அஞ்சலி:பிரபஞ்சன்

pra

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

மூத்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று [21-12-2018] மறைந்தார். பாண்டிச்சேரியின் கதையாசிரியர். முறையான தமிழ்க்கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழவேண்டும் என்ற  விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதிவாழவேண்டும் என்னும் நிலை அவரை இதழாளர்தான் ஆக்கியது. இதழாளர் அல்லாமலிருந்தால் அவர் மேலும் எழுதியிருக்கக்கூடும்

 

யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன். ஆனால் இன்று ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப்பங்களிப்பு பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ என்னும் இரு நாவல்கள்தான்.

 

வரலாற்றுநாவல் என்பதை நாம் வரலாற்றுக்கற்பனை நாவலாகவே உருவகித்திருந்தோம்.[ Historical romance] கற்பனையற்ற, [ அதாவது கட்டமைப்பையும் தொடர்ச்சியையும் உருவாக்குவதற்காக மட்டுமே கற்பனையைக் கையாண்ட] வரலாற்று ஆக்கம் என மானுடம் வெல்லும் நாவலைச் சொல்லலாம். அவ்வகையில் தமிழில் அதுவே முதல் படைப்பு.

 

மானுடம் வெல்லும் வரலாற்றின் இயல்பான ஆதிக்கப்பரிணாமத்தை அதிலுள்ள குரூரத்தை ஒட்டுமொத்தமான பொருளின்மையை கற்பனையால் மிகையாக்காமல் அப்படியே சொல்ல முற்பட்ட ஆக்கம். சமகால வரலாற்றுச் சித்திரம் என்பதனால் அது இயன்றது. பண்டைய வரலாற்றை அப்படி எழுதுவதற்கான வரலாற்றுச் சான்றுகள் நமக்கு இல்லை. ஆனந்தரங்கம்பிள்ளையின் தினப்படிச் சேதிக்குறிப்பு அத்தகைய வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்க பிரபஞ்சனுக்கு உதவியது

 

இன்னொருவகையிலும் பிரபஞ்சனின் அந்நாவல் முக்கியமானது. எழுதப்பட்டதை திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ எழுத்துமுறை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் மறு ஆக்கம் மானுடம் வெல்லும். கதையாடலின் மறுகதையாடல். அதனூடாக வரலாறு எப்படி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்னும் பார்வையை வாசகன் அடையமுடியும்

 

மானுடம் வெல்லும் நாவல் வெளிவந்தபோது 1990ல் அதற்கு முதல் விமர்சனக்கூட்டத்தை தர்மபுரியில் நான் நண்பர்கள் மொரப்பூர் தங்கமணி போன்றவர்களுடன் இணைந்து நடத்தினேன். பிரபஞ்சன் அதில் கலந்துகொண்டார். தன் நாவலுக்கு நடத்தப்பட்ட முதல்கூட்டம் என அப்போது பிரபஞ்சன் கூறினார். நான் தமிழகத்தில் ஒருங்கிணைத்த முதல் இலக்கியக்கூட்டமும் அதுதான்.

 

வானம் வசப்படும் மானுடம் வெல்லும் நாவலின் தொடர்ச்சி. ஆனால் தினமணி கதிர் வார இதழில் அந்நாவல் திடீரென நிறுத்தப்பட்டமையால் அது முழுமையாக வடிவம் கொள்ளவில்லை. அதை முழுமையாக்கி எழுத உத்தேசித்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால் அது நிகழவில்லை.  1995ல் வானம் வசப்படும் நாவலுக்காக பிரபஞ்சன் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

 

பிரபஞ்சனுடன் எப்போதும் நல்லுறவு இருந்தது. சென்னை செல்லும்போது பீட்டர்ஸ் காலனியிலிருந்த அவருடைய இல்லத்திற்கு நண்பர்களுடன் சென்று சந்திப்பதுண்டு. எப்போதுமே நூல்கள் நடுவே ஊதுபத்தி ஏற்றிவைத்து தூய ஆடை அணிந்து அமர்ந்து வாசித்துக்கொண்டிருப்பார் என்பது என் உளச்சித்திரம். அவர் நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்த போது அருகிருந்த விடுதியில் சென்று பார்த்தபோது நோயை பற்றி பேசுவதை தவிர்ப்போம் என்று சொன்னார். கடைசியாகப் பார்த்தது வெண்முரசு நாவல்களுக்கான வெளியீட்டுவிழாவில் அவர் பேசியபோது.

 

தமிழிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் என பிரபஞ்சனைச் சொல்லமுடியும். பிற்காலத்தில் வாழ்வின்பொருட்டு எழுதிய இதழியல் எழுத்துக்களால் இலக்கியம் படைப்பதற்கான உளநிலையை இழந்திருந்தார். மீண்டு வந்து எழுதுவேன் என்பதே எப்போதும் அவர் சொல்லிவந்ததாக இருந்தது

 

பிரபஞ்சனுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎரிகல் ஏரி- கடிதங்கள்.