கட்டண உரை -கடிதங்கள்

je

கட்டண உரை –ஓர் எண்ணம்

 

கட்டண உரை-அறிவிப்பு

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு

 

கிழக்கிந்திய கம்பெனி (1600 – 1874)யை கேள்விப்பட்டிருப்போம். இதேபோல Dutch India Company, Danish India Company, French East India Company போன்றவை கிட்டத்தட்ட அன்றிருந்த உலக மக்கள் தொகையின் பாதியை பங்குபோட்டு ஆண்டு கொண்டிருந்ததைப் பற்றி Thomas Carlyle (1795 – 1881) என்பவர் யோசிக்கிறார். அதை இன்னும் ஒழுங்குபடுத்தி “On Heroes, Hero-Worship, and The Heroic in History” என்கிற தலைப்பில் முஹம்மத் (570 – 632); Dante Alighieri (1265 – 1321) ; Martin Luther (1483 – 1546); Napoleon Bonaparte (1769 – 1821) போன்ற மாபெரும் ஆளுமைகளின் தோற்றத்துக்கான காரணங்கள், வரலாற்றை அவர்கள் உருவாக்கிய விதம் குறித்து மக்களிடம் பேசுகிறார். இதுவும் கட்டண உரை. The Great Man theory என்று அவை பிற்பாடு நூலாக தொகுக்கப்பட்டது.

 

 

இதைப் பற்றி காந்தியடிகளின் “சத்திய சோதனை”யில்தான் முதன்முறையாக படித்தேன். அதைப் பின்தொடர்ந்து சென்று கார்லைலின் நூலும், அந்த நூலில் நபிகளாரைப் பற்றிய பகுதியை ஏம்பல் தஜம்மல் மொழிபெயர்த்திருக்கிறார் என அறிந்து அதையும் படித்திருக்கிறேன்.  கட்டணம் செலுத்தி இசையை இடையூறின்றி ரசிப்பதற்கும் திருவிழாக்களில் இலவசமாக கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஆக கட்டண உரையென்பது மேலை நாடுகளில் இருநூறு ஆண்டுகளாக வழக்கிலுள்ள விஷயமே. இங்கும் முயற்சித்துப் பார்க்கலாம். வாழ்த்துக்கள்.

 

கொள்ளு நதீம்,

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம்

 

அன்புள்ள கொள்ளு நதீம்

 

கட்டண உரை உலகில் பல நாடுகளில் உள்ளதுதான். அரங்கினரின் தீவிரத்துக்கான சான்றாகவும் அது கொள்ளப்படும். எலியட்டின் பெரும்பாலான கட்டுரைகள் உரைகளாக, கட்டண அரங்குகளில் ஆற்றப்பட்டவைதான். நான் 2000 த்தில் கனடா சென்றிருந்தபோது ஆற்றிய உரை கட்டண உரை. ஒர் எழுத்தாளர் கட்டணம் கூடுதல் என புகார்சொல்லி வராமலும் இருந்தார்

 

ஜெ

 

 

அன்புநிறை ஜெ,

 

கட்டண உரை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். இலவசமாக இலக்கிய கூட்டத்தை நடத்தினாலே வருபவர்கள் குறைவு. இதில் கட்டணத்துடன் கூடிய இலக்கிய கூட்டம் எண்ணிக்கையை இன்னும் குறைக்கும், செறிவான வாசகர்களுடன் முழுமையடைந்த கூட்டமாக அது அமையக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

இதில் எனக்கு ஒரு சின்ன சிக்கல் உள்ளது, தீபாவளி வரும் 6ம் தேதி, கட்டண உரை 10ம் தேதி, தீபாவளிக்கு தனியார் நிறுவனங்களில் விடுமுறை தருவது என்பது பெரிய விடயம். அதுவும் சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் விடுமுறை என்பது மிகப்பெரிய விடயம். 8ம் தேதி மீண்டும் அலுவலகம் வரவேண்டும். ஆனால் 10ம் தேதி கூட்டம் இருக்கிறது. அதுவும் நெல்லையில், சென்னை என்றால் அடித்துபிடித்து மாலை வந்து சேர்ந்துவிடலாம். நெல்லை என்றால் ஒருநாள் விடுமுறை எடுக்கவேண்டும். அதுமட்டுமல்லாது கூட்டத்திற்கு அடுத்தநாள் குருப் 2 தேர்வு உள்ளது. கூட்டத்தில் பங்குக்கொள்ள விரும்பும் சிலருக்கு இந்த தேதி ஒரு தடையாக இருக்கக்கூடும். என்னைப்போன்று விடுமுறை இல்லாதவர்களும் தங்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் கலந்துக்கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஆனால் தேதி மட்டும் சற்று சிக்கலாக உள்ளது. முடிந்தால் இந்த மாதமோ அல்லது அடுத்த மாதம் இறுதியில் வைத்தாலோ வந்து கலந்துக்கொள்ள அனைவருக்கும் ஏதுவாக இருக்கும் இதில் என் சுயநலமும் பெரிதாக உள்ளதுதான்.

 

என கோரிக்கையை செவிசாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

அன்புடன்

ரா. பாலசுந்தர்

 

அன்புள்ள பாலசுந்தர்

 

உங்கள் சிக்கல்கள் புரிகின்றன

 

ஆனால் இதை கிருஷ்ணன் ஏற்பாடு செய்கிறார். தேதி இடம் முடிவானபின் மாற்றுவது பொருளிழப்பு.

 

இன்னொருமுறை இன்னொரு கூட்டத்தில் பார்ப்போம்

 

ஜெ

 

கட்டண உரை- கடிதங்கள்

கட்டண உரை -கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்
அடுத்த கட்டுரைகடைத்தெருவை கதையாக்குதல்…