விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்

sunil

2017 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார்  விருதை வென்றதன் வழியாக பரவலாக அறியப்பட்டவர் சுனீல் கிருஷ்ணன். அவருடைய அம்புப்படுக்கை என்னும் சிறுகதைத் தொகுதி இன்று பரவலாக வாசிக்கப்படுகிறது. பதாகை இணைய இதழின் ஆசிரியர்குழுவில் இருக்கிறார். இளம் படைப்பா ளிகளைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் அவர்களின் நேர்காணல்களும் அடங்கிய தொகுதி வெளிவரவிருக்கிறது

 

பலவகையிலும் சுனீல் கிருஷ்ணன் அவருடைய சமகாலப் படைப்பாளிகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறார். இத்தகைய முழுமையான தனித்தன்மைகளே படைப்பாளிகளை உருவாக்குகின்றன. இத்தகைய தனித்தன்மைகள் முதல் எதிர்மறையாகவே பார்க்கப்படும். சூழலில் இருந்து பிறரைப்போல் ஆவதற்கான அழுத்தம் இருக்கும். அதைக்கடந்து தன் நிலையை உறுதிசெய்துகொண்டபின் அந்த தனித்தன்மையே கருத்துலகில் அவருக்கான இடமாக ஆகிவிடும்

 

சுனீல் கிருஷ்ணனின் தனித்தன்மை அவருடைய வாழ்க்கைப்பார்வை பிற இளம் எழுத்தாளர்களின் பொதுவான வாழ்க்கைப்பார்வையுடன் எந்த ஒற்றுமையும் கொண்டதல்ல என்பதுதான். தமிழின் இளம்படைப்பாளிகளின் பொதுவான கருத்தியல்நிலைபாடுகள் சில உண்டு. அவற்றை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்.

am

அ. மரபு எதிர்ப்பு. அதிலிருந்து எழும் அமைப்பு எதிர்ப்பு. அனைத்துவகையான நிலைக்கோள்களையும் ஐயப்படுதல், மறுத்தல். இதை கலகம் என்றோ புரட்சி என்றோ தன் தனித்தன்மையை தேடுதல் என்றோ தன் பதில்களை தானே கண்டடைதல் என்றோ அவர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் அத்தனைபேரும் ஒன்றுபோலவே இருப்பதனால் உண்மையில் அது தனித்தன்மையே அல்ல. உளவியல்சார்ந்து நோக்கினால் அது தந்தையை எதிர்த்து, விலகிச்செல்லும் எளிய உயிரியல்பண்பு மட்டுமே.

 

ஆ.மானுட உறவுகளை பாலியல் சார்ந்து முழுமையாகவே அடையாளப்படுத்திக்கொள்ளுதல். பாலுறவு வழியாக உளநிகழ்வுகளை அறியமுயல்தல். அதுவும் இந்த பருவத்தின் பொதுத்தன்மைதான். ஒரு குறிப்பிட்ட வயதுவரை   [புதுமைப்பித்தன் சொல்வதுபோல]  தலைக்குள் ஓர் ஆண்குறிதான் இருக்கும். வேறுவழியே இல்லை.

 

இ. ஒட்டுமொத்தத்தை நோக்குவதற்குப் பதிலாக பகுதிகளில் மிகையாக ஈடுபடுதல். அதற்குக் காரணங்கள் இரண்டு.அவ்வாறு பகுதிகளாக ஈடுபடும்போதே மிகையான உணர்வெழுச்சி சாத்தியம். ஒட்டுமொத்த நோக்கு ஒருவகை அமைவுநிலையை உருவாக்குவது. இளமை அதன் ஆற்றல்காரணமாகவே கொந்தளிப்பை நாடுகிறது. இன்னொன்று, ஒட்டுமொத்த நோக்கை உருவாக்குவதற்கான விரிந்த வாசிப்போ அனுபவ அறிதலோ இல்லாமை

 

இம்மூன்று இயல்புகளுமே இல்லாத இளம்படைப்பாளி என்று சுனீல் கிருஷ்ணனைச் சொல்லலாம். ஆகவே அவருடைய சமகால இளம் வாசகர்கள் அவரிடம் முழுமையாக ஈடுபடவோ ஏற்கவோ வாய்ப்பு குறைவு. மரபை நிதானமான ஆய்வுநோக்குடன் அணுகுவது, வாழ்க்கையின் அனைத்துவகை இக்கட்டுகளையும் நோக்கி ஒரேவகையான ஆர்வத்தை விரிப்பது, கூடுமானவரை முழுமை நோக்கை நோக்கிச் செல்வது சுனீல் கிருஷ்ணனின் இயல்பாக உள்ளது.

 

இக்காரணத்தால் கொந்தளிப்பற்ற, நுண்மையை மட்டும் நாடிச்செல்லும் கதைகளாக அவருடைய படைப்புகள் உள்ளன. அவருடைய பார்வை எப்போதும் முதிர்ச்சிகொண்டதாக இருக்கிறது. அது கலைப்படைப்பாகத் திரளாத சில தருணங்களின்போதுகூட அதன் நிகர்நிலை வியப்புக்குரியதாக உள்ளது. இளைஞரின் மொழியில் கற்றடங்கிய முதியவர் ஒருவரின் பார்வை வெளிப்படுவதாகப் படுகிறது. அதில் சீண்டல்கள் இல்லை. அறைகூவல்களோ கொந்தளிப்புகளோ இல்லை. மருத்துவ ஆய்வுக்குறிப்பு ஒன்றின் உணர்வற்றநிலை அவற்றில் பலசமயம் உள்ளது.

 

சுனீல் கிருஷ்ணன் அவருடைய தனித்தன்மையாலேயே தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக நிலைகொள்வார்

 

 

சுனீல்கிருஷ்ணன் பக்கம்

காந்தி இன்று இணையதளம்

=============================================================================================================

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

devi

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

leena

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

 

sen

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

sarava

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

முந்தைய கட்டுரைகுகை (குறுநாவல்) : 4
அடுத்த கட்டுரைபுயல் -கடிதங்கள்