ஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்

famine

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

அன்புள்ள ஆசிரியருக்கு ,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெள்ளை யானையை பற்றிய எண்ணம் இன்று கூட வந்து போனது.

புத்தாண்டு வாழ்த்து சொன்ன என் மைத்துனரிடம் பரியேறும் பெருமாள் படம் பற்றி பேசும் போது, அவர் நான் ரஞ்சித் படம்னு தெரியாம பாத்துட்டேன் மச்சான் ..அவன் ரொம்ப பேசறான் என்னும் போது எனக்கு மின்னலென வெள்ளை யானை சித்திரம் வந்து மறைந்தது..வெள்ளை யானை மற்றும் நூறு நாற்காலிகள் போன்ற ஆக்கங்களின் தேவைகள் என்றைக்கும் விட இன்றைக்கு அதிகமாவே உள்ளது.

சில வாரங்களுக்கு முன் நண்பருடான பேச்சின் போது அவர் வருணாசிரமத்தை ஆதரித்து, பழங்கால இந்தியாவில் அடிமை முறையே இல்லை என்று வாதிட்ட போது வெள்ளை யானை கருவை சொல்லி தான் வாதிட்டேன், அவர்  சம்பந்தம் இல்லாமல் இதை ஏன் சொல்கிறீர்கள் என்றார். வரலாறு என்றும் வென்றவர்களின் வரலாறு. தோற்றவர்களின் வரலாறு எழுதப்படவேயில்லை என்றேன்.

நான் வளர்ந்த கோவை மாவட்டத்தில் ஒரு நூறாண்டுகளுக்கு முன் கொத்து கொத்தாய் மடிந்தவர்களின் வரலாறு கூட அறியாமல் இன்று கூட வாழ்பவர்கள் தான் எத்தனை பேர்.”Those who failed to learn from history are doomed to repeat it”  என்ற வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

இன்னொன்று நான் எந்த புத்தகத்தையும் யாரிடமும் கொடுத்து படி என்று சொல்வது இல்லை. முன்பு சுட்டிகளை நண்பர்களுக்கு அளிப்பது உண்டு.இன்று பேரை மட்டும் சொல்லி கடந்து போய் விடுகிறேன். தனக்கான எழுத்தை வாசகன் தானே கண்டடைவான்.

என்றும் அன்புடன்

பாலசுப்ரமணியம்

 அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு

வணக்கம் இன்றைய பதிவில், “எழுத்தாளனைப்பொறுத்தவரை அவனுடைய சொந்த அவசியம்தான் முக்கியம்” என்ற வரிகள் எழுத்துலகில் முக்கியமானவை. இதை உணராத எழுத்தாளரும் வாசகரும் பிழையான கேள்விகளால் துன்பப்படுகிறார்கள். நான் கூட இதை ஏன் எழுதினாய்”? சங்கு இதழில் ஏன் இதை வெளியிட்டாய்” என்ற வினாக்களினால் அகமழிந்து நிலைகுலைந்து போயிருக்கிறேன். நன்றி

வளவ துரையன்

அன்புள்ள ஜெ

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வியையும் பதிலையும் வாசித்தேன். சங்கடமான எதை எழுதினாலும் அதையெல்லாம் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி வந்துகொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.சங்கடமான வரலாற்றை ஏன் எழுதவேண்டும் என்று ஒரு கட்டுரையையே நீங்கள் எழுதியிருக்கிறீகள். இது பொதுவான ஒரு இந்தியமனநிலை. இதனால்தான் நாம் பல துக்கங்களைக் கடந்துசெல்கிறோம். ஆனால் வரலாற்றையும் கூடவே மறந்துவிடுகிறோம்

ரத்னசபாபதி

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

முந்தைய கட்டுரைதெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைகுழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?