மத்துறு தயிர் கடிதங்கள்

அறத்தின் திமிர் அடங்கும்முன், சோறு போட்டு ஜீரணிக்குமுன், மத்துறு தயிரின் நெகிழ்ச்சி தணியும்முன், யானைக் கருத்தான் கதை சொல்லி உடலும் மனமும் பதறச் செய்தீர்கள். அடுத்த தலைமுறை ‘வணங்கான்’ பெயர் அர்த்தமும், நிலையும் உணர்ந்த பிறகே சுவாசம் வந்தது. ஒரு வாரத்தில் இத்தனை உணர்வுகள் கண்டதில்லை.

நன்றி
யுகாந்தர்

(அணைத்து எழுத்து பிழைகளுக்கும் என்னையும், google transliteration யும் மன்னிக்கவும்).

அன்புள்ள யுகாந்தர்

நன்றி.

பிழைகளை திருத்திவிட்டேன்.

ஜெ

*

அன்புள்ள ஜெ

கதைகளை மிகுந்த உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மட்டுமே வாசிக்க முடிந்தது. நன்றி. எவ்வளவு நன்றி சொன்னாலும் அதிகமாகாது. சமீபத்தில் சிறுகதையில் இத்தனை ஆற்றல் கொண்ட எழுத்தை வாசித்ததில்லை

மத்துறு தயிர் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர் குமாரை வசைபாடும் இடங்களை வாசித்தபோது மீண்டும் மனசு நெகிழ்ந்தது. ‘நீ வாழ்ந்தே’ என்றுதான் சொல்கிறார். வசைக்காகக்கூட நாசமா போ என்று சொல்லவில்லை.

சொல்லும் எண்ணமும் நல்லது மட்டுமே நிறைந்திருந்த ஒரு குருவைக் கண்டுகொண்டேன்

ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்,

ஆம். அதை நானே இப்போதுதான் கவனித்தேன். அவரது இயல்பே அதுதான்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

மத்துறு தயிர் கதையில் குட்டிக்குட்டிக் கதைபாத்திரங்களை வாசித்து நெகிழ்ச்சி அடைந்தேன். ஒரு கதைக்குள் எத்தனை கதைகள். கோட்டாறு குமாரபிள்ளை அவர்களின் குணச்சித்திரம் அருமையானது என்றால் அந்த மனைவி உச்சம். அதுவே ஒரு தனிச்சிறுகதை. அப்படி கூட நீங்கள் எழுதியிருக்கலாம்

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

இந்தக்கதைகள் அனைத்துமே ஒரு வெள்ளப்பாய்ச்சல்போல ஒரே மூச்சில் எழுதப்பட்டு அப்படியே வெளியாகின்றன. ஒரு கதையை திரும்பிப்பார்க்கமுடியாமல் அடுத்த கதை இழுக்கிறது. கதைகளுக்குள் ஒரு முழு வாழ்க்கையும் இருக்கிறது. ஆகவே அத்தகைய ஒருமையை அடைவதில்லை அவை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

மத்துறு தயிர் படித்து நெகிழ்ச்சி அடைந்தேன். அற்புதமான கதை. அதன் சாராம்சமாக உள்ளது அறிவின் மகிழ்ச்சியும் வாழ்க்கையின் துக்கமும் என்று சொல்வேன். அறிஞர்கள் குரு சிஷ்யர்களாக ஆவதுதான் அவர்கள் வாழ்க்கையில் உச்சமான சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம் பிழைப்புவாதிகளாக இல்லாமல் அவர்கள் உயர்ந்த மனநிலையில் வாழ்வதனால் வாழ்க்கை அவர்களைப் போட்டு கஷ்டப்படுத்துகிறது. ராஜபிளவை நோய் மாதிரி வாழ்கையில் புண்பட்டுவிடுகிறார்கள்.

அருமையான கதை. இந்த வரிசையிலே இதுதான் மாஸ்டர்பீஸ்

ராஜன் குரு

முந்தைய கட்டுரைஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்