மதுரையும் கடலும்

madurai

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா.

திசைதேர் வெள்ளம் முழு  சீற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. அதைக் குறித்து தனியாக எழுதுகிறேன்.

இன்று அவசர அலுவலாக மதுரை வந்தேன், நாளை இரவே சிங்கை திரும்புகிறேன்.
குமரி நில நீட்சி (சு.கி.ஜெயகரன்) வாசித்தபடி பயணம். கடல் கொண்ட மதுரைகளை வாசித்த போது கொற்றவை நினைவில் எழுந்தது.
mannar
இம்முறை சிங்கையிலிருந்து நேரடியாக மதுரை செல்லும் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தேன். இலங்கை திரிகோணமலைக்கு வடக்கே நுழைந்து வவுனியா வழியாக மன்னார்-ராமேஸ்வரம் வரை நீலமும் பச்சையுமாக மேகங்கள் ஆங்காங்கே நிழல் தெளித்து நகர மிக அழகான பயணம். மன்னார் முதல் தனுஷ்கோடி வரை திட்டு திட்டாக கடல் பகுதி ஆழமற்றிருப்பது நீல வண்ண வேறுபாடுகளில் தெரிந்தது. தேவிபட்டணம் பகுதியில் நம் நிலம் தொட்டு, பசுமையின் ஒரு துளித் தீற்றலும் இல்லாத முகவை, சிவகங்கை மாவட்டங்கள் மேல் பறந்தபோது, பாலை நிலம் மேல் சுற்றும் வல்லூறென மனதில் ஒரு பெரும் வெறுமை சுழன்றது.
madurai2
தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னால் சில பசிய திட்டுகள். ஒரு நதி பயணித்ததன் முன்னாள் நினைவுகளென வைகை வற்றி முதிர்ந்து நரம்போடிய முதியவளின் கரமென மதுரையை வருடிச் செல்கிறாள்.
பல கோடி ஆண்டுகள் பனியுகத்திலிருந்து, பின்னர் கண்டங்கள் நகர்ந்து, மனித இனம் தோன்றி,சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, வளர்த்த கதையை பூதாகரமாக பிரம்மஞானசபை முதலாக வளர்த்தெடுத்து, மதுரைகளை கடல்கொண்டு, மெல்ல மெல்ல அரைப்பாலை நிலம் வந்து தரையிறங்குகையில் இன்றைய மதுரையின் ஆர்ப்பாட்டங்கள் (இமானுவேல் சேகரன் நினைவு தினம் என மதுரை கலகலத்திருக்கிறது, பல இடங்களில் பள்ளி விடுமுறை!) கண்டு மனம் திகைத்துப் போயிருக்கிறது.
முன்பெல்லாம் தேவர் ஜெயந்தி மட்டும்தான் பதட்ட நிலை இருக்கும். இப்போது அனைவரும் தொடங்கியிருக்கிறார்கள், வ.உ.சிக்கும் ஊர்வலங்கள் நடைபெறுகிறதாம். இன்றைய மதுரையை கடல் கொள்ள வழியில்லை, ஒருவேளை விழுங்கினால் எதை வளர்த்து வைத்திருந்ததாக சொல்லும் வரலாறு!!
மிக்க அன்புடன்,
சுபா
முந்தைய கட்டுரைநம்பிக்கை -கடிதங்கள்-2
அடுத்த கட்டுரை1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா