‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30

bowகிழக்கே புலரியை அறிவிக்கும் முரசொலி எழுந்ததும் சிலிர்த்து, செவி முன் குவித்து, முன்கால் தூக்கி பாய ஒருங்கும் படைப்புரவியென தன்னில் விசை கூட்டியது பாண்டவப் படை. கதையை வலக்கையால் பற்றியபடி சுதசோமன் மூச்சை இழுத்து மெல்ல விட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “எழுக! எழுக! எழுக!” என முரசுகள் அதிரத்தொடங்கியதும் “வெற்றிவேல்! வீரவேல்!” எனும் பேரோசையுடன் பாண்டவப் படை எழுந்து கௌரவப் படையை நோக்கி சென்று விசை அழியாது முட்டி ஊடுகலந்தது.

எத்தனை பழகிய ஓசையாக அது உள்ளதென்று சுதசோமன் வியந்தான். ஒவ்வொரு நாளுமென பல்லாண்டுகள் கேட்ட ஓசைக்கு நிகர். நான்குமுறை மட்டுமே கேட்ட ஓசை, நாலாயிரம்முறை உள்ளத்தில் அதை மீட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். போர் எழுந்த பின் படையிலெழும் ஓசை பிறிதொன்று. படை நின்றிருக்கையில் எழுவது வேறு. படை எழுந்து எதிர்ப்படையை சந்திக்கும் தருணம் வரை அது முற்றிலும் தனித்த ஓசை. அறைகூவல் என முதலில் தோன்றும். வெறியெழுகை என எண்ண முடியும். அரிதாக துயரின் ஓலம் என்றும் தோன்றும். எண்ண எண்ண பொருளிலாதாகும் ஓசை அது. ஆனால் அறியமுடியாத பொருள் ஒன்றை கரந்தது என்றும் தோன்றச் செய்வது.

போர்நிகழ்வின் ஓசையில் எதிரியின் ஓசையும் கலந்துள்ளது. அதில் தன்னுணர்வென எதிரி எப்போதும் உள்ளான். எழும் படையின் ஓசையில் எதிரி இல்லை. அது ஒரு பெருந்திரள் தன்னை படையென உணரும் கணம் மட்டுமே. வியனுருக்கொண்டு கைவிரித்து நானென தருக்கும் தருணம். ஒவ்வொருவரும் தன்னை உதிர்த்து தன்னிலிருந்து வேறாகி எழும் கணங்களின் பெருந்தொகை. விண்வடிவம் கொண்டெழும் தெய்வங்கள் அவ்வோசை எழுப்பக்கூடும். சுதசோமன் கதையைச் சுழற்றி எதிர்வருபவர்களை அறைந்து தலையுடைத்து, குருதி சுழன்றுதெறிக்க கைசுழற்றி அவ்விசையாலேயே மீண்டும் மேலெடுத்து மீண்டும் பறக்கவிட்டு அடித்தான். அடியின் எதிர்விசையால் தசைகள் குலுங்கின. உள்ளே நெஞ்சக்குலை புல்நுனிப் பனித்துளிபோல் அதிர்ந்தது. உள்ளே ஓடிக்கொண்டிருந்த சொற்கள் நடுங்கி ஒன்றன்மேல் ஒன்றென ஏறிக்கொண்டன.

சங்கிலியில் கட்டப்பட்ட கதை அவனுடலிலிருந்து கிளைத்த பேருருவத்தெய்வமொன்றின் விரல்முறுக்கிய கைபோல் பாய்ந்து அறைந்து மீண்டது. தேர்களை உடைத்து, புரவிகளின் தலைகளை அறைந்து சிதறடித்து, யானை மத்தகங்கள் மேல் பிறிதொரு மத்தகமென முட்டி அதிர்ந்து எழுந்தது. அவை குருதி கொட்ட, துதிக்கை தளர்ந்து, கால் வளைந்தமைய, முன்னால் சரிந்தன. “செல்க! செல்க!” என்று அவன் தன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டுக்கொண்டே இருந்தான். அவன் உடல் குருதியால் நனைந்து குளிரத் தொடங்கியது. அவன் விழிகள் தொட்டுத்தொட்டு பறந்தலைந்தன.

பாண்டவப் படை எழுந்து முன்சென்று கலந்ததுமே கௌரவப் படை பல சிறுதுணுக்குகளாக விலகி மத்தகம் பாய்ச்சி வந்த களிற்றை தன் உடலுக்குள் சேறென, நீரென மாறி உள்ளிழுத்துக்கொண்டு அனைத்து திசைகளிலிருந்தும் சூழ்ந்தது. அம்புகளும் வேல்களும் மத்தகங்களின் மேல் பொழிந்தன. கவசங்களேந்திய யானைகளால் உருவான இரும்புக்கோட்டை இருபுறமும் சூழ்ந்து அரணமைக்க அதன் வாயில் திறப்பில் கதையுடன் நின்று சுதசோமன் போர் புரிந்தான். “முன்செல்க… கொன்று முன்செல்க!” என முரசொலி அறைகூவியது. “யானையின் வலக்கொம்பு முன்சென்றுள்ளது… இடக்கொம்பு தொடர்க… இடைவெளியை துதிக்கை சிதைக்கட்டும்!”

எதிரே அரைக்கணம் என எழுந்த தேர்திரும்பலில் துருமசேனனின் உருவை சுதசோமன் கண்டான். தன் பொருட்டே அவன் வந்திருப்பதை அக்கணத்தில் உணர்ந்தான். முன்நோக்கி என்று அவன் கைநீட்டி ஆணையிட தன் முன் நீண்டிருந்த தேர் நுகத்தில் தீட்டப்பட்ட இரும்புப்பரப்பில் அவ்வசைவைக் கண்டு பாகன் தேரை துருமசேனனை நோக்கி கொண்டுசென்றான். செல்லும் விசையிலேயே நாணொலி எழுப்பி, சங்கொலி முழக்கி பிறரை விலக்கி முதல் அம்பை துருமசேனனின் நெஞ்சை நோக்கி எய்து சுதசோமன் போருக்குள் தன்னை ஆழ தொடுத்துக்கொண்டான். ஆடிப்பாவை என நாணொலியும் சங்கொலியுமாக அவனை நோக்கி வந்த துருமசேனனின் வில்லதிர்ந்து எழுந்த அம்பு அவன் நாணின் அதிர்வு அடங்குவதற்குள்ளாகவே வந்து நெஞ்சை அறைந்து அவன் அணிந்திருந்த இரும்புக்கவசத்தை அதிரச் செய்தது. அவன் தன் சொல் ஒன்று இணைச்சொல்லுடன் இணைந்ததுபோல் உணர்ந்தான்.

சுதசோமன் அம்புகளை எய்தபடி துருமசேனனை அரைவட்ட வடிவில் சுற்றி வந்தான். அரைவட்டத்தில் மறுவளைவை நிரப்பியபடி துருமசேனன் சுற்றினான். துருமசேனனின் கை எடுக்கவிருக்கும் அம்பை முன்னரே சென்றடைந்தது சுதசோமனின் உள்ளம். அவ்வம்பு எழுந்த பின்னர் அதிரும் நாணை ஒருகணமும், அறையும் அம்பின் சிறகை மறுகணமும், அது தன்னை கடந்து போகவிட்டு சுழன்று எழுகையில் விம்மலோசையை பிறிதொரு கணமும் உணர்ந்தான். ஒற்றைக்கணத்தில் மூன்று பட்டைகள் என அவை அமைந்திருப்பதை அறிந்தான். பிறிதொரு முறையும் அவ்வாறு படைக்களத்தில் தன் முழுதுளமும் குவிந்ததில்லை என்று உணர்ந்தான்.

அம்புகள் விம்மி ஓங்கரித்து உறுமி கூச்சலிட்டுச் சென்றன. உரசி பொறிகளுடன் மண்ணில் பாய்ந்தன. ஒன்றையொன்று சிதறடித்து நிலைகுலைந்து துள்ளித் துடித்தபடி நிலத்தில் விழுந்தன. துருமசேனனின் தேர்ப்பாகன் தலைக்கவசம் உடைந்து இரு கைகளையும் விரித்து நுகத்தில் மல்லாந்து இன்னொரு கவசத்தை எடுப்பதற்குள் சுதசோமன் அவன் கழுத்தில் பிறையம்பை எய்தான். தலைதுண்டுபட்டு அவன் பக்கவாட்டில் சரிய நிலை தடுமாறி அழிந்த தேரில் நின்று “தேர்வலர் வருக! தேர்வலர் வருக!” என்று கூச்சலிட்டபடி துருமசேனன் சுதசோமனை அம்புகளால் இடைவிடாது அறைந்து காற்றில் வேலி ஒன்றை நிறுத்தினான்.

தன் தேரிலிருந்த நீள்மூங்கிலை எடுத்து ஓங்கி ஊன்றி காற்றில் தாவியெழுந்து எதிர்வந்த தேரின் புரவி மேல் காலூன்றி துருமசேனனின் தேரில் ஏற முயன்ற மாற்றுத் தேர்ப்பாகனின் தலையை கவசத்துடன் அறைந்துடைத்து அடுத்த சுழற்றலில் துருமசேனனின் தோளை அறைந்தான் சுதசோமன். தன் கதையுடன் தேரிலிருந்து பின்புறம் பாய்ந்திறங்கி மண்ணில் நின்ற துருமசேனன் அடுத்த அடியை ஒழிய, தேர்த்தூணில் பட்டு அதன் இரும்புக் கவசத்தை உடைத்தது கதை. தேரிலிருந்து தாவி எழுந்து துருமசேனனின் முன்னால் நின்று “பொருதுக, மூத்தவரே!” என்றான் சுதசோமன். “ஆம், இதற்காகவே அனைத்தும் பயின்றுள்ளோம்!” என்று கூவியபடி சுதசோமனை தன் கதையால் அறைந்தான் துருமசேனன்.

இரு கதைகளும் வெடிப்போசையுடன் முட்டிக்கொண்டன. இரும்புக்குண்டுகள் இரு வண்டுகளென ரீங்கரித்து ஒன்றையொன்று துரத்தின. விசையுடன் முட்டிக்கொண்டு அதிர்ந்து விலகி மீண்டும் சுழன்று விசைகொண்டன. ஒன்றை ஒன்று உடைக்க வெறிகொண்டவைபோல. உருகி உடல் பிணைத்து காற்றில் திளைக்க விழைபவைபோல. சுதசோமன் பிறகொருபோதும் ஒருவரை அத்தனை புலன் குவிந்து உளம்கூர்ந்து அணுகியதில்லை என்று உணர்ந்தான். துருமசேனனின் ஒவ்வொரு தசையசைவும் ஒவ்வொரு விழியோட்டலும் அவையென வெளிப்பட்ட உள்ளமும் அவனுக்கு எச்சமின்றி அவனுக்காக திறந்திருந்தன. மிகச்சில கணங்களிலேயே உள்ளங்கள் மட்டுமே மோதிக்கொள்ளும் போரென்று ஆகியது அது.

கால்வைக்கும் கணக்குகளாக முதலில் பயின்றது கதை. போருக்கெழும் நிலைமண்டிலம், விசைகொண்ட தாக்குதலை எதிர்கொள்கையில் அரைமண்டிலம், எழுந்தடிக்கையில் முன்நீள் அரை மண்டிலம். அடிஏற்று நிலைகொள்கையில் பின்நீள் அரைமண்டிலம். அடியொழிந்து விசைகூட்டுகையில் பின்குதிகால் ஊன்றிச்சுழலும் செக்குச்சுழல்கை. அறைவிசையை சிதறாது காத்து மற்றொரு அறையென்றாக்குகையில் முன்கட்டைவிரல் நின்றுசுழலும் தாழ்குடுமிச் சுழல்கை.

களரியில் கற்கையில் ஒவ்வொன்றும் தனித்தனியாக தொடர்பற்ற அறிதல்களாக இருந்தன. அவற்றை என்றேனும் போரில் நிகழ்த்தப்போகிறோம் என்றே எண்ணியதில்லை. கற்றவை அனைத்தும் முற்றாக மறந்து அமிழ்ந்து வேறெங்கிருந்தோ எழுந்து உடலில் கூடின. சுழன்றறைந்து வாங்கும் ஓதிரம். நின்று இருநிலைகளிலும் சுழற்றும் கடகம். நான்கு என திசைமடிந்து சூழ்ந்துசெல்லும் மண்டிலம், எண்ணியிராது எழுந்து அடிக்கும் சடுலம். நின்று எதிர்கொள்ளும் விஜயம். ஒவ்வொன்றும் உடலில் எழுவதன் உவகை. ஒவ்வொன்றுக்குமுரிய தெய்வங்கள் எடுத்துக்கொள்கின்றன என் உடலை. என் தசைகளில் ஊறுவது தேவர்க்கினிய அமுது.

சுதசோமன் அனைத்து சினங்களையும் பதற்றங்களையும் வெறிகளையும் இழந்து உவகையால் நிறைந்தான். அந்தத் தருணத்தின் விடுதலையில் திளைத்தான். அத்தனை ஆண்டுகளில் எவரிடமும் அந்த தன்னிலையழிந்த அணுக்கத்தை உணர்ந்ததில்லை என உணர்ந்தான். எவரையும் அத்தனை விரும்பியதில்லை. எவரையும் தானென்றே எண்ணிக்கொண்டதில்லை. தோள்தொடும் கணங்களில் தந்தையிடம் மட்டுமே உணர்ந்த அணுக்கம் அது. ஒரு வாயில் சற்றே திறந்து ஒளிக்கோடெனக் காட்டி மூடும் தருணம் அது. கண்கூச அனைத்து வாயில்களும் திறந்துகொண்டிருக்கின்றன இப்போது.

உருளைகளில் அறைவு கைகளுக்கும், தோள்தசைகளுக்கும், உள்ளங்கால் ஊன்றிய மண் வரைக்கும் அதிர்வென்றாகி சென்றது. ஒவ்வொரு அடிக்கும் உள்ளிருந்து புழுதி மூடிய அனைத்தும் நடுங்கி திரையுதிர்த்து உறைவிலிருந்து எழுந்தன. பிறிதொன்றாயின. ஒளி கொண்டன. அக்கதைப்போர் தொடங்கி சற்று நேரமே ஆகியிருந்த போதிலும்கூட அதில் நெடுநாள் அவன் வாழ்ந்திருந்தான் என்றுணர்ந்தான். அதுவரை வாழ்ந்த வாழ்வைவிட செறிந்து நீண்ட பிறிதொரு வாழ்வு.

அதுவரையிலான வாழ்வில் அருந்தருணங்கள் ஒவ்வொன்றும் மிகக் குறைவானவை. அவ்வருந்தருணங்களில்கூட அவன் உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிறு கூறு மட்டுமே வாழ்ந்தது. விழியோ செவியோ நாவோ தோளோ காலோ நெஞ்சோ… அதை நோக்கி பிற கூறுகள் உறைந்து இன்மையென்றே ஆகி சூழ்ந்திருந்தன. வாழ்ந்த உறுப்பு துடித்து தன்னிலை உணர்கையில் அவை வந்து சூழ்ந்துகொண்டன. அது அந்த தித்திப்பை நினைவு வைத்திருந்தது. தான் பிறிதென்றுணர்ந்தது. தன்னுடையதே என பொத்தி வைத்துக்கொண்டது. அந்த இனிமையை பிற அனைத்திற்கும் எதிராக நின்றே அது அடைந்தது.

உவகையின் கணங்களில் உவகை கொள்ளும் கூர்முனை பிற அனைத்துடனும் முரண்கொண்டு நின்றிருப்பதனாலேயே பல்லாயிரம் கைகளால் அழுத்தி மண்ணுடன் பற்றப்பட்டது. திமிறித்திமிறி அது தான் தான் என்று தெறிக்கையில் மேலும் அழுத்தப்பட்டது. உவகை என்பது ஒரு திணறல். பெருந்திமிறல். பிறிதொருவகையில் அதை அவன் அறிந்ததில்லை. ஆனால் அப்போரில் அக்கணத்தில் ஒவ்வொரு உறுப்பும் முழுதுவகையில் தானழிந்து திளைத்தது. ஒவ்வொன்றும் ஓர் உலகை படைத்தது. கணங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றென அடுக்கி உருவாகும் காலம் அங்கில்லை. கணங்களுக்குள் கணங்களுக்குள் கணங்கள் எனச் செல்லும் காலத்தில் ஒரு கணமே ஆயிரம் ஆண்டுகளாக மாற முடியும்.

துருமசேனனின் கதை சுதசோமனின் தோளை அறைந்தது. அவன் நிலைகுலைந்த கணம் அடுத்த அறை வந்து அவன் நெஞ்சைத் தாக்கி தூக்கி வீசியது. அவன் எழுந்தபோது விழுந்த அறையில் இடைக்கவசம் உடைந்து கீழே தெறித்தது.  பின்னிருந்து அவன் தேர்ப்பாகன் “இளவரசே!” என்றான். மேலும் ஒரு அடி பின் வைத்து கவசத்தை கவர எண்ணி அவ்வெண்ணத்திற்கு செல்லாமல் முன் சென்ற உடலால் கதைசுழற்றி துருமசேனனை தாக்கினான் சுதசோமன். அவன் அறையை ஒழிந்து துருமசேனன் பின்னகர்ந்தான். மேலும் மேலும் வெறிகொண்டு தாக்கியபடி சுதசோமன் முன்னால் சென்றான்.

ஆனால் ஒவ்வொரு அடியும் இலக்கு பிழைத்தது. உடலில் பட்ட ஓர் அடி எண்ணத்தை விழிகளை எப்படி குலையச்செய்ய இயலும்? ஆனால் ஒவ்வொரு எண்ணத்தின் முனையும் கூரிழந்திருந்தது. கதை சென்றுசேருமிடம் அணுவிடை காலம் பிழைத்தது. அவன் மூச்சிரைக்கலானான். இதோ என் உடலை அறையவிருக்கிறது அந்தக் கதை. இங்கே உடன்பிறந்தான் கையால் உயிர்விடப்போகிறேன். அவன் விழிகளில் ஒன்று துளிக்கணத்தில் அந்த மண்ணை நோக்கியது. அங்கே மேலும் பலர் மண்தழுவிக் கிடந்தனர். இந்த இடமா? இதுதானா? இந்த  மண் இதை காத்திருந்ததா? என் கருவுறும் கணத்தில் இங்கும் ஒரு தேவன் வந்து காத்திருந்தானா?

அவன் கொண்ட அந்த துளித் தயக்கமே துருமசேனனை ஏமாற்றியது. அவன் பின்னடி வைக்கப்போகிறான் என்று எண்ணி எழுந்த துருமசேனனின் கை அரைக்கணம் தளர்ந்தபோது  சீறி முன்னெழுந்து அவனை அறைந்து பின்னால் வீழ்த்தியது சுதசோமனின் கதை. நெஞ்சுக்கவசம் உடைந்து தெறிக்க துருமசேனன்  மல்லாந்து விழுந்து துள்ளிச்சுழன்று கதையையே ஓங்கி ஊன்றி உடலைச் சுழற்றித் துள்ளி அப்பால் சென்றான். அவனை அறைந்த சுதசோமனின் கதையின் உருளை குருதி விழுந்து நனைந்த குருக்ஷேத்ர மண்ணை மும்முறை குழியாக்கியது. நான்காவது அறை தலைமேலெழ துருமசேனன் தன் கதையால் அதை தடுத்தான். தன் கதையைச்சுழற்றி சுதசோமனின் கதையை விலக்கியபடி எழுந்து ஓங்கி அறைந்து அது தன் விலாவை எட்டாமலிருக்க பின்னடி வைத்து உடல் வளைத்து விலகி மீண்டும் அறைந்தான்.

சுதசோமனின் கதை உரசி பொறிபறக்க நழுவியது. அதைச் சுழற்றி அறைந்தபோது “உம்” என்றான் துருமசேனன். அக்கணம் வரை அருகிலென, தானேயென நின்றிருந்த அவன் அகன்று நெடுந்தொலைவில் இருந்தான். பிறிதொருவன், பிறிதொன்று. அது மானுடனின் ஒலி அல்ல. உயிரின் உறுமல். அனைத்து விலங்குகளிலும் பசியென்றும் காமம் என்றும் குடிகொள்வது. கொன்று கிழித்துண்பது. அறமென்றும் அளியென்றும் நெறியென்றும் குருதியென்றும் அறியாதது. அந்த எண்ணம் சுதசோமனை களிகொள்ளச் செய்தது. இது விலங்கு. இது வெறுந்தசை. இது குருதிப்பை. பிறிதொன்றல்ல. இதற்கு உறவில்லை. இது அறியும் நெறியென்று ஏதுமில்லை. ஒருகணம் என் கைபிழைத்தால் என் குருதி அள்ளிக் குடிப்பது. என் கை ஓங்குமென்றால் என் கையில் வெஞ்செம்மைவிழுதென வழியும் வெற்றி. கொல்! கொல்! அறை! அறை! இக்கணம். இக்கணமே வெற்றி. இக்கணம் அவன் இறப்பது நீ வாழ்வதற்கென்று தெய்வங்கள் அளிக்கும் ஆணை. பிறிதொன்றல்ல. இது போரல்ல. வெற்றியும் தோல்வியும் அல்ல. இருத்தலும் மறைதலும் மட்டுமே. அறைக! அறைக! கொல்க! கொல்க!

அவன் சொல்லனைத்தும் அறைகளாக துருமசேனன் மேல் வீசி மண்ணில் அறைபட்டன. கையூன்றி புரண்டு எழுந்து தன் கதையால் அவனை அறைந்தான் துருமசேனன். அந்த அறை தளர்ந்திருந்தது. அத்தளர்வே சுதசோமனை விசைகொள்ளச் செய்தது. துருமசேனனின் விழிகளை அருகிலென கண்டான். அவை முற்றிலும் அறியாதவையாக இருந்தன. வெற்று ஒளிகொண்டவை. ஒரு சொல்லும் நில்லாதவை. கொல், கொல், கொல் என அவையும் கூறின. அவன் துருமசேனனின் கதையை அறைந்து அது தெறித்து விலகிய இடைவெளியில் மீண்டுமொருமுறை அறைந்து அவன் நெஞ்சக்கவசத்தை உடைத்தான். அடுத்த அறையை துருமசேனன் ஒழிய மீண்டுமொரு அறையால் அவன் உடலை விதிர்த்து செயலிழக்கச் செய்தான். அறைகாத்து மெய்ப்புகொண்டு காத்திருந்தது துருமசேனனின் உடல். கரிய தோலில் விலாவெலும்புகளின் அலை. தோல் மெய்ப்புகொண்டு மழைத்துளி விழுந்த மென்நிலப்பரப்பெனத் தெரிந்தது.

சுதசோமன் இறுதி அறைக்கென அவன் கதை தூக்கியபோது கொம்பொலி எழுந்தது. துருமசேனன் “தந்தை!” என்று கூவினான். அச்சொல் சுதசோமனை உளம்நிலைக்கச் செய்தது. அப்படியென்றால் என் உள்ளம் இதுவரை ஓடிக்கொண்டா இருந்தது? செயலே சொல்லென ஓடும் அந்தப் பெருக்கே என் உள்ளமா என்ன? மீண்டுமொரு கொம்பொலி எழுந்தது. “தந்தையர் இருவர்!” என்றபடி வெறிகொண்டெழுந்து முன்னால் வந்தான் துருமசேனன். எவருடைய தந்தை? அச்சொல். தந்தை! அச்சொல் ஏன் எழுந்தது? தந்தையர்! துருமசேனன் வெறிகொண்டு கூச்சலிட்டபடி கதையை வீசி முன்னெழுந்தான். அந்தப் புத்தூக்கத்தை எதிர்பாராத சுதசோமன் பின்காலடி எடுத்துவைத்தான். மேலும் மேலுமென அறை வந்து அவன் முன் காற்றொலியுடன் சுழன்று சென்றது. அதன்மேல் வந்து பட்ட அம்பொன்று உலோகக் கூரொலியுடன் சிதறியது. சுதசோமனின் காலடியில் யானைச்சடலம் ஒன்று தடுக்க அவன் இயல்பான அசைவுடன் பாய்ந்து பின்னால் சென்று அரைமண்டிலத்தில் அமைந்தான். யானையைக் கடந்து பாய்ந்து அவன் அருகே வந்து அமரும் பறவை என முன்கால்மண்டிலத்தில் நிலம் பதிந்த துருமசேனன் அதே விசையுடன் அவன் தலையை நோக்கி கதையை வீசினான்.

துருமசேனனின் அறைவந்து அவன்மேல் படுவதற்குள் பின்னிருந்து கொக்கியால் அவன் கதை கைப்பற்றப்பட்டது. பெருங்கதையைச் சுழற்றி ஓங்கியறைந்த கடோத்கஜனின் தாக்குதலை பின்னால் தாவிச்சென்று ஒழிந்தான் துருமசேனன். அந்த அறைசென்று பட்ட தேர் நொறுங்கி அதிலிருந்த வீரனின் குருதி உடைந்த குடத்து நீரெனத் தெறிக்க அப்பால் குவிந்தது. புரவிகள் கனைத்தபடி  நிலையழிந்தன. துருமசேனன் இன்னொரு  வீரனின் கதையை பெற்றுக்கொண்டு உறுமியபடி முன்னால் வந்து கடோத்கஜனை எதிர்கொண்டான். ஓரிரு அறைகளுக்குள்ளாகவே அவனால் கடோத்கஜனை தடுக்கவியலாதென்று சுதசோமன் உணர்ந்தான். அவனுக்குப் பின்னால் முரசுகள் ஒலிக்க இருபுறத்திலிருந்தும் கௌரவர்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். அவர்களை தனியொருவனாக கடோத்கஜன் எதிர்க்க அவனுக்குத் துணையாக இடும்பர்கள் முழவொலி எழுப்பியபடி சூழ்ந்தனர்.

சுதசோமன் தேரிலேறிக்கொண்டு கைகளை வீசினான். தேர் பின்னால் சென்றது. அவன் தேரிலிருந்து இறங்க அணுகிவந்த மருத்துவர்கள் அவன் கவசத்தை கழற்றினர். உள்ளே குருதி நிறைந்திருந்தது. உடைந்த இரும்புக்கவசம் தசையில் கிழித்திறங்கியிருந்தது. அவர்கள் அதை மருந்துவைத்து கட்ட “துணைசெல்க! பீமனுக்கு துணைசெல்க! அவர் சூழப்பட்டிருக்கிறார்!” என்று அறைகூவியது முரசு. அவன் மருத்துவர்களை விலக்கியபடி ஓடிச்சென்று தேரிலேறிக்கொண்டு “தந்தையை நோக்கி… தந்தையை நோக்கி!” என ஆணையிட்டான்.

தேரிலிருந்து பொறுமையிழந்து அவன் துடித்துக்கொண்டிருந்தான். அவன் செல்வதை முழவுகள் அறிவித்தன. “விரைக! விரைக!” என அவன் தேர்க்காலில் குறடால் ஓங்கி உதைத்தான். அப்பால் சர்வதன் வந்துகொண்டிருப்பதை கேட்டறிந்தான். தொலைவிலேயே அவன் பீமனின் தேரின் கொடியை பார்த்துவிட்டான். கௌரவப் படையின் மிக ஆழத்தில். வண்டுநுழைந்த தேனீக்கூடு என அங்கே கௌரவப் படை கொந்தளித்துக்கொண்டிருந்தது. முழவுகள் உறுமின. முரசுகள் வானிலிருந்தென ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. சுதசோமன் தன் கதையை எடுத்துச் சுழற்றி அறைந்து புரவிகளையும் தேர்களையும் உடைத்தபடி பீமனை நோக்கி சென்றான். அப்பால் கடோத்கஜனும் சூழப்பட்டிருப்பதை அறிவித்தன முரசுகள்.

“செய்தி சொல்க! செய்தி சொல்க!” என அவன் கழையனிடம் ஆணையிட்டான். அவன் மேலெழுந்து இறங்கி “அரசே, யானை முற்றிலும் சூழப்பட்டுள்ளது. அப்பால் இளைய பாண்டவர் அர்ஜுனரை பீஷ்மர் எதிர்கொள்கிறார். அபிமன்யூவை ஜயத்ரதர் நேரிடுகிறார். சுருதகீர்த்தியை அஸ்வத்தாமரின் படைகள் தடுத்துள்ளன. சாத்யகியும் பூரிசிரவஸும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் துரோணரும் திருஷ்டத்யும்னரும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்திலும் போர் விசையுச்சம் கொண்டு நிகழ்கிறது. மத்தகம் சூழப்பட்டுள்ளது. துதிக்கை வளைத்து பற்றப்பட்டுள்ளது. கால்கள் சேற்றில் புதையுண்டிருக்கின்றன. யானை அசைவிழந்துள்ளது” என்றான்.

சுதசோமன் அணுகியதும் பீமனைச் சூழ்ந்து நின்றிருந்த கௌரவர்களில் சலன், சத்வன், சித்ரன் ஆகியோர் அவனை நோக்கி திரும்பினர். அவர்களின் ஓசைகேட்டு ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன், துர்தர்ஷன் ஆகியோரும் அவனை நோக்கி கதைகளுடன் கூச்சலிட்டபடி பாய்ந்து வந்தனர். சுதசோமன் அவர்களை அம்புகளால் எதிர்த்தபடி அணுகி அதே விசையில் தேரிலிருந்து பாய்ந்தெழுந்து சமனின் தோளில் அறைந்தான். அலறியபடி அவன் தேர்த்தட்டிலிருந்து விழுந்தான். கதையுடன் பாய்ந்து தன்னை நோக்கி வந்த ஜலகந்தனை அறைந்து வீழ்த்தினான். தரையில் நின்ற அவனை விந்தனும் அனுவிந்தனும் துர்தர்ஷனும் சூழ்ந்துகொண்டனர். கதைமுழைகள் அவனைச் சூழ்ந்து பறந்தன. விழியில் உளம் முற்றிலும் கூட அவன் அவற்றின் சுழற்சியை அணுவணுவாக கண்டான். நெளிந்தும் அமர்ந்தும் பாய்ந்தெழுந்தும் அவற்றை ஒழிந்தான்.

பின்பக்கம் முரசொலி எழுந்தது. சுதசோமன் கதைச் சுழற்சியில் திரும்பியபோது துரியோதனன் கதையைச் சுழற்றியபடி யானையொன்றின்மேல் அமர்ந்து வருவதை கண்டான். யானையின் கழுத்துச்சரடை வலக்கையால் பற்றிக்கொண்டு இடக்கையால் கதையைச் சுழற்றியபடி காற்றில் பறந்தணைவதுபோல வந்த துரியோதனனின் கதையுடன் பீமனின் கதை வெடிப்பொலியுடன் முட்டிக்கொண்டது. ஒரு கணத்தில் இருவரும் நேருக்குநேர் என போரிலீடுபட்டிருந்தனர்.

வெண்முரசின் கட்டமைப்பு

முந்தைய கட்டுரைகுடும்பத்தில் இருந்து விடுமுறை
அடுத்த கட்டுரைமாந்தளிரே -கடிதங்கள்