யானை கடிதங்கள் – 3

elephant-and-child-on-yellow-caroline-sainis

யானை – புதிய சிறுகதை

அன்புள்ள ஜெ

யானை மிகநுட்பமான கதை. அனந்தன் என்றால் ஆதிசேஷன். ஆயிரம் நாக்கு கொண்டவன். அப்படிப்பட்ட அனந்தன் யானையைக் கண்டு அஞ்சுவதுதான் கதை. அவன் அந்த கதைமுழுக்க தனக்கென ஒரு கதையுலகத்தை வைத்திருக்கிறான். பல நுட்பமான கதைகளைச் சொல்கிறான். அந்தக்கதைகள், அவன் கேட்கும் கேள்விகள் எல்லாமே அவனுடைய மனதுக்குள் செல்வதற்கான வழிகள்

அவன் சவரம் செய்ய விரும்புகிறான். எப்படியாவது வளர்ந்து குழந்தைப்பருவத்தை கடக்க நினைக்கிறான். ஞாயிற்றுக்கிழமையாகவே தினமும் இருக்காதா என நினைக்கிறான். அவனுக்கு காலம் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. கரடியின் வயிற்றில் மீன் நீந்துவது கூட உளவியல் ரீதியான ஆய்வுக்குரியதுதான். இந்தமாதிரியான குழந்தைகள் வயிற்றுக்குள் இருப்பதைப்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லும். என் மாணவி ஒருத்தி எப்போதுமே குழந்தையை வரைந்தால் சுற்றி ஒரு வட்டம்போட்டுவைப்பாள். அது ஒரு கருவறைதிரும்பும் ஆசைதான்.

அனந்தன் சொல்லும் கதைகளை எல்லாம் இப்படி பலவாறாக ஆராய்ந்துகொண்டே இருந்தேன். அவன் குதிரைக்கு ஏராளமான கால்கள் வைக்கிறான். புல்டோசர் போல குதிரை ஓடும் என நினைக்கிறான். இத்தகைய குழந்தைகள் கற்பனாசக்தியும் டெக்னிக்கல் திறனும் கொண்டவையாக இருக்கலாம். படங்களை நிறைய வரையலாம். ஆனால் அது மட்டும் அல்ல. அவன் யானையிடமிருந்து தப்பத்தான் குதிரையை வரைகிறான். கடைசியில் அவன் சொல்லும் ஒரு குப்பைமேடுக்குமேல் ஏறிச்செல்லும் கதையும் குதிரையின் கால்களுடன் தொடர்புடையதுதான்

நுணுக்கமாக அனந்தனின் உலகத்தைக் காட்டுகிறது இந்தக்கதை. அவன் அம்மா பெரிய வலியும் துயரமும் கொண்டு மெல்லமெல்ல அதற்குள் நுழைகிறாள். அவள் உடைந்து சிதைந்துதான் அப்படி குழந்தையின் உலகுக்குள் நுழைய முடியும். மகன் வாழும் அந்தத் தனியுகுக்குள் அவள் நுழைந்தபோது கதைகூர்மையாக முடிவடைகிறது

நான் நண்பர்களுக்கெல்லாம் இணைப்பு அனுப்பினேன். நீங்கள் எழுதிய கதைகளில் கரடிக்குப்பின் நான் மிகமிக விரும்பும் கதை இதுதான்

கதிர் ஆறுமுகம்

அன்புள்ள ஜெ

யானை கதையில் இரண்டு படிமங்கள் என்னை மிகவும் பாதித்தன. சாதனா அந்த வீடு பலூன் போல அந்தரத்தில் நிற்பதாகவும் நூலேணிபோல லிஃப்ட் என்றும் நினைக்கிறாள். மண்ணுக்குள் நிற்பதை கனவுகாண்கிறாள். அனந்தன் அந்த வீடு ஃபேன்சுழற்சியில் ஹெலிகாப்டர் போல ஏன் பறக்கவில்லை என்று கேட்கிறான். இரண்டுமே ஒரே அனுபவத்தை இரண்டு வகையிலே சொல்வதுதான்

நான் மும்பையில் 12 ஆவது மாடியில் குடியிருந்தேன். கொடுமையான அனுபவம் அது. நாம் மண்ணில் இல்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கும். பக்கத்துவீட்டுடன்கூட உறவே இருக்காது.அந்தரத்தில் மிதந்துகொண்டிருப்பது என்பது லிட்டரலாகவே அனுபவமாக இருக்கும். இன்றைய நடுத்தரவர்க்கத்தை அந்தரத்திலே மிதக்கும் வற்கம் என்று சரியாகவே சொல்லிவிடலாம். எல்லா மனச்சிக்கல்களும் அந்த மிதக்கும் தன்மையிலிருந்தே வருகின்றன. மரத்துக்கு மட்டும் அல்ல மனிதர்களுக்கும் வேரும் வேரடிமண்ணும் தேவைதானே?

எஸ். சந்தானம்

அன்பு ஜெயமோகன்,

உங்களுக்கும் யானைக்குமான உறவு எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. யானை கதையின் அனந்தன் நீங்களாகவும், அவன் அம்மாவாக நாங்களும் மாறிய விசித்திரம் கதையை முடிக்கும்போது நிகழ்ந்திருந்தது. கருப்பும் வெள்ளையுமாய் சில யானைகள் அன்றிரவு கனவில் வந்து விடுமோ எனும்படியாய் ஒரு திகைப்பு. அத்திகைப்பில் ஒரு மழலையின் குதூகலம்.

கரிய காட்டின் அடர் இருளில் நடந்து கொண்டிருக்கும்போது சிறு வெளிச்சத்துணுக்கு கண்ணருகே மின்னிய கணத்தை யானை சித்திரமாக்கி இருந்தது. சிறுவர்களின் உலகும், பெரியவர்களின் உலகும் முரண்பட்டு இணங்கும் அல்லது இணங்கி முரண்படும் புள்ளியில் யானைதுவங்குகிறது; அப்புள்ளியிலேயே நிறைவும் அடைகிறது.

வெகுநிச்சயமாய் பால்யத்தை ஒருவரால் உதறிவிடவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், பால்ய உலகின் நினைவுகளாலேயே நாம் ஈரமாய் இருக்கிறோம். புற உலகின் கொக்கிகளில் மனத்தசை அறுபட்டுக் குருதி கசியும் பொழுதுகளில் பால்ய உலகின் பூ வாசனையே ஒத்தடமாய் இருக்கிறது. பால்யத்தை நினைவூட்டிக் கொண்டேதான் நடுத்தர மற்றும் முதுமைப் பருவங்களை எதிர்கொள்கிறோம். நடுத்தர(முதுமையும்தான்) வயதைப் போன்று பால்யத்திலும் இருமை இருக்கிறது; எனினும், அதில் போலித்தனம் மற்றும் பாசாங்கு இல்லை. பெருந்தீ பரவி வரும் அனல்பாதையில் ஒரு மழலை தனக்கான கடவுளை(நம்பும் பட்சத்தில்) எவ்விதச் சந்தேகமும் இன்றி எதிர்பார்த்துக் காத்திருக்கும். கோவில்களில் வழிபாட்டு நேரத்தில் கூட கடவுள் மீது நமக்கு அதிகப்படி சந்தேகமே இருக்கும்.

மழலையின் உலகில் எதுவும் அதன் ’பொது இயல்பில்’ இருப்பதில்லை; அம்மழலை விரும்பும் ’இயல்பில்’ இருக்கிறது. அதன்பொருட்டு அம்மழலை கொண்டாட்டத்துடன் இருக்கிறது. அதன் உலகை மறுப்பவர்களை அம்மழலை ஏற்பதே இல்லை.  பெரியவர்களான நமக்கோ அனைத்தும் ‘பொது இயல்பிலேயே’ இருக்கின்றன. அதனால் சலிப்பும், சோர்வும் நம்மை ஆட்கொண்டு விடுகிறது. நமக்கான ’உலகம்’ நினைவுக்கு வந்தாலும் அதைத் திடும்மென ஒதுக்கி விடுகிறோம்.

அனந்தனுக்கு அவன் உலகைத் தவிர வேறொன்றில்லை. அவன் உலகிற்கான வடிவில் அல்லது இயல்பில் அவன் பள்ளி இல்லாததால், அங்கு செல்ல மறுக்கிறான். அல்லது பள்ளியின் உலகம் அனந்தனின் சொந்த உலகத்தை உதறிவிட வற்புறுத்துகிறது. அனந்தனால் அப்படி இருந்துவிட முடியவில்லை. ‘பொது இயல்பில்’ இருக்கும் அனந்தனை பள்ளி விரும்ப, ‘தன் இயல்பிலேயே’ தன்னை அனுமதிக்கும் பள்ளியை அனந்தன் விரும்பி இருக்கக் கூடும்.

சாதனாவும் தனக்கான உலகை விரும்புகிறாள். அப்படி அவள் விரும்பும் உலகு ‘தன் இயல்பு’ கொண்டதுதான். எனினும், அவ்வியல்பில் அவளால் பொருந்த முடியவில்லை; தவிக்கிறாள். அனந்தனின் ’தன் இயல்பு’ அறிவுத் தாக்கம் இல்லாதது. அவன் அம்மா சாதனாவின் ‘தன் இயல்போ’ அறிவு முதிர்ச்சி கொண்டது. அறிவு அலைக்கழித்துக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. முதலில் இது சரி என்று சொல்லும்; பிறகு அதையே தவறு என்று சுட்டும். அறிவை அதிகம் சார்ந்திருக்கும் ஒருவர் நிம்மதியுடன் இருப்பதென்பது சாத்தியமே இல்லை. சாதனாவின் துயரங்களுக்கும், சலிப்புக்கும் அவள் அறிவே காரணம். இவ்வறிவையே சைவ சித்தாந்தம் ஆணவம்என்று குறிப்பிடுகிறது.

ஆணவம் என்றதும் அதை கர்வம் எனும் பதத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடாது.விரும்பும் விளைவுக்காக மட்டுமே செயலைச் செய்வது எனும் மனநிலையே ஆணவம். காட்டாக ஒன்றைச் சொல்லலாம். நடப்பதால் நோய் குறையும் என்பதற்காக நடப்பதையே ஆணவம் எனலாம்; அதாவது, நோய் குறைய மட்டுமே நடப்பது; நடப்பதற்காக நடப்பது அல்ல. அதுவே நம் துன்பங்களுக்குக் காரணமாய் அமைகிறது. ஒரு மழலையிடம் ஆணவம் இல்லை. அதன் உலகம் ஒரு குறிப்பிட்ட பயன் கருதி உருவாக்கப்பட்டது அன்று. எவ்விதப் பயனையும் எதிர்பார்த்து அவ்வுலகை அம்மழலை ஏற்கவில்லை; அதன் உலகில் இருக்கும்போதே அம்மழலை ஆனந்தமாக இருக்கிறது. ஆனந்தத்தை மட்டுமே மழலை விரும்புகிறது; நாமோ மகிழ்ச்சியையே நாடுகிறோம்.

ஆனந்தத்திற்கு நிபந்தனைகள் கிடையாது. காரணத்துடனான குதூகலமே மகிழ்ச்சி(ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி துன்பமாகத் தோன்றி விடும்); காரணமற்ற கொண்டாட்டமே ஆனந்தம்(ஆனந்தம் ஒரு போதும் தன்நிலையில் மாறிடாது). சமயத்தளத்தில் ஆனந்தமே முக்தியாகச் சொல்லப்படுகிறது. சிவனின் நடனமும், கண்ணனின் புல்லாங்குழலும் ஆனந்தத்தின் குறியீடுகள். சிவனின் தொழில் நடனம் அன்று; அவனின் இயல்பே நடனம். கண்ணனின் தொழில் இசை அன்று; அவனின் இயல்பே இசை. நமக்கு எதுவாய் இருந்தாலும் அது தொழில்தான். தொழிலில் பயன்கருதிச் செய்யும் மனப்பாங்கே முக்கியம்; தொழில் முக்கியம் இல்லை. ஆகவே, பெரியவர்களான நாம் அலைக்கழிகிறோம்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்கும் மேல் அறிவை உதறிவிட்டு தனிமையில் ‘தன் இயல்பில்’ ஆனந்தமாய் வாழ்ந்து விட முடியாது; எவ்வளவு முயற்சித்தாலும் அது முற்றிலும் வீண். ஒரு மழலைக்கு மட்டுமே முழுக்கச் சாத்தியமான ஒன்று அது. நமக்கு இருக்கும் வாய்ப்பு ஒன்றே ஒன்றுதான். அவ்வுலகத்துக்குள் நாமும் நுழைந்து விட வேண்டும். இறுதியில், சாதனா அதைத்தான் செய்கிறாள். நடனத்தையும், குழலிசையையும் தொழில்களாகவே பார்க்கப் பழகி இருக்கிறோம். இந்த அசட்டுத்தனத்தைப் புரிந்து கொண்டாலே ஓரளவு தெளிந்து விடலாம்.

கதையின் துவக்கத்தில் அனந்தன் சுட்டுவது கருப்பு யானையை; இறுதியில் அவன் சுட்டுவது வெள்ளை யானையை. சாதனாவின் கருப்பு யானையே வெள்ளை யானையாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21
அடுத்த கட்டுரைஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2