தேசத்தின் இரு தலைவணங்குதல்கள்

nanaji deshmukh

இவ்வாண்டின் பத்ம விருதுகளில் இரண்டு விருதுகள் மனநிறைவளிப்பவை. நானாஜி தேஷ்முக் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா  இந்த நூற்றாண்டில் இந்தியா உருவாக்கிய மாமனிதர்களில் ஒருவரை தேசம் வணங்குவதற்கு நிகரானது. அவரை நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போது சந்தித்து வணங்கும் பேறு பெற்றிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக அவர் அன்று இருந்தார். நெருக்கடி நிலை காலகட்டத்தை எதிர்த்துப் போராடியவர். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அணுக்கமான நண்பர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குள் அன்றிருந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் அவர்.

1980-இல்  தீவிர அரசியலில் இருந்து விலகி தன் நெடுநாள் கனவுகளில் ஒன்றான காந்திய கிராமநிர்மாண இயக்கத்தை தொடங்கினார். மத்தியபிரதேசத்திலும் மகாராஷ்டிரத்திலும் அதற்கான பேரியக்கம் ஒன்றை தன்னந்தனி மனிதராக கட்டி எழுப்பினார். கிராமிய வறுமை ஒழிப்பு, கிராமசுகாதாரம் ஆகியவற்றில் அவருடைய பணி ஒரு தனிமனிதரால் இயற்றக்கூடியவற்றின் உச்சம். இந்திய கிராமப்புற வளர்ச்சி குறித்து ஆராயும் தீன்தயாள் உபாத்தியா ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர். 1990-இல் அவரை சந்திக்க சித்ரகூட் சென்றேன், சந்திக்க இயலவில்லை. 2010-இல் மறைந்தார். செயல்வீச்சும் தியாகமும் இணையாகக் கலந்த சென்ற யுகத்தின் மாமனிதர்.

nambi-narayanan-759

முனைவர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபணும் மனம் மகிழச்செய்கிறது. அரசியல் பகைமையால் பொய்யான ஒரு சதிக்குற்றச்சாட்டில் சிக்கவைக்கப்பட்டவர். அதற்கு தொண்ணூறு விழுக்காடு பொறுப்பேற்கவேண்டியவர்கள் கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியினர், குறிப்பாக வி.எஸ்.அச்சுதானந்தன். தும்பா கிரயோஜெனிக் ராக்கெட் நிலைய ரகசியங்களை ஒரு மாலத்தீவுப் பெண் வழியாக அயல்நாடுகளுக்கு விற்றதாக நம்பிநாராயணன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முன்னாள் முதல்வரும் காங்கிரஸ்காரருமான கே.கருணாகரனின் அணுக்கரான ரமண் ஸ்ரீவஸ்தவா என்னும் காவல்துறை உயரதிகாரியை சிக்கவைப்பதற்காக முடையப்பட்டது. அதில் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்கும் இருக்கலாம் என இன்று சொல்லப்படுகிறது.

முதல் விசாரணையிலேயே நீதிமன்றத்தில் வழக்கு பல்லிளித்தாலும் நம்பி நாராயணன் உட்பட்டோர் அடைந்த துயரங்களுக்கு அளவில்லை. கருணாகரன் காங்கிரஸிலிருந்து அன்று விலகியிருந்தமையால் காங்கிரஸும் நம்பிநாராயணனை கைவிட்டது. சிறைமீண்டபின் தொடர்ந்த சட்டப்போராட்டம். இந்திய நிர்வாகவியலின் நம்பமுடியாத மெத்தனம். கால்நூற்றாண்டுக்குப் பின்னரே அவரால் முழுமையாக விடுதலை அடைய முடிந்தது. விடுதலைக்குப் பின்னரும் பணிமூப்பும் பொறுப்பும் மறுக்கப்பட்டது.  அதன்பின்னர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றம்வரை சென்று வெற்றிபெற்றார்.

நம்பிநாராயணன் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். வாக்குமூலங்கள் அளிக்கும்படி கொடுமைப்படுத்தப்பட்டார். அத்தனை துன்பங்களிலும் நம்பி நாராயணன் ஒரு சொல்கூட இந்த தேசத்திற்கு எதிராக உரைக்கவில்லை. இந்த தேசத்திற்கு பணியாற்றவேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் முதன்மை அறிவியலாளராக பணிபுரிய வந்த அழைப்புக்களை தவிர்த்து எளிய ஊதியத்தில் தும்பா ராக்கெட் நிலையத்தை கட்டி எழுப்பிய முன்னோடி அவர். வழக்குக்குப் பின்னரும்கூட அவருக்கு அனைத்து வசதிகளுடன் உலகின் முன்னணி அறிவியல்சூழல் கொண்ட நாடுகள் அழைப்பு விடுத்தன. ஆனால் நீதிக்காகவே அவர் நின்றார். ஏனென்றால் அது தனக்கான போராட்டம் மட்டும் அல்ல என நினைத்தார். அரசியலும் அரசுநிர்வாகமும் சீரழிந்திருக்கலாம், தேசத்தின் குடிமகன் அவற்றுக்கு எதிராக போராடவேண்டும்,  தேசத்திற்கு எதிராக அவன் எண்ணக்கூடாது,  அதுவே அவனுடைய கடமை என பல பேட்டிகளில் அவர் சொல்லியிருக்கிறார்.

நம்பி நாராயணனுக்கு அளிக்கப்பட்டுள்ள இவ்விருது ஒரு மன்னிப்பு கோரல். அவர் நிலைகொண்டுள்ள விழுமியங்களுக்கு முன்பாக தலைவணங்குதல்.

இருவருக்கும் என் வணக்கங்கள்.

செவிக்குரிய குரல்கள் எவை?

முந்தைய கட்டுரைகல்பற்றா நாராயணன் – மேலும் நான்கு கவிதைகள்
அடுத்த கட்டுரைகே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது