கனவுகளின் வெளி

https://jemo.sgp1.cdn.digitaloceanspaces.com/wp-content/uploads/2018/11/edge-of-dreams-michael-lang.jpg
edge-of-dreams-michael-lang.j

அன்புள்ள ஜெ   நலமா

ஏதேச்சையாய் நடைபெறும் சில நிகழ்வுகள் நம் வாழ்வில் ஆச்சர்ய படவைக்கும் கணங்கள் எல்லோருடைய வாழ்விலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

நான் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவிழைவது நமக்கு தோன்றும்  சில எண்ணங்கள், சிந்தனைகள் அறிய விரும்பும் சில தகவல்கள் அச்சமயத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுநாம் வேறொரு தளத்தில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் நம் கண்முன்னே  முற்சிந்தனைக்கான, எண்ணங்களுக்கான, அதற்கான விடைகள்தட்டுப்படும் .ஏதேச்சையாய்,சில சமயங்களில் ஆச்சர்யமூட்டகூடியதாய்

சில உதாரணங்களுடன் சொன்னால்தான் நான் சொல்ல வரும் தகவலுக்கு நல்லது.

நேற்று முன் தினம் நான் வாசிக்க எடுத்துக்கொண்ட புத்தகம் “சித்தார்த்தன்” இந்த புத்தகம் மூன்று ஆண்டுகளாக. என்னிடம் இருக்கிறது அந்த புத்தகம் என்னை வாசிக்க அழைக்கவேயில்லை ( அதுவாக அழைக்க வேண்டும் என காத்திருப்பேன் என் இயல்பு அது)

சித்தார்த்தனை வாசிக்கத் தொடங்கும் முன்பு ஹெர்மன் ஹெசியை பற்றி தமிழில் அறிய முற்பட்டேன் கூடுதல் தகவல் என் பார்வைக்கு கிட்டவில்லை

நான் சொல்லவருவது தற்பொழுது பரபரப்பாக விவாதிக்க படும் செய்திகளை, புத்தகங்களை, இலக்கிய நிகழ்வுகள், திரைபடங்களை பற்றி நான் சிந்திப்பதும் அதற்கான மறுமொழி எனக்கு இணையத்தின் வழி கிடைப்பதும் சாதாரண விஷயம்

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த புத்தகத்தை சில ஆண்டுகள் வாசிக்காமல் தற்பொழுது வாசித்து முடித்து விட்டு இணையத்திற்கு வரும் பொழுது  அந்த கணமே அதற்கான தரவுகளுடன் தங்கள் பக்கத்தில்சித்தார்த்தன் பற்றி நீங்கள் எழுதி இருந்தீர்கள் திடுக்கிட்டு போனேன்.

இது ஒரு முறை நிகழ்ந்ததால் அல்ல.  சமீபத்தில்தான் சித்தார்த்தனுக்கு முன்பு நான் வாசித்து முடித்த புத்தகம் வினய் சீதாபதி எழுதிய “நரசிம்ம ராவ் படித்து முடித்து விட்டு இணையத்திற்கு வருகிறேன்  நீங்கள் அப்புத்தகத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள் இது போல சுவாரசியமாக மாதம் ஒரு முறையாவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இம்முறை இத்தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது .

இது மேலும் மேலும் எங்கோ இருக்கும் ஏதோ ஒரு வாசகனுக்கான உலகத்தை நீங்கள் சிருஸ்டித்து கொண்டே இருக்கின்றீர்கள் என தோன்றுகிறது

நன்றியுடன்

சக்தி

(குவைத்)

***

அன்புள்ள சக்தி

இத்தகைய பலநிகழ்வுகள் என் வாழ்க்கையில் உண்டு. இப்போது எண்ணிப்பார்க்கையில் கூட அவற்றை என்னால் தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் நித்ய சைதன்ய யதியைச் சந்திப்பது 1992ல். அதற்குமுன் அவருடைய சிலநூல்களை மேலோட்டமாக வாசித்திருந்தேன். 1989ல்தான் அவரை முதன்முறையாகக் கேள்விப்பட்டேன். சிமோங் த பூவா பற்றி அவர் எழுதிய ஒரு நூலை வாசித்தபின்.

ஆனால் அவரை என் ஆசிரியராக ஏற்றுக்கொண்டு, அவரிடம் நெடுநாட்கள் பழகி, அவர் மறைந்து பல்லாண்டுகளுக்குப் பின் நான் இளமையிலேயே வாசித்து வைத்திருந்த ஒரு நூலில் அவருடைய ஒரு சிறிய படத்தை வெட்டி வைத்திருந்ததைக் கண்டேன். மார்க்ஸையும் எங்கல்ஸையும் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் என்னும் நீலநிற அட்டை கொண்ட நூல். ராதுகா பதிப்பக வெளியீடு. அதை கல்லூரியில் ஒரு பேச்சுப்போட்டியில் பரிசாகப் பெற்றேன். அதற்குள் அந்த தாள்வெட்டு இருந்தது. ஏன் அதை எடுத்து வைத்தேன்?

ஒருமுறை கனவில் ஒரு தபால் வந்தது. ஓர் இதழ் மழைபெய்து கொஞ்சம் நனைந்து வீட்டுமுற்றத்தில் கிடந்தது. அதில் என்னுடைய ஒரு கதை வெளியாகியிருந்தது. அழகியபடத்துடன். அந்தக்கதையை கனவிலேயே முழுமையாக வாசித்தேன். விழித்துக்கொண்டபின்னரும் கதை ஏறத்தாழ நினைவிலிருந்தது. அதை பின்னர் விரித்து எழுதி இந்தியா டுடே இலக்கியமலருக்கு அளித்தேன். நாகம் என்ற கதை. அது வெளியாகி அந்த இதழ் அதேபோல ஒரு மழைநாளில் தபாலில் வந்து வீட்டு முற்றத்தில் கிடந்தது

இடிந்துசரிந்த ஓர் ஆலயத்தை நான் அடிக்கடிக் கனவில் பார்த்துக்கொண்டிருந்தேன். அது எந்த ஆலயம் என எனக்குத்தெரியாது. அத்தகைய ஆலயங்களே இந்தியாவில் இல்லை. மிகப்பெரிய ஆலயம். மேலும் ஆறாண்டுகளுக்குப்பின் இலஸ்டிரேட்டட் வீக்லி இதழில் கம்போடியாவின் ஆங்கொர்வாட் ஆலயம் பற்றிய செய்தியுடன் படங்கள் வந்திருந்தன. போல்பாட் தோற்கடிக்கப்பட்டு அந்த ஆலயத்தை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்ட நிகழ்வு அது. நான் கனவில்கண்ட அதே ஆலயம்.

அதற்குமுன் அதை எங்கேனும் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. எழுபதுகளில் புகைப்படங்கள் மிக அரிதானவை. ஆங்கோர்வாட் கெமர்ரூஜ் ஆட்சியில் கிட்டத்தட்ட உலகிடமிருந்தே மறைக்கப்பட்டிருந்தது. அன்று சினிமாவே மிகமிக அரிதானது.

மீண்டும் பல ஆண்டுகள் கழித்து இவ்வாண்டு நான் ஆங்கோர்வாட் சென்றேன். அந்த ஆலயம் மிகவும் சீரமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆலயம் நான் கனவில் கண்டதே அல்ல என்று தோன்றியது. ஆனால் ஊர்திரும்பியபோது மீண்டும் ஒரு கனவு. அதில் நான் அந்த ஆலயத்தில் உலவிக்கொண்டிருந்தேன். உடன் நித்ய சைதன்ய யதி இருந்தார்

என் கனவுகள் உண்மைகளுடன் ஊடுருவியிருப்பதை, நிகழ்வுகளை அவை முன்னுரைப்பதைப்பற்றி பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். என் அன்னை தற்கொலைசெய்துகொள்வதற்குச் சிலநாட்களுக்கு முன் ஒரு கனவு. அதில் அம்மா ஓர் எருமை மேல் அமர்ந்து ஓர் ஆழமான கால்வாயின் சாய்வான கரையில் அங்குமிங்குமாக பாய்ந்துகொண்டிருந்தாள். அவள் என்னை பார்க்கவில்லை. நான் அம்மா அம்மா என அலறி விழித்துக்கொண்டேன்.

நாமறியாத வேறேதோ சரடுகளால் நம் வாழ்க்கை முடையப்பட்டுள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைதேங்காயெண்ணையும் வெள்ளையரும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62