விஷ்ணுபுரம் விழா :எழுத்தாளர் சந்திப்புகள்

vish

லீனா மணிமேகலை

2010ல் விஷ்ணுபுரம் விழா வெறுமே பரிசளிப்பு விழாவாகத்தான் தொடங்கியது. அதைத் தொடர்ந்து முந்தையநாள் சந்திப்புகள் இயல்பாகவே ஒருங்கமைந்தன. பரிசுபெறுபவருடனான சந்திப்பும் விருதளிக்க வருபவர்களுடனான சந்திப்பும் முக்கியமாக அமைந்தன. பின்னர் பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களும் வாசகர்களுடன் உரையாடும் அரங்காக இது மாறியது

சென்ற காலங்களில் நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், கே.என்.செந்தில்,சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன், பாரதிமணி, இசை, வெயில், வேதசகாயகுமார், ஞானி,முருகவேள், ஜோ டி குரூஸ், லட்சுமி மணிவண்ணன், போகன் சங்கர், ஆர்.அபிலாஷ் என பல தளங்களில் செயல்படும் எழுத்தாளர்கள் இந்த சந்திப்புகளில் வாசகர்களுடன் உரையாடியிருக்கிறார்கள் சென்ற முறை இளம்எழுத்தாளர்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டது. விஷால்ராஜா, தூயன், சுரேஷ்பிரதீப்,  கே.ஜே.அசோக் குமார் போன்றவர்கள் பங்கெடுத்தார்கள்.

முன்பு எண்பதுகளில் இத்தகைய அரங்குகள் நிறையவே நடந்தன. பின்னர் மெல்ல அவை இல்லாமலாயின. இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் வெளியை சரியாகப் பயன்படுத்தாதவர்கள் அதை இல்லாமலாக்கினர். அதை அரசியல் சர்ச்சைகள் தனிப்பட்ட பூசல்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள் பலர். கருத்துக்கள் மூலம் அரங்கில் இருப்பறிவிக்க இயலாதவர்கள் வெறுமே கூச்சலிட்டு தன்னை நிறுவிக்கொள்ள எத்தனித்தனர். விளைவாக இழப்பு தீவிர இலக்கியத்திற்கும் அதில் நம்பிக்கை கொண்ட வாசகர்களுக்கும்தான்.

எழுத்தாளர்களுக்கு தங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிவது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. தங்கள் எழுத்து வாசிக்கப்படுகிறதென்பதே அவர்களைப்பொறுத்தவரை ஒரு நம்பிக்கையூட்டும் அம்சம். வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளனின் தனியாளுமையை அருகே அறிமுகம் செய்துகொள்வது முக்கியமானது. அதன்பின் அவ்வெழுத்தாளனின் முகம் அவன் எழுத்துக்களின் பின்புலமாக என்றுமிருக்கும்.

எழுத்தாளனின் முகத்தைப் புனைந்துகொள்ளாமல் வாசிக்க முடியாது. அப்புனைவு இந்த நேர்ச்சந்திப்புகள் வழியாக உண்மைக்கு அணுக்கமானதாக ஆகிறது. ஆகவேதான் மேலைநாடுகளில் நூலாசிரியர் – வாசகர் சந்திப்புகள் தொடர்ச்சியாக ஏற்பாடுசெய்யப்படுகின்றன. கதைவாசிப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பெருங்கட்டணம் செலுத்தி வாசகர்கள் அதில் பங்கெடுக்கிறார்கள்.

தமிழில் இப்போது இந்த ஒரே ஒரு அரங்கே வாசகர் -எழுத்தாளர் நேரடி உரையாடலாக உள்ளது. இதை முழுமையாக வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவேதான் பங்கெடுப்பவர்கள் பற்றிய அறிவிப்பு இரண்டுமாதம் முன்னரே அளிக்கப்பட்டது. அவர்களின் படைப்புகளுக்கும் தளங்களுக்கும் சுட்டிகள் கொடுக்கப்பட்டன. அவர்களை வாசித்துவிட்டு வந்து விவாதிப்பது முக்கியமானது

விஷ்ணுபுரம் அரங்கின் வழக்கம்போல தெளிவான மட்டுறுத்தலுடன்தான் இந்த சந்திப்பும் நிகழும். இது எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியே ஒழிய தனிப்பட்ட சொல்லாடலுக்கானது அல்ல. பேசவந்து மேடையில் அமர்ந்துள்ள எழுத்தாளர்களே முதன்மையாக பேசவேண்டும். பிறர் வினாக்களை முன்வைத்து அவ்வெழுத்தாளர்களின் தரப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

எழுத்தாளர் சந்திப்பு [ meet the author ] கருத்தரங்கு [conference]  விவாத அரங்கு [symposium]  ஆகியவை ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட விதிகள் கொண்டவை. பொதுவாக சந்திப்புகளே குறைவான சூழலில் இங்கே அவைகுறித்த தெளிவுகள் இல்லை. ஆகவே அவற்றை வரையறைசெய்து சொல்லவேண்டியிருக்கிறது

எழுத்தாளர்சந்திப்பு என்பது  அந்த எழுத்தாளரின் எழுத்தாளுமையை வாசகர்முன் வைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அந்த எழுத்தாளர் மீதான மதிப்பில் இருந்தே அது தொடங்குகிறது. எழுத்தாளரின் படைப்புலகை ,ஆளுமையை பலகோணங்களிலான கேள்விகள் வழியாக வெளிப்படுத்துவதே அதன் செயல்முறை. விஷ்ணுபுரம் விருதுவிழாவில் முதல்நாள் நிகழ்வது எழுத்தாளர்சந்திப்புதான்

கருத்தரங்கு என்பது பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்குரிய களம், அரங்கிலுள்ளவர்கள் அதை கேட்பதற்கும் ஐயங்களை தெளிவுபடுத்திக்கொள்வதற்கும் மட்டுமே உரிமைகொண்டவர்கள். அனைவருக்கும் அங்கே பேச உரிமை இல்லை

விவாத அரங்கு இணையான வாசிப்பும் சிந்தனையும் உடையவர்கள் ஒருங்கமைந்து ஒட்டியும் வெட்டியும் விவாதிப்பதற்கான களம். அங்கே எல்லாவகையான கடும் விமர்சனங்களும், நட்பின் எல்லை மீறாமல், அவைமுறைமையின் நெறிகளுக்குள் நின்று முன்வைக்கப்படலாம். நாங்கள் ஊட்டியில் நடத்துவது விவாத அரங்கு.

இந்த  எழுத்தாளர்சந்திப்பு அரங்கு இலக்கியத்தின் ஒட்டுமொத்தமான சித்திரத்தை வாசகர்களுக்கு உருவாக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே எல்லாவகையான இலக்கிய எழுத்துக்களுக்கும், எல்லாவகையான கருத்தியல்களுக்கும் இடமளிக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். சென்ற ஆண்டுகளில் விஷ்ணுபுரம் அமைப்பையே நிராகரிக்கும் முருகவேள் போன்ற இடதுசாரிகள்கூட இங்கே பேசியிருக்கிறார்கள்.

எங்கள் அளவுகோல் நல்ல இலக்கியம் என்னும் இயக்கத்தில் நம்பிக்கை கொண்ட, தன் வழியில் இலக்கியச்செயல்பாட்டில் ஈடுபடுகிற, எவ்வகையிலேலும் குறிப்பிடத்தக்க சில ஆக்கங்களை எழுதிய ஓர் எழுத்தாளரை அழைப்பது என்பதே. இளம் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை தங்கள் எழுத்தினூடாக இலக்கியப்படைப்பாளியாக எழுவார் என்னும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறாரா என்பது மட்டுமே.

இந்த அரங்கில் அவ்வெழுத்தாளர்களை வாசகர்கள் முன் வைக்கிறோம். அவர்களை வாசிக்க விவாதிக்க ஓர் அழைப்பை எழுப்புகிறோம். விமர்சனரீதியாக அணுகி ஏற்பையும் மறுப்பையும் கொள்ளும் பொறுப்பு வாசகர்களுக்குரியது.

இந்த எழுத்தாளர் சந்திப்பு நம் சூழலில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்து ஆளுமைகளையும் நாம் அணுகியறிய உதவட்டும். அவர்களின் இலக்கியம்சார்ந்து மட்டுமே விவாதங்கள் அமையட்டும்.

 

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

devi

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

 

leenaவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

sen

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

 

sarava

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

sunil

விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்

kalai

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி

CSK

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்

naran

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்

 

sam

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்

முந்தைய கட்டுரைவங்கத்தின் பெண்குரல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்