மெல்லிய நூல் (சிறுகதை)

gan

பாபு மிகவும் களைத்திருந்தார் என்று பட்டது. தீதி வந்து இரவு உணவிற்குப் பின் அவர் சீக்கிரமே தூங்கிவிடுவார் என்றும், இரவு உணவும் சற்று முன்னதாகவே வேண்டும் என்றும் சொன்னாள். சோகன் ராமுக்கு அது சற்று ஆசுவாசமாக இருந்தது. வேகவைத்த இரு வாழைப்பழங்களும் ஒரு கிண்ணம் கீரையும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும்தான் அவரது உணவு. சிறு சீசாவில் அரை அவுன்ஸ் தேன் மறக்காமல் எடுத்து வைக்க வேண்டும். அவர் உண்டு படுத்துவிட்டால் அவனும் படுத்து விடலாம்.

சோகன்ராமுக்கும் மிகவும் களைப்பாக இருந்தது. காலையில் அவன் பாபுவுடன் வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. பாபுவுடன் அவரது வேகத்திற்கு ஈடுகொடுத்து நீண்ட தூரம் நடப்பது அவனுக்குப் பழக்கம் தான் என்றாலும் இந்தப் புது ஊரின் நில அமைப்பும் தட்பவெப்ப நிலையும் மிகவும் சிரமம் தந்தது. அடிக்கொருதரம் நீரோடைகள், நீர்க்குட்டைகள். அவற்றிலிருந்து எழும் நீராவியில் தாவரங்கள் மட்கும் மணமும்  நீர்ப்பாசி மணமும் சேற்று மணமும் கலந்து மூச்சடைக்க வைத்தது. யாருமே சட்டை போடவில்லை. தலைமயிரைச் சுருட்டி முன்நெற்றியில் குடுமியாகக் கட்டியிருந்தார்கள். மூக்கின் ஒலியையும் சேர்த்துக்கொண்டு பேசும் அவர்கள் மொழியும் மிக விசித்திரமானது. சோகன்ராம் சீக்கிரமே சலித்துச் சோர்ந்துவிட்டான். பாபு சென்ற இடமெல்லாம் மக்கள் வந்தபடியே இருந்தார்கள். வணங்கிவிட்டு பவ்யமாக விலகி நிற்பவர்கள், மடாதிபதியிடம் பேசுவதுபோல வாய்பொத்தி வினயமாக சில வரிகள் பேசுபவர்கள். சில பெண்கள் பாபுவின் பாதங்களைப் பணிந்ததுமே விம்மிவிம்மி அழ ஆரம்பித்து விட்டார்கள். கைகளால் முகத்தைப் பொத்தியபடியும், தலைகுனிந்தபடியும் அவர்கள் தவிக்க; போலியான கடுமையுடன் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் அவர்களை விலக்கினார்கள். கட்சித்தொண்டர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

சாம்பல் நிற சூட் அணிந்த வழுக்கைத் தலை மனிதர் பாபுவின் நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டார். அவர் பெரிய பதவியோ கல்வியோ உடையவராக இருக்க வேண்டும். அவர் முகத்தில் ஒற்றைக் கண் கண்ணாடி ஒட்டியிருந்தது. அவர் ஆவேசம் கொள்ளும்போது அது விழுந்துவிடும் என்று பட்டது. இடைவெளி இல்லாமல் பேசினார். சோகன் ராமுக்கு ஆங்கிலம் இந்திய உச்சரிப்புடன் பேசப்பட்டால்தான் புரியும். பாபு அதிகமாகப் பேசுகிறவர்கள் முன் மௌனமாகிவிடுவார். கண்களில் ஒரு கூர்ந்த அவதானிப்புப் பாவனையை அப்படியே நிலை நிறுத்திக்கொள்ள அவரால் முடியும். அவரது கரங்கள் இராட்டினத்தில் துல்லியமாக இயங்குவதையும், நூல் சீரான திரியாக நீண்டு சுருண்டு திரள்வதையும் கவனித்தால்தான் அவர் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதை அறிய முடியும். ஆனால் வருபவர்களில் வெகுசிலர் – அதிகமும் பெண்களும் குழந்தைகளும் – தவிர பிறர் எப்போதும் சுழன்றபடி இருக்கும் இராட்டினத்தைக் கவனிப்பதில்லை. சிலருக்கு அதன் இயக்கம் அவர்கள் பேச்சைத் தடைசெய்வது போலவும் தோன்றும். முன்பு விதர்பாவில் ஒரு சிறுவன் “பாபுஜீ நீங்கள் ஏன் இராட்டினத்தைச் சுற்றும்போது பேசுகிறீர்கள், தப்பு இல்லையா?” என்று கேட்டான். பாபு அன்று வெகுநேரம் வாய்திறந்து உடல் குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தார்.

சூட் அணிந்த கனவானுக்குப் பிறகு டர்பனும், வெண்ணிறக்கோட்டும், பெரிய நாமமும் அணிந்த வயோதிகர் பாபுவிடம் வெகு நேரம் பேசினார். நிதானமான ஆங்கிலத்தில் அவர் ஆத்மாவின் நித்தியத்தன்மை, பரமாத்மா ஜீவாத்மாவிடம் கொள்ளும் உறவின் லீலைகள் ஆகியவை பற்றிப் பேசினார். நடுநடுவே அவர் கேட்ட சில கேள்விகளுக்குப் பாபு எளிமையாகப் பதில் அளித்தார். இறுதியில் பாபு “ஆத்மா பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நீங்கள் கேட்டால் இந்த ராட்டை பற்றி நிறையப் பேச முடியும்” என்றார்.

வயோதிகர் திகைப்புடன் ஒரு கணம் மாறிமாறிப் பார்த்தார். அவர் முகம் சிவந்து கண்களில் கோபம் பரவியது. அவர் தன்னைத் தணிவித்துக் கொண்டது சுற்றியிருந்த கூட்டத்தைக் கண்டதனால் என்று தெரிந்தது. பாபு தண்ணீர் கொண்டு வரும்படிச் சொன்னார். சோகன்ராம் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தபோது வயோதிகர் அவனைக் கூர்ந்து பார்த்தார். முகத்தில் ஆழ்ந்த மடிப்புகள் விழுந்தன. “இந்த இளைஞர் யார் என்று நான் அறியலாமா?” என்று மெல்லிய உறுதியான குரலில் கேட்டார். சோகன்ராம் தன் மண்டையில் உதிரம் சூடாகக் குமிழியிட்டு ஏறுவதை உணர்ந்தான். தினமும் பலமுறை நிகழும் சம்பவம். அபூர்வமாகவே அந்த வினா சொல் வடிவம் கொள்கிறது. ஆனால் சோகன்ராமின் உடல் முழுக்கப் பரவி விழித்துக் கூர்ந்திருக்கும் ஒரு நுட்பமான புலன் பிறர் எண்ணங்களைக்கூடத் தொட்டறிந்துவிடும்.

பாபு அவருக்கு மிகவும் பழகிப்போன சகஜபாவனையுடன் “இது என் அணுக்கத் தொண்டர், சோகன்ராம்” என்றார்.

வயோதிகர் மேலும் கண்களை இடுக்கியவராக “தாங்கள் வைசியர். வைணவர் என்றும் கேள்வி உண்டு. இவரது முக அமைப்பு….” என்றார்.

சோகன்ராம் எங்கும் பார்க்காத பார்வை பயின்றிருந்தான். அவனை மொத்தப் பிரபஞ்சமும், மொத்த ஜடமும் பார்த்துக் கொண்டிருந்தது.

”நான் வைணவன். இவர் ஹரியின் மைந்தன்” என்றார் பாபு.

வயோதிகரின் குரல் மூச்சிளைப்புடன் எழுந்தது “இதற்கு தர்மசாஸ்திர அனுமதி உண்டா?”

“தேவையில்லை. அனுமதி ராமனிடமிருந்து எனக்குக் கிடைத்தது.”

“இது வெட்டிப்பேச்சு” என்றார் வயோதிகர்.

“ராமனிடம் நான் பேசினேன். உங்களால் பேச முடிந்தால் கேட்டு உறுதி செய்துகொள்ளலாம்” என்றார் பாபு புன்னகையுடன்.

வயோதிகர் கடும்கோபத்துடன் எழுந்து எதுவும் பேசாமல் நடந்தார். பாபு “ராம் ராம்” என்றபடி ராட்டினத்தைச் சுழற்றினார். சுருண்டு முறுகிய நேர்த்தியான நூல் வெளிவந்து சீராக வட்டையில் சுற்றுவதை சோகன்ராம் பார்த்தான். பிசிரற்ற அந்த இயக்கம் பார்க்கப் பார்க்க மனதில் அமைதியைக் கொண்டு வந்தது. எழுந்து வெளியே நடக்கும்போது அறைக்குள் உடல்கள் தளர்வு கொள்வதை அறிய முடிந்தது. அறையை விட்டு வெளியே வந்ததும் அவனும் புதிய காற்றுக்குள் இறங்கியது போல உணர்ந்தான். மனதின் ஆழத்தில் இன்னதென்று தெரியாத ஆதுரம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தவிர்க்க முயல்கையில் பெருகி உடலைக் கனக்க வைக்கும் ஏக்கமாக அது மாறியது.

அந்த ஏக்கம் எப்போதோ முளைத்து வளர்ந்து வருகிறது. பர்த்வானில் அவனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கமா அது? ஆனால், அங்கு என்ன இருக்கிறது அவனுக்கு? பூமிகார்களின் கண்களில்படாது நடமாட வேண்டும். அப்படியும் வாரம் ஒருமுறை கல்லடியோ செருப்படியோ கிடைத்துவிடும். இரவு பகல் எந்நேரமும் ஓயாத பசி.  வெளிச்சம் இருக்கும் நேரமெல்லாம் கடும் உழைப்பு.

முன்பு சகஜமான உரையாடலாகத் தோன்றிய வசைச் சொற்களில் ஒன்றே ஒன்று போதும், இன்று அவனை அந்த இடத்திலேயே உருக்கிச் சாம்பலாக்கிவிட. அவனுடைய உறவினர்களும் சுற்றத்தினர்களும் இளம்பருவத் தோழர்களும் அங்குதானிருப்பார்கள். மலமும் குப்பையும் நாறும் பிய்ந்த குடிசைகளில் தொற்றுநோய்களும் தீரா நோய்களும் நிரம்பிய உடல்களுடன் குடி, துணுக்குறச் செய்யும் கொடும் வன்முறை, மூர்க்கமான அன்புகள், உறவுகள், ஆங்காரமான பரஸ்பர துவேஷங்கள், அறுபடாது நீளும் வம்புகள், பொறாமைகள், கோழைத்தனங்கள், சதிகள்,

அங்குள்ள காற்றில் ஒரு மூச்சுகூட இனி அவன் விட முடியாது. அவர்களுடைய உணவில் ஒரு கவளம் கூட இனி அவன் உண்ணமுடியாது. அவர்களிடம் ஒரு சகஜமான புன்னகையைக்கூட இனி பரிமாறிக் கொள்ளமுடியாது. படித்த நூல்களும், சென்ற ஊர்களும், சந்தித்த மனிதர்களும் அவனை வெகுதூரம் இட்டுவந்து சேர்த்தாயிற்று. நினைவுகள்கூட திரும்பிப் போய் பாதியில் தேய்ந்து மறையும் தூரம். இனி அவனுக்குத் திரும்பிப் போக ஓர் இடமில்லை. மீண்டும் பழைய சோகன்ராமாக மாறினால் திரும்பிவிடலாம். ஆனால் அது சாத்தியமில்லை. இழந்தது எதை, அந்தப் பழைய சோகன்ராமையா?

ஆறுவருடம் முன்பு தன் கிராமத்திற்கு வெளியே சேரிக்குளத்தின் சேற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது புழுதிச்சாலை வழியாக ஒரு சிறு குழு நடந்து வருவதைக் கண்டான். அவர்களை நெருங்கிப் போய் புதர்களில் ஒளிந்தபடி கவனித்தான். தாக்க வருவார்களானால் எதிர்கொள்ளக் கையில் கல் இருந்தது. முகப்பில் வந்த வயதான கரிய மனிதர் –  சோகன்ராம் அவரது பெரிய காதைப் பார்த்து பன்றிக்காது என்று சொல்லிச் சிரித்துக் கொண்டான் – அவனை பார்த்துப் புன்னகை செய்து, “உன் பெயர் என்ன?” என்றார்.

சோகன்ராம் அவனுக்கு தெரிந்ததிலேயே மிக ஆபாசமான வார்த்தையை ஆக்ரோஷமாகச் சொல்லிவிட்டு. “பன்றிக்காதுப்பயலே!” என்று கூவியபடி ஓடினான். சற்று தூரம் ஓடிய பிறகுதான் எவரும் பின்தொடரவில்லை என்பது தெரிந்தது. எனவே திரும்பி வந்தான். மீண்டும் ‘பன்றிக்காது’ என்று கூவினான். அந்த வயோதிகர் சிரித்தபடி “நான் கேட்டதற்கு நீ பதில் கூறவில்லையே, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். சோகன்ராம் தனக்குத் தெரிந்த ஆபாச வார்த்தைகளை எல்லாம் படுவேகமாக உதிர்த்தான். ஓடத் தயாராக நின்று காத்திருந்தான். அந்த மனிதர் வாய் திறந்து சிரித்துவிட்டு பேசாமல் நடந்தார்.

சோகன்ராம் கெட்ட வார்த்தைகளைக் கூவியபடி பின்னால் நடந்தான். அவர்கள் அவனைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஆட்டத்தில் தோற்றுவிட்டது போலவோ, நிர்வாணமாகப் பெண்கள் முன் நிற்க நேரிட்டது போலவோ, சோகன்ராம் தன் கூச்சலை நிறுத்திக்கொண்டு நகங்களை முரட்டுத்தனமாக கடித்துப் பிய்க்க ஆரம்பித்தான். ஒரு நகம் பிய்ந்து காந்தல் எடுத்தது. அந்தக் காந்தல் உடலெங்கும் பரவியது.

கிராம எல்லையை அடைந்ததும் அந்த மனிதர் திரும்பிப் புன்னகை செய்தார். அவரும் குழுவினரும் கிராமத்திற்குள் நுழைந்து மறைய சோகன்ராம் அங்கேயே நின்றான். வெயில் ஏறி மண்டையைக் கொதிக்க வைத்தது. கால்கள் கடுத்து மரக்கத் தொடங்கின. அங்கிருந்து போய்விட பலமுறை மனதால் முயன்றும் முடியவில்லை. அவர் திரும்பி வரும்போது ஒரு சாணி உருண்டையை வீசிவிட்டு ஓடிவிட வேண்டும் என்று கற்பனை செய்தான். அதற்காகவே அங்கு நிற்பதாக எண்ணிக் கொண்டான். அல்லது ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவர் மண்டை மீது வீசிவிட்டு ஓடிவிட வேண்டும். வழுக்கை மண்டை உடைந்து ரத்தம் வழியும். சோகன்ராம் சிரித்துக் கொண்டான்.

செம்புழுதிப் பாதையெங்கும் அவன் செவிப்புலன் பரவியிருந்தது. எல்லா ஒலிகளும் பாத ஒலிகளாகக் கேட்டு பரபரப்பு கொள்ள வைத்தன. வெயில் சாயத் தொடங்கிய பிறகுதான் அவர்கள் திரும்பினார்கள். மிகவும் அமைதியாக, மிகவும் களைத்துப் போய் நடந்தார்கள். கிராமத்தில் அவர்களுக்கு வரவேற்போ, தண்ணீரோ கிடைக்கவில்லை என்று தெரிந்தது. அவர் நெருங்க நெருங்க தன் ஒரு கால் தன்னிச்சையாகப் பதறுவதை சோகன்ராம் உணர்ந்தான். வயிறு கெட்டித்து மூத்திரம் முட்டியது.

அவர் அவனைக் கண்டதும் புன்னகை புரிந்தார். மெல்லிய குரலில், “உன் பெயர் என்ன?” என்றார். சோகன்ராம் வாயை அசைத்தான். வாய் மரத்துப்போய் இருந்தது. அவர் மீண்டும் “உன் பெயர் என்ன?” என்றார். சோகன்ராம் அடிவயிற்றிலிருந்து ஓர் ஆக்ரோஷம் பொங்கி வந்து தன்னை உலுக்கியபடி கதறலாக வெளிப்படுவதை அறிந்தான்.  அப்படியே அமர்ந்து கேவிக்கேவி அழுதான். அவர் அவனருகே வந்து அவன் தலைமீது தன் கரங்களை வைத்தார்.

அன்று அவர்கள் அவனுடைய சேரிக்கு வந்து தங்கினார்கள். பரபரப்பும், குழப்பமும், இனம்புரியாத எரிச்சலுமாக சேரி திண்டாடியது. அவன் அவர் காலடியிலேயே அமர்ந்திருந்தான். அவரது உடலின் தொடுகையைவிட்டு விலகவேயில்லை. அவரது உடலில் முதுமைக்குரிய சிறு நடுக்கம் இருந்தது. அது அவனுக்கு மிகமிக அந்தரங்கமான ஒரு உரையாடல் போலிருந்தது. மறுநாள் அவன் குளித்துவிட்டு தீதி கொடுத்த வேட்டியையும் கட்டிக்கொண்டான். அவர் அவன் தோளில் கைவைத்து “என்னுடன் வருகிறாயா” என்றார். அவன் தலையசைத்தான். அவரது கரங்களும் கால்களைப் போலவே  பெரியவை, கனமானவை. அவர் கரத்தின் சுமை அவன் தலையை அழுத்தியது.

இந்த ஆறு வருடங்களில் சோகன்ராம் அதிகம் அவரைத் தொட நேர்ந்ததில்லை. அபூர்வமான தற்செயல் தொடுகைகள்தான். ஆனால் அவரது தொடுகையை எப்போதும் அவனால் உணர முடியும். குறிப்பாக அரைவிழிப்பின்போது அதன் அந்தரங்கமான நடுக்கம், வெம்மை, கூடவே கனமும். ஏன் அத்தனை கனம் அவற்றுக்கு? சிலசமயம் அந்தக் கனம் அவனை அழுத்தி இறுக்கி மூச்சுத் திணற வைக்கும். திணறித் திணறி பயந்து விழித்துக்கொள்வான்.

கடைசி விருந்தாளியும் போனபிறகு தீதி வந்து பாபுவிற்கு உணவு தயாரா என்று கேட்டாள். சோகன்ராம் வாழைப் பழங்களை எடுத்துக் கழுவப் போனான். அப்போது வெளியே குரல்கள் கேட்டன. சோகன்ராம் சலிப்புடனும் கோபத்துடனும் எட்டிப் பார்த்தான். தலைப்பாகை அணிந்த, கரிய, திடமான மனிதர் கரிய இளைஞர்கள் புடைசூழ நின்றிருந்தார். உரத்த குரலில் அவர்கள் பேசினார்கள். அவர்களைத் தடுக்க முற்பட்ட சேவாதளத் தொண்டர்களும் உரத்துப் பேசினார்கள்.

தீதி வெளியே வந்து “என்ன விஷயம் கணபதி?” என்று கேட்டாள். ஒருவர் “பாபுவைப் பார்க்க வேண்டுமாம. பாபு இனி எவரையும் பார்க்க மாட்டார் என்றால் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.”

“யார் இவர்?”

”இவர் பெயர் அய்யன்காளி. உள்ளூர்த்தலைவர்” என்றார் கணபதி.

“பாபு மிகவும் களைத்துவிட்டாரே” என்றாள் தீதி.

அய்யன்காளியுடன் வந்த இளைஞன் “வணக்கம் அம்மா; என் பெயர் சிண்டன். நாங்கள் வெகுதொலைவிலிருந்து வருகிறோம். திருவிதாங்கூரின் மறு எல்லையில், இரணியல் என்ற ஊரில் இருந்து, அவ்வளவு தூரம் நடந்துதான் வரவேண்டும். இங்கு நாங்கள் வண்டிகளிலும்  பொதுவழிகளிலும் நடமாட முடியாது. வயல் வரப்புகள் வழியாக வருகிறோம். அதிகாலையில் கிளம்பியும் இப்போதுதான் வந்து சேரமுடிந்தது.

“அது உங்கள் விஷயம்” என்றார் கணபதி. “பாபு மிகவும் களைத்திருக்கிறார் என்று சொன்னது காதில் விழுந்ததல்லவா?”

“ஆனால் பாபு நாளைக் காலை கிளம்புகிறார் என்றார்கள்” என்றான் சிண்டன்.

”ஆம், நீங்கள் அடுத்த முறை பார்க்கலாம்.”

“எப்போது?”

”சொல்ல முடியாது, எப்படியும் இரண்டு வருடத்திற்குள் வர நேரும்.”

”இரண்டு வருடமா? ஒரு வேளை எங்களில் எவரும் அப்போது உயிருடன் இல்லாது போகக்கூடும்” என்றான் சிண்டன். அங்கு சட்டென்று குளிர் பரவியது போலிருந்தது.

தீதி “உள்ளே வருங்கள்” என்றாள். அதுவரை ஒரு சொல்கூடப் பேசாமல் கரியசிலை போல நின்ற அய்யன்காளி படியேறினார். அவரது பிரமிப்பூட்டும் உயரமும், தாடை விரிந்த சதுர முகமும், பெரிய தொங்கு மீசையும், வலிமையின் ஒளி நிரம்பிய கண்களும் ஏதோ வரலாற்றுக் கதாபாத்திரம் போல பிரமை கூட்டின. அவர் கையிலிருந்த மூங்கில்தடி முற்றிப் பழுத்து, கைபட்டுத் தேய்ந்து, பொன்னிறமாக இருந்தது. அவரது சீடர்கள் அனைவர் கரங்களிலும் கம்பு இருந்தது. இயல்பாகக் கம்புடன் நடந்தார்கள். கம்பு அவர்கள் உடலின் ஓர் உறுப்பு போலிருந்தது.

சோகன்ராம் ஆர்வத்தைக் காட்டாமல் கணபதியிடம் “யார் இவர்?” என்றான்.

”புலையர் தலைவன் அய்யன்காளி” என்றார் கணபதி “பெரிய போக்கிரி. சண்டியன். முப்பது கொலை செய்திருப்பதாகப் பேச்சு. அய்யன்காளிப்படை என்ற ஒரு துஷ்டக் கும்பல் வைத்திருக்கிறான். அவன் கேட்டதைக் கொடுக்காதவர்களை வெட்டிப் போட்டு கொள்ளையடித்து கொளுத்திவிட்டுப் போய்விடுவான்.”

ஒருவர் “பொன்னு திருமேனியின் நாயர்படை என்னதான் செய்கிறது?” என்றார், கோபத்துடன்.

“அவனுக்கு ரெஸிடெண்ட் துரையின் உதவி இருக்கிறதே” என்றார் கணபதி.

“கலிகாலம்”

“இங்கே எதற்கு வருகிறான்?”

சோகன்ராம் அறைக்குள் நுழைந்தான். அய்யன்காளி பாபுவின் எதிரே அமைதியாகத் தரையில் அமர்ந்திருந்தார். பிறர் கூடி நின்றனர். சிண்டன் அய்யன்காளியை விட்டு மரியாதையாகத் தள்ளி அமர்ந்திருந்தான். உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

சிண்டன் “உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம்” என்றான்.

பாபு “அநீதியை நீதியால் எதிர்க்க வேண்டும். கொடுமையை கருணையால், துவேஷத்தை அன்பால். என் மனம் அதைத்தான் சொல்கிறது” என்றார்.

“நாயினும் கேவலமாக நாங்கள் வதைக்கப்படும்போது, எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படும்போது, எங்கள் குழந்தைகள் அடிமைகளாக்கப்படும்போது, நாங்கள் எப்படி அகிம்சையும் தர்மமும் பேச முடியும்?”

“அகிம்சையும் தர்மமும் வதைபடுபவர்களுக்கும் அநீதி இழைக்கப் படுபவர்களுக்கும் உரிய போராட்ட முறைகள்” என்றார் பாபு.

சிண்டன் கோபத்துடன் எழுந்துவிட்டான் “டேய் மாடா, உடலைக் காண்பிடா மனித தெய்வத்திற்கு.”

மாடன் தன் மேல் போர்த்தியிருந்த துணியை விலக்கினான். சோகன்ராம் பதைப்புடன் அந்த பயங்கரக் காட்சியைப் பார்த்தான். முதுகும் மார்பும் ரத்தமும் சீழும் கலந்து பாளம் பாளமாக இருந்தன. புண் விரிசல்விட்டு வெடித்து நீர் பரவியிருந்தது. அறையெங்கும் விறைப்பு ஒன்று பரவியது.

“இவனைத் திருவட்டார் கோயிலைச்சுற்றி கரைநாயர்கள் பதினெட்டுமுறை மண் தரையில் போட்டு இழுத்தார்கள்” என்றான் சிண்டன். “இவன் செய்த தவறு ஓடிப்போன எருமையைப் பிடிக்க கோயில் வளாகத்தில் நுழைந்ததுதான். அந்தக் கோயிலின் ஆயிரம் ஏக்கர் நிலத்திலும் நாங்கள் பல்லாயிரம் பேர் தினம் வியர்வை சிந்தி உழைக்கிறோம். ஆதிகேசவனுக்குப் படைக்கும் சோறு நாங்கள் மிதித்து மிதித்துக் கற்றையிலிருந்து உதிர்த்தெடுக்கும் நெல். ஆனால்…”

பாபு சலனமற்றவராக இருந்தார். அவரது ராட்டை சீராக ஓடி நூலை முறுக்கி நீட்டி வட்டையில் சுற்றியபடி இருந்தது.

“சொல்லுங்கள், அடிபட்டால் பாம்பு கூடத் தலைதூக்கிச் சீறி எழுகிறது. கன்றுகூட முட்ட வருகிறது. ஆயிரம் வருடங்களாக மனிதப் புழுக்களாக வாழ்ந்து செத்த வம்சம் நாங்கள். எங்களிடம் வந்து அகிம்சை பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோக்கியதை? அந்தக் கரைநாயர்களை வீடு புகுந்து அடித்தோம். அவர்கள் குலதெய்வத்தின் கோயிலில் மலம் கழித்தோம். அது எங்கள் உரிமை.”

“நீங்கள் செய்தது அவர்கள் செயலுக்குக் காரணம் கற்பிக்கிறது” என்றார் பாபு. “வன்முறையே எப்போதும் வன்முறைக்கான நியாயங்களை வழங்குகிறது.”

”உங்கள் மனைவியை நாங்கள் கற்பழித்தால், உங்கள் குழந்தைகளின் குதத்தில் முள்முருக்குக்குச்சியைக் குத்தி ஏற்றினால், அதன்பிறகு எங்களிடம் இப்படி பேச முடியுமா உங்களால்?”

”கண்டிப்பாக பேசுவேன்” என்றார் பாபு. “அதில் எனக்கு இம்மியும் ஐயமில்லை. அப்படி ஐயமின்றி உணர்ந்த பிறகுதான் அகிம்சை பற்றிய என் முதல் சொல்லை இன்னொரு மனித உயிரிடம் சொன்னேன். இப்போது என்னுடன் என் மனைவியும் குழந்தைகளும் இல்லை. நான் அனுமதி தருகிறேன். என்னை நீங்கள் அடிக்கலாம், வதைக்கலாம். அதன் பிறகு எனது பிரக்ஞை மாறுகிறதா என்று சோதிக்கலாம்!”

சிண்டன் சட்டென்று குன்றினான். சமாளித்தபடி “அப்படிச் செய்ய எங்களால் முடியாது என்று உங்களுக்குத் தெரியும்” என்றான்.

“ஆம்” என்றார் பாபு. “ஆனால் உங்கள் தலைவரைப் போன்ற ஒரு மனிதர் விரும்பினால் இமையைக்கூட அசைக்காமல் அதைச் செய்ய முடியும்.” பாபுவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை ஏற்பட்டது. அவர் கண்கள் அய்யன்காளியின் கண்களைச் சந்தித்தன. ஆனால் அவர் முகம் உணர்ச்சியின்றி கற்சிலை போலவே இருந்தது.

பாபு தொடர்ந்தார். “ஆயிரம் வருடம் நீங்கள் கொடுமைப்படுத்தப் பட்டீர்கள் என்றால் அதற்கு முதற்காரணம் நீங்கள்தான். இந்த இழிநிலைக்கு முற்றிலும் தகுதியானவர்களாக இருந்தீர்கள் நீங்கள்.”

இளைஞன் கடும்கோபத்துடன் ஓர் முன் எட்டு எடுத்துவைத்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். வெறுப்பினால் விகாரமடைந்த முகத்துடன் “இதைச் சொன்னதற்கு உங்கள் முகத்தில் நான் காறி உமிழ வேண்டும்” என்றான்.

“அது என் கருத்தை மாற்றுவதில்லை” என்றார் பாபு. “அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்து கொண்டவர்கள். உங்கள் குலத்தில் மிகப் பெரும்பாலானவர்கள் அந்த வாழ்வுக்குப் பதிலாக மரணத்தைத் தேர்வு செய்திருந்தால் ஒன்று உங்கள் குலம் அழிந்திருக்கும், இல்லை வென்றிருக்கும்.”

அமைதியில் பாபுவின் ராட்டை சீராகச் சுழன்றது.

”சமரசங்களில் வெல்வது நமது பலவீனம். சமரசங்களுக்குப் பிறகு நாம் கோபமும் துவேஷமும் கொண்டவர்களாகிறோம். வன்முறை அவ்வுணர்வுகளின் வெளிப்பாடுதான். பிறர்மீது மட்டுமல்ல, நம்மீதே அவ்வன்முறை திரும்புகிறது. ஏந்துபவனின் ரத்தம் விழாமல் வாள் ஓயாது.”

“வாள் இல்லையேல் எங்களுக்கு ரத்தமும் மிஞ்சாது” என்றான் இன்னொரு இளைஞன்.

“உங்கள் எதிரிகளிடமும் வாள்கள் இருக்கின்றன. இன்னும் அதிகமான வாட்கள். இன்னும் பயிற்சி உடைய வாட்கள். அவர்களிடம் இல்லாத ஒரே ஒரு ஆயுதம்தான் உங்களிடம் உள்ளது. அது நீதி. நீதி உங்களை தைரியவான்களாக்கும். அநீதி உள்ளூர அச்சத்தையே நிரப்பும்.” பாபு சொன்னார். அவரது முகத்தில் அபூர்வமான அந்தக் கனவுத் தோற்றம் ஏற்பட்டது. “வன்முறைக்கு நம்மை மாற்றும் சக்தி உண்டு. அது நம் எதிரிகளைப் போன்றவர்களாக நம்மையும் ஆக்குகிறது. அது வெற்றியல்ல. பெரும் தோல்வி. நம்மை மேம்படுத்திக் கொள்வதே உண்மையான போராட்ட முறை.”

சிண்டன் “வெற்றுத் தத்துவம்” என்றான். “நடைமுறை உங்களுக்குத் தெரியாது. ஆயிரம் வருடம் அடிபட்டுச் சுருண்டு கிடந்த வம்சம் நாங்கள். அந்த அடிகளின் வலிகள் எல்லாம் சேர்ந்து எங்கள் ஆத்மாக்கள் மீது கோழைத்தனமாக மூடிக்கிடக்கிறது. திரும்பி எழுந்து நாங்கள் தரும் ஒரு அடி உண்மையில் செயலாக மாறாத ஓராயிரம் அடிகளின் குழந்தை. அதை மறக்க வேண்டாம்.”

“நெய்யூரில் ஒருமுறை ஒரு குறுப்பின் வீட்டை நாங்கள் தாக்கியபோது அவனது தலைப்புலையன் சொன்னான்: ‘அப்படி வரட்டும்! அப்படியானால் புலையனின் அடி நாயர்மீது படும்’ என்று. நாங்களும் அடிக்க முடியுமென்றே எங்கள் மக்களுக்கு இன்னும் தெரியாது. ஆமாம் ஐயா, நாங்கள் ஒரு அடி கொடுக்க வேண்டுமானால் மல்லாந்து படுத்த ஆதிகேசவனையும் அனந்த பத்மநாபனையும் மார்புமீது மிதித்து ஏறித்தாண்ட வேண்டியுள்ளது” என்றான் இன்னொரு இளைஞன்.

“அவர்கள் தூக்கத்தை நீங்கள் ஏன் கலைக்கக் கூடாது? சங்கு சக்கரத்துடன் அவர்களை உங்கள் தரப்பில் நின்று போராடும்படி ஏன் அழைக்கக்கூடாது?”

“அவை பிராமணனின் மலக்குவியல்கள்” என்று கூவினான் சிண்டன். “அந்தப் பாவத்தின் துளிகூட எங்கள் வீடுகளில் விழக் கூடாது.”

பாபு மெல்ல வட்டையைக் கழட்டி இன்னொன்றை மாட்டினார். பஞ்சைக் கொண்டியில் மாட்டி சக்கரத்தை சுழட்டிவிட்டார். அது விர்ர் என்று ஓடத் தொடங்கியது.

”ரத்த பலி கேட்கிற தெய்வங்கள் எங்களுக்கு உண்டு. வாகனங்கள் இல்லாமல் தரைமீது நிற்கும் தெய்வங்கள். எங்கள் மாடனும் சுடலையும் காடனும் கறுப்பனும் எங்களுடன் வந்தால் போதும்.”

“குழந்தையை மார்பில் ஏந்திய தாய்த்தெய்வங்கள் உங்களுக்கு இல்லையா? அவை வருமா உங்களுடன்?”

சிண்டன் பொறுமை இழந்தான். “இவருடன் என்ன பேச்சு நமக்கு? ஆயிரம் வருடம் பேசிப் பேசியே நம்மை அடிமையாக்கிய வஞ்சகக் கூட்டத்தின் பூசாரி இவர். அய்யா வாருங்கள், கிளம்புவோம்…”

ஆனால் அய்யன்காளி அசையாமல் அமைதியாக இருந்தார். அவர் பார்வையை பாபு சந்தித்தார். இருவர் கண்களும் பேசிக் கொண்டன.

“உங்களுடன் என்னால் பேச முடிகிறது” என்றார் பாபு. “இந்தச் சொற்களாலல்ல. இவைகளை என்னாலேயே முழுக்க நம்ப முடியவில்லை.”

அவர் பெருமூச்சுடன் எழுந்தார். அவரது தடி தரைமீது கிடந்தது. அதை பாபு கவனித்தார்.

அவர் கனத்த தணிந்த குரலில் ”உங்கள் தர்ம நியாயங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை” என்றார். “எனக்கு ஆங்கிலம் சரிவர புரிவதில்லை. எந்த மொழியும் முழுக்கப் புரிவதில்லை.” அவரது குரலின் கனத்த கார்வைக்கு அவரைப் போலவே கரிய நிறமும் கம்பீரமும் இருப்பது போலப்பட்டது சோகன்ராமுக்கு. “ஆனால் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதியைத் தர முடியும். இனி அந்தக் கழி எனக்குத் தேவையில்லை. ஏனெனில் அதன் பலத்தில் நான் இல்லை என்று இப்போது தெரிந்து கொண்டேன். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நான் செய்து கொண்ட ஒரே சமரசம் அதனுடன் செய்து கொண்டதுதான். இனி அதுவுமில்லை.”

பாபு புன்னகை புரிந்தார்.

“நாம் மீண்டும் சந்திப்போம் என்று தோன்றவில்லை” என்றார் அய்யன்காளி. “ஆகவே உங்களுக்கு கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். வெல்லும் தருணங்களில் இருக்கும் இதே மனவலிமை தோற்கும்போதும், புறக்கணிக்கப்படும்போதும், கொல்லப்படும்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் இதுவரை கேட்ட குரல்கள் எல்லாம் வானத்திலிருந்து வந்தவை. இது பாதாளத்திலிருந்து வரும் குரல். வருகிறேன்.”

நிமிர்ந்த தலையுடன் அவர் திரும்பி நடந்தார். பாபுவின் ராட்டினம் நின்றுவிட்டிருப்பதை சோகன்ராம் கவனித்தான்.

அய்யன்காளியின் சீடர்கள் குழம்பித் தவித்தார்கள். சிலர் கழிகளை விட்டார்கள். அவர்களைப் பார்த்தபின் பிறரும் கழிகளைத் தரையில் விட்டார்கள். சிண்டன் மட்டும் தன் கழியை எடுத்து, வினோதமான இறுக்கத்துடன் தூக்கிப் பிடித்துக்கொண்டான். அவன் நண்பனும் அவனைப் பார்த்தபின் கழியை எடுத்துக்கொண்டான். பிறர் அவர்களையும் அய்யன்காளியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு தடுமாறி நடந்தார்கள். சிண்டன் கோபமும் வெறுப்பும் கடுமையாகப் பரவிய முகத்துடன் தனித்து நடக்க பிறர் விடுவிடுவென்று நடந்து முன்னே சென்ற அய்யன்காளியைத் தொடர்ந்தார்.

பெருமூச்சுடன் பாபு ராட்டினத்தை முடுக்கினார். அதன் ஒலியில் ஒரு திரிபு இருந்தது. அதற்கேற்ப நூல் கொடும்பிரி விட்டு அறுந்தது. பாபு அதை இணைத்து மீண்டும் இயக்கினார். மீண்டும் திரிந்து அறுந்தது. அவரது விரல்களுக்கும் ராட்டினத்திற்கும் இடையேயான ஒத்திசைவு பிறழ்ந்துவிட்டது போலும். மீண்டும் மீண்டும் மீண்டும் நூல் அறுந்தது. பாபுவின் தலை மிகவும் குனிந்துவிட்டது. தன் அனைத்து சிரத்தையையும் இராட்டினம் மீது செலுத்த முயன்றார். ஆனால் விரல்கள் நடுங்கின. அவர் முயல முயல நடுக்கம் அதிகரித்தது. பாபு சலித்துப் போய் “ஹே ராம்!” என்று அதை விட்டுவிட்டு விலகினார். அப்போது அவர் முகத்தைப் பார்த்தபோது சோகன்ராமின் உள்ளுக்குள் எதுவோ பிளந்து முறிவது போலிருந்தது. பாபு தீர்மானத்துடன் மீண்டும் ராட்டையை எடுத்தார். தன்னை கடைசித் துளிவரை அவர் திரட்டிக் கொண்டிருந்தார். அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது சோகன்ராம் வெளியேறினான்.

இருட்டு எங்கும் விறைப்பான கரிய திரையைப் போல நின்றது தன் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டான். உடம்பு அந்த அளவுக்குக் களைத்திருந்த போதும்கூட மனம் பதைத்தபடி இருந்ததனால் தூக்கம் வரவில்லை. அறைக்குள் விளக்கு அணையவில்லை. ராட்டினம் தொடர்ந்து சுழன்றது. ஆனால் அந்த ஒலியில் சுருதி கூடவில்லை என்று அவன் அறிந்தான். சிடுக்காகும் அந்த நூல் ஒலியாக மாறி அவனைச் சூழ்வதுபோல, அச்சிடுக்கு தன் சிந்தனையோட்டத்திலும் நிகழ்வது போல, தன்னிலிருந்து அது விரிந்து இருட்டில் பரவி நிறைவது போல…  அது இறுகி இறுகி வந்தது. தலைக்குள் ஒரு நரம்பு அறுந்துவிடும் போலிருந்தது. ஓர் உச்ச கணத்தில் அவன் எழுந்து “நிறுத்துடா கிழட்டு நாயே!” என்று கத்தினான். இல்லை கத்தவில்லை. ஒருகணம் ஆறுதலும் பிறகு மின்னதிர்ச்சிபோல ஒரு துடிப்பும் ஏற்பட்டது.

“ராம் ராம்” என்று ஜெபித்தபடி பாய்ந்து எழுந்தான். தன் உடலையும், அந்த இடத்தையும் பயந்தவன் போல இறங்கி ஓடினான். தென்னை மரங்கள் காற்றில் சடசடக்க, நிழல்கள் ஆடும் தோட்டத்தில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பால் கரிய பளபளப்புடன் ஒரு குளம் நெளிந்தது. வானம் சாம்பல் மேகங்களினாலான பிரவாகமாக உறைந்து கிடந்தது. எங்கோ ஒரு துண்டு நிலவு இருக்கிறது. சோகன்ராம் தன் உடம்பின் நடுக்கத்தை உணர்ந்ததும் அதை தவிர்க்க வேண்டும் என்று எண்ணி “ராம் ராம் ராம்” என்று பிடிவாதமாக ஜெபித்தான்.

அந்தச் சொல்வரிசை சம்பந்தமின்றி எங்கோ ஓடி மறைய, மனம் உடைந்து சுழன்று முட்டி மோதிச் செல்லும் அர்த்தமற்ற ஓட்டமாக இருந்தது. வானம், பூமி, ஒளி, நிழல்கள், மணம், ஒலிகள் அனைத்துமாகி, அனைத்திலும் தனித்துத் தவித்திருக்கும் அவன். ஒரு மெல்லிய ரீங்காரமாக சுவர்க்கோழியின் ஒலி அனைத்தையும் இணைத்துப் பின்னி ஒற்றையிருப்பாக ஆக்கியது. ஒரு மெல்லிய நூல் போல ஒவ்வொன்றையும் ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது அது. அதனுடன் இணைந்து அவன் பிரக்ஞையும் நீண்டு நீண்டு அனைத்தையும் பின்னி வளைத்துக் கொண்டது. அனைத்தும் அவனைச் சுற்றி மீண்டும் உருக்கொண்டன.

மெல்ல அவன் அமைதியடைந்தான். இனி ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகிவிட்டது. மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டான்.  ஆனால் மனதின் ஏதோ ஓர் அதிஎல்லையில் ஒரு குரல் மெல்லிய பிடிவாதமான முணுமுணுப்பாகத் தன் இருப்புணர்த்தியது. இல்லை, அது மெல்லிய சரடு. மிக மெல்லிய சரடு. மிகமிக மெல்லிய சரடு. ராம் ராம் ராம். சோகன்ராம் கைகூப்பிப் பிரார்த்தனை செய்தான். ஒருபுறம் மனம் நெகிழ்ந்து விரிந்து கரைந்து பரவ, மறுபக்கம் அந்த ரகசியக் குரலின் எச்சரிக்கையும் தொடர்ந்தது. திரும்பிச் செல்லும் போது அந்த ராட்டையின் ஒலி சீரடைந்து விட்டிருக்க வேண்டும் என்று சோகன்ராம் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டான்.

குறிப்பு:

கேரள தலித் பெருந்தலைவரான அய்யன்காளியின் சுதந்திரச் சித்தரிப்பு இக்கதையில் உள்ளது. 1863-ல் வெங்ஙானூர் என்ற கிராமத்தில் பிறந்த அய்யன்காளி கல்வியறிவு இல்லாதவர். நாராயண குருவால் உத்வேகமூட்டப்பட்டு தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராட ஆரம்பித்தார். 1905-ல் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரகரான சதானந்த ஸ்வாமிகளின் தூண்டுதலின் பேரால் புலையர் மகாசபை என்ற அமைப்பை நிறுவினார். அடிமுறை நிபுணரும் வர்ம வைத்தியருமான அய்யன்காளி தன் சீடர்களைத் திரட்டி உருவாக்கியிருந்த அய்யன்காளிப்படை வன்முறையையே போராட்ட உத்தியாகக் கொண்டிருந்தது. 1937 ஜனவரி 1 தியதிதான் அய்யன்காளி காந்தியை நேரில் சந்தித்தார். அய்யன்காளியை கௌரவிக்கும் பொருட்டு வெங்ஙானூரில் நடந்த பெரும் கூட்டத்தில் காந்தி தலைமை ஏற்றுப் பேசினார். ஆனால் அதற்கு பத்துப் பதினைந்து வருடம் முன்பு ஒரு சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சந்திப்புதான் இக்கதையில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. 1941 ஜூன் 18-ல் காளி மரணமடைந்தார்.

*****

1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் சிறுகதை இது . அறம் கதைகளின் தொடரில் வரும் சிறுகதைகளுக்கு தொடர்புள்ளதாக இருந்ததால் , இணையத்தில் ஏற்றவேண்டும் என நண்பர்கள் விரும்பியதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது , தட்டச்சு செய்து அனுப்பிய நண்பர் சென்ஷிக்கு நன்றி.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 3, 2011 

முந்தைய கட்டுரைகுழந்தையிலக்கியம் – கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27