அலைகளில் இருந்து எழுந்த அறிதல்

thirumavalavan-1535109847

அம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா இவர் என அவர் எண்ணக்கூடும். அரசியல் எழுத்துக்களில் இருக்கும் அம்பேத்கரை அருவி என மலையிலிருந்து கொட்டும் நதியாக உருவகிக்கலாம். கடலை அடைவதற்கு முந்தைய நதியின் அமைதியை நாம் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலில் பார்க்கிறோம்.

செயல்தளத்தில் இருந்த கொந்தளிப்புகள் அடங்கி அடிப்படையான உண்மையை நெருங்கும்போது உருவாகும் அமைதி அது. அலைகள் மேலே, கடலின் ஆழம் அமைதியாக உள்ளது. சமூகம் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் என்னும் இரண்டுநிலைகளால் இயங்குகிறது. ஆனால் அடிப்படையான உண்மைகள் அவ்வாறல்ல, அவை மாற்றுத்தரப்பே இல்லாதவை. அங்கே விவாதக்கொந்தளிப்புகளுக்கு இடமில்லை. புத்தரும் அவரது தம்மமும் அத்தகைய உண்மைகளால் ஆன செவ்வியல்நூல்.

முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய அமைப்பாய் திரள்வோம் என்னும் இந்நூலை வாசிக்கையில் அந்த எண்ணத்தையே அடைந்தேன். இந்நூல் அடிப்படையில் செயற்களத்தைப் பற்றியது. ஆனால் நேரடியான செயல்நடவடிக்கைகளைப் பற்றியது அல்ல. செயற்களத்தில் கிடைத்த அடிப்படை உண்மைகளைப் பற்றியது. ஆகவே தணிந்த உறுதியான குரலில் இந்நூல் பேசுகிறது. மத்து கடைவதற்கும் வெண்ணை திரள்வதற்கும் இடையேயான வேறுபாடுதான். மத்து கலக்கிக் கொண்டே இருக்கிறது. வெண்ணை அமைதியாகத் திரள்கிறது.

உலக அனுபவங்களில் இருந்து மையமான உண்மைகளுக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் அனுபவங்கள் நமது சுயநலத்தாலும் பிற உணர்ச்சிகளாலும் மறைக்கப்படுகின்றன. நமது நியாயங்கள் மட்டுமே நம் கண்ணுக்குப் படும். அதுவும் நாம் பாதிக்கப்பட்டோர் என்றால் நம் உணர்வுகளை அன்றி எதையுமே பார்க்கமுடியாது. இந்நூலில் மெல்லமெல்ல அந்த உணர்ச்சிகளைக் கடந்து ஒட்டுமொத்தமான சமூக உண்மைகளை நோக்கி முனைவர். திருமாவளவன் அவர்கள் செல்வதை காணமுடிகிறது.

இன்னொரு நோக்கில் பார்த்தால் திட்டவட்டமான நேரடி களச்செயல்பாடுகளில் இருந்து  சாராம்சமான ஒழுக்கங்களையும் அறங்களையும் கண்டடைவது என்று இந்தச் செயல்பாட்டை வகுக்கலாம். இந்நூலில் திருமா அவர்கள் சொல்லும் ஓரு பகுதி உதாரணம். “பிறர்நலன் அல்லது பொதுநலன்களுக்கான புரிதலோடு தன்னையறிதலும் பிறரை அறிதலும் நிகழும்போது, பிறர்வலியையும் தன்வலியாய் உணர முடியும். இவ்வாறு உணரமுடியாதவர்களால் பிறரோடு இணைந்து தொடர்ந்து இயங்கமுடியாது. ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ போல, ‘தானே பிறராய்’ மாறி உணர்தல் அமைப்பாக்க நடவடிக்கையில் இன்றியமையாததாகும்” அதாவது நீதியுணர்வு, அதன் விளைவான சீற்றம், அதிலிருந்து எழும் செயல்வேகம் ஆகிய அனைத்துக்கும் ஒரு படி மேலாக தான் பிறராக ஆகும் விரிவை, ஆங்கிலத்தில் compassion எனப்படும் நெகிழ்வுநிலையை முன்வைக்கிறார்.

புத்தர் சொல்லும் கருணை என்னும் நிலை இதுவே. தமிழில் கருணை என்ற சொல்லை நாம் இரக்கம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். பௌத்த மெய்யியலில் அச்சொல் தானே பிற அனைத்துமாக ஆகுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மேலே சொன்ன திருமா அவர்களின் வரிகளை ஏறத்தாழ இப்படியே புத்தரின் வரிகளில் காண்கிறோம். “நீ உன்னைப் பார்க்கையில் பிறரை அறிகிறாய். பிறரைப் பார்க்கையில் உன்னையும் அறியமுடியும்” [சம்யுத்த நிகாயம்].

இக்கட்டுரைகளில் உள்ள பல கண்டடைதல்களை ஒருவர் பொதுவான சொற்களில் பிற இடங்களிலும் ஒருவேளை காண முடியலாம். இன்று எந்த ஊரையும் கூகிள் வரைபடம் வழியாக மேலே சென்று பார்க்கலாம். ஒரு இருநூறடி உயரத்தில் பறந்தபடி கீழே பார்ப்பதுபோல. ஆனால் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்குத் தெரியும், பயணத்தில் நாம் சென்றடையும் இடம் அந்த வரைபடத்திலிருந்து வேறுபட்டது என்று. முற்றிலும் வேறுபட்டதா என்றால் இல்லை. வேறுபாடு மிக நுட்பமானது. அதேசமயம் மிகமிக முக்கியமானது.

அத்தகைய வேறுபாடு நேரடியான வாழ்விலிருந்து களச்செயல்பாடுகளிலிருந்து எழும் கண்டடைதல்களுக்கும் நூல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் கண்டடைதல்களுக்கும் உண்டு. இந்நூலில் திருமா அவர்கள் முன்வைக்கும் வரிகளில் இருந்து நான் அவருடைய பின்னணிச் செயல்பாடுகளுக்கே சென்றடைகிறேன். புத்தரின் ஒரு மேற்கோளையே அதற்கும் துணைகொள்கிறேன். மண்ணில் ஊன்றுவது வரை கால் தான் இருப்பதையே அறிவதில்லை. மண்ணில் நடப்பதுதான் காலின் வேலை. காலின் அமைப்பு, ஆற்றல் எல்லாமே நடந்து நடந்து உருவாகி வருகின்றவைதான். இந்நூல் அத்தகைய நடைமுறை அறிதலில் இருந்து உருவான மெய்யறிதல்களின் தொகுதி.

ஒருவர் புறவய உண்மைகளை அறியும்போது, சமூக அரசியல் களத்தில் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும்போது முதன்மையாக எழும் கேள்வி அந்தக் கருத்துருவாக்கம் எங்கே நிகழ்கிறது என்பதுதான். அது நிகழுமிடம் அவர் உள்ளம். அந்த உள்ளத்தின் இயல்புகளே அவருடைய கருத்துக்களை வடிவமைக்கின்றன. ஆகவே அவர் அந்தக் கொள்கலன் குறித்து அறிந்திருக்கவேண்டும். தன் உள்ளத்தை ஓரளவேனும் விலகிநின்று நோக்க, அது எவ்வாறு உருவாகியிருக்கிறது என்று வகுத்துக்கொள்ள அதை நிறைகுறைகளுடன் மதிப்பிட அவர் முயலவேண்டும். தன்னைத் தானே திறனாய்வுசெய்து மதிப்பிட்டுக்கொள்ள அவர் முயலவேண்டும். அதுவே தன் கருத்துக்களின் பெறுமதியை அவர் மதிப்பிட்டுக்கொள்வதற்கான அடிப்படை.

முனைவர் திருமாவளவன் அவர்களின் இந்நூலில் தொடர்ச்சியாக இந்த தன் மதிப்பீடு, தன் நோக்கு வலியுறுத்தப்படுகிறது. “உன்னையறிதல் என்பது தன் மனத்தை அறிதலேயாகும். மனத்தை அறிதல் என்பது மனத்தின் இயல்புகளை அறிவதாகும். மனத்தின் இயல்புகளே மனிதனின் இயல்புகளாகும். மனத்தை மனமே அறியும். மனம் ஒன்றாமல், எதனையும் அறிந்திட இயலாது” என்னும் அவருடைய வரிகளை இந்நூலின் மையக்கருத்துக்களில் ஒன்றாகவே காணமுடியும்.

அலைகளில் தத்தளித்தபடி ஆற்றில் சுழன்று சென்றுகொண்டிருப்பவன் எப்படி இன்னொருவனுக்கு ஆற்றைக் கடக்க உதவமுடியும் என்று புத்தர் கேட்டார். [சுத்த நிபாதம்] அவனுக்கு நீச்சல் தெரிந்திருக்கவேண்டும். உறுதியான கயிற்றால் அவன் ஆற்றின் இருகரைகளையும் இணைத்துக் கட்டியிருக்கவேண்டும். தன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்தவனிடம் இருக்கும் அமைதியும் உறுதியுமே பிறருக்கு வழிகாட்டியாக அமைய முடியும்.

முனைவர். தொல் திருமாவளவன் அவர்கள் இந்தக் கொந்தளிக்கும் ஆற்றில் நெடுங்காலம் நீந்தி நீச்சல் பயின்றவர். அதன் மறுகரையை தன் ஆற்றலால் இணைத்துக்கொண்டவர். ஆகவே அவர் வழிகாட்டும் தகுதி கொண்டவர் ஆகிறார். நீந்திக் கடந்த ஒருவரின் சொற்கள் என்பதனாலேயே இவை நீந்துவோருக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமைகின்றன.

[24-2-2019 அன்று நெல்லையில் தொல்.திருமாவளவன் அவர்களின் அமைப்பாய் திரள்வோம் நூல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னை கட்டண உரை இன்று