மதுபால் – கடிதம்

220px-Actor_Madhupal

 

அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்

 

மதுபால் கதைகள் – கடிதங்கள்

இனிய ஜெயம்

 

மதுபால் கதைகள் குறித்து ஸ்ரீநிவாஸ் எனும் வாசகர் எழுதி இருந்த கடிதத்தைமதுபால் கதைகள் – கடிதங்கள்வாசித்தேன். அவரை நகுலன் உடன் இணைத்து புரிந்து கொள்ள முயன்றது சிறப்பே ஆனால்  மதுபால் கதைசொல்லும் விதத்தில் ,வந்து விழும் படிமங்களின் துல்லியத்தில் மட்டுமே நகுலனின் சாயல் உண்டு . மற்றபடி முற்றிலும் நகுலன் சென்று தொடாத ஆழம் மற்றும் தனித்துவமான காட்சிக் கூறுகளும் ,உணர்வுக் கூறுகளும் , கொண்டவை மதுபால் கதைகள் .

 

உதாரணத்துக்கு புலிகள் உறுமும்போது காடு வளர்கிறது சிறுகதையை எடுத்துக்கொள்வோம் , நகுலனை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உள்வாங்குகையில் ஸ்ரீ நிவாஸ் அவர்கள் சொன்ன கூறுகள் தொழில்படுகிறதுதான் .ஆனால்  .அதற்கு வெளியே இந்த சட்டகங்களை உதறிவிட்டு மதுபாலை அணுகினால் , அந்த கதைக்குள் தன்னியல்பாக உருவாகி வந்த ‘சிந்தனை ஓட்டத்தின் ‘ வரிசை முறை ஒன்றும் துலங்கும் . கதையின் முதல் பாதி லிஜிஸ் இன் சிந்தனை ஓட்டம் இயற்கைக்கும் அதை அழிக்கும் மனிதனுக்கும் இடையே ,இந்த கதை தலைப்பை கொண்ட நூலை அடிப்படையாக வைத்து நிகழ்கிறது .

 

மையப்பகுதி அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக சாலையில் வைத்து சமூக மனிதனுக்கும் அதிகாரத்துக்குமான உறவின் சிடுக்குகளுக்குள் நுழைகிறது .இறுதிப்பகுதி நாள் முடிந்து ,மதுவின் தளரவில் எழுந்து பறக்கும் எண்ணங்கள் வழியே ,இந்த சிந்தனை ஓட்டத்தின் தொடர்ச்சி மனிதனுக்கும் தண்டிக்கும் கடவுளுக்குமான உறவுக்குள் நுழைந்து விடை இன்றி அறையின் இருளில் திகைத்து நின்று விடுக்கிறது .

 

நகுலனின் எண்ணச்சிதறல் பாணியில் இருந்து இந்த கதை ‘சிந்தனை ஓட்டம்’ எனும் நிகழ்வுக்குள் வருவது ,புறவயமான ஒரு தொடர் ஓட்டம் ஒன்றின் ,அகவயமான தொடர் எதிர்வினை எனும் நிலையில் நிகழ்வதாலேயே. இந்த தளத்தில் வைத்து அக்கதையின் படிமங்கள் , எண்ண ஓட்டங்கள் இவற்றை மதிப்பிட்டால் இந்தக் கதை  செல்லும்,   பேசும் ஆழம் வியப்பூட்டும் .

 

//எல்லாச் செயல்களுக்கும் தெளிவான நேர்மை இருக்குமெனில் அது உருவாக்கும் ஆற்றலும் உண்மையாக இருக்கும்.//

 

இந்த வரிசையில் வைத்து இந்த கதையில் வரும் இந்த சிந்தனை ஓட்டத்தை பரிசீலித்தால் ,அது இந்த கதைக்குள் நீர் பீச்சி அடித்து விரட்டப்படும் போராட்டக்காரர்கள் துவங்கி [கதைக்கு வெளியே]  ,அணைகளின் வழியே நிகழும் எதிர்மறை விஷயங்களுக்கு எதிராக போராடும் மேத்தா பட்கர் வரை அனைத்தையும் ஒரு வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிடுவதை உணரலாம்

 

.இந்த வரிசையில்தான் இக் கதை முன்வைக்கும் படிமங்களும் , அணையில் கசிவு என்பதை லிஜிஸ் மாலையில் அறிகிறான் .அது உடைந்தால் ? விளைவுகள் என்னவாக இருக்கும் ? அதன் சிறிய வடிவத்தைத்தான் மதியம் நீர் பீச்சப்பட்டு அதில் சிதறி ஓடும் மனிதர்கள் வழியே அறிகிறான் . இதுதான் மதுபால்  நினைவோடை முறை வழியே உருவாக்கும் உணர்வுகளின் ஆழம் .இதன்  சிறிய அளவு சாத்தியத்தை கூட நகுலன் கதைகள் எதுவும்  எட்டியதில்லை.

 

உணர்வுத் தீவிரம்  என எடுத்துக்கொண்டால் கூட  மதுபால் உருவாக்கும் தருணங்கள் மிகுந்த பதட்டம் தருவன .அண்டைவீட்டார் வேகும் மணம் கதையில் எப்போதும் .தோழர்கள் புழங்கித் திரியும் வீட்டில் தனக்கான  தனிமையே கிடைக்காத ஒரு  அம்மா .அந்த அம்மாவுக்கு தனிமை கிடைக்கிறது அது எப்படிப்பட்ட தனிமை ? கருத்துத் தெரியாத ,மழலை மாறாத பிள்ளை எழுந்து தாயை கடந்து செல்கிறது . எழவோ ,உதவி கேட்டு குரல் எழுப்பவோ இயலாத தாய் வெறுமனே பார்த்துக்கொண்டு கிடக்கிறாள் ,செயலாற்ற இயலாத உடலிலிருந்து அந்த குழந்தையை தாவி அணைக்கும் வண்ணம் பதட்டம் கொண்டு பின்தொடரும் அவளது  எண்ணங்கள் .இந்த கையறு நிலையின் பதட்ட உணர்வை ,துல்லியமாக வாசகனுக்கு கடத்தி அவனை பதற வைப்பதில் ,பெரும் பங்கு அந்த எழுந்து பறக்கும் எண்ணங்கள் எனும்’ வடிவ’ வெளிப்பாட்டில்தான் இருக்கிறது .இத்தகு சாரம் எதுவும் நகுலனின்  நனவோடை வெளிப்பாட்டில் கிடையாது .

 

நாடகீயம் என கொண்டாலும் மதுபால் மிகுந்த தனித்தன்மை கொண்டவராகவே இருக்கிறார் .ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி கதையை எடுத்துக் கொள்வோம் .தலைப்பிலேயே பதட்டம் துவங்கி விடுகிறது . ஓடும் பேருந்தில் ஏற,நிகழ்த்தும் சாகசத்தை விட ஓடும் ரயிலில் ஏற நிகழ்த்த வேண்டிய சாகசம் ,மிகுந்த ஆபத்து கொண்டது . அடிப்படை சிக்கல் அதன் படிக்கட்டு .பேருந்தின் படிக்கட்டு நார்ப்பத்திஐந்து பாகையில் சரிந்து ஏறும்.கூடவே பிடித்து ஏற அதன் கைப்பிடியும் அதே கோணத்தில் இருக்கும் .ரயிலின் படி முற்றிலும் கேணைத்தனமாக தொண்ணூறு பாகையில் நட்டுக்குத்தலாக நிற்கும் . கைப்பிடியும் அவ்வாறே . அகவே நிற்கும் தொடர் வண்டியில் ஏறுவதே சிறிய அளவு  சாகசமாக மாறி விடுகிறது .இங்கே ஓடும் வண்டி ,அதிலும் ஓடி வந்து ஏறத்தவிப்பவள் கையில் குழந்தை கொண்ட ஒரு பெண் . எடுப்பார் கைப்பிள்ளை எனும் தேய்வழக்கு இந்த கதைக்குள் எத்தனை பதட்டம் மிக்கதாக மாறி விடுகிறது . குழந்தையை தொலைத்து அதை மீட்கும் வரை பெற்றோருக்கு இருக்கும் பதட்டம் அளவே , சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தையை விபத்தாக பெற நேர்ந்த ஆளும் பட வேண்டும் .அந்த பதட்டத்தை அதன் தீவிரத்தை தலைப்பில் வைத்தே துவங்கி விடுகிறது இந்தக் கதை .

 

நகுலன் அள்ளித்தெளித்து உருவாக்கும் கொலாஜில் ஏதேனும் எழுந்து வந்தால் உண்டு ,வராவிட்டால் ஒன்றும் செய்வதற்க்கு இல்லை . மாறாக மதுபால் பாணி நேரெதிரானது ,’குறிப்பிட்ட ஒன்று’ ‘எழுந்து வரவேண்டும் ‘ என்பதற்காக மதுபால் ‘தேர்ந்து கொண்ட ‘பாணி அவர் முன்வைக்கும் கொலாஜ்.   உதாரணமாக  இலைகள் பச்சை நிறம் ,பூக்கள் வெள்ளை நிறம் கதையில் வரும் முதல் படிமம் என்ன ?

 

// முதன்முதலாக ஒரு ஆவாட்டை சேர்ந்தவன் போட்- ஹவுஸில்  செத்துக்கிடப்பதை ஊர்காரர்கள் பார்த்தார்கள். தலை முழுவதும் மட்டைத்தேங்காயை உரித்துப்போட்டது போல இருந்ததால் முகத்தை வைத்து யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.//

 

எத்தனை கொடூரமான படிமம் . கதையின் இறுதிப் படிமத்துக்கு வருவோம்

 

//மனிதனின் துக்கங்களை அறியும் தெய்வங்கள் அனைத்தும் கருவறைப் படியிறங்கி  ஜானுவின் முன்னில் வந்தன. அவைகளின் பிரகாசமான முகம் கண்டு அவற்றின் காலடிகளில் இரண்டு குவளைமலர் மாலைகளை வைத்தாள்.//

 

எத்தனை அழகிய படிமம் .

 

உரித்த தேங்காய் போல தசைகளை இழந்த முகத்திருந்து , வாசம் கொண்ட வெண் குவளை மலர்களில் வந்து சேரும் படிமங்கள் வழியாகவே நிகழும் ஒரு உணர்வுப்  பயணத்தை இந்த கதை வழியே மேற்கொள்ள இயலும் .  இது போன்ற எது ஒன்றும் நகுலன் கதைகளுக்குள் நிகழ்ந்ததே இல்லை .

 

மதுபால் வேறு ஜானர். இவர் இதுவரை தமிழுக்கு வராமால் இருந்தது ஏனோ தெரியவில்லை .விஷ்ணுபுரம் வழியே இவர் தமிழுக்கு வருவது பெருமிதமாக இருக்கிறது . மூத்த மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா அவர்களுக்கும் ,இளையவர் அழகிய மணவாளனுக்கும் எனது அன்பு .

 

கடலூர் சீனு

 

சிறுகதை: இலைகள் பச்சைநிறம்; பூக்கள் வெள்ளைநிறம்- மதுபால்

தெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்

புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

 

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

முந்தைய கட்டுரைசிறுகதை: இலைகள் பச்சைநிறம்; பூக்கள் வெள்ளைநிறம்- மதுபால்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விழா விருந்தினர்கள் -கடிதங்கள்