பதிப்புரிமையும் ராஜாவும்

ilayaraaja

அன்புள்ள ஜெ,

இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு சூழ்ச்சி என்றே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனம்வருந்தச்செய்த நிகழ்வு இது

டி.ராஜ்குமார்

yesu

அன்புள்ள ராஜ்குமார்,

இந்தப்பிரச்சினை சில காலம் முன்பு கேரளத்தில் ஜேசுதாஸ் அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கான உரிமையைக் கோரியபோது தொடங்கியது. அவரை அங்கும் வசைபாடித்தள்ளினார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்லப்பட்டன. அந்தப்பாடல்கள் மலையாளியின் கலாச்சார சொத்து, அதை எப்படி ஜேசுதாஸ் கோரலாம் என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் அந்தச் சிறிய வணிகப்பிரச்சினைக்காக பேசப்பட்ட வசைகளில் உள்ளடக்கமாக இருந்தது மிகப்பெரிய வன்மம். ஜேசுதாஸ் சோர்ந்து பின்வாங்கினார்.

பின்னர், இன்னொரு பிரச்சினையில் ஜேசுதாஸ் கருத்து சொன்னார். பெண்கள் குட்டை ஆடை அணிவதைப்பற்றி. அதற்கு பெண்கள் அமைப்பினர், இணையப்புரட்சிப் பெண்கள் அவரை கீழ்த்தரமாக வசைபாடினர். அப்போதுதான் தெரிந்தது, அந்த வன்மம் வேறு ஆழமான காரணங்கள் கொண்டது என.

இங்கும் அப்படித்தான். ராஜா இன்று தமிழ்ப்பண்பாட்டின் உச்சியில் நின்றிருக்கும் ஓர் ஆளுமை. அவர் ஓரு பண்பாட்டு அடையாளம். ஜேசுதாசும் கேரளத்தின் பண்பாட்டுப் பதாகை. அவர்களின் வாழ்வுப்புலத்திலிருந்து அங்கே வந்துசேர இந்தியாவில் இசை ஒரு முக்கியமான வழி. அமெரிக்காவில் இசையும் விளையாட்டும். அவ்வாறு அவர்கள் வந்துசேரும்போது நம் பண்பாட்டின் ஒரு பெரும்பகுதி அவர்களை பணிகிறது. அப்படி ஒருபகுதி பணிவதனாலேயே இன்னொரு பகுதி உள்ளூர ஆழ்ந்த சீற்றம் கொள்கிறது. ஒரு மனிதனுக்குள்ளேயே இந்த இரு பகுதிகளும் உள்ளன,

அந்த வன்மம் உகந்த தருணம்நோக்கி இருக்கிறது. அவர்களிடம் ஏதேனும் சிறு குறை தென்பட்டால்போதும் கொலைவெறிகொண்டு எழுகிறது. ராஜாவிடமும் ஜேசுதாஸிடமும் ஆளுமை ரீதியாக சிறு குறைகூட சொல்லப்படமுடியாது என அனேகமாக சினிமாக்காரர்கள், அவர்களை அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள். இசை மனிதனை மேம்படுத்தும், விடுதலைசெய்து ஞானியென்றே ஆக்கும் என்பதற்கான சான்றுகள் அவர்கள்.

ஆனால் பெரும்பாலான ’வம்புப்பேச்சுக்களில்’ முதலில் மேலோட்டமாகப் பேசப்படும் பாராட்டுக்களுக்குப் பிற்பாடு பேச்சு நீளும்போது மெல்லமெல்ல ராஜா, ஜேசுதாஸ் இருவரைப்பற்றியும் குறைசொல்லும் வம்புகள் ஒலிக்கக் கேட்கலாம். காரணம் இதுவே. பரவலாக சிலர் ஏற்கும் ஒரு காரணம் கிடைத்தால் போதும் வம்புகளும் வசைகளும் பீரிட்டு எழும். அதில் மறைமுகமாகவோ நேரடியாகவோ சாதி பேசப்படும். ஆனால் அதைவிட கீழ்மைகளில் திளைக்கும் பிறசமூகத்தவரைப்பற்றி நம் சூழல் ஆழ்ந்த அமைதியையே கடைக்கொள்ளும் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நான் அறிந்தவரை ராஜா இசையன்றி எதையும் அறியாதவர். பெருங்கலைஞர்களுக்குரிய அகவயத்தன்மையும், பெருமிதமும். கூடவே இசையெனும் மரபின்முன் பெரும்பணிவும் கொண்டவர். பலசமயம் அவரிடம் சொல்லப்படுவனவற்றை அப்படியே நம்பிவிடுபவர். உலகியலில் பிறரால் எடுத்துச் செல்லப்படக்கூடியவர். அந்தந்த தருணத்து உணர்ச்சிகளில் அடித்துச்செல்லப்படுபவர். உலகியல் மேல், உலகியலாளர் மேல் சட்டென்று எரிச்சல் கொள்பவர்.மிக மிக உள்ளடங்கி இருப்பதனால் புறவுலகுக்கு சற்று பொருந்தாமல்ருப்பவர். ஆனால் பெருங்கலைஞர்கள் அனைவருமே அப்படித்தான் .தனிப்பட்ட முறையில் சிறுமை என ஒன்று அவரை அணுகாது. நம் சிறுமைகளை அவர்மேல் கொட்டி நாம் மிகச்சிறியவர்களாக இருப்பதன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்கிறோம்.

காப்புரிமைப் பிரச்சினைக்கு வருகிறேன். இன்று கேளிக்கை ஒரு பெருந்தொழில். ஒவ்வொன்றும் பெரும்பணம்புழங்கும் தளமாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே அதைப்பற்றிய பொதுப்புரிதல் இன்று தேவையாகிறது. முன்பெல்லாம் இதைப்பற்றிய புரிதல் எவரிடமும் இல்லை. அப்புரிதலை அன்றே கொண்டிருந்தவர்கள் கணிசமான கேளிக்கைக்கலைகளை உரிமைபெற்று இன்று பணம் கொழிக்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்ச்சி இன்று உருவாகி வருகிறது. ஆகவே தொடக்கநிலையில் சில உரிமைப்பூசல்கள் உருவாவது இயல்பே. அவை உரியமுறையில் பேசி முடிவெடுக்கப்படவேண்டியவை.

ராஜா பணவெறி கொண்டவர் அல்ல. இன்று சினிமாவில் இருப்பவர்களில் ராஜாவிடம் பெற்றுக்கொண்டவர்களே மிகுதி. ஒருபைசா வாங்காமல் அவர் இசையமைத்துக்கொடுத்து வாழவைத்தவர்கள் பதினைந்துபேரையாவது எனக்குத்தெரியும். இந்தக் காப்புரிமையையே கூட அவர் இசைக்கலைஞர்களின் அமைப்புக்குத்தான் அளித்திருக்கிறார். நேரடியாகச் சொல்கிறேன், ராஜாவைக் குறைசொல்லும் எவரும் அதற்கான தகுதி கொண்டவர்கள் அல்ல.

கலைப்படைப்பின் படைப்பாளியே அதற்கு உரிமைகொண்டவர். மேலைநாட்டுக் கொள்கைகளின்படி பாடல் அதன் இசையமைப்பாளர் – பாடலாசிரியர் இருவருக்கும் உரியது. இங்கு அந்த உரிமைகள் இன்னும் வரையறை செய்யப்படவில்லை. அவற்றை வரையறை செய்வதே அனைவருக்கும் நல்லது.

ராஜா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா என்று ஒருவர் ஒருமுறை கேட்டார். ஆம், சில பண்பாடுகளுக்கு சிலர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான் என்று நான் சொன்னேன். அந்தத் தன்னடக்கம் அந்தப் பண்பாட்டுக்கு ஒரு முதிர்ச்சியை அளிக்கிறது. குருநிலையில் இருப்பவரை விமர்சனமே இல்லாமல் பணிவதும் மெய்யறிதலின் ஒரு நிலைதான். அதைத்தான் மலையாளிகள் ’குருத்துவம்’ என்கிறார்கள். மனிதர்களுக்கு குருவருள் எவ்வளவு முக்கியமோ அப்படியே சமூகங்களுக்கும் முக்கியம்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைஇமையத்தைக் காணுதல் – சுபஸ்ரீ
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18