மண்ணும் மனிதரும் பற்றி…

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

முன்பெல்லாம் ஊருக்கு செல்லும்போது அப்பத்தாக்களும் அம்மாயிகளும் மேலாடை தனியே அணியாது ஒற்றை வெள்ளைப் புடவையை முழுதாய் சுற்றியபடி வறுமுலை தொங்க அமர்ந்து கையை கண்களுக்கு மேலாக வைத்து சற்று கூர்ந்து நோக்கி “ஏய்,பொந்துப்புளி சாலி மகனா,எப்படிப்பா இருக்க…அம்மா,அப்பால்லாம் நல்லா இருக்காங்களா..”என ஆரம்பித்து தலையைக் கோதி கைகளை தடவியபடி பத்து நிமிடத்திற்கு பேசிக் கொண்டிருப்பார்கள்…
சிவராம காரந்தின் “மண்ணும் மனிதரும்”நூலின் தமிழ் மொழி பெயர்ப்பை படித்தபோது என் ஆயாக்கள் தங்களின் கதையை ஊரின் கதையோடு சேர்த்துச் சொல்வதுபோல அவ்வளவு அணுக்கமானதாக இருந்தது.
ஆசிரியர் ஜெயமோகன் இந்நூலைப் பற்றி   குறிப்பிடும்போது இது மூன்று பெண்களின் கதை என குறிப்பிட்டிருந்தார்.பெண்கள் மூலமாக ஊரின் நாட்டின் வரலாற்றையும் இணைத்துச் சொல்கிறது.
ஆண்களை பெண்கள் பெரிதாக பொருட்படுத்தாமல் அவர்களால் பாதிப்படையாமல் தங்கள் வாழ்விற்குள் ஆண்களால் நுழையமுடியாது என்பதை உணர்ந்தபடி வாழ்ந்து கடக்கிறார்கள்.
மூன்று தலைமுறையின் வாழ்வைச் சொல்லும் இந்நாவல் எதைச் சொல்ல விழைகிறது,அல்லது காட்டுகிறது என நோக்கினால்
பெண்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது ,ஆண்களின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் என்பதைத்தான்.

ஆண்கள் நல்லவர்களாக இருந்தாலும் தீய நடத்தை கொண்டவர்களாயினும் பெண்கள் சுகப்படுவதில்லை.அதற்காக ஆண்களை நோவதுமில்லை.பெண்களின் உலகம் தனித்தது,அதனை ஆண்களால் உணரவோ உள் நுழையவோ முடியாது.

இந்நாவலை முடித்தவுடன் எனக்குத் தோன்றியது,தற்போது சில எழுத்தாளர்களின்  இருண்மையை விரிவாகக் கூறுவதன் மூலமாக ஒளியை உணரச்செய்யும் எழுத்தாய் இல்லாமல் இரு இராமன்களின் சிறப்பான செயல்களை விவரித்துக் கூறி லட்சுமணனின் தீய நடத்தைகளை குறிப்பாக உணர்த்தியபடி கடக்கும் பெரியவர்களின் கூறல் முறை எதற்கெல்லாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எதனை தவிர்க்கவேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
ஆண்கள் இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் நிறைவின்மையுடனேயே அலைவார்கள் என்பதுடன் பெண்கள் சிறு இல்லத்திலேயே முழு நிறைவடைவார்கள் என்பதையும் சிறப்பாக காட்டுகிறது.
கதையை விட்டு நம்மை வெளியில் விடாமல் நம்மை கட்டிவைப்பது எந்த இடத்திலும் ஆசிரியரின் கருத்தென்றோ கூற்றென்றோ எதையும் உரைக்காமல் சற்று உயரத்தில் நின்று கீழே நடக்கும் வாழ்வை நோக்குவது போன்று கூறப்பட்ட முறைதான் .ஆசிரியர்  வாழ்வைப்பற்றி உணர்ந்தவற்றை நம்மையும் உணரச்செய்கிறார் தன் நடையின் மூலம்.
தமிழில் எழுதப்படும் பல நாவல்களே வாசிக்க முடியாமல் வாசித்தாலும் புரியக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்படும் இந்நாட்களில் இந்த  நாவல் எந்த இடத்திலுமே  மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாதவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.   இவ்வளவு பெரிய நூலை  மொழிபெயர்த்த தி.ப.சித்தலிங்கையா நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர் .
மனிதர்கள் இளமையில் பிஞ்சுக்காய்களென துவர்ப்போடும் சற்று வளர்ந்தபின் புளிப்பாகவும் பின் கனியும்போது இனிமையாகவும்  காலவோட்டத்தில் மாறி   வாழ்வில் என்னயிருக்கிறது, அன்பாக இருந்துவிட்டு போகலாமே என்ற எண்ணத்தை வந்தடைவதைக்  காட்டும் நாவல், பெண்கள் அதற்கு மேலும் வாழ்வின் வெம்மையில் வாடி சினம்,வெறுப்பெல்லாம் ஆவியாகிவிட உலர் பழங்களாய் சற்று கெட்டிபட்ட தோலுடன் நின்று நிதானமாக உண்பதற்கான பதத்தை அடைகிறார்கள்.
மக்களையும் மண்ணையும் காட்டி வாழ்வின் பொருளை உணரவைக்கிறது ,பல ஆண்டுகளுக்குப் பின்னும்  உணவாக பயன்படும் உலர் பழங்கள் போல ஆன இந்நாவல்.அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு வணக்கங்கள்..

கா.சிவா

மண்ணும் மனிதரும் வாங்க

முந்தைய கட்டுரைபிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது
அடுத்த கட்டுரைகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்