«

»


Print this Post

குர்ஆன் – ஒரு கடிதம்


noorul

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன்.

கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின் தொடர்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

/ நான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான வெளிப்பாடுகளே. பைபிளையோ,குர் ஆனையோ, தம்ம பதத்தையோ, கிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. வாழ்க்கையின் பல தருணங்களில் அவை எனக்கு பலவகைகளில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைபிள் என் நெஞ்சில் ஓர் அணையா ஒளியாக உள்ள நூல்.

ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஏனெனில் மண்ணில் இதுவரை உருவான எந்த நூலும் இறுதி நூல் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும், அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல் கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன். அது எந்நூலாக இருப்பினும் சரி. கீதையோ, குர் ஆனோ, பைபிளோ அல்லது மூலதனமோ/.

நீங்கள் குர்ஆனை மதிப்பவர், தேடல் கொண்ட உங்கள் மனதில் மதவெறிக்கிடமில்லை, எதையும் ஆராய்ந்தறிய முயல்கின்றீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆகவே, உங்கள் ஆய்வின் அடிப்படையில் நீங்கள் வேதங்கள் இறைவனின் வார்த்தைகள் அல்ல என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய உரிமை. ஆனால் ஞான தேடல் கொண்ட மனிதனர்கள் அனைவருமே இறைவனின் வார்த்தைகள்’ என நம்புவதை மூட நம்பிக்கையென  அறிந்திருப்பான் என நீங்கள் தீர்ப்பு கூறுவது  உங்கள் தேடலின் வாசலை மூடி விட்டீர்கள் என்பதையும் இன்னும் உங்கள் தேடலின் முடிவே இறுதியானது என நம்கின்றீர்கள் என்பதையும் தெரிவிக்கின்றது. மேலும் “இந்து ஞான மரபும், பெளத்த ஞான மரபும்,கன்பூஷிய ஞான மரபும், தாவோ மரபும் மட்டுமே அடுத்த தளங்களுக்கு வாசல் திறந்து தருபவை என்பதே என் இருபதாண்டுகால தேடலின் விளைவாக நான் கற்றது” என்ற வார்த்தைகளின் மூலம் குர்ஆனிய ஞானங்களில் உங்களுக்கு பரிச்சயமில்லை என்பதும் விளங்குகிறது.

குர்ஆன் ஞானங்கள் என தனியே ஒரு பகுதியை கொண்டதல்ல. அதன் ஒவ்வோரு வாசகங்களும் பல்வேறு பொருள் கொண்டவை என்பது எங்கள் நம்பிக்கை இன்னும் அனுபவம்.

ஒவ்வொரு ஞான விளக்கங்களை பற்றியும் எளிதில் விளங்கும் வண்ணம் குர்ஆனில் ஏன் Defintion இல்லை  என நண்பன் ஒருவன் ஒரு முறை  கேட்டது இங்கே இணைத்து பார்க்க தோன்றுகிறது.

குர்ஆன் பல்வேறு அறிவு தளத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான இறைச்செய்தி. அதில் ஞான விசயங்கள் ‘இஷாரா’ எனும் குறிப்பால் உணர்த்தும் பாணியில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஒரு முறை முஹம்மது நபியவர்களிடம் கிராமிய அரபியர் குழு ஒன்று வந்து நாங்கள் ‘மூமீன்’ என சொல்லும் போது நீங்கள் ‘மூமீன்’ என சொல்லாதீர்கள். முஸ்லிம் (இஸ்லாத்தை ஒப்பு கொண்டவர்கள்) என சொல்லுங்கள் என கூறினார்கள்.

நம்பிக்கையாளர்களின் முன்று வகை நிலையை சுருக்கமாக இப்படி சொல்லலாம்.

இஸ்லாம் – ஒப்பு கொள்வது அந்த நிலையில் உள்ளவர் முஸ்லிம்

ஈமான் – அதில் உறுதி கொள்வது அந்த நிலையில் உள்ளவர் மூமீன்.

இஹ்சான் – அதை உணர்வாய் கொள்ளும் பிரஞ்சை நிலை ( Concious state).அந்த நிலையில் உள்ளவர் முஹ்சீன்.

இந்த மூன்று நிலையையும் அடைவதே மார்க்கத்தின் சம்பூர்ண நிலை என்கின்றது நபி மொழி.

பொதுவாக நம்பிக்கையாளர்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றார்கள். சிலருக்கு சின்ன சின்ன விளக்கங்களே போதுமானதாக இருப்பதால் அதையே போதுமானதக்கிக் கொண்டு வெளிரங்கமான வணக்க வழிபாடுகளைக் கொண்டு அவர்கள் நிறைவடைகின்றார்கள் .

“நம்பிக்கையாளன் ஞானத்தேடல்கொண்டவனைவிட கீழானவன் இல்லை. அவ்வெண்ணம் விவேகானந்தருக்கு வந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘சைதன்ய மகாபிரபு பக்தர்தானே ? ‘ என்று கேட்டு அவரைக் கடுமையாகக் கண்டித்ததை ராமகிருஷ்ணர் வரலாற்றில் காண்கிறோம். பொதுவாக பக்திமரபு ஞானத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை பக்திக்கு அளிக்கிறது. எல்லா வழிகளும் இலக்காக்குவது ஒன்றையே. ஒருவன் எதில் நிறைவுகொள்கிறான் என்பது அவனது இயல்பைச் சார்ந்தது”   என்ற உங்கள்    வார்த்தைகளை    இங்கே    அன்புடன்   நினைவு கூர்கின்றேன்.

இனி மேலே சொன்ன இஷாராக்களின் மேலான ஞான விளக்கம் வேண்டின் அந்த ஞானத்தை பெற்ற குருவின் மூலம் தான் பெற முடியும் என்பது வேத வழிகாட்டலாகும். இன்று உள்ளது போல் குர்ஆன் பிரதிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஞானம் பெற்றவர்களல்ல நபித் தோழர்கள்.

இறைவன் வஹியின் மூலம் இறைதூதருக்கு இந்த ஞானத்தை வழங்கினான். நபியின் பணிகளின் தலையானது வேதத்தை கற்றுக் கொடுப்பது,   அதன் ஞானத்தை கற்று கொடுப்பது. இன்னும் அதன் மூலம் இதயத்தை பரிசுத்தபடுத்துவதாகும்.

இவ்வாறு நபியிடமிருந்து தோழர்கள், அவர்களிடமிருந்து அவர்களுக்கு பின் வந்தவர்கள் என சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. நபியிடம் தொடங்கி நம் வரை வந்தடையும் குரு பரம்பரையின் இந்த சங்கிலித் தொடர் ‘ஸில்சிலா’ என வழங்கப்படுகின்றது.

காதிரியா, சிஷ்தியா, நக்ஸபந்தியா, சுஹ்ரவர்த்தியா என பல்வேறு ஸில்சிலாக்களின் (சூஃபி மரபின்) வழியே இந்த ஞான வழி போதனை இன்றும் தொடர்கிறது.

Toshihiko Izutsu அவர்களின் Sufism and taoism : a comparative study of key philosophical concepts என்ற புத்தகம் வலைத்தளத்தில் PDFல் கிடைக்கிறது விரும்பினால் படித்து பாருங்கள். இப்னு அரபி என்னும் ஞானியின் புகழ் பெற்ற ‘புசூசுல் ஹிகம்’ என்ற நூலின் கருத்துகளை தாவோவின் கருத்துகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூல்Toshihiko Izutsu அவர்கள் குர்ஆனை  ஜப்பானிய மொழியில் மொழிபெயர்தவராவார்.

அன்புடன்,

ஒ.நூருல் அமீன்

நூர்உல் அமீன் இணையதளம் 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://jeyamohan.in/118510