அரதி

அன்புள்ள அண்ணனுக்கு,

நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது.

உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது?

அன்புடன்

நடராஜன்

***

அன்புள்ள நடராஜன் எதிராஜ்,

நீங்கள் உங்கள் பிரச்சினையை உங்கள் சூழலின் பிரச்சினையாகப் பார்க்கிறீர்கள். உங்களுடைய பிரச்சினை என்ன? இதை ஆயுர்வேதத்தில் அரதி என்பார்கள். விருப்பமின்மை. பசியில்லாதவனுக்கு உணவு சுவையில்லாமல் இருப்பதுபோல அரதி கொண்டவனுக்கு வாழ்க்கை சுவையற்றிருக்கிறது.

வாழ்க்கைமேல் கொள்ளும் தணியாத தாகமே உயிர்களின் அடிப்படை இயல்பு. வாழ்வாசையே உயிர் எனப்படுகிறது. மரங்களின் கிளைகள் ஒளியைத்தேடுவதும் வேர்கள் நீரைத்தேடுவதும் அவற்றில் உறையும் வாழ்வாசையினாலேயே. வாழ்வாசை அதன் நிறைவைக் காண்பதையே நாம் உலக இன்பம் என்கிறோம். பசி தாகம் காமம் அகங்காரம் ஆகியவை தணிவதையே நாம் உலகஇன்பம் என்கிறோம். அந்த விழைவையே ரதி என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

ரதி என்றால் காமம் என்றும் பொருள் உண்டு. காமத்தின் தேவதையின் பெயர் ரதிதேவி. காமம் என்ற சொல்லுக்கே நம் மரபில் வாழ்வின்மேல் கொள்ளும் விருப்பு என்றுதான் பொருள். தர்மம் அர்த்தம் காமம் என்றால் அறம் பொருள் வாழ்வாசை என்றே பொருள். இயற்கையில் நாம் காணும் அழகும் கொண்டாட்டமும் எல்லாம் ரதியின் விளைவேயாகும்.

மனிதனுள் உள்ள ரதியே அவனை வாழச்செய்கிறது. இயற்கை அளிக்கும் அனுபவம், இசை முதலிய கலைகள் அளிக்கும் இன்பம், புதிய சிந்தனைகள் அளிக்கும் கிளர்ச்சி ஆகிய அனைத்துமே ரதியின் வெளிப்பாடுகள்தான். அவற்றை இழக்கும் நிலையே அரதி. அது ஒரு நோய்க்கூறான நிலை என்று ஆயுர்வேதம் சொல்லும்.

பல உடல்நோய்களின் விளைவாக அரதி என்ற மனநிலை உருவாகும் என்கிறார்கள். உடல் சோர்வுறும்போது மனம் அரதியை அடைகிறது. அரதி மேலும் உடலை நோயுறச்செய்கிறது. நோயை விரைவுறச்செய்யும்பொருட்டு உடலே அரதியை உருவாக்கிக்கொள்ளக்கூடும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. ரதி தீவிரமாக இயங்கும் மனதில் நோய்களை வெல்லும் விருப்புறுதி உருவாகும் என்கிறார்கள். வாழவேண்டுமென்ற விருப்புறுதியே நோய்களுக்கு முதல் மருந்து

ஆகவே நோய்களுக்கு சிகிழ்ச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அரதியைப் போக்குவதையும் ஒரு சிகிழ்ச்சையாகவே கொள்வார்கள். பல நோயாளிகளிடம் அனுமனை உபாசனைசெய் என்றோ பிள்ளையாரை வழிபடு என்றோ வைத்தியர்கள் சொல்வதன் உட்பொருள் இதுதான். அந்த கடவுளூவங்கள் ஆழ்ந்த குறியீடுகள். உடல்வலிமையின் சின்னம் அனுமன். ருசியின் சின்னம் பிள்ளையார். அவ்வடிவங்கள் வாழ்வாசையை உருவாக்கக்கூடியவை.

நடராஜகுரு நித்ய சைதன்ய யதியுடன் பயணம்செய்யும்போது ஒரு வீட்டுக்குச்சென்ற அனுபவத்தை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் நித்யா எழுதியிருக்கிறார். அங்கே ஒரு பெண்ணுக்கு மஞ்சள்காமாலை. அவளுக்கு எதிலுமே ஆர்வம் இல்லை. அவளிடம் நடராஜகுரு சொல்கிறார், ‘உன் மனதை அரதி பீடித்திருக்கிறது. காரணம் மஞ்சள்காமாலை உன் நிற உணர்வை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. நிறங்களே இயற்கையின் உயிர்த்துடிப்பு. நிறங்கள் இயற்கையில் உள்ள ‘ரதி பாவ’த்தின் வெளிப்பாடுகள். ஆகவே உன் மனதில் உள்ள அரதியை விலக்கு. உன் மனதில் வாழ்வாசையை நிரப்பு. அதற்கு மேலும் மேலும் நிறங்களில் உன்னை ஈடுபடுத்திக்கொள். அதுவே நோய்க்கு மருந்து’

இயற்கையின் சகஜநிலையே ரதிபாவம்தான். நிறங்கள். ஒளி. இயற்கை லீலையே வடிவானது என்பது நம் மரபு. அந்த உயிர்த்துடிப்பான நிலையைத்தான் காமம் என்று தத்துவார்த்தமாக வகுத்தார்கள். சிவசக்திலீலை என்று கவித்துவமாக விளக்கினார்கள். இயற்கை முழுக்க நிறைந்திருக்கும் பெருங்களியாட்டமே அதை சாராம்சமான செய்தி. அந்த லீலையின் ஒருபகுதியாக எப்போதுமே தன்னை உணர்வதே வாழ்க்கையின் இயல்பான நிலை. ஆம், வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் களியாட்டமே.

அரதி மரணத்தின் முதல் தூது என்பார்கள் ஆயுர்வேதத்தில். மரணத்தின் இளைய மகள் அவள். அரதி நம் மனதை பல காரணங்களால் பீடிக்கக் கூடும். உடற்காரணங்கள் இருக்கலாம். வாழ்க்கைச்சூழலில் காரணங்கள் இருக்கலாம். நவீன உளவியல் அதை டிப்ரஷன் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விடுகிறது. ஒருபோதும் நம்மை அரதி பீடிக்க நாம் அனுமதிக்கலாகாது. அரதி நம் லௌகீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம்முடைய ஆன்மீக வாழ்க்கைக்குக் கூட எதிரானது.

நம்மிடையே ஒரு நம்பிக்கை உண்டு. வாழ்க்கைக்குத்தான் வாழ்வாசை தேவை, துறவென்பது வாழ்வாசையை துறப்பது என்று. அதுவல்ல உண்மை. வாழ்வாசையை மேலும் தீவிரப்படுத்திக் கொள்வதே துறவின் நோக்கம். அதை அன்றாட வாழ்க்கையின் இன்பங்களில் இருந்து மேலே தூக்கிக்கொண்டு பிரபஞ்சமளாவியதாக ஆக்கிக் கொள்வதே துறவு. துறப்பது சிறிய விஷயங்களையே. பெரியவிஷயங்களை ஏற்பதன்பொருட்டே அத்துறவு.

துறவென்பது ஆன்மீகத்தேடலின் ஒரு நிலை. தீவிரமான விருப்புறுதி இல்லாமல் தேடல் உண்டா என்ன? கற்கவும் அனுபவிக்கவும் சோர்வுறுபவனுக்கு என்ன ஆன்மீகப்பயணம் இருக்க இயலும்?

ஒரு காட்டை நாம் ருசிபார்த்து முடிக்க முடியுமா? ஞானத்தேடல் கொண்ட ஒரு மனத்துக்கு நூல்களில் சலிப்புவர வாய்ப்பே இல்லை. பிரச்சினை நூல்களில் இல்லை. நம் மனதில் நம் இச்சையில் உள்ளது. நம்முடைய தேடலின் தயக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நம் மனதைப் பீடிக்கும் சோர்வுகளை அகற்றிக்கொண்டு புத்தம்புதிதாக இந்தப்பெரும் பிரபஞ்சவெளிமுன் நாம் நின்றாகவேண்டியிருக்கிறது.

ஆம், டீஸ்பூனுடன் கடலை அளக்கக் கிளம்புபவனுக்குரிய பேரூக்கம் நாம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் இருந்தாகவேண்டும். அதுவாழ்க்கையின் நியதி. சென்ற காலங்களில் ஒவ்வொருநாளும் மனிதர்கள் ஒளிப்பிழம்பாக வானில் எழும் சூரியனை நோக்கி, பிரபஞ்சபேராற்றலின் பிரதிநிதியை நோக்கி அந்த ஆற்றலையே பிரார்த்தனையாக முன்வைத்தார்கள்.

வரம்தருபவனாகிய சூரியனே
நீ இருளை அகற்று
உன் ஒளியால் என்
புலன்களை நிரப்பு
உன் சுடர்
என் அறிவை துலங்கச்செய்யட்டும்
ஓம் ஓம் ஓம்
[காயத்ரி மந்திரம்]

உங்கள் கடிதம் காட்டும் மனநிலை ஒன்றுதான், படைப்புகளை நோக்கிக் கேட்டுக்கொள்ள உங்களிடம் வினாக்கள் இல்லை. படைப்புகளுடன் மோத உங்களிடம் ஆற்றல் இல்லை. படைப்புகளை கடந்துசெல்வதற்குப் பதிலாக எதிர்கொள்ளாமலேயே நின்றுவிடுகிறீர்கள்.

படைப்புகளை கேள்விகளால் எதிர்கொண்டால் நீங்கள் அவற்றை உண்டுசெரித்து முன்னால்சென்றுகொண்டே இருக்க முடியும். அந்த பயணத்துக்கு முடிவே இல்லை.

அந்த குன்றாத செயலூக்கத்தையே கீதை தன் அடிப்படைச் செய்தியாகக் கொண்டுள்ளது.

ஜெயமோகன்

[மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2009 ஜனவரி]

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53