‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67

ele1பூரி குருக்ஷேத்ரத்திலிருந்து ஒருநாள் தொலைவிலிருக்கையில் சலன் களம்பட்ட செய்தியை முரசொலிகளிலிருந்து அறிந்துகொண்டான். குருக்ஷேத்ரத்தின் மையச்செய்திகள் அனைத்தும் முரசுத்தொடரொலி வழியாக பரவிப்பரவி நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தன. அந்த ஒலிகளுக்குமேல் பல்லாயிரம் பறவைகள் செய்திகளுடன் வானில் சென்றன. அவன் சலன் மறைந்த செய்தியைக் கேட்டு புரவியை இழுத்து நின்றுவிட்டான். அவனுடன் வந்துகொண்டிருந்த வீரர்கள் கடிவாளங்களை இழுத்து புரவிகளைத் திருப்பி அவனைச்சுற்றி ஒரு சுழலை அமைத்தனர். பூரி “மூத்தவர்!” என்றான். “பட்டத்து இளவரசர்!” என துணைப்படைத்தலைவன் திரிகரன் கூவினான். பூரி பெருமூச்சுடன் உடல்தளர்ந்தான்.

சற்றுநேரத்திலேயே வானிலிருந்து புறா சிறகடித்தபடி இறங்கியது. அதன் ஓசை அவர்கள் அனைவரும் அஞ்சும்படி உரக்க ஒலித்தது. அதை பிடித்து செய்தியைப் படித்த படைத்தலைவன் உத்தண்டன் “அதே செய்திதான், அரசே” என்றான். பூரி கடிவாளத்தைப் பிடித்து இழுத்து “செல்வோம்” என்றான். உத்தண்டன் “அந்திக்குள் சென்றுவிட முடிந்தால் நன்று. நாம் பட்டத்து இளவரசரின் எரிகடனில் பங்கேற்கவாவது இயற்றமுடியும்” என்றான். பூரி அவனை நோக்க அவன் “அரசர் அதற்குரிய உளநிலையில் இருக்க வாய்ப்பில்லை” என்றான். “ஆம்” என்ற பூரி “விரைக! விரைக!” என்று ஆணையிட்டான். புரவிகள் குளம்படித்தொகை முழக்கமென எழுந்து சூழ்ந்திருந்த காட்டின் ஆழங்களுக்குள் எதிரொலிகளாகப் பெருக விசைகொண்டு புதர்களை ஊடுருவிச்சென்றனர்.

அவன் பால்ஹிகபுரியில் இருந்தபோது நாளும் வந்துகொண்டிருந்த போர்ச்செய்திகளைக் கேட்ட பின்னரே துயிலச்சென்றான். நெடுநேரம் அச்செய்தியைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்த பின் துயின்றான். கனவில் அவன் போரில் ஈடுபட்டான். விடாய்கொண்டு விழிக்கும்போதெல்லாம் அறைச்சாளர வாயிலில் செய்தியுடன் புறா வந்து அமர்ந்திருந்தது. புலரியில் போர்ச்செய்திகளை அடுக்கி அவன்முன் கொண்டுவந்து வைத்த ஏவலன் வணங்கி அப்பால் நின்றான். முகம் கழுவுவதற்கு முன்னரே அவன் அவற்றை படித்தான். முதல்நாள் எண்பத்தேழு ஓலைகள் வந்தன. அனைத்தும் ஓரிரு வரிகள். துளித்துளியாக செய்திகள் இணைந்து பெரும்போர் ஒன்று அவன் உள்ளத்தில் உருவாகியது. பின்னர் வந்த ஒவ்வொரு எழுத்துக்கும் ஆயிரம் ஓலைகளின் பொருட்செறிவிருந்தது.

பன்னிரண்டாம் நாள் அவன் காலையில் முடிவெடுத்தான். “நாம் கிளம்பிச்செல்வோம்… நான் அங்கிருக்கவேண்டும் என விழைகிறேன்.” உத்தண்டன் “நம்மிடம் இனிமேல் படை என ஏதுமில்லை. இதற்குமேல் நம் படைகளை நகரிலிருந்து எடுத்தால் மலைக்குடிகளுக்கு நம் நகரை விட்டுவைத்தவர்களாவோம்” என்றான். “என்னுடன் இருபது வீரர்கள் மட்டும் வந்தால் போதும். நான் அங்கிருக்கவே விழைகிறேன்” என்றான் பூரி. “அரசர் உங்களை இங்கே பொறுப்பளித்துவிட்டுச் சென்றார். மூத்தவரின் ஆணையும் அதுவே” என்றான் உத்தண்டன். “ஆம், ஆனால் இத்தருணத்தில் நான் அங்கிருக்கவேண்டும் என விழைகிறேன்… இங்கே வீணில் இருக்கிறேன் என்று எனக்குப்படுகிறது” என்றான் பூரி. “இளையோன் இந்நகரை ஆளட்டும்.”

சோமதத்தரின் நான்காவது அரசி சைலையின் மைந்தனாகிய கிலனை பால்ஹிகபுரியின் அரசன் என முடிசூட்டி அமைச்சர்களிடமும் இளைய படைத்தலைவன் அக்ரசீர்ஷனிடமும் அவனைக் காக்கும் பொறுப்பை அளித்துவிட்டு பூரி கிளம்பினான். நகரிலிருந்து எழுந்து மலையுச்சியை அடைந்தபின் அவன் புரவியை நிறுத்தி திரும்பிப்பார்த்தான். தூமவதி, ஷீரவதி, பிரக்யாவதி, பாஷ்பபிந்து, சக்ராவதி, சீலாவதி, உக்ரபிந்து, ஸ்தம்பபாலிகை, சிரவணிகை, சூக்ஷ்மபிந்து, திசாசக்ரம் என்னும் மலைகளின் நடுவே அமைந்திருந்த அழகிய கோட்டை. அவன் அதைவிட்டு விழிவிலக்க ஒண்ணாதவனாக நோக்கி நின்றிருந்தான். அப்போதே அவனுக்குத் தெரிந்தது, அவன் மீளப்போவதில்லை என.

அவன் மீண்டும் கிளம்பும்போது உடன் வந்த உத்தண்டனிடம் “ஒற்றர்கள் என்ன சொன்னார்கள்? மூத்தவர்கள் இங்கு நின்று இவ்வண்ணம் மலைகளை திரும்பி நோக்கினார்களா?” என்றான். உத்தண்டன் “ஆம் இளவரசே, இரு இளவரசர்களுமே நோக்கினர். அரசர் நெடுநேரம் நின்று விழிநீர் பொழித்துவிட்டே சென்றார்” என்றான். பூரி “ஆம்” என்றான். அவன் உள்ளம் அச்சம் கொண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்னர் தலையை அசைத்தான். எதையோ உதறுபவனைப்போல. “அவர்கள் இதுவரை களத்தில் நலமாகவே இருக்கிறார்கள்” என அவன் எண்ணத்தை உணர்ந்தவன்போல் உத்தண்டன் சொன்னான். அப்படி அவன் தன் ஆழம் வரை வந்தது அவனுக்கு எரிச்சலை அளித்தது. அவன் மறுமொழி சொல்லாமல் நோக்கை விலக்கிக்கொண்டான்.

உச்சிப்பொழுதைக் கடந்து ஓடை ஒன்றை தாண்டிக்கொண்டிருந்தபோது பூரிசிரவஸ் களம்பட்ட செய்தி அணைந்தது. அதை எவ்வகையிலோ எதிர்பார்த்திருந்தவன்போல பூரி நிலைகுலையவில்லை. முரசொலியைக் கேட்டதும் புரவியை இழுத்து அவன் சற்றுநேரம் நின்றான். “செல்வோம்” என பெருமூச்சுடன் சொல்லி புரவியை கிளப்பினான். “அவருக்கும் தங்கள் எரிகடன் தேவையாகும்” என்றான் உத்தண்டன். “உறுதியாக இதை அரசர் தாளமாட்டார்.” பூரி ஒன்றும் சொல்லவில்லை. திரிகரன் “அவர் இறப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தார் என்று எனக்குத் தோன்றியது. அவர் நிகழ்த்திய அனைத்துக்கும் உரிய முடிவு களப்பலியே” என்றான். “வாயை மூடு” என்றான் பூரி. அவன் தன் புரவியை இழுத்து சற்று பின்னடைந்தான். “நாம் அந்திக்குள் சென்றுவிடமுடியுமா?” என்று பூரி கேட்டான். “தொலைவை மட்டும் நோக்கினால் இயலும். ஆனால் பாதை இப்போது எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை” என்றான் முன்னெட்டு சென்ற ஒற்றனாகிய உதிரன்.

அவர்கள் விசைகொண்டு புரவிகளை செலுத்தியபோதும்கூட குருக்ஷேத்ரத்தை அந்திக்குள் சென்றடைய இயலவில்லை. எண்ணியதைவிட விரைவாக இருள் சூழ்ந்துவர அதை வெல்ல எண்ணுவதுபோல் புரவிகளை முடுக்கினர். ஆனால் நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்த அவை கால்களைத்திருந்தன. குளிர்நிலத்தில் பழகிய அவற்றுக்கு நிகர்நிலத்தின் வெம்மை களைப்பூட்டுவதாக இருந்தது. “அவர்கள் எரியூட்டியிருப்பார்கள்” என்று உத்தண்டன் சொன்னான். “பேசாதீர்கள்” என்று பூரி சொன்னான். “அந்திக்குள் எரியூட்டவேண்டும் என்பது நெறி… நாம் சென்றடைய முடியாது” என்றான் உத்தண்டன் மீண்டும். “ஆம்” என்று பூரி சோர்ந்து கடிவாளத்தை இழுத்தான். பின்னர் வெறியுடன் குதிமுள்ளால் குத்தி “செல்வோம்… செல்வோம்” என கூவியபடி பாய்ந்தான்.

அவர்கள் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது தொலைவிலேயே முழக்கத்தைக் கேட்டனர். “போர்!” என்று திரிகரன் கூவினான். “போர் இன்னும் முடியவில்லை!” பூரி “அந்திக்குள் போர் முடிந்தாகவேண்டுமென்பதே நெறி!” என்றான். “நெறிகளை எவர் பேணுகிறார்கள்? முதல்நாள் முதல் நெறிகள் ஒவ்வொன்றாக அழிந்துவருகின்றன” என்றான் உத்தண்டன். “ஆனால் போரை அந்திக்குப் பின் எவரும் நிகழ்த்த இயலாது… எவருக்கும் விழிதெளியாது. தன்னவரையே கொன்றுகுவிக்கலும் ஆகும்” என்றான் பூரி. “அந்திக்குப் பின் விழிதெளிபவர்கள் அசுரரும் அரக்கரும்… இப்போர் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கலாம்” என்றான் உத்தண்டன். “இது அவர்களால் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். அவர்களின் தரப்பில் போரிடும் கடோத்கஜன் இன்றைய இரவுப்போரில் பேரழிவை உருவாக்குவான்.”

பூரி “ஆம், அவர்களுக்காகத்தான்”என்றான். “நாம் போருக்குச் சென்றாகவேண்டும்… தந்தை இன்றைய போரில் கலந்துகொள்ளக்கூடும்.” உத்தண்டன் “இன்று போருக்கெழும் நிலையில் அவர் இருக்க வாய்ப்பில்லை” என்றான். “அவரை நான் அறிவேன்… அவரால் அமைந்திருக்க இயலாது. இரு மைந்தரின் நினைவும் அவரை எழுப்பி களத்திற்கு கொண்டுசெல்லும்…” என்றான். உத்தண்டன் “ஆம், அவர் அத்தகையவரே” என்றான். “விரைக… படைத்தொடக்கம் அருகில்தான்” என்றான் பூரி. “நாம் இருளில் செல்கிறோம். அங்கே போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்மை எவரென்று தெரியாமல் அவர்கள் தாக்கக்கூடும்” என்றான் உத்தண்டன். “நாம் நம்மை அறிவித்துக்கொண்டே செல்வோம். பந்தங்களால் நம்மை அடையாளம் காட்டுவோம். நம் குடிக்குறியை வீசிக்கொண்டே செல்வோம். அங்கே நம் படைவீரன் ஒருவனேனும் எல்லைக்காவல்மாடத்தில் இருக்கக்கூடும்.”

அவர்கள் பந்தங்களை வீசியபடியே சென்றனர். எக்கணமும் அங்கிருந்து அம்புகள் பறந்துவரக்கூடும் என எதிர்பார்த்தார்கள். பூரி “அம்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதில்லை. நாம் அம்புகளை செலுத்தினால், ஓர் அம்பு அங்கே சென்றால்கூட நம் மேல் அங்கிருந்து அம்புகள் கூட்டமாக வரத்தொடங்கிவிடும்…” என்றான். “ஆம், தேனீக்கூடு கலைவதுபோல” என்றான் உத்தண்டன். அவர்கள் நெருங்க நெருங்க பதற்றம் கொண்டார்கள். அறியாமலேயே விரைவழிந்தனர். அங்கிருந்து முதல் பந்த அடையாளம் எழுந்தது. “அது நம் அடையாளம்! நமது வீரன் ஒருவன் அங்கே இருக்கிறான்!” என்று உத்தண்டன் கூவினான். பூரி “ஆம், அவன் காவல்மாடத்திலேயே இருக்கிறான்” என்றான். அவர்கள் விசைகூட்டி முன்னால் சென்றனர். குளம்படிகளின் ஓசை இருளுக்குள் மேலும் உரக்க எழுந்தது.

அவர்கள் செல்லச்செல்ல எதிரில் வரும் குளம்படியோசையை கேட்க முடிந்தது. பூரி “நம்மவர்தான். நம் பந்தங்களின் ஒளியை ஏற்று வருபவர் நம்மவராகவே இருக்கமுடியும்” என்றான். அவர்கள் அணுகி வந்தபோது பால்ஹிகக்குடிக்குரிய சிறிய ஊதலோசை எழுந்தது. உத்தண்டன் அதற்கு மறு ஒலி எழுப்பினான். அவர்கள் அணுகி வந்து நின்றனர். உத்தண்டன் ஊதல் ஓசையுடன் அணுகினான். பின்னர் அங்கிருந்து அனைவரும் பூரியை நோக்கி வந்தார்கள். வந்தவர்களில் முதல்வனாகிய காவலர்தலைவன் வணங்கி “இளவரசரை வணங்குகிறேன். பால்ஹிகக் குலத்தில் கார்வாக குடியினனாகிய என் பெயர் கருணன். இங்கே இரண்டாம்நிலைக் காவலர்தலைவன்” என்றான். பூரி அவனை வாழ்த்தி “இரவுப்போரா நிகழ்கிறது?” என்றான். “ஆம், இங்கே நிகழும் முதல் இரவுப்போர் இது. இருளுக்குள் போரிடும் ஆற்றல்கொண்ட இடும்பர்கள் கொலைவெறியாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

பூரி “தந்தை?” என்றான். “குடிலில் ஓய்வெடுக்கிறார். உளம்சோர்ந்துவிட்டார்” என்றான் கருணன். “முற்பகலிலேயே பட்டத்து இளவரசரின் இறப்புச்செய்தி வந்துவிட்டது. அதன் பின்னர் இளையவரின் இறப்புச்செய்தி” என்றான் கருணன். “செல்வோம்” என்றபடி பூரி முன்னால் செல்ல கருணன் நிகழ்ந்தவற்றைச் சொல்லியபடி பின்னால் வந்தான். அவன் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருந்தாலும் உடன்வந்த அனைவருக்கும் அது தெளிவாகவே கேட்டது. “இப்போரில் நாம் ஒருபோதும் முன்னணியில் நின்று பொருதவோ வெல்லவோ இல்லை… இங்கே நம் அம்புகள் பெரும்பாலும் செயலற்றன. இது நிகர்நிலத்து மக்களின் போர். இங்கே நமது அம்புகள் திகைத்து இலக்கழிந்தன” என்றான் கருணன். “இளவரசர்கள் இருவரும் தங்கள் எல்லைகளைக் கடந்து மாவீரர்கள் என களத்தில் எழுந்தனர். இளையவர் இங்கே மலையில் எழுந்த போர்த்தெய்வமென கௌரவர் படைகளின் ஏழு காவலர்களில் ஒருவராக நின்றிருந்தார்.”

பூரிசிரவஸின் இறப்பும் அவன் உடல் எரிந்தமையும் சொல்லப்பட்டபோது பூரி புரவியை நிறுத்திவிட்டு விம்மலோசை எழ தலைகுனிந்தான். அவன் நெற்றி புரவியின் கழுத்தைத் தொடும்படி தாழ்ந்தது. “இளவரசே!” என அவன் தோளை தொட்டான் உத்தண்டன். “உம் உம்” என முனகியபடி பூரி தன்னை மீட்டுக்கொண்டான். “இவ்வேளையில் நீங்கள் அரசரைச் சென்று பார்க்கவேண்டியதில்லை, இளவரசே” என்றான் உத்தண்டன். கருணன் “இல்லை, பார்ப்பதே நன்று என்று எனக்குப்படுகிறது. ஏனென்றால் அவர் பலமுறை இளவரசரின் பெயர் சொல்லி கதறியதை கேட்டோம். அவர் முன் இளவரசர் சென்று நிற்கட்டும். இளவரசரின் உடலை தன் கைகளால் தொட்டுத்தழுவி அரசர் உணரட்டும். இத்தருணத்தில் அவருக்கு ஆறுதல் என்று பிறிதொன்றில்லை. அவர் இங்கே உயிர்வாழ்வதற்கான குறிக்கோளும் அதுவே என உணர்வார்” என்றான். பூரி “ஆம், நான் அவரைச் சென்று பார்க்கவேண்டும்” என்றான். கருணன் “அவர் தளர்ந்திருக்கிறார். அவர் உங்களைப் பார்த்தால் கதறி அழக்கூடும். நெஞ்சோடு தழுவி மயக்கமுறக்கூடும். உணர்வுகள் கொந்தளித்து எழுமென்றாலும் அவை மெல்லமெல்ல அடங்கும். இளவரசே, உங்களைக் கண்ட பின் அவர் உளமாறி உறக்கம் கொள்வாரென்றால் நீங்கள் வந்தமை பயனுள்ளது எனக் கொள்ளலாம்” என்றான். பூரி “ஆம்” என பெருமூச்சுவிட்டான்.

காவல்மாடத்திலிருந்து இரண்டு பால்ஹிக இளையோர் இறங்கி வந்தனர். “இந்தக் காவல்மாடம் எங்களுக்குரியது. நாங்கள் போரில் புண்பட்டுள்ளோம். இங்குள்ள அத்தனை காவல்மாடங்களும் புண்பட்டவர்களால்தான் நடத்தப்படுகிறது” என்றான் கருணன். அதன் பின்னரே பூரி வந்தவர்கள் இருவரும் ஒற்றைக்காலில் வருவதை உணர்ந்தான். கையிடுக்கில் பொருத்தி ஊன்றிய கோல் அவர்களின் கால்களாக இருந்தது. ஒரு சிறு உளவிதிர்ப்புடன் கருணன் ஒற்றைக்கை மட்டும் கொண்டவன் என்பதை பூரி அறிந்தான். அவன் வந்தபோதும் தலைவணங்கியபோதும் இருந்த வேறுபாடு அதனால்தான் என்று தெளிந்தான். உள்ளம் புறவுலகை முற்றாக விலக்கிவிட்டிருந்தது. அது முன்னரே சோமதத்தரை சென்றடைந்துவிட்டிருந்தது.

ele1சோமதத்தர் குடிலுக்குள் துயில்கொள்வதாக காவலர்தலைவன் சொன்னான். கருணன் “நீங்கள் உள்ளே சென்று பார்க்கலாம், இளவரசே” என்றான். பூரி சில கணங்கள் தயங்கிவிட்டு தன் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டு மெல்ல குடிலுக்குள் சென்றான். அங்கே இழுத்துக்கட்டப்பட்ட மரநார்களாலான மஞ்சத்தூளியில் சோமதத்தர் துயின்றுகொண்டிருந்தார். வாய் திறந்திருக்க மூக்கு அண்ணாந்து துளைகளில் செறிந்த நரைமயிருடன் தெரிந்தது. பற்களின் அடிப்புறத்து மஞ்சள்காரை, கன்னங்களில் பரவியிருந்த மயிருதிர்ந்த நரைத்தாடி. மூச்சில் அவருடைய தொண்டை பதைத்தது. முகம் உயிரிழந்த உடல் என வெளிறியிருந்தது. சற்றுநேரம் நோக்கியபின் திரும்புவதற்காக அவன் அசைந்தபோது சோமதத்தர் “பூரி” என்றார். அவன் உடல் சிலிர்ப்படைய அங்கேயே நின்றான். “பூரி” என அவர் மீண்டும் சொன்னார்.

அவர் வாய் குழறியது. மெல்ல அசைந்து படுத்து சப்புக்கொட்டியபடி “நீங்கள் பூரியிடம் சொல்லலாம்” என்றார். “ஏனென்றால் என் பிற மைந்தர் இருவரும் அஸ்தினபுரிக்கு சென்றிருக்கிறார்கள்.” அவர் புன்னகைத்தார். “அஸ்தினபுரியிலே” என்றார். அவன் தன் கண்களிலிருந்து நீர் வழிவதை உணர்ந்தான். ஓசையில்லாமல் வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் உடலை அசைத்தால் அவர் விழிப்புகொண்டுவிடக்கூடும் என்றும் அச்சமெழுந்தது. “அஸ்தினபுரி!” என்று சோமதத்தர் சொன்னார். மீண்டும் முகம் மலர நகைத்து “அங்கே முதன்மையானவன் என் மைந்தன்… பூரிசிரவஸ்” என்றார். இருமுறை சப்புக்கொட்டிய பின் மீண்டும் நகைத்து “அவன் வாள்வீரன்” என்றார். அறியாமல் பூரி நீள்மூச்செறிந்தான். அந்த ஓசையைக் கேட்பதுபோல சோமதத்தர் துயிலிலேயே முகம்கூர்ந்தார். பின்னர் புன்னகையுடன் “அஸ்தினபுரி” என்றார்.

பூரி மெல்ல பின்கால் வைத்து வெளியே வந்தான். உத்தண்டன் அருகே வந்து “ஆழ்ந்து உறங்குகிறாரா?” என்றான். “ஆம்” என்று பூரி சொன்னான். “சிரிக்கும் ஒலி கேட்டது” என்றான் உத்தண்டன். “ஆம், தெய்வங்கள் நிகரீடு செய்கின்றன” என்றான் பூரி. உத்தண்டன் “கருணைகொண்டவை அவை, மலையை எடுத்துக்கொண்டால் மலைநிழலை திரும்ப அளிக்கின்றன” என்றான். பூரி அவனை பொருள்விளங்காதவனாக நோக்கி நின்றான். உத்தண்டன் தொலைவில் தெரிந்த போர்க்கொப்பளிப்பை நோக்கி “இன்று பதினான்காம்நாள் இரவு… இத்தனை வெறியுடன் இப்போர் இங்கு நிகழுமென எதிர்பார்க்கவே இல்லை…” என்றான். பூரி “இழப்புகளால் மேலும் வெறி ஏற்றிக்கொள்கிறார்கள்” என்றான். “கொண்டு வந்த வஞ்சங்கள் இப்போது ஒழிந்துவிட்டிருக்கும். புதிய வஞ்சங்களுக்கான இடம் பெருகியிருக்கும்” என்றான் உத்தண்டன்.

திரிகரன் “நம் இளவரசரைக் கொன்றவர்களுக்கு நாம் மறுமொழி அளிக்கவேண்டாமா?” என்றான். “போரில் கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும்தான் வந்தோம்” என்றான் உத்தண்டன். “ஆம், நம் பட்டத்து இளவரசர் கொல்லப்பட்டது இயல்பே. போரில் அது நிகழும். ஆனால் இளையவரைக் கொன்றது அவ்வாறல்ல. அவருக்கு இருமுறை அறத்தீங்கு இழைக்கப்பட்டது. சாத்யகியுடன் போரிட்டவரை பின்னிருந்து கைவெட்டி வீழ்த்தியவன் முதல் தீங்கை இழைத்தான். அதைக்கூட போர்க்களத்து மீறல் என்று கொள்ளமுடியும். சாத்யகியின் உயிர்காக்க செய்தாகவேண்டியிருந்தது என எண்ணி பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் படைக்கலம் தாழ்த்தி தேரில் அமர்ந்து உயிர்துறப்புக்காக ஊழ்கமியற்றியவரின் தேரிலேறி தலைவெட்டி எடுத்து வீசுவதென்றால்…” அவன் மூச்சிரைத்தான். மேலும் பேச விழைந்து சொற்களில்லாமல் தவித்து இருமுறை கனைத்தான்.

“இங்கே ஓசை வேண்டாம்” என அவன் தோளைப் பற்றினான் பூரி. “வெட்டப்பட்ட மூச்சு அவ்வுடலில் சிதைவரைக்கும் நின்றிருந்தது என்கிறார்கள். சிதையில் அவ்வுடல் துள்ளித்துடிக்க எழுந்து அகன்றது என்கிறார்கள். என் உள்ளத்திலிருந்து அக்காட்சி அகலவே இல்லை. இனி அதை எண்ணாமல் ஒருநாள்கூட நாம் வாழமுடியாது.” அவன் குரல் உரக்க எழுந்தது. “நாம் பழிநிகர் கொண்டாகவேண்டும். நம் குடியின் பெருமைக்காக அல்ல. மானுட அறமென ஒன்றின் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்காக. இப்பெருந்தீங்கை இழைத்தவனை அறம் எழுந்துவந்து தலைகொய்யவில்லை என்றால் இங்கே எதை நம்பி வாழ்வர் மானுடர்? எங்கும் அனைத்தையும் மீறி நின்றாகவேண்டியதல்லவா அறம்?” என்றான் திரிகரன். உத்தண்டன் சொல்லெடுப்பதற்குள் “என்னை சொற்களால் மூடவேண்டியதில்லை. நாம் இக்களத்தில் அக்கீழ்மகனை சங்கறுத்துக் கொல்லாமல் மீள்வோம் என்றால் அறம் அழிந்துவிட்டதென்றே பொருள்” என்றான்.

உத்தண்டன் “நாம் இங்கே போரிடவே வந்துள்ளோம். நாம் உயிர்கொடுக்கவும்கூடும்” என்றான். “ஆனால் வஞ்சங்களை சுமந்துகொள்வதில் பொருளில்லை. ஏனென்றால் நாம் மலைமக்கள். இவர்களின் போர்களிலும் பூசல்களிலும் நமக்குப் பங்கில்லை. நாம் இவர்களின் நண்பர்களும் பகைவர்களும் அல்ல. இவர்களை அவ்வண்ணம் எண்ணிய பிழையை மட்டுமே இதுவரை இயற்றியிருக்கிறோம். அதன் விளைவாகவே நாம் இரு இளவரசர்களை இழந்தோம். இன்னும் அந்த மாயை நமக்குத் தேவையில்லை. முடிந்தால் நாம் நம் அரசருடன் இன்றே இங்கிருந்து மீள்வோம்” என்றான். திரிகரன் “நான் உடன்வரப்போவதில்லை. அந்த யாதவனுடன் போரிட்டு களத்தில் மடிகிறேன். திரும்பி வந்தால் என்னால் ஒருநாளும் ஆண் என வாழ இயலாது” என்றான். “அரசாணைக்கு நீர் கட்டுப்பட்டவர்” என்றான் உத்தண்டன். “எனில் என்னை கொல்க! நான் பழிநிகர் செய்யாமல் மீளமாட்டேன்” என்றான் திரிகரன்.

பூரி “உத்தண்டர் கூறியதே சரி என நான் எண்ணுகிறேன். இது நம் போர் அல்ல. நமது அறங்கள் எதற்கும் இங்கு இடமில்லை. இவர்களிடம் நாம் எந்த நெறியையும் எதிர்பார்த்திருக்கலாகாது. நமது பிழைக்காக இவர்கள்மேல் வஞ்சம்கொள்வதில் பொருளில்லை” என்றான். “மேலும் இவர்கள் நீர்ப்பாசி என நோக்க நோக்க பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடன் வஞ்சம் கொண்டால் நாமும் அவ்வண்ணமே பெருகவேண்டும். நாம் மலைமக்கள், அவ்வாறு பெருகுபவர்கள் அல்ல. அங்கே மலைமுடியில் காலம் மிக மெல்லவே ஒழுகுகிறது. ஒவ்வொன்றும் மாற்றமின்மையில் உறைகின்றன. நாம் அங்கு வாழ்வோம். நம் பிழைக்கு இரு இளவரசர்களை அளித்தோம் என்றே கொள்வோம்” என்றான். திரிகரன் ஏதோ சொல்ல நாவெடுக்க “உமது வாழ்க்கைக்கடன் என நீர் எண்ணுவதைத் தடுக்கும் உரிமை எனக்கில்லை. அதை நீர் இயற்றுக! நாங்கள் அரசருடன் இங்கிருந்து இப்படியே கிளம்பவிருக்கிறோம்” என்றான் பூரி.

திரிகரன் தலைவணங்கினான். பூரி “உத்தண்டரே, அரசருடன் நாம் உடனே கிளம்பியாகவேண்டும். உரியவற்றை இயற்றுக…” என்றான். “அரசரிடம் எப்பேச்சும் தேவையில்லை. அவர் துயிலிலேயே நம்முடன் வரட்டும். இப்போது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அகிபீனா இருமடங்காக கொடுக்கப்படவேண்டும்” என்றான் உத்தண்டன். “ஆம், மருத்துவரிடம் சொல்க!” என்றான் பூரி. அப்போது உள்ளே உரத்த அலறலோசை எழுந்தது. “என்ன? என்ன?” என்று பூரி திகைத்து கூவி உள்ளே நோக்கி திரும்ப உள்ளிருந்து சோமதத்தர் உரத்த குரலில் “எங்கே? எங்கே?” என்று கூவியபடி வெளியே ஓடிவந்தார். அவர் பூரியை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. “என் வாள் எங்கே? எவர் என்னை இங்கே கொண்டுவந்தது? என் வாள்… என் வில்!” என்றார். “தந்தையே…” என்று பூரி அருகே சென்றான். “செல்க, என் தேர் ஒருங்குக! என் தேர் இக்கணமே ஒருங்குக!” என்றார் சோமதத்தர்.

“தந்தையே! நான் பூரி, உங்கள் மைந்தன். மலையிலிருந்து இப்போதுதான் வந்தேன்” என்றான் பூரி. “நீயா?” என சிவந்து கலங்கிய விழிகளால் நோக்கி சோமதத்தர் கேட்டார். ஆனால் அவனை முழுதுளம் கொண்டாரா என்று தெரியவில்லை. “உன் தமையன்கள் கொல்லப்பட்டார்கள். நீ இங்கே என்ன செய்கிறாய்? கிளம்புக… அந்த யாதவனின் குருதி உண்ணாமல் நாம் இனி பாடி திரும்பலாகாது” என்றார். “தந்தையே, நாம்…” என பூரி சொல்லத் தொடங்க அவர் கைநீட்டி “ஒரு சொல்லும் தேவையில்லை. இது என் ஆணை. தந்தையென்றும் பால்ஹிக அரசன் என்றும் என் ஆணை. என் மைந்தர்களுக்காக. எங்கள் குடிமூதாதைக்காக பழிநிகர் செய்வதே பால்ஹிகர்களின் கடமை… கிளம்புக… அஸ்வமுகா, எங்கே என் தேர்?” என்றார். அவருடைய தேர்ப்பாகன் தொலைவிலிருந்து ஓடிவந்து வணங்கி “ஒருங்கியிருக்கிறது, அரசே” என்றான். “என் வில்லும் அம்புகளும் உள்ளனவா?” என்றபடி சோமதத்தர் இறங்கி முற்றத்தில் ஓடினார். பாகன் முன்னால் ஓடியபடி தன் சங்கை எடுத்து ஊத அவருடைய ஆவக்காவலனும் அணுக்கனும் படைக்கலங்களுடன் தேரை நோக்கி ஓடிவந்தனர்.

பூரி திகைத்து நின்றான். “அவர் நிலையழிந்திருக்கிறார். இவை அவருடைய ஆணைகள் என கொள்ளப்பட வேண்டியதில்லை. இளவரசே, அவரை நாம் எளிதில் இங்கிருந்து கொண்டுசெல்ல முடியும்… இன்னொரு குடுவை அகிபீனா கலந்த பீதர் மதுவை அவருக்கு அளிக்கச் சொல்கிறேன்” என்றான் உத்தண்டன். “அவர் தன் நாவால் ஆணையிட்டுவிட்டார்… அவர் எந்நிலையில் எதன்பொருட்டுச் சொன்னார் என ஆராய்வது மைந்தன் என என் பணி அல்ல” என்றான் பூரி. “இளவரசே, சொல்வதை கேளுங்கள். அவரால் இன்று களம்நிற்க முடியாது. அவர் இன்று போர்முனைக்குச் செல்வார் என்றால் கொல்லப்படுவார். அந்த யாதவன் அவரை கொல்வான். ஏனென்றால் வஞ்சத்தை விட்டுவைக்கலாகாதென்றே அவன் எண்ணுவான்” என்றான் உத்தண்டன். “ஆம், அவரைக் காத்து உடன் நிற்பதொன்றே நான் செய்யக்கூடுவது…” என்றான் பூரி. திரிகரன் “அவரில் எழுந்து ஆணையிடுவது நம் குலமூதாதையர். நமது குடித்தெய்வங்களின் குரல் அது… இவர்களைப்போல் நாம் குடிவஞ்சம் கொள்ளவேண்டியதில்லை. கொடிவழிகளுக்கும் அதை பரப்பவும் வேண்டியதில்லை. ஆனால் இந்தக் களத்தில் நெறிமீறிக் கொல்லப்பட்ட என் தலைவன் பொருட்டு ஒரு வாளேனும் எழவேண்டும்…” என்றான்.

பூரி “நான் முடிவெடுக்க இயலாமல் குழம்பியிருக்கிறேன். தந்தையின் ஆணையுடன் நிலைகொள்க என்று மட்டுமே என் அகம் சொல்கிறது. அதை தலைக்கொள்கிறேன்” என்றான். உத்தண்டன் “தங்கள் ஆணை அதுவெனில் எங்கள் கடமை அது” என்றான். சோமதத்தர் தன் தேரிலேறிக்கொண்டார். நாணொலி எழுப்பியபடி போர்முனைக்கு தேரை கொண்டுசெல்ல ஆணையிட்டார். தேர் எழுந்து அப்பால் சென்றது. அவரைத் தொடர்ந்துசென்ற பால்ஹிகப் படையினரின் போர்முழக்கம் எழுந்தது. பூரி “எனக்கும் தேரும் வில்லும் ஒருங்குக… நான் தந்தையுடன் செல்கிறேன்” என்றான். “ஆணை” என்றபடி ஏவலர்கள் இறங்கி ஓடினார்கள். பூரி திரும்பி அந்தக் குடிலுக்குள் நோக்கினான். அங்கே எவரேனும் இருக்கிறார்களா? அந்த இருளுக்குள் நின்றபடி அவர்கள் தந்தையைத் தூண்டி களத்திற்கு அனுப்பியிருக்கிறார்களா? அவன் நெஞ்சு அறைந்துகொண்டது. இருளில் துழாவிக் களைத்த விழிகளை திருப்பிக்கொண்டபோது அங்கே அவர்களின் இருப்பை உள்ளம் வலுவாகவே உணர்ந்தது.

“தேர் ஒருங்கிவிட்டது, இளவரசே” என்று ஏவலன் வந்து சொன்னான். ஆவக்காவலன் வில்லுடனும் ஆவநாழியுடனும் ஓடிவந்து தேரிலேறிக்கொண்டான். தேர்ப்பாகனின் சவுக்கால் சுண்டப்பட்ட தேர் வந்து முற்றத்தில் நின்றது. பின்னால் திரிகரனுக்கும் உத்தண்டனுக்கும் தேர்கள் வந்தன. பூரி தேரில் ஏறிக்கொண்டு வில்லை வாங்கினான். “செல்க, தந்தைக்கு வலம் நின்றாகவேண்டும்… விரைக!” என ஆணையிட்டான். தேர் விரைவுகொண்டது. குளிர்ந்த காற்று முகத்திலறைந்தபோது அவனுள் ஓர் எண்ணம் எழுந்தது, தந்தை கொண்ட அந்த உவகையை எப்போது துயரென்றும் வஞ்சமென்றும் மாற்றிக்கொண்டன தெய்வங்கள்? அவற்றின் கணக்குகள் என்ன?

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’
அடுத்த கட்டுரைஇலக்கிய முன்னோடிகள் – ஒரு விமர்சனம்