செவ்வல்லி -கடிதங்கள்

a

 

செவ்வல்லியின் நாள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

செவ்வல்லிகளுடன் இன்று தீபாவளி. புகைப்படத்தில் ஒவ்வொரு அல்லியும் ஒரு தீப விளக்காகசுடர்விட்டு எரிகிறது. மலையின் மேல் வெள்ளிச்சரங்கள். சேற்றுப்பூக்கள் சங்கு சக்கரமாய்துள்ளுகிறது. கொக்கு பூத்த வயலில், நூறு  கொக்குகள் தரையிலிருந்து விண்ணுக்கு பறந்தால் , புஸ்வானம்தானே. பல பாட்டாசுகளை கொளுத்தி போட்டு விட்டீர்கள்.

 

”Haiku appening” என்பார்கள். நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும் ஒருபிரபஞ்சத்தை திறக்கிறது. வானவில் சூடிய நத்தைகள், ஒவ்வொரு மணியும் ஒரு துளி வானம்,வயல் நீரில் இறங்கிய வானம், ஒருவர் வானத்தை கலக்கி பரப்ப, ஒரு பெண்மணி வானத்தில்நாற்று நட, மழைத்திரை விலகி மலையின் தரிசனம். பூவரச இலை மென்மையான கைக்குழந்தை . சேம்பு இலை குட்டி யானையின் செவி. சிறியதிலிருந்து பெரியதுக்கு ஒரு விஸ்வரூப பாய்ச்சல்.எருமையின் மீது பெய்யும் மழை அதன் விளைவாக கண்களில் குளுமை – அற்புதம்.

 

ஜூலைமழையில் சொன்னீர்கள் ”அகத்தில் இருப்பதை விட புறத்தில் காண்பதை எழுதுதல் கடினமோஎன்று”. நவம்பர் மழையில் விளையாடி விட்டீர்கள். பாஷோ தனது குடிலிலிருந்து கிளம்பி வடக்கு நோக்கி  பல நூறு மைல்கள் நடந்து அடைந்ததரிசனங்களை (The Narrow Road to the Deep North), உங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்துஇரண்டு மணி நேரத்தில் எங்களுக்கு  காண்பித்து விட்டீர்கள்.

மிக்க நன்றி. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ராஜா.

i

 

வணக்கம் ஜெ,

 

நலமா?

 

செவ்வல்லியின் நாள் காலையிலேயே மிகுந்த உற்சாகத்தை அளித்தது. இந்தத் தீபாவளையை அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது போன்ற மொழி நடை . வரிக்கு வரியா உவமைகளைக் கொட்டுவீர்கள்? விட்டால் ஒவ்வொரு துளிக்கும் ஓர் உவமை என  விரிந்துலங்கும் போல. இந்த எழுத்தைப் படித்துவிட்டு மழையில் நனைந்தால் இந்த வயதிலும் ஜலதோஷம்கூட அண்டாது. அவ்வளவு மகிழ்ச்சி.

 

கோ.புண்ணியவான்.

 

g

அன்புள்ள ஜெ

 

செவ்வல்லியின் நாள் ஓர் அற்புதமான கவிதை. உங்கள் எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு அதிலிருக்கும் வரிகளின் கனவு எளிதாகத் தொற்றிக்கொள்ளும்

 

நீங்கள் சொல்வது சரிதான். ஒருமணிநேரத்தில் நடந்து திரும்புவதற்குள் இப்படி ஒரு இயற்கையின் தரிசனம் என்றால் வாழ்க்கையில் அதைவிடப் பெரிதாக என்ன வேண்டும்?

 

ஜெயராஜ் ஆனந்த்

முந்தைய கட்டுரைபிணர் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைரயிலில்… [சிறுகதை]