‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்

rama1

நாமக்கல் கவிஞர்  வெ இராமலிங்கம் பிள்ளை அவர்களின் “இலக்கிய இன்பம்” என்ற உரைநடை நூல் படித்தேன். ஒருவர் எவ்வாறு அறியப்பட வேண்டுமோ அவ்வாறல்லாமல் பலவாறாக அறியப்படுதல் நகைமுரணே. அவர் மிகச் சிறந்த ஓவியர். ஒரு வெள்ளையரின் இறந்துபோன மகளை தத்ரூபமாக வரைந்து பாராட்டுப் பெற்றதை “என் கதை” யில் விவரித்திருப்பார். அவர் பெயரைச் சொன்னாலே ஞாபகத்துக்கு வருவது அவருடைய வாழ்க்கை வரலாறான “என் கதை”. தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூல்களில் ஒன்று. ரொம்ப நேரம் யோசித்தால் “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற கவிதை வரி ஞாபகத்திற்கு வரலாம்.ஆனால் உரைநடை மிகச்சிறப்பாகத் தொழிற்படும்  “இலக்கிய இன்பம்” பெயருக்கேற்றாற்போல் இன்பமே அளித்தது. காரணம் கம்பராமாயணத்தில் கவிஞர் ரசித்த பாடல்களை சுவைபட மறுபடைப்புச் செய்திருந்தார். கம்பராமாயணத்தை அவர் அணுகியிருந்த விதம் தனித்துவமானது. “ராமன் தசரதனின் உயிர்” என்ற ஒரு கருத்தை வைத்துக்கொண்டு கம்பன் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறான் என்று காட்டுகிறார்.

இந்தக் கருத்து எந்தெந்த சந்தர்ப்பங்களில் எவ்வெவ்வாறு தொடர்பறாது வெளிப்படுகிறது. சமயங்களில் எண்ணூறு பாடல்கள் இடைவெளியில் கூட என்பதை வியந்து கூறுகிறார். அதேபோல் சூரிய உதயமும் அஸ்தமனமும் எவ்வாறெல்லாம் எடுத்தாளப்பட்டிருக்கிறது? மற்றும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது வாக்கியம் – விதி, வெந்த புண்ணில் வேல் போல – பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படும் பாங்கு, கையாளப்பட்ட விதம். ஒரு பெரும்படைப்பை அணுக எத்தனை சாத்தியங்கள்? மாதுளம்பழத்தையும், நுங்கையும் எவ்வளவோ இடங்களில் பார்க்கிறோம். வாங்கக் கை வரமாட்டேனென்கிறது.   இப்படி யாராவது பக்குவம் பண்ணிக் கொடுத்தால்தான். உ வே சா அவருடைய ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றில் சில பாடல்களைச் சொல்லியிருப்பார். எப்பேர்பட்ட பாடல்கள்? இதெல்லாம் மனிதன் மனத்தால் நினைத்துச் செய்த பாடல்களா? என்று நினைத்துக் கண்ணீர் உகுப்பார் என் ஆசிரியர் என்று . ஆனால் ஆசிரியர் எடுத்துக்கொண்டிருக்கும் பாடல்கள் ஒப்புநோக்க எளிமையான பாடல்களே.

ஆரம்பத்தில் தசரதனுக்கு உலகத்து உயிர் எல்லாம் அவன் உயிராக இருந்தது. ராமன் பிறந்தபிறகு என்ன ஆகிறதென்று பார்ப்போம்? இதில் “சென்று நின்று வாழ் உயிரெலாம்” என்னும் வரியில் வரும் நின்று என்பது தாவரங்களைக் குறிப்பதாகவும், எனவே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று முதலில் கூறியது தமிழனே, கம்பரே என்கிறார் கவிஞர்.

 

வயிரவாள் பூணணி

மடங்கல் மொய்ம்பினான்

உயிரெலாம் தன்னுயிர்

ஒப்ப ஓம்பலால்

செயிரிலா உலகினில்

சென்று நின்றுவாழ்

உயிரெலாம் உறைவதோர்

உடலும் ஆயினான்.

rama2

ராமன் பிறந்தபோது தசரதனுக்கு ஏற்பட்ட அதீத மகிழ்ச்சி. “On Cloud nine” என்று ஆங்கிலத்தில் சொல்வதை “மேவினன் உலகுடை” என்ற வரியில் அழகாகக் காட்டுகிறார் கம்பர். காவி மற்றும் தாமரைப் பூக்களைப் போன்ற ராமன் பிறந்தவுடன் ராமன் உயிர்தான் தசரதன் உயிர் என்றாகி விடுகிறது. மற்ற உயிர்களெல்லாம் மறைந்து போகின்றன.

காவியும் ஓளிர்தரு

கமலமும் எனவே

ஓவிய எழிலுடை

ஒருவனை அலதோர் 

ஆவியும் உடலமும் 

இலதென அருளின்

மேவினன் உலகுடை

வேந்தர்தம் வேந்தன்.

 

ராமனின் வில் திறத்தை அறிந்திருந்த விஸ்வாமித்திரர் முனிவர்களின் யாகங்களுக்கு ஊறு விளைவிக்கும் அரக்கர்களை அழிக்க ராமனைக் கேட்டு தசரதனிடம் வருகிறார். அவர் கேட்பது தசரதனின் உயிரை என்பது அவருக்குத் தெரியாது.

…….நின் சிறுவர்

நால்வரினும் கரிய செம்மல்

ஒருவனைத்தந் திடுதிஎன உயிரருக்கும்

கொடுங்கூற்றின்  உளையச் சொன்னான்

 

ஒரு Flashback. இளமையில் வேட்டைக்குச் சென்றிருந்தபொழுது இருட்டில் யானைதான் நீர் மொள்ளுகிறதென்று நினைத்து அம்பை எய்ய, வயதான தாய், தகப்பனை வீட்டில் விட்டுவிட்டு நீர் மொள்ள வந்திருக்கும் சிறுவன் பலியாகிறான். அவனுடைய தந்தையாகிய முனிபுங்கவர்  நீயும் என்னைப்போல் புத்திரசோகத்தினாலேயே  இறப்பாய் என்று சாபம் கொடுக்கிறார். இந்த சாபம் அந்த சமயத்தில் தசரதனை அவ்வளவாக பாதிக்கவில்லை. “தனக்கு புத்திரபாக்கியம் உண்டு” என்ற குறிப்புணர்த்தலை நினைத்து அவனுக்கு மகிழ்ச்சியாகக் கூட இருக்கிறது. அந்த முனிவர் தசரதனிடம் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

கண்ணுள் மணிபோல் மகவை

இழந்தும் உயிர்கா தலியா

உண்ண எண்ணி இருந்தால்

உலகோர் என்னென்று உரையார்?

விண்ணின் தலைசே ருதும்யாம்;

எம்போல் விடலை பிரியப்

பண்ணும் பரிமா உடையாய்!

அடைவாய் படர்வான் என்ன,”

 

“தாவாது ஒளிரும் குடையாய்!

“தவறுஇங்கு இதுநின் சரணம்

காவாய்” என்றாய். அதனால்

கடிய சாபம் கருதேன்

ஏவா மகவைப் பிரிந்து, இன்று

எம்போல் இடர்உற் றனைநீ

போவாய் அகல்வான் என்னாப்

பொன்னாட் டிடைபோ யினரால்”

ஆனால் கீழ்கண்ட பாடலில் அவன் படுகிற பாட்டைப் பாருங்கள். தசரதனின் நெஞ்சிலே ஏற்கனவே ஒரு புண் உண்டு. அந்தப் புண்ணிலேதான் நெருப்பள்ளிக் கொட்டுகிறார் முனிவர். கண்ணைப் பெற்றவன் மறுபடி இழந்தாற்போல எனும்போதே எல்லாம் முடிந்துவிடுகிறது.

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்

மருமத்தில் எறிவேல் பாய்ந்த

புண்ணில்ஆம் பெரும்புழையுள் கனல்நுழைந்தால்

எனச் செவியில் புகுதலோடும்

உள்நிலா வியதுயரம் பிடித்துத்த

ஆருயிர்நின்று ஊசலாடக்

கண்ணிலான் பெற்றிழந்தான் எனஉழந்தான்

கடும்துயரம் காமவேலான்

உயிரருக்கும் சொல் உதிர்த்த முனிவரின் நிழலைப் போலப் போகிறார்கள் ராமனும் அவன் தம்பி இலக்குவனும். அநேகமாக உயிர் போன மாதிரிதான் தசரதனுக்கு.

அன்ன தம்பியும்

தானும் ஐயனும்

மன்னன் இன்னுயிர்

வழிக்கொண் டால்எனச்

சொன்ன மாதவற்

றொடர்ந்த சாயைபோல்

பொன்னின் மாநகர்ப்

புரிசை நீங்கினார்

rama3

ராமன் தசரதனை விட்டுப் போனபின் தசரதனைப் பற்றிய பேச்சே இல்லை. விஸ்வாமித்திரருடன் சென்ற ராமன் தாடகையைக் கொன்று, வேள்வியைக் காத்து, அரக்கர்களை வென்று, அகலிகைக்குச் சாப விமோசனம் அருளி, மிதிலைக்குச் சென்று, வில்லை வளைத்து முறித்தபின், சீதா கல்யாணத்திற்கு அழைக்க மிதிலையிலிருந்து ஓலை வந்த பின்புதான் பிணம் போல இருந்த தசரதனுக்கு பிரக்ஞை வருகிறது. தசரதனை எதிர்கொள்ள ஜனகனும் மற்றவர்களும் வருகிறார்கள். ராமனும் வருகிறான். போன உயிர் திரும்ப வருகிறது தசரதனுக்கு. ராமனின் தோற்றப்பொலிவு மேலும் கூடியிருக்கிறது.  முதலிலொரு பாடலில்  காட்டப்பட்ட காவி, தாமரையோடு  காயா

மலரும் சேர்ந்து விடுகிறது. அப்போது “ஓவியம் போல அழகு” என்று சொன்ன கம்பர் இப்போது “அந்த ஓவியத்தை விடக் கூடிய ஒரு அழகு” என்று கூறுகிறார்.   தசரதனின் மெய்ப்பாடுகளை நாம் அருகிலிருந்தாற்போல கண்ணாலே காண முடிகிறது.

காவியும் குவளையும்

கடிகொள் காயாவும் ஒத்து

ஓவியம் சுவைகெடப்

பொலிவதோர் உருவொடே

தேவரும் தொழுகழல்

சிறுவன்முன் பிரிவதோர் 

ஆவிவந் தென்னவந்து

அரசன்மாடு அணுகினான்

தனது தந்தையை ஒரு ஷத்ரியன் கொன்றுவிட ஷத்ரிய குலத்தையே பூண்டோடு வேரறுக்கக் கிளம்புகிறான் பரசுராமன். மிதிலையிலிருந்து திரும்பி வரும் தசரதன் மற்றும் ராமன் பரிவாரங்களை வழிமறித்து போருக்கு அறைகூவல் விடுக்கிறான் பரசுராமன். கதி கலங்கி விடுகிறான் தசரதன். இவனோடு பொருதினால் மரணம் நிச்சயம் என்பதனால் “இவனும் எனது உயிரும் உனது அபயம் ” “என் மகன் உயிர்தபுமேல் எனது உறவோடு உயிர் உகுவேன் ” என்று பலவாறாகக் கெஞ்சுகிறான். அப்படியும் போர் ஆரம்பித்து விடுகிறது. தசரதன் மூர்ச்சையாகி விடுகிறான். கடுமையான போரில் ராமனே வெல்கிறான். பரசுராமன் தன் தவ வலிமையெல்லாம் இழந்து தோற்றுச்செல்கிறான். “உயிர் உலைந்து உருகுதாதை ” யைப் பலவாறாகத் தேற்றி நினைவு திரும்பச் செய்கிறான் ராமன்.

 

தசரதன் “உயிர்” நீத்தலை கூனியோடு சதியாலோசனையின் பேரில் ஒருங்கு செய்கிறாள் கைகேயி.

“ஏய வரங்கள் இரண்டில்

ஒன்றினால் என்

சேய் அரசாள்வது

சீதை கேள்வன் ஒன்றால்

போய்வனம் ஆள்வது எனப்

புகன்று நின்றாள்

தீயவை யாயினும்

சிறந்த தீயாள் ”

 

கைகேயி கக்கிய விஷம் வேலையைக் காட்டுகிறது. நாகம் தீண்டிய யானையைப் போல விழுந்து விடுகிறான் தசரதன்.

“நாகமெனும் கொடியாள்தன்

நாவின் ஈந்த

சோகவிடம் தொடரத்

துணுக்கம் எய்தா

ஆகம் அடங்கலும் வெந்து

அழிந்து அராவின்

வேகம் அடங்கிய வேழம்

என்ன வீழ்ந்தான்.”

rama4

இது நீயாக மனசறிந்து சொன்னதா? அல்லது யாராவது சொன்னதைக் கேட்டுச் சொல்கிறாயா? என்று தசரதன் வினவ, “யாரும் சொல்லவில்லை என் முடிவு இது. கொடுத்தால் கொடு இல்லையேல் உன்மீது பழி போட்டுவிட்டுச் சாகிறேன் ” என்கிறாள்.

“திசைத்ததும் இல்லை

எனக்குவந்து தீயோர்

இசைத்ததும் இல்லை

முன் ஈந்த இவ்வரங்கள்

குசைப்பரி யோய்! தரின் இன்று

கொள்வன் அன்றேல்

வசைத்திறம் நின்வயின்

வைத்து மாள்வேன் என்றாள் ”

 

“வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல” என்பது இன்று வரை உபயோகத்தில் உள்ள வாக்கியம். முனிவர் நெருப்பள்ளிக் கொட்டிய அதே புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாள் கைகேயி.

 

“இந்த நெடுஞ்சொல் அவ்

வேழை கூறுமுன்னே

வெந்த கொடும் புணில் 

வேல் நுழைந்ததொப்ப

சிந்தை திரிந்து திகைத்து

அயர்ந்து வீழ்ந்தான்

மைந்தன் அல்லது உயிர் 

வேரிலாத மன்னன்”

 

எல்லோருக்கும் அவரவர் உயிர் வெல்லக்கட்டிதான். அதைத் தக்க வைத்துக்கொள்ள எதுவும் செய்வோம் அல்லவா? தசரதனும் விடுவதில்லை. அவனால் முயன்ற அளவு செய்து பார்க்கிறான். ” உன் மகன் ஆள வேண்டும் சரி..எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறேன்…என் மகன், என் கண், என் உயிர் ராமனை விட்டுவிடு அவன் காட்டுக்குப் போக வேண்டாம்..” என்று இறைஞ்சுகிறான். பரதன் தசரதனுக்கும் மகன்தான். ஆனால் “நின் மகன் நாடாள்வான்” என்கிறான். ராமனையே என் மகன் என்கிறான்.

 

“நின் மகன் ஆள்வான் நீ இனிது

ஆள்வாய் நிலம்எல்லாம்

உன்வயம் ஆமே ஆளுதி, தந்தேன்

உரை குன்றேன் .

என் மகன், என் கண், என் உயிர்

எல்லா உயிர்கட்கும்

நன் மகன் இந்நாடு இறவாமை

நய என்றான்”

 

மெய்யே என்றன் வேர் அற

நூறும் வினை நோக்கி

நையா நின்றேன் நாவும்

உலர்ந்தேன் நளினம்போல்

கையான் இன்று என் கண்ணெதிர்

நின்றும் கழிவானேல்

உய்யேன் நங்காய்! உன் அபயம்

என் உயிர் என்றான்

www.Whoa.in

என்னவெல்லாம் கெஞ்சிக் கேட்டும் கைகேயி மசிவதில்லை. பிடித்த பிடியிலேயே நிற்கிறாள். வேறு வழியில்லாமல் வரங்களைக் கொடுத்து விடுகிறான் தசரதன். “ஈந்தேன் ஈந்தேன்” என்று இரண்டு முறை கூறி அவன் வேதனையின், விரக்தியின் உச்சத்திலிருப்பதைக் காட்டி விடுகிறார் கம்பர். கோபத்திலோ விரக்தியிலோ பேசும்போது நாம் கூட இரண்டுமுறை சொல்லுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது போக, இலவச இணைப்பாக “நீயும் உன் மகன் பரதனும் மற்றவர்களின் வசைவெள்ளத்தை நீந்திக் கடக்கப்போவதே இல்லை” என்று வரத்தினூடே ஒரு சாபத்தையும் கொடுத்து விடுகிறான் தசரதன்.

 

“ஏவம் பாராய் இன்முறை நோக்காய்

அறம் எண்ணாய்,

ஆ என்பாயோ அல்லை, மனத்தால்

அருள் கொன்றாய்

நா அம்பால் என் ஆருயிர் உண்டாய்

இனிது ஞாலம்

பாவம் பாராது, இன்னுயிர் கொள்ளப்

படுகின்றாய்

 

ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்

என்சேய் வனம்ஆள

மாய்ந்தே நான் போய் வானுலகு

ஆள்வென் வசைவெள்ளம்

நீந்தாய் நீந்தாய் நின்மகனோடும்

நெடிது என்றான்”

 

வரத்தைக் கொடுத்து விட்டு வாளால் வெட்டுப்பட்டாற்போல் விழுந்து மூர்ச்சையாகி விடுகிறான் தசரதன். இதைக் கண்ட வசிஷ்டர் கைகேயிடம் சென்று பலவாறாக அறிவுரை கூறுகிறார். அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பின் தசரதனைத் தேற்றி “ராமனை எப்படியாவது காட்டுக்குச் செல்லாமல் தடுப்பது என் வேலை” என்று சமாதானம் சொல்லிவிட்டு ராமனைப் பார்க்கச் செல்கிறார் வசிஷ்டர். “சரி எப்படியும் ஏதாவது செய்து தடுத்துவிடுவார்” என தசரதனும் ஒருவாறு சமாதானம் ஆகிறான்.

 

 

“முனிவன் சொல்லும் அளவில்

‘முடியும் கொல்’ என்று அரசன்

தனிநின்று உழல்தன் உயிரைச்

சிறிதே தகைவான் ‘இந்தப்

புனிதன் போனால் இவனால்

போகாது ஒழிவான்’ என்ன

மனிதன் வடிவம் கொண்ட

மனுவும் தன்னை மறந்தான்”

 

ஆனாலும் அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. கோசாலையிடம் தன்னுடைய பழைய சாபத்தைச் சொல்லிப் புலம்புகிறான்.

 

“சிந்தை தளர்வுற்ற அயர்தல்

சிறிதும் இலனாய் இன்சொல்

மைந்தன் உளன்என் றதனால்

மகிழ்வோடு இவண்வந் தனன்ஆல்

அந்த முனிசொற் றமையும்

அண்ணல் வனம்ஏ குதலும்

எந்தம் உயிர்வீ குதலும்

இறையும் தவறா என்றான்”

 

வசிஷ்டர் ராமனிடம் வந்து “ராமா நீ காட்டுக்குப் போனால் தசரதன் இறந்து விடுவான், எனவே போகவேண்டாம்”  என்று தடுக்கிறார். “தாய்க்குத் தந்தை கொடுத்த வரத்தை நிறைவேற்றுவது தனயனின் கடமை. மன்னரைத் தேற்றுவது குல குருவாகிய உங்கள் கடமை. தயவுசெய்து என்னைத் தடுக்கவேண்டாம்” என்று கூறி விடுகிறான் ராமன். ராமனும், சீதையும் மற்றும் இலக்குவனும் சுமந்திரர் தேர்ப்பாகனாக வனம் நோக்கிச் செல்கிறார்கள். ஜனங்களும் விடாது தொடர்கிறார்கள். நடுவில் ஓரிடத்தில் இரவு தங்க நேர்கிறது. ஜனங்களெல்லாம் அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ராமன் சுமந்திரரிடம் “ஜனங்கள் என்னை விட்டு நீங்க மாட்டார்கள். நாங்கள் நடந்தே காட்டுக்குள் சென்று விடுகிறோம். நீங்கள் ரதத்தை நாங்கள் இருப்பது போலவே பாவனை செய்து அயோத்திக்கு ஓட்டிச் சென்று விடுங்கள். ஜனங்களும் உங்களைப்பின்பற்றி அயோத்தியை அடைவார்கள்” என்று கூறினான். சுமந்திரரும் அவ்வாறே செய்கிறார்.

gaja

வசிஷ்டரிடம் நடந்ததைக் கூற, வசிஷ்டரும் சுமந்திரனும் மன்னரிடம் விஷயத்தைக் கூற விரைகிறார்கள். இருவரும் தசரதனைச் சென்று காண்கிறார்கள். தசரதனும் ஆவலாக முனிவரிடம் “வந்துவிட்டானா?” என வினவுகிறான்.

 

“இரதம் ஈங்குற்றது என்று ஆங்கு

யாவரும் இயம்பக் கேட்டு

வரதன் வந்துற்றான் என்னா

மன்னனும் மயக்கம் தீர்ந்தான்

புரைதபு கமல நாட்டம்

பொருக்கென விழித்து நோக்கி

விரத மாதவனைக் கண்டான்

“வீரன் வந்தனனோ” என்றான்”

 

வசிஷ்டரின் முகமே எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது. பேசுவதற்கு வார்த்தையில்லை. இதைத் தாங்கிக்கொள்ள மனதும் தயாராய் இல்லை. அந்த இடத்தில் நிற்க முடியாமல் விலகிச் செல்கிறார் வசிஷ்டர். அதற்கு முன்னால் அவருடைய மெய்ப்பாடுகளைச் சொல்கிறது இப்பாடல்.

 

“இல்லை, என்று உரைக்கல் ஆற்றான்

ஏங்கினான் முனிவன் நின்றான்

வல்லவன் முகமே நம்பி

வந்திலன், என்னும் மாற்றம்

சொல்லலும் அரசன் சோர்ந்தான்

துயர் உறும் முனிவன் ‘நான் இவ்

அல்லல் காண்கிலேன்’ என்னா

அங்கு நின்று அகலப் போனான் ”

 

தேர்ப்பாகனைப் பார்க்கிறான் தசரதன். இருக்கிறானா? போய்விட்டானா? என்று வினவ, கானகத்திற்கு ராமன் இலக்குவன் மற்றும் சீதையோடு சென்றுவிட்டதைச் சொல்கிறார் சுமந்திரர். அவன் சொன்ன நொடியில் தசரதனின் ஆவி பிரிகிறது. ஒரு துன்பியல் நாடகம் முடிவுக்கு வருகிறது.

 

“நாயகன் பின்னும் தன்தேர்ப்

பாகனை நோக்கி, ‘நம்பி

சேயனோ, அணியனோ’ என்று

உரைத்தலும் அனையான், ‘செய்ய

வேய் உயர் கானில் தானும்

தம்பியும், மிதிலைப் பொன்னும்

போயினன்’ என்றான், என்ற

போழ்தத்தே ஆவி போனான்”

 

விதியின் விளையாட்டு 

 

“விதி” என்ற வார்த்தை வருகிற பாடல்களில் முதன்மையாக “நதியின் பிழையன்று” என்ற புகழ் பெற்ற பாடல்.  கைகேயி ராமனை காட்டுக்கு போக ஆணையிட்டதும்  இலக்குவன் பொங்கி எழுகிறான். “உனக்கு நானே பட்டம் க ட்டுகிறேன். எதிர்ப்பவர்கள் என் வில்லுக்கு பதில் சொல்லட்டும்.” என்கிறான். இதற்கு ராமன் கீழ்கண்ட பாடலை மொழிகிறான்.

 

நதியின் பிழை யன்று

நறும்புனல் இன்மை, அற்றே

பதியின் பிழை அன்று

பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று

மகன் பிழையன்று, மைந்த!

விதியின் பிழைநீ இதற்கு

என்கொல் வெகுண்டது? என்றான்

 

அப்படியும் இலக்குவன் அடங்குவானில்லை.

 

“விதிக்கும் விதியா கும்என்

வில்தொழில் காண்டி’

 

என்று வெகுண்டு எழுகிறான்.

 

அதே இலக்குவன் “விதியை வெல்ல யாரால் முடியும்? ” என்று சொல்லும் சந்தர்ப்பமும் வருகிறது. மாரீசன் மாயமானாக வந்து, ராமன் அவனைப் பிடிக்கச் சென்ற போது இலக்குவன் பர்ணசாலையில் சீதையைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான். அப்போது மாரீசன்  ராமனின் பாணம் பட்டு “சீதா, லட்சுமணா” என்று கத்தி, உயிரை விடுகிறான். இலக்குவனுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது இது அண்ணனின் குரல் அல்ல என்று. சீதையைத் தனியே விட்டு விட்டு போக மறுக்கிறான். சீதை காட்டுத்தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று பயமுறுத்தவே வேறுவழியில்லாமல் “விதி”யின் மீது பழியைப்போட்டு ராமனைத் தேடிச் செல்கிறான்.  இஞ்ச, இஞ்சு  என்பது தஞ்சை மாவட்டத்து வட்டார வழக்கு. இங்கு என்று பொருள். கம்பர் அந்த ஊர்க்காரர் தானே?

 

தாமரை வனத்திடை

தாவும் அன்னம் போல்

தூமவெம் காட்டேரி

தொடர்கின் றாள்தனை

சேமவில் குமரனும்

விலக்கிச் சீரடிப்

பூமுகம் நெடுநிலம்

புல்லிச் சொல்லுவான்

 

துஞ்சுவது என்னை நீர்

சொற்ற சொல்லையான்

அஞ்சுவென் மறுக்கிலன்

அவலம் தீர்ந்துஇனி

இஞ்சுஇறும் அடியனேன்

ஏகு கின்றனென்

வெஞ்சின விதியினை

வெல்ல வல்லமோ!’

 

“நீர் சொற்ற சொல்லை யான் அஞ்சுவென்” என்று இலக்குவன் கூறுவது சீதை தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறுவதைத்தானா? இந்தக் கட்டத்தில் பொது ரசிகனின் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு கதையை சில பட்டிமன்றங்களில் கேட்டிருக்கிறேன். கம்பராமாயணத்திலோ வால்மீகி ராமாயணத்திலோ உண்டா தெரியவில்லை?

Namakalkavi

சூர்யோதயமும் அஸ்தமனமும் 

மேற்கு மலைவாயில் விழும் வெய்யோனை குகையில் அடையச் செல்லும் சிங்கத்திற்கும் அதன் பின் சூழும் இருட்டை பயந்தோடிய யானைக்கூட்டங்கள் திரும்ப வருவதற்கும் ஒப்பிட்டு ஒரு அருமையான பாடல். சீதையைத் தேடுகிற ராமனுக்கு ‘சீதை இங்கில்லை’ என்று காட்டுமுகமாக தாமரையை மலர்விக்கச் சூரியன் உதித்ததாக ஒரு பாடல் என்று கம்பனின் கற்பனையில் சூரியோதயமும் அஸ்தமனமும் மிக அழகாகத் தொழிற்படுகின்றன.

மிதிலையில் “வரிசிலை அண்ணலும் வாள்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தின” தால் காமத்தீ இருவரையும் கனன்று எரிக்கிறது. எங்கே சீதையைச் சுட்ட காமத்தீ தன்னையும் சுட்டெரித்துவிடுமோ எனப் பயந்து கடலுக்குள் மறைவதாகவும்,

“அன்னமெல் நடையட்க்கு

அமைந்த காமத்தீ

தன்னையும் சுடுவது

தரிக்கி லான்என

நல்நெடும் கரங்களை

நடுக்கி ஓடிப்போய்

முன்னவெம் கதிரவன்

கடலினில் மூழ்கினான் “

 

ராமனைச் சுட்டெரிக்கும் காமத்தீயின் கொடுமையைத் தவிர்க்கும் முகமாக கஜசம்ஹாரமூர்த்தியைப் போல் சூரியன் உதிப்பதாகவும் காட்டுகிறார் கம்பர். பேரூர் (கோயம்புத்தூர்) ஈசனை நினைவு படுத்தும் இப்பாடல் தனித்து நிற்கிறது.

 

“ததையும் மலர்த்தார் அண்ணல் இவ்வண்ணம்

மயல்உழந்து தளரும் எவ்வை

சிதையும் மனத்துஇடர் உடைய செங்கமல

முகம்மலரச் செய்ய வெய்யோன்

புதை இருளில் எழுகின்ற புகர்முக யானையின்

உரிவை போர்வை போர்த்த

உதயகிரி எனும்கடவுள் நுதல்கிழித்த

விழியேபோல் உதயம் செய்தான்”

மொத்தத்தில் நாமும் கம்ப ராமாயணத்தில் நன்கு ஊறித் திளைத்தாற்போன்ற ஒரு உளமயக்கைத் தருகிற அதே சமயத்தில் கம்பராமாயணம் குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தையும் புகுத்திவிடுகிறது. நூலாசிரியரின் லட்சியம் அதுவாகத்தான் இருந்திருக்கமுடியும். இல்லையா?

முந்தைய கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்
அடுத்த கட்டுரைவ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்