பார்வதிபுரம் பாலம் – கடிதங்கள்

palam1

பார்வதிபுரம் பாலம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நாகர்கோவிலில் மேம்பாலம் நாகர்கோவிலில் இருக்கிறது என்பதே ஆச்சரியம். பனிரெண்டு வருடங்களுக்கு முன் வடசேரியிலும் , கோட்டாரிலும் தங்கியிருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் , சந்தை எல்லாம் நல்ல மழையில் உழவு உழுததுபோல் இருந்தது.  இன்று சென்னையில் நான் இருந்த இடங்களின் அருகில் வடபழனி பாலம் ,போரூர் பாலம் வந்துவிட்டது.  வண்டிகளும் ,ரயில்களும் வண்ண வண்ண கலர்களில் பறப்பதை கண்டு பறக்கும்தலைமுறை என எண்ணிக்கொண்டேன். ஆனால் இந்தியாவிலேயே அப்போதைய பெரிய மேம்பாலம் என்று சொல்லப்படும் திருநெல்வேலி மேம்பாலத்தில் முதலில் சென்றதை இன்று எண்ணிக்கொண்டேன்.

ஒரு சின்ன கட்டுரைக்குள்ளேயே நக்கலும் நையாண்டியுமாய் உங்களின் வாழ்விடத்தை நீங்கள் பார்க்கும் பார்வை, சுற்றியுள்ளவர்கள் இருக்கும் நிலைமை, [கார்கோடகன், சேஷன், வாசுகி]   போகன்சங்கரை சொல்லி ஒரு நக்கல்[ இன்றைய கவிஞர்கள்?] அவரின் குழப்பம் என சொல்லியிருக்கிறீர்கள்.  வேதசகாயகுமார் காட்டும் கோட்பாடு தீவிரம் இவ்வளவு இருக்குமா? என திகில் அடித்தது. பிறகு சொன்னீர்கள் பாருங்கள் ” அவர்  லௌகீகவாதியும்  இடதுசாரியுமால்  சமநிலையில் வைக்கபட்டிருக்கிறார் என்று  வாசித்து வாசித்து இன்புற்றேன்.  பிறகு வாஸ்து பிரச்சனை எல்லாம் இப்போது பொது ஜனங்களுக்கு அல்ல …அரசியல் கட்சிகளுக்கும் [ விஜயகாந்த்] , வணிகர்களுக்கும்தான் [ டி.நகர் ] . மேம்பாலம்  என்றாலே அலறுகிறார்கள். ஆனால் கடைசியில் ஓன்று சொன்னீர்கள் பாருங்கள்

“பார்வதிபுரமே நாகர்கோயிலுக்கு எதிராக, ஏன் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக, சொல்லப்போனால் அமெரிக்க ஏகாத்திபத்தியத்திற்கே எதிராக சதிசெய்துகொண்டிருப்பதுபோல ஒரு தோற்றம். ஆவேசமாக மேம்பாலத்தை கடந்துசெல்லும் கூட்டத்திடம் “நாங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூவிக்கொண்டேன். ஆனால் இங்கே இப்போது கூச்சல் என்றால் நினைத்துக்கொள்வதுதான்” …சிரித்த சிரிப்பில் லேப்டாப் முழுதும் எச்சில் தெரித்தது. பார்வதிபுரம் மட்டும்தானா?

ஜெயமோகன் சார் நீங்கள் ஒருநாள் பைக்கில் சென்றபடியே மேம்பாலத்தின் மேல் இருந்து பறவை கோணத்தில் பார்வதிபுரத்தை பார்த்து எழுதவேண்டும். உங்களுக்கு பைக் ஓட்டதெரியவில்லை என்றால் வேதசகாயகுமார் அவர்களின் வண்டியின் பின்னால் இருந்து செல்லலாம். அதுவும் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

அன்புள்ள ஜெ

பார்வதிபுரம் பாலத்தால் புதைக்கப்பட்ட்தைப்பற்றிய பகடி பார்த்தேன். உண்மையிலேயே அப்படித்தான் நடக்கும் . மேம்பாலத்துக்கு கீழே உள்ள திருநெல்வேலியைப்பாருங்கள். மற்ற ஊர்களுக்கும் அதுக்கும் எவ்வளவு வேறுபாடு. இருட்டு தூசி. காலப்போக்கில் ஓட்டை உடைசல்கள் வந்து சேர்ந்துவிடும். ஆக்கர் கடைகள் வரும். துருப்பிடித்த கார்கள் நிரந்தரமாக நிற்கும். அதற்கேற்ப எல்லாருடைய மனநிலையும் மாறிவிடும். அப்படியே காலத்தில் தேங்கி பழையவர்களாக ஆகிவிடுவோம். இது நடைமுறை உண்மை.

ஆனந்த் குமார்

palam2

அன்புள்ள ஜெ

ஒரு ஆய்வறிக்கை. கிபி 3079 ஜூன் 23. ஆய்வாளர் பீட்டர் ஸ்லோவ்ஸ்கி எழுதியது.

பழைமையான நகரமாகிய நாகர்கோயிலுக்கு வெளியே ஒரு தொல்ஊர் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் குழாய் பதிக்க தோண்டியவர்கள் இங்கிருந்து சில எலும்புக்கூடுகளையும் பழைய பானையோடுகளையும் கண்டு பிடித்தனர். அதன்பின் அகழ்வாராய்ச்சியாளர்கள் அங்கே 25 அடி ஆழத்தில் ஒரு பழைமையான மக்கள்குடியிருப்பைக் கண்டுபிடித்தார்கள். இந்த ஊர் அந்தக்காலத்தில் பார்வதிபுரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. வரிசையான வீடுகளும் குறுகலான தெருக்களும் கொண்ட இந்த ஊரில் ஆயிரமாண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் அரிசி கோதுமை ராகி போன்றவற்றை சாப்பிட்டிருக்கிறார்கள். தக்காளி வெண்டைக்காய் போன்ற காய்கறிகளையும் உணவாகக் கொண்டிருக்கிறார்கள். இங்கே புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த மக்களுக்கு எழுதப்படிக்கத்தெரிந்திருக்கவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. இவர்கள் சிலுவை வழிபாட்டை மையமாகச் செய்திருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த ஏதோ இயற்கை உற்பாதத்தால் இந்த ஊர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இது இங்கே இருந்த கவிஞர் ஒருவரின் சாபத்தால் என்று தொன்மக்கதை உள்ளது. இவர் முப்பதாயிரம் பக்கமுள்ள ஒரு காவியத்தை எழுதியதாகவும் அதை ஒருவருமே படிக்கவில்லை, சொந்த மனைவிகூட படிக்க மறுத்துவிட்டார் என்பதனால் மனமுடைந்து சாபம் போட்டதாகவும் பதங்க சிந்தாமணி என்றநூலில் ஒரு கதை உள்ளது. இது பொய்யான கதை, அதே ஊரைச்சேர்ந்தவரான இன்னொரு பகடிக்கவிஞரால் உருவாக்கப்பட்டது என்று ஆய்வாளர் சுப்ரமணியபிள்ளை சொல்கிறார்..

ராம்சந்தர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42
அடுத்த கட்டுரைஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி