யக்ஷிப்பாலை -கடிதங்கள்

யட்சிப்பாலை

அழியா வண்ணங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

வணக்கம்

 

யட்சிப்பாலை வாசித்ததிலிருந்து உங்களுக்கு எழுத நினைத்துக்கொண்டே இருந்தேன். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால் வலுவூட்டும் பயிற்சிகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட்டன. கல்லூரியும் நேற்றுடன் முடிந்து இரண்டுமாத கோடைவிடுமுறை துவங்கியது. எழுதவே முடியவில்லை.

ஏழிலைப்பாலை எனக்கு பிடித்தமான மரம்.Alstonia scholaris என்னும் இதன் பெயரில் சிற்றினம் Scholaris. முன்பு பட்டம் வழங்கப்படுகையில் உடன் இதன் பூக்கும் சிறுகிளையொன்றினையும் அளிப்பார்களாம்.கற்றுத்தேர்ந்தவர்களுக்கான மரம் இது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனாலும்

பல மொழிகளிலும் இது சைத்தான் மரம் பேய் மரமென்றே அழைக்கப்படுகின்றது.20வருடங்களுக்கு முன் ஆராய்ச்சி உதவியாளர் நேர்காணலுக்காக புதுதில்லி சென்றிருக்கையில் தான் இவற்றை முதலில் பார்த்தேன்.

 

 

அந்த அலுவலகம் இருந்த தெருவெங்கும் இரண்டு பக்கத்திலும் எதிர்எதிராக வளர்ந்திருந்தன. அப்போது பூக்கும்காலமுமென்பதால் மனம் மயக்கும் வாசனையில் தெருவே நிறைந்திருந்தது.

 

 

இப்போது வீட்டிலும் வளர்கிறது. பூக்க சில வருடங்கள் ஆகும். உங்களின் எழுத்துக்களில் வரும் யட்சிகளின் மீது பெரும் வசீகரமுண்டு எனக்கு.

இறப்பிற்கு பின் யட்சியாகும் பெருவிருப்பமுமிருப்பதால்,இந்த மரத்தையும் கூடுதல் சாத்தியங்களுக்காக இரண்டு செண்பகமரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வைத்துள்ளேன்.

 

 

தேர்தலதிகாரியாக ஒரு குக்கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளிக்கு வந்துள்ளேன். அறிமுகமே இல்லாத ஊர்.எல்லோரும் அந்நியர்கள்.ஒற்றை வாக்குச்சாவடி. ஆனால்இந்த பள்ளியின் வாசலில் பெரிய யட்சிப்பாலை நிற்கிறது.அதனடியில் அமர்ந்து உங்களுக்கு எழுதுகிறேன்

மிக வேண்டியவர்களை புதிய இடத்தில் எதிர்பாராமல் சந்தித்தது போல் மகிழ்வுடனிருக்கிறேன்.

.

 

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி

 

முன்பெல்லாம் கேரளத்தில் நாயர் வீடுகளை ஒட்டி ஒரு யட்சிகோயில் இருக்கும். குடும்பயக்ஷி. என் அம்மாவின் நட்டாலம் வீட்டில் ஒரு யக்ஷி உண்டு. மூதாதை ஒருவர் கள்ளியங்காடு வழியாகச் சென்றபோது சந்தித்து அழைத்துவந்தார். இங்கே வந்தபின் பெண் அல்ல யக்ஷி என தெரிந்தது. அப்படியே இருந்துவிட்டாள். அந்த யக்ஷியம்பலங்களில் யக்ஷிப்பாலை நிற்பதுண்டு. இப்போது அந்த ஆலயங்கள் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டன. கூடவே ரப்பர் தவிர எந்த மரமும் தேவையில்லை என்னும் மெய்ஞானமும் உருவாகிவிட்டது

 

 

அன்புள்ள ஜெ

 

 

யக்ஷிப்பாலை, அழியா வண்ணங்கள் ஆகிய இரு கட்டுரைகளையும் வாசித்தேன். நீங்கள் சுட்டிக்காட்டும் மலையாளப் பாடல்களை எவரேனும் பார்க்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. நான் பார்ப்பதில்லை. எனக்கு அந்தப்பாடல்கள் எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. ஏன் இவ்ற்றை கஷ்டப்பட்டு மொழியாக்கம் செய்து வெளியிடுகிறீர்கள் என்ற எண்ணம்தான் உள்ளது

 

 

சண்முகராஜ்

 

அன்புள்ள சண்முகராஜ்

 

எனக்கும் அந்த ஐயம் உண்டு. நான் மலையாளச் சினிமாப்பாடல்களை போடும்போது பெரும்பாலும் கடிதமே வருவதில்லை. அந்தப்பாடல்களை கேட்டோம் என்று சொல்லி நான் கேட்டதே இல்லை.

 

இருக்கட்டும், எல்லாவற்றையும் மக்கள் வாசிக்கவேண்டும் என்று உண்டா என்ன? நமக்காவே நாம் சிலவற்றை எழுதிக்கொள்ளலாமே

 

ஜெ

முந்தைய கட்டுரைபழந்தமிழர்களின் அறிவியல்!
அடுத்த கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2