மொழியை பெயர்த்தல்

கான்ஸ்டென்ஸ் கார்னெட்
கான்ஸ்டென்ஸ் கார்னெட்

தமிழில்’ பேயோன்

க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா! ஆமா!’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ]

ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் எழுதியவர். அரைநூற்றாண்டாக பறவை ஆய்வு செய்பவர். தமிழகத்துப் பறவைகளைப் பற்றி கோட்டோவியங்களுடன் இவர் வெளியிட்டுள்ள தமிழகத்துப் பறவைகள் [தமிழினி] ஒரு முக்கியமான நூல். எல்லாம் சரிதான், ஆனால் மொழியாக்கம் நெஞ்சை அடைக்கச்செய்வது.

என்ன சிக்கல்? இலக்கணப்பிழைகளோ மொழியாக்கப்பிழைகளோ அல்ல. உண்மையில் அவை ஒரு பிரச்சினையே அல்ல. ஆசிரியரின் அகவெளிப்பாட்டுடன் இணைந்துகொள்ளும் மொழி என்றால் நாம் அவற்றை கவனிக்கவே போவதில்லை. மொழியில் கல்பொறுக்கிக் கொண்டிருக்கும் சில்லறைத்தனமெல்லாம் வாசகனாக எனக்கு கிடையாது. நான் ஒரு நூலை எடுத்ததுமே தீவிரமாக அதன் மொழியுலகுக்குள் நுழையவே முயல்வேன். சொற்றொடர்களிலிருந்து காட்சிகளையும் உணர்வுகளையும் உருவாக்கிக்கொள்ள முடிந்தவரை முயல்வேன். அந்த ஆசிரியனுக்கு மொழிசார்ந்த எல்லா சலுகைகளையும் அளிப்பேன்.

ஏனென்றால் அந்த உளநிலை இன்றி எவரும் நவீன இலக்கியத்தை வாசிக்கமுடியாது. இலக்கியம் நாளிதழ் அல்ல. காரணம், அன்றாடமொழியில், சராசரி மொழியில் ஒருபோதும் படைப்பூக்கம் வெளிப்பட முடியாது. அனைவருக்குமென தரப்படுத்தப்பட்ட மாறாமொழியமைப்புபோல வாசகனுக்கு சலிப்பூட்டுவதும் வேறில்லை. ஆகவேதான் நம்மால் ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸையும் தமிழில் லா.ச.ராவையும் வாசிக்க முடிகிறது. இலக்கணப்பிழைகள் மலிந்த வைக்கம் முகமது பஷீரின் மொழி அந்த மொழியின் தலைசிறந்த புனைவுமொழியாக கருதப்படுகிறது.

paavannan

’டப்ளின் நகரத்தார்’ என்னும் நூலின் புனைவுமொழியில் உள்ள சிக்கல் இதில் அகஒழுங்கு இல்லை என்பதே. புறஒழுங்கின்மையை அகஒழுங்கு முழுமையாகவே நியாயப்படுத்திவிடும். வாசகனாக நாம் தேடுவதே மொழியின் அகஒழுங்கைத்தான். அதை இப்படி சொல்கிறேன். நாம்  ‘சும்மா’ இருக்கும்போது நம்முள் ஓடும் மொழிக்கு ஓர் ஒழுங்கு, தாளம் இருக்கிறது அல்லவா? அதேபோல அந்த ஆசிரியனின் அகத்துள் ஓடும் மொழிக்கு இருக்கும் ஒழுங்கும் தாளமும்தான் அந்த அகஒழுங்கு. அது தன்னியல்பாக வெளிப்படுவது. அதைத்தான் உரைநடையின் ஒழுக்கு என்கிறோம்.

அந்த அகஒழுங்கை மொழியினூடாக நாம் அடையும்போதே எதிரில் ஒரு மனிதன் இருந்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறான் என நாம் உணர்கிறோம். அந்த ஆசிரியனின் அகவுலகுக்குள் நுழைகிறோம். அந்த அகஒழுங்குக்கு ஏற்ப மொழியின் புறஒழுங்கு எத்தனை சிதைந்திருந்தாலும் பொருட்படுத்துவதில்லை. அந்த அகமொழியின் நுட்பங்கள், பாய்ச்சல்கள் மட்டுமல்ல தயக்கங்கள், குழப்பங்கள், சிடுக்குகள், முரண்பாடுகள், பிழைகள்கூட  படைப்பூக்கத்தைச் சார்ந்தவையே என உணர்கிறோம். நாம் வழிபடும் பெரும்படைப்பாளிகளின் மொழிவெற்றிகளை மட்டுமல்ல மொழிச்சிக்கல்களைக்கூட நாம் நினைவில் வைத்திருக்கிறோம். மேலும், அறிந்தும் அறியாமலும் நிகழும் மொழிமயக்கங்கள் என்பவை கலையின் இன்றியமையாத பகுதிகள்.

மொழியாக்கங்களை எடுத்துவைத்துக்கொண்டு சொல் சொல்லாக சரிபார்த்து தங்களை அறிஞர்களாக காட்டிக்கொள்பவர்களை ஒருவகை அற்பர்களாகவே எண்ணுவேன் – அவர்களால் புனைவுகளுக்குள் நுழைய முடியாது. நம் சூழலில் மொழியாக்கங்களைப் பற்றி அவ்வப்போது கருத்து சொல்பவர்கள் இவர்களே. இவர்கள் மீதான அச்சத்தால் சொல்லுக்குச் சொல் ‘அப்படியே’ மொழியாக்கம் செய்யும் அசட்டுத்தனம் மொழிபெயர்ப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது

paru

ரஷ்ய இலக்கியங்களை முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த திருமதி கான்ஸ்டன்ஸ் கார்னெட் [Constance Garnett] பல சொற்பிழைகளுடன், சொற்றொடர்பிழைகளுடன், சிலவற்றை விட்டுவிட்டுத்தான் மொழியாக்கம் செய்தார் என்று இன்று சொல்கிறார்கள். இடைவிடாது வெறியுடன் மொழியாக்கம் செய்தவர் அவர். ஆங்கிலவாசகர்களுக்கு ரஷ்ய இலக்கிய மேதைகள் அவர் வழியாகவே அறிமுகமானார்கள். உலக இலக்கியப் பரப்பை கார்னெட்டின் ஆங்கில மொழியாக்க வடிவம் வழியாகவே அந்த மேதைகள் பாதித்தார்கள், மாற்றியமைத்தார்கள்.

ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் பலர் கார்னெட்டை மொழியாக்கங்களின் அரசி என புகழ்ந்திருக்கிறார்கள். அவர் மொழியாக்கம் செய்தமையால்தான் ரஷ்யாவின் இலக்கியம் ஆங்கில உலகில் அத்தனை வாசிக்கப்பட்டது. ஏனென்றால் ரஷ்ய நிலம் அவர்களுக்கு  அன்னியமானது. ரஷ்யாவிலிருந்த கீழைத்தேயச் சாயல்கொண்ட ஆன்மீகம் மேலும் அன்னியமானது. சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்த ஒரு மனித இயந்திரம் அப்படைப்புக்களை மேலும் அன்னியமாக்கியிருக்கக்கூடும். கார்னெட் தன் ஆன்மாவை அந்த ஆசிரியர்களுக்கு அளித்தார். அந்தப்படைப்புகளில் வாழ்ந்தார். நாம் வாசிப்பது கார்னெட்டின் அகமொழியை.

அதன்பின் இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ‘சரியான’ மொழியாக்கங்கள் வந்துவிட்டன. சமீபத்தில் கார்னெட் மொழியாக்கம் செய்த டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை வாசித்தேன். கார்னெட் மொழியாக்கம் அளிக்கும் மொழிஒழுக்கும் உணர்வின் அணுக்கமும் பிறகு வந்த எந்த மொழியாக்கத்திலும் இல்லை என்றே சொல்வேன். தமிழில் அவ்வாறு ஓர் ஆசிரியருக்கு தன் ஆன்மாவை அளித்த மொழிபெயர்ப்பாளர் என்றால் காண்டேகருக்காகவே வாழ்ந்த கா.ஸ்ரீ.ஸ்ரீயை சொல்லவேண்டும்.

க.ரத்னம் மொழிபெயர்த்திருக்கும் நடை இப்படி இருக்கிறது. “உள்ளே நுழைந்து நான் அவரை பார்க்கவிரும்பினாலும் கதவைத் தட்டும் தைரியம் இல்லாததனால் நான் மாலைவெயில் காயும் தெருவின் மறுபக்கமாக கடை ஜன்னல்களில் தொங்கும் பலகைகளின் விளம்பரங்களைப் படித்தபடி நடந்தேன்.’ இதில் ஒரு நான் மிகுதி என்பதைத்தவிர பெரிய பிழை ஏதுமில்லை. ஆனால் ஒழுக்கு இல்லை. இத்தகைய சொற்றொடர்கள் வழியாக செல்லும்போது நம் மூளை சலிப்புறுகிறது. மெல்லமெல்ல பொறுமையின்மையும் எரிச்சலும் கொண்டவர்களாகிறோம்.

c.mohan

சமீபத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் பெரும்பாலான மொழியாக்கநூல்கள் அகஒழுங்கு அற்ற உரைநடையால் மிகப்பெரிய துன்ப அனுபவங்களாக மாறிவிடுபவை. நான் பணம்கொடுத்து வாங்கி படிக்கமுடியாமல் வைத்திருக்கும் இத்தகைய நூல்களின் ஒரு பட்டியலே உள்ளது. எவரிடமாவது கொடுக்கலாம் என்றால் எவருக்கு மனமறிந்து அந்தக் கொடுமையை செய்வது? நூலகங்களுக்கு அளிக்கலாம், எவரும் படிக்காமல் சுவரில் செங்கல் போல கட்டுமானத்தின் பகுதியாக அங்கேயே இருந்துகொண்டிருக்கும்.

மொழியாக்கத்தில் அகஒழுங்கு எப்படி அமையமுடியும்? அதில் இருப்பது மூலஆசிரியனின் அகமொழி. அதை தமிழுக்கு எப்படி கொண்டுவரமுடியும்? மொழியாக்கம் செய்பவனுக்குக் கிடைப்பது அந்த மொழிக்கட்டுமானம் மட்டும்தானே? அதை அப்படியே தமிழுக்கு மாற்றுவதைத்தானே செய்யமுடியும்? சொல்லுக்குச் சொல், சொற்றொடருக்குச் சொற்றொடர் சரியாக இருக்கிறதா, இலக்கணம் அமைந்துள்ளதா என்று மட்டும்தானே நாம் பார்க்கமுடியும்? – இப்படி கேட்கலாம். ஆனால் அது உண்மை அல்ல.

என்னதான் சொன்னாலும் மொழியாக்கம் செய்பவனும் அப்படைப்புக்கு ஓர் ஆசிரியனே. அவனை இணையாசிரியன் என்றே சொல்லலாம். நாம் வாசிக்கும் மொழியாக்கப் படைப்பில் முதன்மையாக வெளிப்படவேண்டியது அந்த மொழிபெயர்ப்பாளனின் அகமொழிதான். நாம் அவனுடன்தான் உளம் பரிமாறிக்கொள்கிறோம். நாம் வாசிப்பது அவனுடைய மொழியொழுங்கைத்தான். மூலஆசிரியனை நாம் நேரடியாக அணுகவே முடியாது.

மூலஆசிரியனின் அகமொழி எப்படி அப்படைப்பில் வெளிப்படும்? அந்த மொழிபெயர்ப்பாளனின் அகமொழியில் அது ஒரு செல்வாக்கை செலுத்தியிருக்கும், அச்செல்வாக்காகவே நாம் அதை உணரமுடியும்.

onaay

உதாரணமாக இரு நூல்கள். பாவண்ணன் மொழியாக்கத்தில் வெளிவந்த எஸ்.எல்.பைரப்பாவின் கன்னட நாவலான பர்வா. இன்னொன்று சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஜியாங் ரோங் எழுதிய சீன நாவலான ‘ஓநாய்குலச்சின்னம்’. இரு ஆசிரியர்களுமே சொந்தமாக அகமொழி கொண்டவர்கள். நாம் அந்த மொழியை வேறுபடைப்புகள் வழியாகவும் அறிவோம். இந்த மொழியாக்கநாவல்களில்  முதன்மையாகத் திகழ்வது அந்த மொழிபெயர்ப்பாளர்களின் அகமொழியின் ஒழுங்கே. ஆனால் அதில் மூல ஆசிரியர்களின் அகமொழியின் செல்வாக்கு வலுவானது என்பதை அவர்களின் வேறு ஆக்கங்களுடன் இவற்றை ஒப்பிட்டால் உணரமுடியும்.

ஆகவே மொழியாக்கம் என்பது மொழிக்கு மொழியை நேர்வைப்பது அல்ல. மூல ஆசிரியனின் அகமொழிக்கு மொழிபெயர்ப்பாளன் தன்னை ஒப்படைப்பதே. அதன்வழியாக தன் அகமொழி மாற அவன் அனுமதிக்கவேண்டும். அதன்பின் தன் அகமொழி தெளிவாக வெளிப்படும்வண்ணம் அவன் அம்மொழியாக்கத்தை நிகழ்த்தவேண்டும். அவனால் அவனுடைய ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறதோ அப்படி அவன் அதில் வெளிப்படவேண்டும். அதுவே நல்ல மொழியாக்கம்.

மொழிபெயர்ப்பாளன் இயந்திரம் அல்ல. அவன் மூல ஆசிரியனை நோக்கி நம்மை கொண்டுசெல்லும் இன்னொரு ஆசிரியன். அவனுடைய புனைவுமொழி மூல ஆசிரியன் ஏறி நம்மை வந்தடையும் ஊர்தி. நல்ல மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனை திருத்தியமைக்க மாட்டான், எதையும் சேர்க்கவும் மாட்டான். ஏனென்றால் அவன் மூலஆசிரியனுக்கு தன்னை ஒப்பளித்தவன்.

இது பல மொழியாக்கங்களில் நிகழ்வதில்லை. முதன்மைக்காரணம் பலர் சரிவர புரிந்துகொள்ளாமலேயே மொழியாக்கம் செய்கிறார்கள். மூலத்தை புரிந்து உணர்ச்சிகரமாக உள்வாங்காதவரால் செய்யப்படும் மொழியாக்கம் உடனடியாகவே உயிரிழந்துவிடும். இன்னொன்று, மொழியாக்கச் சோம்பல். ஏராளமான மொழியாக்கங்கள் எப்படிச் செய்யப்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். ஆங்கிலப்படைப்பை ஒருபக்கம் வைத்துக்கொண்டு பார்த்து தமிழில் எழுதிக்கொண்டே செல்வார்கள். அந்தத் தமிழ்வடிவை அப்படியே அச்சுக்கு கொடுத்துவிடுவார்கள். அதில் இலக்கணப்பிழைகள் மட்டும் திருத்தப்படும். பலசமயம் அதுவும் நிகழாது. விரைந்து மொழியாக்கம் செய்ய விரும்புபவர்களின் வழி இது.

இதில் என்ன நிகழ்கிறதென்றால் அந்த மொழியாக்கதின்போது மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனின் மொழிக்கு அண்மையில் செல்கிறான். மூலப்படைப்பின் மொழியின் சொற்றொடர் அமைப்பு, சொல்லாட்சிகள் ஆகியவை அவன் உள்ளத்தில் இருக்கின்றன. ஆகவே அப்போது அவன் செய்வது ஒரு நகலெடுப்பு மட்டுமே. அந்த மொழியாக்கத்தின் மொழிநடை மூலப்படைப்பு அமைந்த மொழியின் அதேவடிவில் இருக்கும். சோற்றை சப்பாத்தி மாதிரி பரத்திக்கொண்டு வைப்பதுபோலிருக்கும் அந்த நடை.

ஆங்கிலம் நமக்கு மிக அயலான சொற்றொடர் அமைப்பு கொண்டது. அதில் எழுவாய் பயனிலை அமைப்பு தலைகீழாக நிற்கக்கூடியது. ஆகவே அதை அப்படியே எழுதினால் தமிழே தலைகீழாக நிற்பதுபோலிருக்கும். ஆங்கிலம் கூட்டுச்சொற்றொடர்கள் அமைக்க ஏற்ற மொழி. தமிழில் அந்த அமைப்பு இல்லை. ஆங்கிலத்தை அப்படியே மொழியாக்கம் செய்தால் ஒன்றோடொன்று ஒட்டாத பகுதிகளை அள்ளி இணைத்ததுபோல, பிக்காஸோவின் பெண் ஓவியம்போல, இருக்கும்.

மலையாளம், கன்னடம் போன்ற தமிழுக்கு மிக அணுக்கமான மொழிகளிலுள்ள சிக்கல் இன்னொன்று. அவற்றிலுள்ள சொல்லாட்சிகள், சொற்கள் தமிழிலும் இருப்பவை. ஆனால் வேறுபொருளில். வேறு தொனியில். அப்படியே தமிழாக்கம் செய்தால் மொழியே உருகி உருக்குலைந்ததுபோல் இருக்கும். அதை நம்மால் வாசிக்க முடியாது. நாம் புனைவுக்குள் செல்லமுடியாதபடி அந்த மொழிச்சிக்கல் நம்மை மேலே தள்ளும்

முதலில் மூலத்திலிருந்து சொல்சொல்லாக, சொற்றொடர் சொற்றொடராக  மொழியாக்கம் செய்துவிட்டு மூலத்தை தூக்கி அப்படியே விலக்கி வைத்துவிடவேண்டும். அந்த மூலப்படைப்பு நம்மிடமிருந்து அகல, நாம் அதன் நடையை மறக்க ஒரு காலஇடைவெளி விடவேண்டும். நம் கையிலிருக்கும் அந்த மொழியாக்கப் பிரதியிலிருந்து சற்று சுதந்திரமாக, நம் நடையில், நம்மில்கிளரும் உணர்ச்சிகளுடன் ஓர் இலக்கியப்பிரதியை நாமே ‘படைக்கவேண்டும்’ அதுவே மெய்யான மொழியாக்கம். அந்த மறுஆக்கம் நிகழாதபோது மொழிபெயர்ப்பாளனின் அகமொழி அப்படைப்பில் வெளிப்படாது. உரைநடை உள்ளொழுங்கு சிதறியதாக அமையும். அதை வாசிக்கமுடியாது

நான் சொல்வது உண்மையான மொழியாக்க முயற்சிகளைப் பற்றி. திறனற்ற, பயிற்சி அற்ற, எந்த அக்கறையும் இல்லாத மொழியாக்கங்கள் இங்கு வந்து குவிகின்றன.  “Well, now I am on my way sir!” என்பதை “நல்லது இப்போது நான் என் பாதையில் உள்ளேன் ஐயா!” என மொழியாக்கம் செய்பவர்களைப்பற்றி அல்ல. எந்த மொழியாக்கமாக இருந்தாலும் அதை வாங்கி புரட்டி ஏதேனும் இரண்டுபக்கத்தை படித்துப்பாருங்கள். இயல்பான ஓட்டம் இருந்தால் மட்டும் வாங்குங்கள். நான் ஏமாந்த புத்தகங்களின் ஒரு பட்டியலை போடலாம்தான், தொலைபேசி அட்டவணைபோலிருக்கும்.

மொழிபெயர்ப்பாளனின் பாவங்கள். பாரீஸ் ரிவியூ

முந்தைய கட்டுரைஎஸ்.ரா. – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25