திராவிடவேதம்-கடிதங்கள்

உயர்திரு ஜெயமோகன் சார் மற்றும் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களுக்கு,

இரண்டாண்டுகளுக்கு முன்பு திராவிட வேதா தளத்தின் நிர்வாகிகள் எங்களை சந்தித்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் குறிப்பாக ஸ்ரீ உ.வே.பிரதிவாதி பயங்கரம் அன்னங்கச்சார்யர் ஸ்வாமி அவர்களின் உரையையும் உலகெங்கும் கொண்டு செல்லும் பொருட்டு ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

முப்பத்தைந்து புத்தகங்கள் .ஏ4 பக்கத்தில் 9000 பக்கங்கள் தட்டச்சு செய்து இணையதளமாக்கி நாலாயிரம் பாடல்களாக பதவுரை விளக்க உரையுடன் பதிவேற்றம் செய்யும் பணி.

சௌம்யா தேவி, ஜெபினா, மேகலா,உஸ்மான், பாஸ்கர் என ஐவர் கொண்ட குழு ஒரு வருடம் பணியாற்றி இந்த தட்டச்சு பணியை செய்து முடித்தனர்.

இன்று இந்த இணைய தளத்தில் இருக்கிற நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் அதன் உரையின் ஒவ்வொரு எழுத்தும் எங்கள் குழுவினரால் தட்டச்சு செய்து ஏற்றப் பட்டதே அன்றி எவருடைய உழைப்பையும் எடுத்து கையாண்டதில்லை.

தட்டச்சிற்குப் பின் திரு பால் நிலவன் அவர்கள் இதன் பிழைதிருத்தும் மற்றும் பதம் பிரிக்கும் பணியை மேற்கொண்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்து பணி செய்து அதை முடித்துக் கொடுத்தார்.திரு பால்நிலவன் தமிழ் எழுத்தாளர்கள் பலராலும் அறியப்பட்டவரே . அவருடைய தொலைபேசி எண் 9941061834. இந்தப் பணியின் மீது சந்தேகம் இருப்பவர்கள் அவரையும் தொடர்பு கொண்டு பேசலாம்.

இந்த தளத்தில் இருக்கிற முகப்பு ஓவியமான ஆதி திருவரங்க நாதர் படமும் எங்கிருந்தும்எடுத்துக் கையாளப் பட்ட ஓவியம் இல்லை. திரு பத்மவாசன் அவர்களை அணுகி , அவர் விழுப்புரம் மாவட்டம், மணலூர் பேட்டையில் இருக்கும் ஆதி திருவரங்கம் கோயிலுக்கு போய் வர ஏற்பாடு செய்து ,அவர் இரண்டு மாதங்கள் செலவளித்து இந்த தளத்திற்கென்று பிரத்யேகமாக வரைந்து கொடுத்த ஓவியம் அது.

இணையதளப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இதனுடைய முகப்பை வடிவமைத்து தள நிர்வாகிகளுக்கு காட்டும் பணி இருந்த்து. எப்பொழுதுமே முகப்பை வடிவமைக்கும் போது டம்மி டெக்ஸ்ட் போட்டுக் காட்டுவது வழக்கம். எழுத்தாளர் பிரபஞ்சனின் இணையதளத்தை வடிவமைக்கும் போது எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்திலிருந்து டெக்ஸ்ட் எடுத்து போட்டுக் காட்டுவோம். அதன் பின் பிரபஞ்சன் எழுதிக் கொடுத்தப் பின் ராமகிருஷ்ணனின் டெக்ஸ்ட்டையெல்லாம் நீக்கி விட்டு பிரபஞ்சன் டெக்ஸ்ட்டாக உள்ள தளத்தை வெளியிடுவோம்.

இந்த தளத்திற்காக அப்படி டம்மி டெக்ஸ்ட் போடும் போது அது வைணவம் பற்றிய டெக்ஸ்ட்டாக இருந்தால் முகப்பை பார்க்கும் போது உருத்தல் இல்லாமல் இருக்கும் என்பதற்காக கூகுளில் தேடிய போது பிரபந்தம்.காம் தளம் இருப்பது தெரிய வந்தது. எங்கள் மனதில் வேறு கள்ளம் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் பிரபந்தம்.காம் எனும் வாக்கியங்கள் எல்லாம் இருக்கும் விதமாகவே அதிலிருந்து கட்டுரைகள் எடுத்துப் போட்டு இந்த தள நிர்வாகிகளிடம் காட்டினோம். அவர்களுக்கு தளம் எப்படி தோற்றமளிக்கும் என்று ஒரு ஐடியா கிடைக்கும் என்பதற்காக.நாங்கள் பயன்படுத்திய டம்மி டெக்ஸ்ட்டின் நீள அகலங்களுக்கு அவர்கள் எங்களுக்கு எழுதி தர வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிற காரியம் இது. அவர்களும் ஒவ்வொன்றாக எழுதிக் கொடுக்க நாங்கள் பயன் படுத்தியிருந்த டம்மி டெக்ஸ்ட்களை நீக்கிக் கொண்டே வந்தோம். இப்பொழுதும் கூட அந்த டெக்ஸ்ட்களில் சில இன்னும் தளத்தில் இருக்கிறது. அதை முற்றிலும் நீக்கிய பின்தான் தளத்தை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் தள நிர்வாகிகள் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரத்தன்று இந்த தளத்தை வெளியிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்த தால் அந்த வாக்கியங்களுடன் வெளியிடும் படி ஆகி இருக்கிறது.

இன்னொன்று இந்த தளத்திற்கு வர்த்தக நோக்கமில்லை. ஆன்மிக , தமிழ் , இலக்கியப் பணிதான் இது என்பதால் அறிஞர்கள் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று பொதுவாக நம்பி னோம்.

வடிவமைப்பிற்காக பயன்படுத்திய சில வாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த தளத்திற்குப் பின்னால் இருக்கும் உழைப்பின் மீதும் , இந்த த் தளம் உருவாக க் காரணமாக இருந்த நிர்வாகிகளின் மனோதர்மத்தின் மீதும் களங்கம் உண்டாகும் படி செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் செய்திருக்கும் பதிவு அதிர்ச்சியளிக்கிறது.

எழுத்தாளர்கள் இணையதளம் என்றால் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என்று பொதுப் பிரிவு இருக்கும். வைணவ தளம் என்றால் திவ்யதேசங்கள், வைணவ ஆச்சார்யார்கள், ஆழ்வார்கள் என்று பொதுப் பிரிவு வந்து தான் தீரும் . இது ஸ்ரீராமின் மூன்றாண்டு கால உழைப்பை திருடியதாகாது.

எந்த தளத்திற்கும் போட்டியாகவோ அல்லது மற்ற வைணவ தளங்களைக் காட்டிலும் முதன்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப் பட்ட தளமில்லை இது.

நேர்மையை மட்டுமே முன்வைத்து உருவாக்கப் பட்ட தளம் . அறிஞர்கள், பெரியவர்கள், இலக்கிய நண்பர்கள் இதை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு ,
ஆர். கவிதா
நிர்வாக மேலாளர்.
பர்பிள் ரெயின் மீடியா சொல்யூஸன்ஸ்.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நன் கடந்த 2 வருடமாக உங்களின் கட்டுரைகளை படித்து வருகின்றேன். சிலவற்றில் உடன்பாடு இல்லை என்றாலும், பொதுவாக உங்களின் கருத்துக்கள் எனக்கு பிடிக்கும். உங்களின் பலவரிகள் என் அகசிந்தனைகளை தூண்டி உள்ளது.
இது உங்களின் வலைத்தளத்தில் வந்த திராவிட வேதம் பற்றியது.
திராவிட வேதம் என்பது ‘வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தம்’ தான? இது சற்று மாறுபாடாக உள்ளது. இது போன்ற பொது பெயர்கள் வரலாற்றில் பல திரிபுகளை உண்டாக்கும்.
நன் அறிந்தவரை, சைவத்தின் “பண்ணிரு திருமுறைகளை” தான் தமிழ் வேதம் என்று போற்றி அதன் மூலமே வாழ்வியல் சடங்குகளும் மற்றும் சைவ திருக்கோவில் குடமுழுக்கும் செய்து வருகின்றனர். கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் தமிழ் வேதங்களை ஓதியே அணைத்து சடங்குகளும் செய்கின்றனர். சைவத்தை பொறுத்தவரை திருமுறைகளே வேதங்கள்.

இப்படி இருக்க, வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தம் தான் திராவிட வேதம் என்பது சற்று முரணாக உள்ளது. ஏனென்றால், பல வருடங்களுக்கு பிறகு இவைகள் சமய பிணக்குகளை உண்டாக்கலாம்.
மேலும், தமிழ் மொழியை அதிகம் வளர்த்தவர்கள் சைவ ஆதினங்கள். எனவே, திராவிட வேதம் என்பதிற்கு பதிலாக வைணவ வேதம் என தலைப்பு இடலாம் எனக்கருதுகின்றேன்.
இது பற்றி உங்களை எண்ணங்களை அறிய ஆவல்.

சோமசுந்தரம்

——
k.Somasundaram
Coimbatore

அன்புள்ள சோமசுந்தரம்,

மரபுப்படி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களை மட்டுமே தமிழ்வேதம், திராவிட வேதம் என்று சொல்வது வழக்கம். வேதம் தமிழ்செய்த மாறன் என்று நம்மாழ்வாரே குறிப்பிடப்படுகிறார். அவரை பின்பற்றிய தமிழ் வைணவர்களின் நம்பிக்கை அது.

மெல்ல மொத்த நாலாயிர திவ்ய பிரபந்தமும் தமிழ்வேதம் என்றும் திராவிடவேதம் என்றும் அழைக்கப்படலாயிற்று. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக வைணவர்களின் பூஜைகளிலும் சடங்குகளிலும் வேதத்துக்கு இணையான முக்கியத்துவத்துடன் நாலாயிரதிவ்யபிரபந்தமும் இடம்பெற்று வருகிறது.

சைவத்திலோ வைணவத்திலோ உள்ள வேறு எந்த நூலும் அவற்றின் அடியார்களால் வேதத்துக்கு நிகரானதாகக் சொல்லப்பட்டதில்லை.

நம் சூழலில் சைவர்களுக்கு வைணவம் பற்றியும் வைணவர்களுக்கு சைவம் பற்றியும் எந்த அளவுக்கு தெரியாமல் இருக்கிறதென்பதற்கு உங்கள் வினா ஓர் உதாரணம்

ஜெ

முந்தைய கட்டுரைதிராவிடவேதம்-இன்னொரு கடிதம்
அடுத்த கட்டுரைஉலோகம்: கடிதம்