குடும்பத்திலிருந்து விடுமுறை-கடிதம்

IMG_0486

 

குடும்பத்தில் இருந்து விடுமுறை

 

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு

 

 

குடும்பத்திலிருந்து விடுமுறை படித்து ஒருவாரத்துக்கு மேலாகியும் குடும்பப்பணிகளின் சுமையால் இன்றுதான் உங்களுக்கு அதுகுறித்து எழுத முடிந்தது.

 

 

நீங்கள் இந்தப்பதிவை எழுதியது , என்னைபோல வீட்டிலும் வெளியிலும் வேலைசெய்யும் அனைத்துப்பெண்களின் சார்பாகவும்  என்று எடுத்துக்கொண்டு மகிழ்ந்தேன்.

 

 

அருண்மொழி அவர்களுக்கு ’என்னமாம் செய்’  என்று நீங்கள் சொன்னது போல பேரன்புடன் சொல்பவர்கள் அத்தனை அதிகமில்லை. கடிந்துகொண்டும் சலித்துக்கொண்டும்  (இப்படியான  முகாம்களோ பயிற்சிகளோ அளிக்கும் பொருளாதாரப்பயன்களின் பொருட்டு) அரைமனதுடன் அனுமதி அளிப்பவர்களே அதிகம்.  இப்பதிவு குறித்த எதிர்வினைகளிலிருந்தே பெரும்பாலான பெண்களுக்கு தளையாகவே குடும்பம் என்னும் அமைப்பு இருப்பதை அறிந்துகொள்ளலாம்,

 

 

அப்படி அனுமதி வாங்கி ஒரு வாரத்திற்கு சமையலுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு , அக்கம்பக்கம் தேவைப்பட்டால் உதவும்படி இறைஞ்சிக்,கேட்டுக்கொண்டு அம்மாவையோ அக்காவையோ சகாயத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டும் மிகுந்த குற்ற உணர்வுடனேதான் வெளியே போவோம்.

 

 

உண்மையில் படித்தவர்கள் என்று சொல்லப்படும் நபர்கள் இருக்கும் குடும்பத்தில் தான் இத்தகையவை நடக்கின்றது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

 

 

இப்படியான பயிற்சிமுகாம்களுக்கு போகவும் வாய்ப்பில்லாத பெண்கள்தான் மேல்மருவத்துருக்கு மாலைபோட்டுக்கொண்டும், வாழும் கலைப்பயிற்சிக்கும்,ஆடிவெள்ளிக்கும் பிரதோஷவழிபாட்டிற்கும் என எப்படியாவது வெளியேறி , கழுத்தை அழுத்திக்கொண்டிருக்கும் கைகளை முற்றிலும் அகற்ற முடியாவிட்டாலும் கொஞ்சமாக நெகிழ்த்தி,  தற்காலிகமாகவாவது மூச்சு விட்டுக்கொள்கிறார்கள்.

 

 

16/17 வருடத்திற்கு முன்னர் எனக்குத்திருமணமான  புதிதில்  வாழும் கலைப்பயிற்சியில் கலந்துகொண்டேன். உடன் கோவைக்கல்லூரியில் என் பேராசிரியராக இருந்த , கஞ்சிபோட்ட புடவையும் அதைவிட விரைப்பான உடல்மொழியுமாக கண்டிப்புக்கு பேர்போன  என்  பேராசிரியையும் கலந்துகொண்டிருந்தார். பயிற்சியின் ஒரு அங்கமாக பஞ்சாபி பாங்ரா நடனம் அனைவரும் ஆடவேண்டியிருந்தது. அப்போது எனக்கு பெண்கள் மட்டும் இருந்த அறையில்தான் என்றாலும் கூச்சம் காரணமாக நடனமாட தயக்கமிருந்தது ஆனால் அந்தப்பேராசிரியை ’குத்தி’ ஆடிக்கொண்டிருந்தார். அப்படி நடனமாடியது அங்கு பலருக்கு பெரும் விடுதலையாக இருந்ததை கவனித்தேன். இன்று ஒருவேளை 18  வருட மணவாழ்விற்கு பிறகு மறுபடியும் அப்படியான ஒரு சூழல் வந்தால் நான் ’’இறங்கிக்குத்தி’’ என்று சொல்வார்களே அப்படி ஆடுவேனாயிருக்கும்.

 

 

யுகம் யுகமாக செய்துகொண்டிருப்பதைப்போன்ற  அலுப்பூட்டும்  ஒன்றே போலான வேலைகளிலிருந்து எங்களுக்கு அவ்வப்போதாவது விடுப்பு எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.என்னைப்போல அக்கம்பக்கம் சில நிமிஷங்கள் அரட்டை அடிக்கக்கூட நேரமில்லாதவர்களுக்கு இன்னும் அதிகமாக ஒரு விடுதலை தற்காலிகமாகவாவது தேவை இருக்கிறது.

 

 

பலர் நினைபப்துபோல வேலைசெய்யும் பெண்களுக்கு பணியிடத்தில் மூச்சுவிட்டுக்கொள்ளலாம் என்பதெல்லாம் மாயை. உண்மையில் அங்கும் நாங்கள் குடும்பத்தை கட்டி சுமந்துகொண்டுதான் செல்கிறோம். ஊறவைத்துவிட்டு வந்த, மாலை போய் அரைக்கவேண்டிய உளுந்தும் அரிசியும் மனதில் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்கும் போய்செய்யவேண்டிய வேலைகளை, விடுமுறையில் வீட்டில் தனித்து இருக்கும் குழந்தைகளை, கவனிக்க வேண்டிய  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் உடல்நிலையை  இப்படி ஏராளம் மனதில் எப்போதும் நிமிண்டிக்கொண்டே இருக்கும்.

 

 

கல்லூரியில் வகுப்பில்லாத நேரங்களில் பெண்கள் எல்லாரும்குடும்பத்தை அலைபேசி வழியே நிர்வாகம் செய்துகொண்டுதானிருப்போம்

 

 

உண்மையில்  இந்த அலைபேசி மன அழுத்தத்தை  இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. நான் அமைதிப்பள்ளத்தாக்கிற்கு ஒரு பயிற்சியின் பொருட்டு சென்றிருந்த போது அங்கு அலைபேசி அனுமதிக்கப்படவில்லை. பால்பேதமின்றி மற்ற பங்கேற்பாளர்களுடன் இயல்பாக கலந்துரையாடியதும்  புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதுமாய் அது வேறுஒரு உலகம். அட்டை கடித்து குருதி கொட்டியதும் கூட அத்தனை மகிழ்வளிக்கும் ஒன்றாக இருந்தது உள்ளே நடக்கத்துவங்கி கொஞ்சநேரத்திலேயே மகன்களை மற்ற குடும்ப விஷயங்களை எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டேனென்பதை அன்று இரவு உறங்கச்செல்லும்போதுதான் மிகுந்த  குற்றஉணர்வுடன் நினைத்துக்கொண்டேன்

 

 

பணியிடங்களுக்கும்  குழந்தைகளை நாங்களேதான் அழைத்துச்செல்கிறோம் எனக்குதெரிந்து எந்த அப்பாக்களும் குழந்தைகளை பணியிடங்களுக்கு பள்ளி விடுமுறையின் போது கூட்டிசென்றதே இல்லை

என் இரு மகன்களையும் பல பள்ளி விடுமுறைநாட்களில் கல்லூரிக்கு அழைத்துச்சென்று நூலகத்திலும் கேண்டீனிலும் வைத்து சமாளித்திருக்கிறேன்

 

 

சமீபத்தில் என் இளைய மகன் புனேவில் national defence academy  க்கு சென்றிருந்தபோது எடுத்த புகைப்ப்டங்களை காண்பித்துக்கொண்டிருந்தான். அங்கு சீருடையில் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் உயர் அதிகாரி அப்போது காலாண்டுத்தேர்வுவிடுமுறையென்பதால் அவரின் மகனையும்  காலடியில்  உட்கார வைத்துக்கொண்டிருந்ததை அவன் புகைப்படம் எடுத்திருந்தான்

 

 

எந்தப் பணியிலிருந்தாலும் நாங்கள் எபொதும் குடும்பத்துடனே  சேர்த்து  தைக்கப்ட்டிருக்கிறோம்

இப்படியான  தற்காலிகப்புறப்பாடுகளும் விடுமுறைகளும் புத்துணர்வை மட்டுமல்ல  பலருக்கு தொடர்ந்து உயிர்வாழ போதுமான சக்தியையும்,  இழந்துகொண்டேயிருக்கும் வாழ்வின் மீதான் பிடிப்பையும் கூட கொடுக்கின்றது. மனதிலிருக்கும் பலதையும் சொல்லி மனதை கனமின்றி செய்ய உதவிய இந்தபதிவிற்கு நன்றிகளுடன்

 

 

லோகமாதேவி

IMG_0490 (1)

 

அன்புள்ள லோகமாதேவி

 

நான் பணியாற்றும் காலத்தில் அஜி,சைதன்யாவின் பள்ளி மிக அருகில். நான்தான் அழைத்துச்செல்வேன். அவர்களுக்கு மூன்றுமணிக்கே பள்ளி முடிந்துவிடும். எனக்கு ஐந்தரைக்கு. எஞ்சிய நேரம் சைதன்யா என் மேஜைக்கு அடியில் வீடுகட்டி குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டிருப்பாள். என் அறைக்குள் வந்து “மத்த ஃபைல் வந்தாச்சா?” என்று கேட்ட என் மேலதிகாரி காதர் சாரை “சத்தம் போடாதே தாத்தா, கொழந்த தூங்குதுல்ல?” என அதட்டினாள். அவர் பவ்யமாக “ஸாரி” என்றபின் மெல்ல என்னிடம் “அந்த ஃபைல் வந்தாச்சா?” என்றார்

 

ஜெ

 

 

குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48
அடுத்த கட்டுரைகட்டண உரை- கடிதம்