ரயிலில்- கடிதங்கள் 3

traina

ரயிலில்… [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ரயிலில் மிக யதார்த்தமான ஒரு கதை. ஆனால் அதை ஒரு ரயில்பெட்டிக்குள் அருகருகே அமர்ந்திருக்கும் பரம்பரை எதிரிகளின் உரையாடலாக அமைத்தபோது நாடகீயமான ஒருதன்மை வந்தது. கிளாஸிக்கலான பல சிறுகதைகள் இந்த அமைப்பில் நினைவுக்கு வருகின்றன. தாமஸ் மன், லூகி பிராண்டெல்லா போன்றவர்களின் கட்டமைப்பு இது

 

அந்தக்கதையின் ஒரு அம்சம் மட்டும் எனக்கு மேலும் முக்கியமானதாகப் பட்டது. நிலத்துக்கான இந்தப்போரில் பெண்களுக்கு எந்தக்குரலுமே கிடையாது. முத்துசாமியின் அம்மா, மனைவி இரண்டுபேருக்குமே கருத்துச்சொல்ல அனுமதி இல்லை. இந்தப்பக்கம் சாமிநாதனின் அம்மாவும் மனைவியும் கருத்துச்சொன்னால் அதை கணக்கில்கொள்வதே இல்லை

 

ஆனால் மொத்தச் சொத்துச்சண்டையின் பெண்களுக்காகத்தான். சாமிநாதன் தன் பெண்களுக்காக அதைச் செய்கிறார். முத்துசாமியும் பெண்களுக்காகவே செய்கிறார். அதனால் நன்மைபெறுவது சாமிநாதனின் பெண்கள். அழிவது முத்துசாயின் பெண்கள். முத்துசாமியின் கடைசி முடிவுகூட பெண்ணுக்காகவே

 

இந்த மனநிலை சமூகத்தில் இன்று உள்ளது. ஆனால் ஆச்சரியமானது

 

எஸ்.ஸ்ரீனிவாசன்

 

அன்புள்ள ஜெ.,

 

உலகத்து மாந்தரெல்லாம் எழுத்தாளரானாலும் எழுதித் தீராத மனித மனத்தின் இருண்ட பக்கங்கள். இரவு அலுவலகத்திலேயே படித்து விட்டேன். ஊடு பாவுகள் நிறைந்த கதை. ஆற்றொழுக்காகப் போவதில்லை. அதனால் முதல் வாசிப்பில் சில வெற்றிடங்கள். காலையில் என் மகள் கை முறிவு பிஸியோவுக்காக காத்துக் கொண்டிருந்த பொழுது திரும்ப வாசித்தேன். சில பகுதிகளை scroll up செய்யும் போது கை நடுங்கியது. உள்ளே ஏதோ நலுங்கியது.  உச்சங்களும், நுண்மைகளுமே ஆன ஒரு இலக்கியப்படைப்பு. பயணம் தொடர வாழ்த்துக்கள்.

 

அன்புடன்,

 

கிருஷ்ணன் சங்கரன்

 

எல்லா பெருநகரங்களின் இதயப் பகுதியிலும் பாழடைந்த பங்களாக்கள், கைவிடப்பட்ட புதரடைந்த நிலங்கள் உண்டு.

 

கடைவீதியின் ஆடம்பர பகட்டிற்கும் வெளிச்சத்திற்கும் தன் இருள் முகத்தைக் காட்டிக்கொண்டு.

 

சதுர அடி வாடகை 100 ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ள  கோவில் இடங்களில் நீதிமன்றங்களில் தடையானை பெற்றுக்கொண்டு மொத்த வாடகையே முப்பது ரூபாயும் நாற்பது ரூபாயும் செலுத்துவோர் உண்டு.

 

சில நம்பிக்கைகள் உண்டு மூன்று தலைமுறைக்கு மேல் ஒரே இடத்தில் வசிக்கலாகாது, ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு நிமித்திகரை நாடினால் இடம்மாறி இருந்து பாருங்கள் என்று ஆலோசனை கூறுவர்.

 

முத்துச்சாமி சாமிநாதன் இருவர் குடும்பமும் மூன்றாம் தலைமுறையில் மாற்றம் காண்கிறது.

 

சாமிநாதன் குடும்பம் அல்லற்பட்டு ஆற்றாது 41 ஆண்டுகள் சிந்திய கண்ணீர் மூன்றாம் தலைமுறையில் மாறுகிறது.

முத்துச்சாமிக்கோ மேலும் மேலும் இன்னும் இன்னும் எனக்கே எனக்கு மட்டுமே என்று சேர்த்த செல்வம் அனைத்தும் தேய்ந்து கரைகிறது.

 

என்னுடைய அனுபவத்தில் எந்த மனிதனிலும் மாற்றங்கள் எளிதாய் சட்டையை மாற்றுவதுபோல் வந்து விடுவதில்லை, தோலினை அறுவை சிகிச்சை செய்து மாற்றுவது போல் ரத்தத்தை ,வலியை,உழைப்பைக் கோருபவை எந்த ஒரு மாற்றமும்.

 

சிலர் முத்துச்சாமியை போல் எந்நிலையிலும் மாறாதவர்கள் யாரையும் சுரண்ட தயங்காதவர்கள், நோயாளி மகளை ஏமாந்த குடும்பத்தின் தலையில் கட்டமுயல்கிறார். இதைக்கண்ட சாமிநாதன் எந்த மெல்லுணர்வுகளும் அவருக்கு புரிய போவதில்லை என்ற முடிவுடன் தன் உணவை உன்ன முடிவெடுக்கிறார்.

 

 

 

இத்தனை இழப்பிற்குப் பின்பும் முத்துசாமியின் ஆதங்கம் 60 கோடி ரூபாய் நிலத்தை 60 லட்சத்திற்கு விற்றுவிட்டீர்களே என்பது,

 

சாமிநாதனோ 60 லட்சம் என்பது சிரிய தொகை அல்ல அதை மூலதனமாகக் கொண்டு தான் என் பிள்ளைகள் நிறைவாக வாழ்கிறார்கள் என்பதாய்,

 

என்னளவில் இக்கதையின் தரிசனம் முதல் சில பத்திகளில் உள்ளது.

 

காலமெனும் ரயிலில் எல்லோருக்கும் இடமுண்டு   தேவை நிதானம், எல்லோரும் ஏறிய பின்பும் ரயில் சில நிமிடங்கள் காத்திருக்கும், இந்த வாழ்வில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் தேவை சிறிது நியாயம்.

 

சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும், அவர்கள் கலப்பட தேயிலை வியாபாரத்தில் ஈட்டிய சொத்திது நான் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற முத்துச்சாமியின் வாதத்தை வாசிக்கையில் , இயற்கை வாழ்வியல் ஆசான் மாசானபு ஃபுகோகா வின் இந்த வார்த்தைகளை எண்ணிக்கொண்டேன்.

 

//ஒரு பிரச்சனைக்கு ஒரு போதும் இன்னொரு பிரச்சனை தீர்வாகாது//.

 

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் என்ன ஆவார், இது தான் வாழ்வெனும் சக்கரமா?

 

நன்றி

மு.கதிர்முருகன்

கோவை

 

 

அன்புள்ள ஜெ

 

என் வரையில் ஒரு மிகச்சிறந்த கதை என்பது மூன்று அம்சங்கள் கொண்டது. அது வாழ்க்கையில் இருந்து நேரடியாக வந்ததாக இருக்கவேண்டும். உண்மையிலேயே நடந்தது போல அதை நாம் உணரவேண்டும் என்பது முதலில். அப்புறம் அது உணர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும். மூளையைப்பாதிப்பது அல்ல உணர்வுகளுடன் ஆடுவதே நல்ல கதை. மூன்றாவதாக நம்மால் எளிதாக சொல்லிவிடவே முடியாத ஒரு வாழ்க்கைக்கேள்வியை அது முன்வைக்கவேண்டும். நீண்டநாள் நாம் அதைப்பற்றியே நினைக்கவும் யோசிக்கவும் வேண்டும்

 

அப்படிப்பட்ட கதை இந்த  ‘ரயிலில்’. முட்டிமோதும் இந்த வாழ்க்கையிலே உண்மையில் ஒரு அநீதியை எவருக்கேனும் செய்யாமல், எவரையாவது சுரண்டாமல் வாழவே முடியாதா என்ற கேள்வியை அது கேட்கிறது. பலவகையில் கதைக்குள்ளேயே கதாபாத்திரங்கள் அந்தக்கேள்வியில் முட்டிக்கொள்கின்றன. மானுக்கும் புலிக்கும் நடுவே கடவுள் நின்றிருக்கிறார் என்ற வரி. பெரிய மீன் சின்னமீனை விழுங்கும், அதை இன்னும் பெரிய மீன் விழுங்கும் என்ற வரி. ஆனால் பதில் ஒன்றும் இல்லை. நீங்களே கூட கேள்வியை மட்டுமே வைத்துவிட்டு நின்றுவிட்டீர்கள்

 

நான் தனிப்பட்ட முறையில் அநீதி செய்யாமல் வாழவே முடியாது, அநீதியை நியாயப்படுத்திக்கொள்கிறோம் அவ்வலவுதான் என நினைக்கிறேன். இதுதான் உண்மை. ஆனால் இது பொய் என நம்பத்தான் விரும்புகிறேன். எல்லாருமே அப்படித்தான்

 

அருண் சாரதி.

 

ரயிலில் சிறுகதை கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைஇலக்கியவேல் மாத இதழ் – உஷாதீபன்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம், ஈவேரா