ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இன்றைய வாசகனுக்கு ஒரு பொதுச் சிக்கலுண்டு. தினமும் சில மணிநேரம் அவன் உலவும் ஒரு தனியுலகிலிருந்து வெளிவந்தவுடன் அவன் சென்று முட்டும் பொதுவுலகின் சராசரி சவலைத்தனம் கொடுக்கும் சிக்கல் அது.

90% அவன் நேரம் கழிவது அப்பொதுவுலகில்தான். சிலருக்கு அது தொழிலாகவும், வேலையாகவும், படிப்பாகவும் இருக்கும். அப்பெரும்பான்மை உலகம் கொடுக்கும் மன நிலையின் தாக்கம் மெல்ல மெல்ல அவனறியாமலே அவன் தனியுலகில் ஆதிக்கம் செலுத்தும். அது சோம்பலாக, தீவிரமின்மையாக, சிறிதிலேயே கொள்ளும் திருப்தியாக, சாக்குகள் தேடும் மன நிலையாக அதன் முகங்கள் மாறி உள்நுழைந்து கொண்டேயிருக்கும். அதை கூர்மையாக நோக்கியகற்ற அபாரமான மனவலிமை வேண்டும்.

பெரும்பான்மையானவர்களால் அது முடிவதில்லை. ஆரம்பகட்ட தீவிரம் வடிந்தவுடன் பெரும்பாலும் அதை மீட்டெடுக்க முடிவதில்லை. பிறகு மெல்ல அதை நோக்கிய ஏக்கமாக, தன்னையே வதைக்கும் கழிவிரக்கமாக, சில நேரங்களில் வாய்பமையும் தருணங்களில் தன்னைவிட கீழிருப்பவர்களை நோக்கிய ஏளனமாக, அவர்களிடம் தன் தகுதி பற்றிய பெருமிதமாக அதை மாற்றிக்கொள்ளும். சுருக்கமாக சொல்வதானால் எதிர்காலத்தை நோக்கிய கண் அகன்று பார்வை இறந்த காலத்தை நோக்கித் திரும்பிவிடும்.

அந்தப் பாதாளப் படுகுழியில் சென்று கவிழ்ந்துவிடாமல் நம்மைக் காப்பது நம் இணைமனங்களை நோக்கி நாம் திருப்பும் கவனம்தான். அது நம்மை தனியர்களாக இல்லாமலாக்குகிறது. நாம் பலவீனமாகும் போது அவர்களின் இருப்பே நம்மை கைதூக்கி மேலேற்றிவிடுகிறது. அதற்கு பெரும் வாய்ப்பாக இருப்பது இலக்கியக் கூடுகைகள். அதுவும் ஒரு முதற்படைப்பாளியின் தலைமையில் கூடுகையில் அதன் வீச்சு மிகப் பெரிதாக ஆகிவிடுகிறது.

இரண்டாவது புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைத்து. விஷால்ராஜாவுடன் இரண்டு நாட்களும் தொடர்ச்சியாக உரையாட முடிந்தது. அதேபோல் நண்பர்கள் கதிர்முருகன், செந்தில், ராகவேந்திரன், விஜயபாரதி, விக்ரம் முதலானவர்களுடனும் சிறு சிறு உரையாடல்கள் சாத்தியமாயின.

ஈரோட்டில் நடந்த விவாதப் பட்டறையில் அதன் மைய்ய உள்ளடக்க அறிவைத் தாண்டி எனக்குக் கிடைத்த மேலதிக அனுகூலங்கள் இரண்டு. முதாலாவதாக எனது முந்தைய கடிதத்தில் கூறியது போலவே உங்களை அணுகி அறியும் வாய்ப்பு. குறிப்பாக முதல் நாள் இரவு குருகுலக் கல்வி தொடர்பான உங்களின் பேச்சு. கற்றலுக்கான துயர் குறித்து நீங்கள் கூறியது அந்த நிசப்த இரவு வேளையில் உணர்த்தவியலா ஒரு மர்மத்தன்மையைத் தந்தது. காலவெளி கரைந்து ஒரு புனைவின் தீவிரத்தருணமாக மாறிவிட்டது. இது மாதிரியான கணங்கள் தனியுரையாடல்களிலே சாத்தியம். கட்டுரைகளிலோ மேடையுரைகளிலோ இந்தளவு அகவயத்தன்மை அமையுமா என்பது சந்தேகமே.

கார்கடல் நாவலில் தொடர்ச்சியாக ஒரு தருணம் வரும். கதைமாந்தர்கள் எப்போதெல்லாம் உள்ளம் சலித்து செயல்படாமல் போகிறார்களோ அப்போதெல்லாம் வலிந்து உள்ளத்தை உந்தி வஞ்சச் சொற்களை பெருக்கி தன் வில்லுக்கு விசையேற்றிக் கொள்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு நம்பிக்கையை தருகின்றன. நம் சலிப்பையும் சோம்பலையும் உதறி நம்மை உந்தும் விசைகள் இத்தகைய நிகழ்வுகள். ஏனென்றால் நம்மைவிட பலமடங்கு தீவிரமாக செயலாற்றுபவர்களை நேராக பார்க்கிறோம். அவர்களின் இருப்பு பற்றிய பிரக்ஞை நம்மை மேலும் மேலும் உந்திச் செலுத்தும்.

அத்தகைய உந்துதலுக்கான முதற்சான்றாக இந்த நிகழ்வு என்றென்றும் மனதில் நிலைகொள்ளும்.

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

ஈரோடு விவாதப்பட்டறை நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்ந்திருக்குமென நினைக்கிறேன். தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள். இவ்வாண்டுதான் இத்தனை பொதுநிகழ்ச்சிகள் என நினைக்கிறேன். ஒரு கடிதம் வந்திருந்தது. உங்கள் நிகழ்ச்சிகளில் ஒரு சோர்வு இருப்பதாக. அது எப்படி என எனக்குப்புரியவில்லை. இந்த ஆண்டு இவ்வளவு நிகழ்ச்சிகள். அதோடு தமிழ்நாட்டிலேயே அதிக நிகழ்ச்சிகள். இவை மிக முக்கியமானவை. இவற்றை இவ்வளவுபெரிதாக அமைக்க ஒரு பெரிய அமைப்புத் திறமை தேவை. உங்கள் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கலாம். இன்னும் இன்னும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த அளவுக்கான அமைப்பும் மாநிலமளாவிய கூட்டங்களும் இவ்வளவு கம்மியான செலவில் நிகழ்த்துவதென்பது மிகப்பெரிய சாதனைதான். கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அருண் வரதராஜன்

முந்தைய கட்டுரைகோவை கட்டண உரை
அடுத்த கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம் – கடிதங்கள்