ஒரு செய்தியைத் தொடர்ந்து…

நம் நீதிமுறை மேல் ஓர் அவநம்பிக்கை எனக்குண்டு. பொதுவான கணக்குகளின்படி கொடிய குற்றங்களில்கூட ஐந்து சதவீதம் பேர் மட்டுமே இங்கே தண்டிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள், அல்லது குறைவான தண்டனையுடன் தப்பிவிடுகிறார்கள். இதைப்பற்றி பொதுநலன் சார்ந்த அமைப்புக்கள் ஏதேனும் ஆய்வுநடத்தி முடிவுகளை பொதுவில் வெளியிடவேண்டும்.

பெரும்பாலான வழக்குகளில் கீழ்மட்டத்தில் வழக்குப்பதிவு செய்யும்போதே போதிய ஓட்டைகள் விடப்படுகின்றன. அரசுத்தரப்புவாதம் வேண்டுமென்றே தளர்த்தப்படுகிறது. நீதிபதிகள் அணுகப்படுகிறார்கள். இதையெல்லாம் நீதித்துறை சார்ந்தவர்களே எழுதியிருக்கிறார்கள். மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் வழக்குகளில் அச்செய்தி மறக்கப்படும் வரை வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. அல்லது கீழ்மட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு மேல்மட்டத்தில் விடுதலை நிகழ்கிறது.

ஆகவே என் கண்ணில் படும் எந்த பழைய குற்றச்செய்தியைக் கண்டாலும் நான் அதன் ஆவணங்களை நாளிதழ்களின் பழைய பதிவுகளில் தேடுவேன். அந்த வழக்கில் குற்றவாளி இறுதியாக தண்டனையை அடைந்தாரா என்று பார்ப்பேன். அப்படித் தேடியபோதுதான் இந்த வழக்குச் செய்தி அகப்பட்டது.

இது செய்தி

சென்னை துணை நடிகை கொலையைப் போல் ஊட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆண் நண்பர் கொலை சம்பவம்: வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர்  

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் திரு கலைமோகன் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொலையை ஒட்டி தன் பழைய வழக்கு ஒன்றை நினைவுகூர்கிறார். அவர் 1996ல் கொடைக்கானலில் காவல் ஆய்வாளராக பணியாற்றியபோது நிகழ்ந்த கொலைவழக்கு இது. ஓமனா என்னும் கேரளப் பெண்மருத்துவர் தன் காதலனாகிய முரளிதரன் என்பவரை ஊட்டிக்குக் கொண்டுவந்து விஷஊசி போட்டுக் கொன்று பல சிறு துண்டுகளாக நறுக்கி பாலிதீன் கவர்களில் போட்டு அவற்றை கொடைக்கானலில் வெவ்வேறு இடங்களிலாக வீசினார். ஒரு வாடகைக் காரில் அவர் செல்லும்போது சடலத்தின் நாற்றத்தைக் கண்டு ஐயம்கொண்ட ஓட்டுநர் காவலர்களுக்குச் செய்தி தெரிவித்தார். காவலர்கள் ஓமனாவை கைதுசெய்தனர். இதை தன் பணிக்காலச் சாதனைகளில் ஒன்றாக திரு கலைராஜன் நினைவுகூர்கிறார்

சரி, ஓமனா என்ன ஆனார்? ஓமனா எடாடன் என்பது அவர் பெயர். வடகேரளத்தில் பய்யன்னூர் என்ற ஊரில் கருவாச்சி என்னும் இடத்தைச் சேர்ந்தவர். பய்யன்னூரில் அவர் ஒரு சிகிழ்ச்சைநிலையம் நடத்திவந்தார். ஓமனாவின் நடத்தை காரணமாக அவருடைய கணவர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அவருக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஓமனாவுக்கும் ரயில்வே காண்டிராக்டரும், ஏற்கனவே மணமானவருமான பி.முரளிதரனுக்கும் காமத்தொடர்பு உருவாகியது. ஓமனா அவருடன் சில ஆண்டுகள் தொடர்பிலிருந்தார்

அப்போது மலேசியாவில் ஓமனாவுக்கு வேலைகிடைத்தது. முரளிதரனை பிரிந்து ஓமனா மலேசியா சென்றார். செல்வதை அவரிடம் சொல்லவில்லை. ஓமனாவை விட முடியாத முரளிதரன் அவரை தேடிக்கண்டுபிடித்தார். பலவாறாகத் தொல்லை கொடுத்தார். ஓமனாவுக்கு மலேசியாவில் ஒருவரிடம் தொடர்பு உருவாகியதை அறிந்து அவரை அங்கிருந்து திரும்பக் கொண்டுவர முரளிதரன் முயன்றார். ஓமனா மனச்சிக்கல்களுக்கு இந்தியாவில் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்ட ஆவணங்கள் அவரிடமிருந்தன. 1992 முதல் ஓமனா கேரளத்தில் கோழிக்கோடு தலைமை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகவே சில மாதங்கள் உளச்சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டார். அவற்றை மலேசியாவின் சுகாதாரத்துறைக்கு அனுப்பிவைத்தார். ஓமனாவின் வேலை பறிபோயிற்று.

ஓமனா இந்தியா திரும்பிவந்தார். முரளிதரனுடன் மீண்டும் தொடர்பு கொள்வதுபோல நடித்தார். 1996 ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஊட்டிக்கு அழைத்துச்சென்று அங்கே ரயில்வே விருந்தினர் மாளிகையில் தங்கினார். இரவில் விஷ ஊசி போட்டு கொலை செய்தார். உடலுடன் தன் ஊரான பய்யன்னூருக்குத் திரும்பிவந்து அதை பலதுண்டுகளாக வெட்டினார். ஊட்டியிலேயே ஒரு விடுதியில் அவர் அந்த உடலை வெட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. உள்ளுறுப்புகளை தன் வீட்டு கழிப்பறைக்குள் போட்டு நீரூற்றினார். உடலை கொடைக்கானலில் வீசுவதற்காகச் சென்றபோது பிடிபட்டார்

ஆனால் வழக்கை விசாரித்து நீதிமன்றம் கொண்டுசென்ற காவல்துறை சார்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து 1998 ஜூன் 15ல்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஓமனா அந்த வழக்கை குற்றப்பத்திரிகை நகல் ஆங்கிலத்தில் தேவை என கேட்டார். அதை வழங்க மேலும் பலமாதங்கள் ஆயின. ஓமனாவுக்கு ஜனவரி 2001- ல் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். உடனே இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார் ஓமனா.

போலி கடவுச்சீட்டுடன் காவலர் அவர் இந்தியாவை விட்டுச் சென்றிருக்கக்கூடும் என்ற எண்ணத்தால் சர்வதேச காவல்துறைக்குச் செய்தி அறிவித்தது. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் சரி, அவரைப்பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அவர் மலேசியா சென்றிருக்கக்கூடும் என்னும் ஊகம் இருந்தது. இந்திய காவல்துறைக்குச் சில துப்புகள் கிடைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் மேற்கொண்டு எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. [அனைத்துக் குடிபெயர்தல் ஆவணங்களும் மிகச்சரியாகப் பேணப்படும் மலேசியாவில் மிக எளிதாக இந்தத் தேடலை செய்திருக்கமுடியும்]

21-years-after-she-killed-mutilated-her-lover-accused-kerala-woman-found-dead-malaysia-
Mystery still shrouds life and ‘death’ of Dr Omana
17 years on, killer doctor eludes police net

சென்ற 2017 ஆம் ஆண்டு தேதி மலேசியா காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மலேசியாவின் சுபாங் ஜெயா செலாங்கூர் என்னுமிடத்தில் ஒரு கட்டிடத்தின் மேலிருந்து விழுந்து இறந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அதிலிருந்தது. அந்தப்பெண் ஒரு மலையாளி என்றும், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர் என்றும் கூறிய அந்த அறிவிப்பு அவரைப்பற்றிய செய்திகளை அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கோரியது.

அந்தச் செய்தி இந்திய தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பப்பட்டு தொழிலாளர் நலத்துறையின் விளம்பரம் கேரள நாளிதழ்களில் வெளிவந்தது. அந்தப்பெண் ஓமனாவாக இருக்கலாம் என அவர் முன்னால் கணவரும் பிள்ளைகளும் கூறினர். ஓமனா 2009-ல் ஒருமுறை மலேசியாவிலிருந்து தங்களிடம் தொலைபேசியில் பேசியதாக அவருடைய குழந்தைகள் கூறினார்கள். ஏறத்தாழ அந்த உடல் ஓமனாவுடையதே என நிறுவப்பட்டது

ஆனால் மலேசியாவின் காவல்துறை ஆவணங்களின்படி அது டாக்டர் ஓமனா அல்ல என நிறுவியது. அது 37 வயதான மெரிலின் ரூபி என்னும் பெண்மணி. அவர் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகேயுள்ள செறியதுறை என்னும் ஊரைச்சேர்ந்தவர். மெரிலின் ரூபி மலேசியாவிற்கு வேலைதேடிச் சென்றார். அங்கே ஒரு மின்னணுப்பொருட்கள் கடையில் பணியாற்றினார். அவர் ஒரு குருவியாக இருக்கலாம். முறையான குடியேற்ற ஆவணங்கள் அவரிடம் இல்லை. அவர் விழுந்து இறந்ததுகூட ஐயத்திற்குரிய இறப்பு. ஆகவே எவரும் அவருக்குப் பொறுப்பேற்கவில்லை. ஆகவேதான் மலேசிய காவல்துறை அந்த அறிவிப்பை வெளியிட்டது. மெர்லின் ரூபியின் அக்கா சோஜா அவரை அடையாளம் கண்டார். மரபணு சோதனையிலும் அது உறுதிசெய்யப்பட்டது. உடல் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.

It’s Merlin Ruby, not Dr Omana, who died in Malaysia; cops confirm mix-up…

அப்படியென்றால் டாக்டர் ஓமனா எங்கிருக்கிறார்? அவர் இறந்துவிட்டார் என்ற நம்பிக்கையில் அவருடைய பிள்ளைகள் அவர் மலேசியாவிலிருந்து அழைத்ததைச் சொன்னார்கள். ஆகவே அவர் பெரும்பாலும் மலேசியாவில்தான் இருக்கிறார். பல திருப்பங்களுடன் கூடிய ஒரு துப்பறியும் திகில்கதை

முந்தைய கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…
அடுத்த கட்டுரைஉளநலன்