பிரதமன் – கடிதங்கள் 9

Ada-Pradhaman-

பிரதமன்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

பல கடிதங்களை வாசித்தபின்னர்தான் பிரதமன் கதையை வாசித்தேன். மீண்டும் மீண்டும் புதிய அனுபவங்களை அளிப்பதாக இருந்தது அந்தக்கதை. அதில் இருக்கும் உறவுகளின் சிக்கலான வலையை பலபேர் பார்க்கவில்லை. ஆசானுக்கு அவர் மாணவன் மீதிருக்கும் பிரியம். அந்த மாணவனுக்கும் மற்ற சமையற்காரர்களுக்கும் இருக்கும் உறவு. சமையற்காரர்களுக்கு ஆசானிடம் இருக்கும் ஆழமான மதிப்பு. இப்படி இத்தனை மனிதர்கள் ஒரு சின்னக்கதைக்குள் நிறைந்து உலவிக்கொண்டிருப்பது மிக அபூர்வம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தப்பாயசம் எழும் கணம் ஒரு நல்ல சங்கீதக் கச்சேரியில் ராகநுட்பம் வெளிப்படுவதுபோல. எல்லாருக்கும் தெரிந்ததுதான் ராகம். ஆனால் ஒரு இடத்தில் அதுவரை நாம் பார்க்காத ஒன்றை காட்டிவிடுவார். அது ஒரு தெய்வம் தோன்றுவதுபோல. மெய்யாகவே பலர் அந்த இடத்தில் ஒரு நறுமணம் எழுந்ததுபோல் இருந்தது என்ற கருத்தை எழுதியிருக்கிறார்கள். சிறப்பான கதை

எஸ்.ராகவன்

அன்புள்ள ஜெ..

பிரதமன் கதை படித்தேன்..  படிக்கிறேன்… இன்னும் படிப்பேன்..

2.0 படம் பார்த்த முதல் நாள் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்,,,

அனைவருமே பல்வேறு திரைக்கதை நூல்கள் படித்தவர்கள்…பயிற்சிப் பள்ளிகளில் கலந்து கொண்டவர்கள்.. தாமே பயிற்சி வகுப்புகளும் நடத்தியவர்கள்…  சினிமா துறையில் ஓரளவு  நேரடி பரிச்சயம் கொண்டவர்கள்

எஙகளிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே… பட்சிராஜன் மீது வெறுப்பு வரும் அளவுக்கு காட்சிகள் அமைத்திருக்க வேண்டும் .. பட்சி ராஜன் ஃபிளாஷ்பேக் அனுதாபத்தை மறக்கச்செய்வது போல வலுவான வசனங்களை ரஜினிக்கு கொடுத்திருக்க வேண்டும் … அதுதான் வெற்றி ஃபார்முலா.. என்றார்கள்

அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம்… ஆனால் அப்படி வழக்கமான ஃபார்முலா அடிப்படையில் படம் உருவாகி இருந்தால் , வழக்கமான ஒரு நல்ல படமாகவே அமைந்திருக்கும்.. இப்போது கிடைத்துள்ள வரலாறு காணாத வெற்றி கிடைத்திராது… ரசிகனின் புத்திசாலித்தனத்துக்கு இடமளித்து தேவையற்ற காட்சிகளை , அதிகப்படியான வசனங்களை , வழக்கமான திரைக்கதையை தவிர்த்ததில்தான் கலை வென்றுள்ளது…

கணக்குகளுக்கு அப்பால் நிற்பதே கலை… எப்போது கணக்குகளை மறந்து இயல்பாக செயல் நடக்கிறதோ அப்போதுதான் நிபுணத்துவம் பிறக்கிறது ..

சுவையை கச்சிதமாக ஆசான் நிர்ணயிப்பது கணக்குக்ளை மீறிய அந்த நிபுணத்துவத்தால்தான்…

ஆனால் ஒருவர் எல்லாவற்றிலும் உச்சத்தை அடைய முடியாது… மனித உறவுகள் போன்ற பலவற்றில் ஆசான் தோல்விகளையும் கசப்புகளையும் சந்த்தித்து இருப்பார்…

தனக்கான இடத்தை தன் உச்சத்தை கண்டறிவதன் மூலம் அந்த கசப்புகளை எல்லாம் இனிப்பாக்கி விடுகிறார்… சார்லி சாப்ளின் தன் வலிகளை எல்லாம் கலை வடிவம் ஆக்கியது போல..

ஆனால் தனக்கான இடத்தை கண்டறியாத பலர் கடைசிவரை கசப்புகளை அனுபவித்து பிறருக்கு கசப்புகளையே கொடுப்பதும் நடக்கிறது..

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள ஜெ

பிரதமன் கதையின் ஏராளமான கதாபாத்திரங்களை இரண்டாம் வாசிப்பில் நான் தனித்தனியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு குணச்சித்திரம். ஆசான் கடைசியாக அனைத்தையும் ஒன்றாகக் கலக்கிறார். ஒரு இனிமை உருவாகி வருகிறது. அவருடைய இடம் அந்த கிண்டி சுவையெழுப்பும் தருணம்தான். பாயசத்தையும் உறவுகளையும்

ராஜீவ்

பிரதமன் – கடிதங்கள் – 7

பிரதமன் -கடிதங்கள்1

பிரதமன் -கடிதங்கள்-6

பிரதமன் -கடிதங்கள்2

பிரதமன் கடிதங்கள் 3

பிரதமன் கடிதங்கள் 4

பிரதமன் கடிதங்கள் 5

Save

Share

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் – கடிதம்
அடுத்த கட்டுரைஇரு அளவுகோல்கள்