அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் – கடிதம்

aka

அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள்

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாள்  அவர்களின் தமிழறிஞர்கள் நூலுக்கான அறிமுகம் அல்லது மதிப்புரை ஓர் அழகான கட்டுரை. அந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துவிட்டு அது ஒரு வழக்கமான மதிப்புரையாக இருக்கும் என நினைத்து நான் கடந்து சென்றுவிட்டேன். மீண்டும் வாசித்தபோதுதான் அது எத்தனை முக்கியமான ஒரு கட்டுரை என்று தெரிந்தது.

மூன்று பகுதிகளாக அழகாக அமைந்திருந்தது அக்கட்டுரை. மிக விரிந்த அளவில் தமிழ்ப்பண்பாட்டுச்சித்திரத்தை முதலில் அளிக்கிறீர்கள். அதில் தமிழியக்கத்தின் இடமென்ன என்று சொல்லி அந்த தமிழியக்கத்தின் அறிஞர்களைப்பற்றிய இந்நூலின் பங்களிப்பு என்ன என்று விளக்குகிறீர்கள். அதன்பின் அதன் உள்ளடக்கம். அந்த உள்ளடக்கம் ஒரே சமயம் வரலாற்றுச்செய்தியாக எப்படி முக்கியமானது வாழ்க்கைச்சித்திரமாக எப்படி முக்கியமானது என்று கூறுகிறீர்கள்.

ஒரு சாதாரண மதிப்புரைக் கட்டுரையிலுள்ள இந்த அடர்த்தியும் கட்டமைப்பும்தான் உங்கள் வலிமை. இன்று இணையத்தில் நூல்களைப் பற்றி எவருமே எழுதுவதில்லை. எழுதினாலும் ஓரிரு வரிகள்தான். உங்கள் தளத்திலேயே பலவகையான மதிப்புரைகள் வருகின்றன. இந்தக்  குறிப்பில் இருக்கும் வரலாற்றுச் சித்திரம் நூல் அறிமுகம் என்பதைக் கடந்து முக்கியமானது. அதை உருவாக்க நிறையப் பின்புல அறிவு தேவை. இங்கே அதுதான் குறைவாக உள்ளது

எஸ்.ராமச்சந்திரன்

thamiza

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் என்னும் நூலைப்பற்றிய அறிமுகத்தில் சென்ற இருநூறாண்டுகளில் தமிழில் நடந்த அறிவுச்செயல்பாட்டை ஒரு சில வரிகளில் சுருக்கி அளித்திருக்கிறீர்கள். சைவ மறுமலர்ச்சி, தமிழியக்க, திராவிட இயக்கம், தலித் இயக்கம். ஒரு சூத்திரம்போல நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய வரி இது. இதை விரித்து விரித்து தமிழ் பண்பாட்டு வரலாற்றையே எழுதிவிடமுடியும். நன்றி

ஆர்.கமலக்கண்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-75
அடுத்த கட்டுரைகட்டண உரை – எதிர்வினைகள்