கற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி!

ஜைனி
ஜைனி

(மூலம்: இராமச்சந்திர குஹா. தமிழில்: பாலா)

1998 ஆம் ஆண்டு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், பயிற்றுவித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னை விட மூத்த, பலமடங்கு கற்றறிந்த அறிஞர் ஒருவரின் நட்பை ஈட்டிக் கொண்டேன். அவர் பெயர் பத்மநாப ஜைனி. பௌத்த மற்றும் சமண மதத் துறைகளில் பெரும் அறிஞர். அரை டஜன் மொழிகளில் அவை பற்றிய முக்கிய நூல்களை ஆழ்ந்து கற்றவர். மென்மையானவர். குறைவாகப் பேசுபவர். வாதப் பிரதிவாதங்களை விட, சிந்தனையையும், பிரதிபலிப்பையும் முன்வைப்பவர். எதிரெதிர்த் துருவங்கள், ஒன்றினை ஒன்று ஈர்க்கும் என்பார்கள். என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மையாயிற்று. நான் மதிக்கும் தற்கால அறிஞர்களுள் மிக முக்கியமானவர் பத்மநாப ஜைனி!

”Coincidences” (yogayoga) என்னும் பெயரில், தன் நினைவுகளை, பேராசிரியர் ஜைனி, 135 பக்கங்களே கொண்ட சிறு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இது, கரையோரக் கர்நாடக கிராமத்தில், அவர் பிறந்த 1923 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. அவர் தந்தை உள்ளூர் கிராமப் பள்ளிக்கூட ஆசிரியர். தாய் இல்லத்தரசி எனினும், கன்னடப் பத்திரிகைகளில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதும் வல்லமை படைத்தவர். பத்மநாபாவின் இளம்வயது நினைவுகளில் ஒன்று, 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூட்பிதிரிக் கோவிலும், அதன் ஆயிரங்கால் மண்டபமும். அவர் வார்த்தைகளில், ‘என் நினைவில் என்றும் நிலைத்திருப்பது, அந்தக் கோவிலில் அவ்வப்போது ஏற்றப்படும் லட்ச தீபம். மூடிய திரை விலகியவுடன், மையத்திலிருக்கும் மூர்த்தியின் இருபுறங்களிலுமிருக்கும் நூறாயிரம் சிறு மண் விளக்குகளிலிருந்து ஒளிரும் சுடர்கள், ஆதியும் அந்தமும் இலாப் பேரொளியை அடையும் சாத்தியங்களைக் காட்டும்’.

பத்மநாபாவின் வீட்டில் கன்னடமும், துளுவும் பேசப்பட்டது. தந்தை, அவருக்கு இந்தியையும், ஆங்கிலத்தையும் கற்பித்தார். தாய், அவரைச் சமணத் தீர்த்தங்கரர்களின் பெயர்களை மனனம் செய்ய வைத்தார். அவரது தந்தை, அவருக்கு, பெரும் குறிக்கோள்களை வைத்திருந்தார். பத்தாம் வயதில், அவர் மராத்தியத்தின் விதர்பா பகுதியில் உள்ள கராஞ்சா என்னும் ஊரில் உள்ள ஒரு ஆசிரமப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளியில் பயிற்றுவிக்கப் பட்ட கல்வி, அவர் சொந்த நாடான துளு நாட்டில் கற்பிக்கப்பட்ட கல்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கல்வி.

பத்மநாபாவுக்கு மூன்று மொழிகள் பேச வரும். ஆனாலும், கராஞ்சாவில் பேசப்பட்ட மராத்தி மொழி புரியாததாக இருந்தது. பள்ளியில் சேர்ந்த முதல் நாளை, துயரத்துடன் நினைவுகூர்கிறார். ‘பெரிய விளையாட்டு மைதானத்தில், தன்னந்தனியே நின்றிருந்தேன். மராத்தி எழுதப்படிக்கத் தெரியாமல், இந்த ஊரில் எப்படிக் காலம் கழிக்கப் போகிறேன் என்னும் நினைவு பயத்தைத் தந்தது. முதன் முறையாக வீட்டை விட்டுப் பிரிந்திருக்கும் துயரும், அதனுடன் இணைந்து கொண்டது’.

கல்வியில் மூழ்கியதில், வீட்டை விட்டு வந்த துயரம் கொஞ்சம் குறையத்துவங்கியது. பள்ளி வாழ்க்கை, மிகக் கடுமையான கால அட்டவணைக்கும், விதிகளுக்கும் உட்பட்டதாக இருந்தது. காலை ஐந்து மணிக்கு எழுதல்; குளியலுக்குப் பின், பிரார்த்தனைக்காகக் குழுமுதல்; பின்னர், காலை உணவு வரை படித்தல்; 10 மணியிலிருந்து 4 மணிவரை வகுப்புகள்;பின்னர் உடற்பயிற்சி, இரவுணவு; பிரார்த்தனைக்குப் பிறகு உறக்கம் என்பதே தினசரி கால அட்டவணை.

Guhay
குகா

மூன்றாண்டுகள் கடுமையான கல்வி கற்றலுக்குப் பின், ஜைனி, கோலாப்பூர் அருகிலுள்ள உயர் சமணக் கல்விநிலையத்துக்கு மாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், பத்மநாப ஜைனி வீடு திரும்பினார். பல்வேறு ரயில்கள், பஸ்கள் என மாறி மாறிப் பயணித்து, ஒரு நீண்ட யாத்திரைக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்தார். மாலைப் பிரார்த்தனைக்காக, ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த தன் பாட்டியின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அவரது மாமா, பத்மராஜாவும் அங்கே வந்தார். அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அவர் உடனடியாக, பத்மநாபாவை, அருகிலுள்ள பசடிக்கு (பஸ்தி என்னும் சமண ஆலயம்) அழைத்துச் சென்று, ஆரத்தி காட்டிப் பிரார்த்தனை செய்து ஆசிகளைப் பெறச் செய்தார். அந்த விடுமுறைக் காலத்தில், பல உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று, பிடித்த தின்பண்டங்களை உண்டு, பல பசடிகளுக்குச் சென்று பிரார்த்தனைகள் செய்து, மீண்டும் கோலாப்பூருக்குத் திரும்பினார் ஜைனி.

1943 ஆம் ஆண்டு, மெட்ரிகுலேஷன் தேர்வில் வென்று, இளங்கலை பயில, நாசிக் நகருக்குச் சென்றார். நல்ல மனம் கொண்ட சமண வணிகர் ஒருவர், ஜைனியின் கல்லூரிக் கட்டணங்களைக் கட்ட முன்வந்தார். அதற்கீடாக, ஒரு மாணவர் விடுதியின் காவலராகவும் (வார்டன்), அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் பணியையும் செய்தார் ஜைனி. நாசிக்கில், அவர், பல சமஸ்கிருத, பிராகிருத நூல்களை, முனைப்புடனும், திறனுடனும் கற்றுக் கொண்டார். அதைக் கண்டு வியந்த கல்லூரித் தலைவர், ஜைனியை, ’இந்தச் சிறுநகரை விட்டு, ஒரு பெரும் நகருக்குச் சென்று, உனக்கெனப் பேரும் புகழும் ஈட்டிக் கொள்’, எனப் பணித்தார்.

அந்த உயர் குறிக்கோளை மனதில் கொண்ட ஜைனி, முதுகலை பயில அகமதாபாத் சென்றார். அங்கும் ஒரு நற்குணம் கொண்ட வணிகர், முதுகலைக் கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டார். ஒரு காலத்தில், மகாத்மா காந்தியின் நகரமாக இருந்த அகமதாபாத்தின் தெருக்களில் குஜராத்தியையும், வகுப்பறைகளில் பாலி மொழியையும் கற்றுக் கொண்டார் ஜைனி. கல்லூரியில் அவர் ஆர்வம் பௌத்த மதத்தின் பால் அதிகரித்தது. பௌத்தம் மற்றும் சமண நூல்களை ஒப்புநோக்கி ஆய்வு செய்ய ஆர்வம் கொண்டார்.

பத்மநாப ஜைனி, 1949 ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியை முடித்திருந்தார். காந்தி, தான் இறக்கும் முன்பு, தன் நண்பரும், பௌத்த அறிஞருமான தர்மானந்த் கோஸாம்பியின் பெயரில் ஒரு ஸ்காலர்ஷிப் நிறுவப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். மும்பையில், காந்திஜியின் சீடரான காகா கலேல்கருடனான ஒரு யதேச்சையான சந்திப்பில், ஜைனி, முதல் கோஸாம்பி ஸ்காலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைக்கு, பாலி மொழியை ஆழ்ந்து கற்க அனுப்பப்பட்டார். அவர் கொழும்புவில் படித்துக் கொண்டிருந்த போது, உலக பௌத்த அறிஞர்களின் மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அதில் அம்பேட்கர் பங்கு கொண்டார். அந்த மாநாட்டில்தான், அவர், ’ஜாதியால் கட்டுண்டிருக்கும் இந்திய சமூகத்துக்கு, பௌத்தம் ஒன்றே ரட்சிப்பு’, எனப் பலத்த கைதட்டல்களுக்கிடையே முழங்கினார்.

இந்தச் சுயவரலாற்றின் மிக முக்கிய அம்சம், ஜைனி, தனது அறிவுலக ஆசான்களுக்குப் பட்டிருக்கும் கடனை எழுதியிருப்பதுதான். துளு நாடு, கராஞ்சா, கோலாப்பூர், அகமதாபாத், மும்பை, கொழும்பு நகரங்களில் அவருக்குக் கற்பித்த ஆசான்களின் ஆளுமைச் சித்திரங்கள், கற்பிக்கும் வழிகள் என அனைத்தையும் அன்பு கலந்த சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார். 1952 ஆம் ஆண்டு, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, அதன் துணை வேந்தராக இருந்தவர் ஆச்சார்ய நரேந்திர தேவ். அவர், காந்தி மற்றும் நேருவுடன் இணைந்து, விடுதலைப் போராட்ட்த்தில் ஈடுபட்டு, பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். வரலாறு மற்றும் தத்துவத் துறைகளில் பேரறிஞர். அவர் போன்ற அரசியல்வாதிகளோ, பல்கலைக்கழக நிர்வாகிகளோ இன்று இருக்க வாய்ப்புகளே இல்லை. அவர் ஜைனியின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையை, தனிப்பட்ட அளவிலோ, அறிவார்ந்த முறையிலோ காட்டும் திறன் கொண்ட துணைவேந்தர்களும் இன்று இந்தியாவில் இல்லை. ஜைனி, அவரைப் பற்றிய மிக அற்புதமான குறிப்பை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில், ஜைனி, இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த ஒரு பேராசிரியரைச் சந்தித்தார். ஜைனியின் அறிவுத்திறனால் கவரப்பட்ட அவர், லண்டனில் அமைந்திருந்த, கீழை மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய தன் கல்வி நிறுவனத்தில் வேலை கொடுக்க முன்வந்தார். துளுநாட்டின் சிறுகிராமத்திலிருந்து வந்த கூச்ச சுபாவம் கொண்ட ஒரு குடிமகன், இங்கிலாந்து அரசின் தலைநகரில் ஒரு கல்விநிலையத்தின் பேராசிரியரானார். அங்கே பத்தாண்டுகள் கல்வி பயிற்றுவித்தார். விடுமுறை காலங்களில், தென் கிழக்கு ஆசியா பற்றிய நூல்களைத் தேடிப் பயின்றார். பர்மா, கம்போடியா, இந்தோனேஷியா, தாய்லாந்த், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, பழம்பெரும் வழிப்பாட்டுத் தலங்களில், கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்களைக் கண்டடைந்தார். ஆப்கானிஸ்தானில், பின்னாளில் காலிகளால் அழிக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலைகளைக் கண்டிருக்கிறார். சிலைகளைத்தான் அழிக்க முடியும்; போதனைகளை அழிக்க முடியாது என நூலில், ஒரு பற்றற்ற தன்மையுடன் குறிப்பிடுகிறார்.

ஜைனியின் ஆய்வுகளும், நூல்களும் மிகவும் முக்கியமானவை. அவை தற்போது, அமெரிக்க அறிவுலகின் கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளன. 1967 ஆம் அண்டு, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன், அமெரிக்கா குடிபெயர்ந்து, ஆன் ஆர்பரில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியத் துவங்கினார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அங்கிருந்து, பெர்க்லியில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அவர் வார்த்தைகளில், ‘நெல்லிக்கரில் இருந்து கிளம்பிய என் ரயில், மூட்பித்ரி, கராஞ்சா, நாசிக், அகமதாபாத், பனாரஸ், லண்டன், ஆன் அர்பர் நகரங்களைக் கடந்து, இறுதியாக, பசிஃபிக் பெருங்கடலின் கரையிலுள்ள அழகிய பெர்க்லியில் வந்து நின்றிருக்கிறது’.

அறிவுச் செல்வங்களைத் தேடி, பத்மநாப ஜைனி, மேற்கொண்ட நீண்ட நெடிய பயணங்கள், தகவல்கள் மிக எளிதாக இணைய வெளியில் கிடைக்கும் இக்காலத்திலும், நமக்கு மிக முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. கூகுள், யூ ட்யூப் போன்ற மெத்தனத்தையும், சோம்பேறித்தனத்தையும் உருவாக்கும் துணைகள் எதுவும் இல்லாமல், தன் சுய வேட்கையின் உந்துதலினால், ஜைனி மேற் கொண்ட அறிவுத் தேடலுக்கான பயணங்களும், பெற்ற கல்வியும், அதன் முழுமையும், மகத்தானவை. 21ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவரால் ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது என்றே நினைக்கத் தோன்றும்.

அவரின் பின்புலத்தில் இருந்து, ஜைனி எய்திய அறிவுடைமையின் உன்னத நிலை, தன் தலைமுறையின் அறிஞர்களில் இருந்து, அவர் தனித்துவமானவர் என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, அமெரிக்கக் கல்வித்துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய அமர்த்தியா சென், ஜக்தீஷ் பகவதி போன்றவர்களின் வாழ்க்கையைப் பார்ப்போம். இருவருமே, சமூக நிலை, அதிகாரம், கல்வி போன்றவற்றை மிக எளிதில் அணுகக் கூடிய மேல்தட்டுக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அமர்த்தியா சென்னின் தந்தையும், தாத்தாவும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ரபீந்திரநாத் தாகூரால், அமர்த்தியா (மரணமில்லாதவன்) எனப் பெயரிடப்பட்டவர். கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரி, லண்டனின் கேம்ப்ரிட்ஜ் என உலகின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் பயின்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த ஜக்தீஷ் பக்வதியின் தந்தையும், சகோதரரும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள். அவரும் கேம்ப்ரிட்ஜில் இளங்கலை பயின்றவர். சென், பகவதி, இருவருமே உலகின் மிகச் சிறந்த அறிஞர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஆனால், ஜைனியின் ஆசிரியர்களோ, சமூகம் அறிந்திராத சாதாரணர்கள். சிறு நகரங்களின் கல்விக்கூடங்களில் பணியாற்றியவர்கள். கல்வியை நன்கு கற்றவர்கள். தாம் கற்ற கல்வியை, மிகுந்த சிரத்தையுடன், தம் மாணவர்களுக்குக் கற்பித்தவர்கள்.

அறிவுலகில், பெரும் சிகரங்களைத் தொட்ட அமர்த்தியா சென்னையோ, பகவதியையோ குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல, ஜைனியின் பயணத்தின் தனித்துவத்தை விளக்கவே இதைச் சொன்னேன். ஜைனி பெரும் மனிதர். பேரறிஞர். அவரது நினைவுகள் அனைவராலும் படிக்கப்படும் என நம்புகிறேன்.

https://www.telegraphindia.com/opinion/a-world-of-learning-the-journey-of-padmanabh-jaini/cid/1686901?ref=opinion_opinion-page

Coincidences (yogayoga) by Padmanabh Jaini

முந்தைய கட்டுரையானை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசகடம் – சிறுகதை விவாதம் -1