இளம்வாசகர் சந்திப்பு – கடிதங்கள்

erode1

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு

அன்புள்ள ஜெ,

‘ஒன்றை கற்றுக்கொள்ளும் போது நீ சந்தோசமாய் இருக்க வேண்டும். அப்படி நீ சந்தோசமாக இல்லையெனில் நீ ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.’

நீங்கள் சொன்னது தான் ஜெ. (@Ted talks)

இரண்டு நாள் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தேன்.

எழுதுவது பிடிக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு கதை எழுதி முடித்த உடனேயே அந்தக் கதை பிடிக்காமல் போய் விடுகிறது. ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறது, ஆனால், என்னவென்று இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. இப்போது கொஞ்சம் தெளிவு பிறந்தது.

இந்த இளம் வாசகர் சந்திப்பு, கற்றலின் இன்பத்தை உணர்த்தியது.

எதைக் கற்றுக்கொண்டேன் என்பதை என் கதைகளில் மட்டுமே காட்ட விரும்புகிறேன்.

இதனை ஏற்பாடு செய்த ‘விஷ்ணுபுரம்’ வாசக வட்டத்திற்கும் ஒரு நல்ல ஆசானாய் இருந்து வழிகாட்டிய உங்களுக்கும் என் நன்றிகள்.

இப்படிக்கு,

சபரிராஜ் பேச்சிமுத்து (சபா)

அன்புள்ள ஜெ ,

ஈரோடு சந்திப்பு நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இன்னும் அதன் நினைவலைகள் மனதில் ஓடி கொண்டே  இருக்கிறது .

இலக்கியம்,வரலாறு,தத்துவும்,வாசிப்பு என தொடர்ந்து உரையாடினீர்கள் . வாசகர்களிடம்  தொடர்ச்சியா சோர்வின்றி உரையாடியது ஆச்சிரியமாக இருந்தது . நீங்கள்  எழுதிய புத்தகம் மட்டுமில்லாமல் மற்ற பலரது படைப்புகளையும் பற்றியும்  விவாதித்தீர்கள்  .அரசியலை முடிந்தவரை தவிர்த்து  இலக்கியத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தீர்கள் .  Naturalism & Transcendentalism போன்ற தத்துவ இயக்கங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்  .  பணத்தை விட  நேரத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் கூறியது  சிறப்பு  . சிறுகதை,நாவல் ,கவிதை  போன்றவைகளின் கட்டமைப்பு பற்றி பேசியது சிறப்பாக இருந்தது.மீண்டும் மீண்டும் Theme,Plot,treatment & Summation  என கதைக்கு வலியுறுத்தியது இனிமேல் வாழ் நாள் முழுதும் மறக்க மாட்டேன் .தஸ்தயேவ்ஸ்க்கி  ,டால்ஸ்டாய் ,அசோகமித்திரன் ,சு.ரா ,லோஹிதாஸ் ,எமர்சன் ,ஹென்றி தோரே,காந்தி ,ஆற்றூர் ரவி வர்மா மற்றும் நித்ய சைதன்ய அவர்களின் பங்களிப்பு பற்றி பேசினீர்கள் .

ஒரு வாசகனுக்கு இலக்கியம் அறிமுகம்  செய்யும் உங்களது  பங்களிப்பு மிகவும் மகத்தானது.

ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ,சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  வாய்ப்பு  கொடுத்ததிற்கும் மிக்க  நன்றி.

இப்படிக்கு

தி .செந்தில் குமார்

அன்புள்ள ஜெ

இன்றைய சூழலில் நீங்கள் நிகழ்த்தும் இளைய வாசகர் சந்திப்பு போன்ற ஒரு நிகழ்ச்சி மிக அரிதானது. தொடர்ச்சியாக ஆண்டுமுழுக்க இலக்கியத்திலேயே மூழ்கிச்செயல்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் முக்கியமான முன்னுதாரணங்கள். இந்நிகழ்ச்சியை சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நீங்கள் நிகழ்த்தியபோது பெற்றுக்கொண்ட ஊதியத்தைப் பற்றிச் சொன்னீர்கள். இங்கே உங்கள் செலவில் வந்து வாசகர்களின் வாசிப்பு – எழுத்து இரண்டுக்கும் பயிற்சி அளிக்கிறீர்கள். உண்மையில் மிக அருமையான ஒரு முயற்சி. இந்தியாவிலிருந்திருந்தால் கண்டிப்பாக நானும் கலந்துகொண்டிருப்பேன்.

சரவணன்

முந்தைய கட்டுரைகும்பமேளா கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைகூடியிருந்து குளிர்தல்…