்புதான் எனக்கு மானசரோவர் போகவேண்டும் என்று தோன்றியது. இன்றுவரை போகமுடியவில்லை

சிவராமன்

அன்புள்ள சிவராமன்

அந்தபடத்தை நான் பார்த்திருக்கிறேன். கோமல் அதை குறிப்பிட்டதும் உண்மை

குமுதம் சேகரிப்புகளில் இருந்து அதை எவரேனும் வலையேற்றம் செய்யலாம்

ஜெ

முந்தைய கட்டுரைகதைகள்,மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்