யானைடாக்டர், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் கல்லூரி இறுதியாண்டில் “வைல்ட் லைஃப் போட்டோகிராபி ப்ராஜெக்ட்” என்று சொல்லி கொண்டு வயநாட்டில் போய் சிலவாரங்கள் தங்கி இருந்தோம். அப்பப்பாறை ஃபாரஸ்ட் கேம்பில் எங்களுக்கு அறை கொடுத்து ஆதரித்தார் ஒரு இளம் அதிகாரி. திருநெல்லி தாண்டி பக்சி பாதாளம், முத்தங்கா போன்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்ல ஆதிவாசி உதவியாளர்களையும் கூடவே அனுப்பி வைத்து கவனித்து கொண்டார்.

ஒரு வித சுற்றுலா பயணிகளின் உற்சாகத்துடன் நாங்கள் காட்டுக்குள் கேமிராவுடன் சுற்றி அலைந்தோம். ஒரு நாள் அப்பப்பாறை கேம்ப் அலுவலக்த்தில் பரபரப்பாக நுழைந்த ஒருவரைப்பார்த்தோம். வெள்ளைத்தாடி, தீர்க்கமான கண்கள், மெலிந்த வெளுத்த உடல், கார்கோ பேன்டும், மிடுக்கான சட்டையும் அணிந்த ஒருவர். “இவரொக்கே சென்னையில் நிந்நு வந்நிரிக்குன்னு. ஸ்டூடென்ஸ். வைல்ட் ஃலைப் போட்டோ கிராஃபி செய்யுன்னு” என்று அந்த அதிகாரி எங்களை வந்தவருக்கு அறிமுகப்படுத்தினார். அவர் எங்களை கூர்ந்து பார்த்தார். முகத்தில் ஏளனமா தீவிரமா என்று அறியமுடியாத முகபாவத்துடன் எங்களை நோக்கி “கொள்ளாம். போட்டோ எடுக்குந்நதொக்கெ செரி. பக்சே ஓரோ பிராவசியமும் போட்டோ எடுக்கும் முன்பு ஆ மரங்களோடும், பூக்களோடும், வனமிருகங்களோடும் பெர்மிஷன் சோதிக்கணும். மன‌சு கொண்டு” என்றார். எனக்கு அப்போது அது சற்று எரிச்சலூட்டுவதாக இருந்தது. பெருசு ஓவரா பேசுது என்று தோன்றியது.

ஆனால் பிற்காலத்தில் அவருடைய அந்த சொற்கள் எப்போதும் என் செவியின் உட்கார்ந்து இருக்கும் என்று நான் நினைக்க‌வில்லை. டாக்டர் கேயின் வழியாக அந்த சொற்கள் மேலும் விரிந்து பரவுவதை உணர்கிறேன்.

அன்புடன்
சந்தோஷ்


http://ensanthosh.wordpress.com/

அன்புள்ள ஜெ

காடு, வயநாடு என்கிற யோசனைகளின் தொடர்ச்சியில் எனக்கு ஞாபகம் வந்தவர் கெ.ஜெ.பேபி. நான் அவரை பல வருடங்களுக்கு முன்பு அவருடைய “கனவு” என்கிற ஆதிவாசி சிறுவர்களுக்கான‌ பள்ளியில் சந்த்தித்தேன். அதற்கு முன்பு மாவேலி மன்றம், நாடு கத்திகா போன்ற அவருடைய ஆக்கங்களையும் படித்திருக்கிறேன். அவரை ஒரு முக்கியமான ஆளுமை என்றும் என்றும் நினைக்கிறேன், நீங்கள் கண்டிப்பாக அவரை வாசித்திருக்கவும் ஏன் அவரைச் சந்த்தித்திருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன். அவரைப்பற்றி தமிழில் இதுவரை யாரும் பேசி நான் கேட்டதில்லை. அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

கனவு பற்றிய ஒரு ஆவணப்படம்:

http://video.google.com/videoplay?docid=1021234084637159129&hl=en#

அன்புடன்
சந்தோஷ்

அன்புள்ள சந்தோஷ்

நான் கே ஜே பேபியை சந்தித்ததில்லை. கேள்விப்படிருக்கிறேன். ஒருமுறை கே ஜி சங்கரப்பிள்ள வீட்டுக்குள் நான் நுழைந்தபோது அவர் வெளியே சென்றுகொண்டிருந்தார்.

அவரைப்பற்றியும் எழுத வேண்டும். ஒரு விக்கிபீடியா பக்கம் மட்டும் போட்டேன்.

எழுதுவதற்கு எத்தனை பேர். நூறுகதை எழுதினாலும் தீராத மனிதர்கள். இந்த கதை வரிசையின் வலிமையே அதுதான். இலட்சியவாதம் என்றும் அழியாது என இவை எனக்கு சொல்கின்றன – விதவிதமான மனிதர்கள் வழியாக

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்.

இதுநாள் வரை வந்த கதைகளை படித்தபோது பல்வேறு மாதிரி இருக்கும். சில நேரம் பகீருங்கும், சில நேரம் வெற்றிடமாய் இருக்கும்,
சில நேரம் மனசு கனமா இருக்கும், சில நேரம் எழுச்சியா இருக்கும், சில நேரம் மனசு இளகுன மாதிரி இருக்கும், ஆனா எதுக்கும் நான்
கண் கலங்கினது இல்ல. “நெஞ்சடைக்க கைகூப்பியபடி ஒரு சொல் மிச்சமில்லாமல் மனமிழந்து நின்றேன்.” இந்த வரிகிட்ட வரும்போது
முதல் முறையாக அது நடந்துது. இத்தனைக்கும் நான் பிரிண்ட் செய்து ப்ளேனில் வைத்து படித்துகொண்டிருந்தேன். அந்த கசகசப்பிலேயே
இப்படி. தனியாய் படித்திருந்தால் கண்ணீரே சிந்தியிருப்பேன்.

நன்றி.

நடக்கட்டும் … :)

அன்புடன்.
ஆனந்த கோனார்

முந்தைய கட்டுரைஅலர்ஸர பரிதாபம்
அடுத்த கட்டுரைமயில்கழுத்து [சிறுகதை]-1