நிழல்யுத்தம் -கடிதங்கள்

anitha

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

அன்புள்ள ஜெ.

வணக்கம். முதலில் இந்த கதையை எங்களுக்காக வெளியிட்டதற்கு நன்றி.

மூலக் கதையின் உயிரை அப்படியே உணர வைத்த சா ராம்குமார் அவர்களுக்கு வணக்கங்கள் பல.

மொழி மாற்றம் அசாதாரணமான விழயம். உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ராம்குமார் மிகவும் அருமையாக மொழியாக்கம் செய்து அனிதாவின் எண்ணங்களை எங்களுக்குள் ஊட்டிவிட்டார். இம்மாதிரியான எழுத்தாளர்கள் அதிகம் தேவை.

உங்களின் எழுத்துகளும் இப்படியே உயிருடன் மற்ற மொழியினரை அடைய வேண்டும். என் போன்ற பலரின் விருப்பம்.

கதைக்கு வருவோம்.

உண்மையும் நேர்மையும் உறங்கி விட்டதா? காந்தியின் தேசத்திலா இருக்கிறோம்? வருத்தமாக இருந்தது.

நல்ல தலைவர்கள் தேவை ஜெ. கிடைப்பார்களா? வருவார்களா?

எல்லோருக்கும் நீதியும் அமைதியும் கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கு அரசாங்கம் நல்லதுதானே செய்கிறது? ஏன் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு சமயம் என் வெள்ளைக்கார நண்பரிடம் கேட்ட போது அவர் என்னை திருப்பினார்? எது அவர்களுக்கு நல்லது என்று அவர்களுக்கு தெரியுமா அல்லது அரசாங்கதிற்கு தெரியுமா என்று? அதானே!!  அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்யத்தானே இருக்கிறார்கள்?

இப்போது அரசாங்கம் யாருக்கெல்லாம் சேவை செய்து கொண்டிருக்கிறது?

காந்தி இறந்து விட்டார் ஜெ?

வருத்தமுடன்

மாலா

***

அன்புள்ள ஜெ வணக்கம்,

உங்கள் வடகிழக்கு இந்திய பயணங்களில் எல்லாம் நீங்கள் அவதானித்து பதிவு செய்ததை மீண்டும் ஒருமுறை வாசித்தது போல் இருந்தது இக்கதை.

மொத்தக் கதையுமே திதி தன் மனசாட்சியுடன் செய்து கொள்ளும் யுத்தமும் சமரசமுமே.திதி அழகி, எந்த உறுதியுமற்ற கறார்தன்மை இல்லாத,தன் சுகம் தன் குடும்பம் பற்றி மட்டுமே கவலை கொள்ளும் சராசரி இந்திய உயர் நடுத்தர வர்க்க பெண். திதியின் நியாய உணர்ச்சி மிக மெல்லியது நிழல் போல…

நிலம் சார்ந்த பழங்குடி வாழ்வியலுக்கும் ,தொழிற்சாலை சார்ந்த நகர்மைய வாழ்க்கை முறையும் சந்திக்கும் புள்ளியும் விளைவுகளும் அற்புதமாக கதைக்குள் காட்டப்பட்டுள்ளது.கற்களை, ஈட்டியை, கோடாரியை ஆயுதமாக கொண்டு வரும் மக்கள் நவீன துப்பாக்கிகளோடு காவலர்கள்.

போராட்டத்தின் மெய்யான காரணம் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேரம் படியாமையே, மக்கள் நலனும் இயற்கை நலனும் அல்ல, அரசியல் கட்சியோ, ஏதோ ஒரு பழங்குடி குழுவோதான் இத்தனை உயிர் பலிகளுக்கும் காரணம்.ஊடகங்களின் தேவை பரபரப்பு மாத்திரமே அன்றைய டிஆர்பி தான் இலக்கு மக்களின் தேவையும் அவ்வளவுதானே அதைத்தான் பூர்த்தி செய்கிறார்கள்.

முதல் பக்க செய்தி ,உள் பக்கம் நகர்ந்து, பெட்டிச்செய்தியாய் மாறிகாணாமல் போவதின் சித்திரம் அபாரம்.இப்போது ஸ்டெர்லைட் பற்றி நினைப்பவர் எவர்.இங்கேதான் முன்னெப்போதையும் விட காந்தியம் நமக்கு தேவைப்படுகிறது.ன்முறையற்ற, எதிர்த்தரப்பை மதிக்கிற,  தன்னையும் உயர்த்திக் கொள்ளும், குறைந்தபட்ச இழப்புகளுடனான போராட்டம் மாத்திரமே நல் விளைவுகளை தரவல்லது.

ரித்விக் முதல் வகுப்பில் எம் டெக் ,பி டெக், தேர்ச்சி பெற்றவன் அரசு இயந்திரத்தில் சரியாக பொருந்தும் ஒரு கண்ணியாக இருக்கத்தானே வாய்ப்பு.ஜுலியஸ் தன் தம்பியை பறிகொடுத்த போதும் சில நிமிடங்கள் மழையில் நனைய வைப்பதன் ஊடாக தன் ஆற்றாமையை பூர்த்தி செய்து கொள்கிறான். மீண்டும் அவர்களிடமே வேலைக்கு வருவதைத் தவிர வேறு வாய்ப்பில்லை அவனுக்கு.

திதியின் வாழ்க்கை பிரியாணி ,சுற்றுலா , புது திரைப்படங்கள், நண்பர்கள், கணவருடனான கொஞ்சல்கள் என பழைய உற்ச்சாகத்தோடும், என்றும் அழிக்க இயலாத  ரத்தக்கரையோடும்.

மொழிபெயர்ப்பின் சுவடின்றி நேரடியாக எழுதப்பட்டது போன்ற அற்புதமான மொழிபெயர்ப்பு ராம்குமாருக்கு வாழ்த்துக்கள.

மு.கதிர் முருகன்

கோவை

***

அன்புள்ள ஜெ

நிழல் யுத்தம் நேரடியான சுருக்கமான கதை. அந்த யதார்த்தத்தின் மீது ஒரு சின்ன ஜன்னலைத் திறந்துகாட்டுகிறது. அதற்குள் வாழும் மனிதர்கள் இரண்டுவகை. ஒடுக்குபவர்களின் முகங்களாக முன்னால் நின்றிருக்கும் ஒரு கூட்டம். அவர்கள் படித்தவர்கள், ஆனால் வெறும் ஏவல்கருவிகள். ஒடுக்குபவர்கள் இன்னொருகூட்டம். அவர்கள் வெறும் முகமில்லாத பெருந்திரள். அவர்களுக்கிடையேயான போர் என்பது ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளாத இரண்டு தரப்புகள் நடுவே நிகழ்வதுதான்

அந்தப்போரின் சித்திரத்தை கூர்மையான சித்திரமாக ஆக்கியிருக்கிறார். அழகான மொழியாக்கம்.

செல்வராஜ்

***

அன்புள்ள ஜெ

இந்தக்கதை ஜூலியஸின் கையறுநிலையைப்பற்றியது என நினைக்கிறேன். அவனுக்கு வேறுவழியே இல்லை. அவன் வந்து அங்கே நின்றிருக்கையில் இவ்வளவுதான் அதிகபட்சமாக என்னால் முடியும் என நினைக்கிறான். அதுதான் அவனுடைய நரகம். அந்த மழை அந்த அழுகையாகத்தான் தெரிகிறது

ராம்குமாரின் மொழியாக்கம் அழகாக உள்ளது

ஆர். அருண்

***

முந்தைய கட்டுரைகாந்தி- பழியும் ஊழும்
அடுத்த கட்டுரைராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்