«

»


Print this Post

இறைவிருப்பம்


கவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ”அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது…அபச்சாரம்…பாவம்”. வயலார் ராமவர்மா அமைதியாகச் சொன்னார் ”இது என் நேர்ச்சை…மேற்குவாசலில் நின்று இரண்டு சிகரெட் பிடிப்பேன் என்று வேண்டிக்கோண்டிருந்தேன்…”

வயலார் ராமவர்மாவின் குணம் அதில் உள்ளது. கவிஞன் என்ற நிலையில் எதற்கும் கட்டுப்படாத தன்மை. மீறிச்செல்லும் ஆணவம். கூடவே கணக்கு. உள்ளே சென்றிருக்கும் அம்மா திரும்பி வர எவ்வளவு நேரமாகும் என்று கணித்து இரண்டு சிகரெட் என்று சொல்கிறார்! அவரைப்பற்றி மலையாள இயக்குநர் பவித்ரன் சொன்னாராம் ”சிலர் தனியாக சீட்டுவிளையாடுவார்கள். சிலர் அதிலும் திருட்டு ஆட்டம் ஆடுவார்கள்!”

 

 

மலையாளத் திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகியவர்களுக்கு வயலார் ராமவர்மா என்ற பேர் நினைவில் இல்லாமல் இருக்காது. தமிழில் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன் -டி.எம்.சௌந்தரராஜன் கூட்டு போல மலையாளத்தில்  வயலார் ராமவர்மா- தேவராஜன்- கெ.ஜெ.ஜேசுதாஸ் ஜோடி மிகப்பிரபலமானது. அறுபது எழுபதுகளில் அவர்கள் மலையாளத்திரையிசையில் ஒரு பெரிய அலையாக எழுந்தார்கள். பெரும்பாலான மலையாளிகள் இளமைக்கால இனியநினைவாக மீட்டும் பாடல்கள் இவர்களால் உருவாக்கப்பட்டவையே. வயலார் எழுதிய [ சலீல் சௌதுரி இசையில் மன்னாடே பாடிய]ஒரு பாடலையாவது தமிழர்கள் பாடியிருக்கிறார்கள் — மானஸ மைனே வரூ, மதுரம் நுள்ளி தரூ என்ற செம்மீன் படப்பாடல்.

வயலார் ராமவர்மா கண்ணதாசனின் நெருக்கமான நண்பர். இருவருக்கும் பொதுவான பல வாழ்க்கைக்கூறுகள் இருந்தன. மது மாது தட்டுகெட்ட வாழ்க்கை. இருவரும் சேர்ந்து மதுவருந்தும் மாதுக்களை கோண்டாடும் வழக்கமும் இருந்தது. ஆனால் கண்ணதாசனின் பாடலுக்கும் வயலார் ராமவர்மாவின் பாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கண்ணதாசனிடம் ஒரு தத்துவார்த்தத் தன்மை உண்டு. அது அவரது பாடல்களுக்கு ஒரு செவ்வியல்தன்மையை அளித்தது. மாறாக வயலார் ராமவர்மா கற்பனாவாதத்தில் ஊறியவர்.

வயலார் ராமவர்மாவின் கவிதைகள் வைரங்களை செங்கற்களாக அடுக்கிக் கட்டி மேக விதானம் இடப்பட்ட மாளிகை போல மண்ணில் சற்றும் கால்பாவாத கற்பனாவாத எழுச்சிகள். காமமும் இயற்கை வருணனையும் கற்பனையின் பொன்னிலத்தில் ஒன்று கலந்தவை. பாடல் என்ற வடிவில் அவற்றுக்கு இருக்கும் கனவுத்தன்மையே பெரும் கவற்சியாக ஆகிறது. அத்துடன் அழகிய சம்ஸ்கிருதச்சொற்கள் கலந்து கம்பீரமான ஒலியழகை அளிக்கின்றன.

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே
ஜோதிர்மயியாம் உஷஸினு
வெள்ளீச்சாமரம் வீசும் மேகங்ஙளே
சுப்ர·பாதம் சுப்ர·பாதம்!

[நீலமலையின் தோழிகளே, சுடர்முகத்தவர்களே!
ஒளிவடிவாம் புலரிமகளுக்கு
வெள்ளிச்சாமரம் வீசும் மேகங்களே!
நல்விடியல்! நல்விடியல்!]

என்று அவரது கவிதை கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத சுலோகம்போலவே ஒலிக்க்கும். சலீல் சௌதுரி தவிர பிறர் அவரது வரிகளுக்குத்தான் இசையமைத்திருக்கிறார்கள்.  இசைக்குப் பாடல்கள் அமைக்கும்போதுகூட

”இவிடே காற்றினு சுகந்தம்?
இதிலே போயொரு வசந்தம்!
வசந்தத்தின் சுவர்ண தேரில் இருந்நதாரு?
வாஸர ஸ்பனத்தின் தோழிமாரு!

[இங்கே காற்றுக்கு நறுமணம்?
இவ்வழியாகச் சென்றதொரு வசந்தம்!
வசந்தத்தின் பொற்தேரில் இருந்தது யார்?
இளமைக்கனவின் தோழியர்!]

என்று சகஜமாக நகர்ந்தது அவரது கவிதை. காமத்தை பலசமயம் அத்துமீறிக்கூட அவர் எழுதியிருக்கிறார். அதை சம்ஸ்கிருதம் மறைத்துவிடும். ‘ஒவ்வொரு மாமிசமலரும் இதழ்விட்டு விழித்தெழும் இந்த இரவில்…’,  ‘ஈர உடையணிந்து நீ பூஜைக்கு வருகையில் நீலக்கார்வண்ணனாக நிற்பேன் நான்’ போன்ற வரிகளை சாதாரணமாக அவர் கவிதைகளில் காணலாம். நிலவு அவருக்கு பெரியதோர் படிமம். ஓடம், காயல், நிலவு மூன்றும் கலந்த ஒரு காட்சி சித்திரம் அவரது பல பாடல்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. ‘எத்தனை கறந்தாலும் அகிடு வற்றாத ஒரு கருநீலப் பெரும்பசு’ அவருடைய நிலாவானம்.

சமீபத்தில் வயலார் ராமவர்மாவின் மனைவி பாரதி தம்புராட்டி கணவரைப்பற்றி எழுதிய ஓரு சிறு நூலைப் படித்தேன். [இந்திர தனுஸின் தீரத்து’.. ஸைந்தவ புகஸ் ]  அவர் எழுத்தாளர் அல்ல. ஆகவே சும்மா எழுதிச்செல்கிறார். வர்ணனைகள் இல்லை. நுண்விவரிப்புகள் இல்லை. வெறும் தகவல்கள் , நினைவுகள். வயலார் 1975ல் தன் 48 ஆவது வயதில் வயலார் ராமவர்மா மறைந்தார். மறைவில் இருந்து தொடங்குகின்றன நினைவுகள். சமீபத்தில் இத்தனை உள்சுழிகள் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை வாசிக்க நேர்ந்ததில்லை.

திப்புசுல்தான் வடகேரளத்தை ஆக்ரமித்தபோது உயிர்தப்பி தென் கேரளத்திற்கு குடிபெயர்ந்த பல அரசகுடும்பங்களில் ஒன்று வயலார் ராமவர்மாவின் குடும்பம். இவர்கள் ஆலப்புழா மாவட்டத்தில் சேர்த்தலை அருகே வயலார் என்ற கிராமத்தில் குடியேறினார்கள். ராகவப்பறம்பு என்பது குடும்பப்பெயர். மன்னர் கொடுத்த நிலபுலன்கள் இருந்தன.

அன்றைய வழக்கப்படி குடும்ப காரணவரான தாய்மாமனின் கட்டுப்பாட்டில் இருந்தன குடும்பமும் சொத்தும் அனைத்தும். வயலார் ராமவர்மாவின் அம்மா தன் அண்ணனை எதிர்த்துப் பேசத்தெரியாதவர். ஆகவே மொத்த சொத்தும் தாய்மாமாவால் ஆளப்பட்டது. பெரும் செல்வம் நடுவே கடுமையான வறுமையில் வாழ்ந்தார் அன்னை.  திப்புசுல்தான் படையெடுப்புக்குப் பின்னர் அரசகுலப்பெண்கள் வெளியே நடமாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது அவரைக் கல்யாணம் செய்தவர் ஒரு நம்பூதிரி. அவர் வருடத்தில் நாலைந்துமுறை மட்டுமே வந்துசெல்வார்.

வயலார் ராமவர்மாக்கு நான்குவயது நடக்கும்போது அவரது அப்பா இறந்தும்போனார். விதவையான அம்மா தன் மகனை பிரளயத்தில் கிடைத்த தெப்பத்தை அணைத்துக்கொள்வது போல பிடித்துக்கொண்டு வாழ்ந்தார். அவருக்கு மகனைத்தவிர வெளியுலகமே இல்லை. தாய்மாமன் தன் மைந்தர்களை ஆங்கிலக்கல்வி கற்க அனுப்பியபோது ராமவர்மாவை செலவில்லாத சம்ஸ்கிருதக் கல்வி கற்க அனுப்பினார். அரசகுல வாரிசானா அன்னை இரவுபகலாக தென்னைஓலைக்கீற்றுகள் முடைந்து பணம் சேர்த்து மகனை ஆங்கிலம் கற்க அனுப்பினார்!

இருபது வயதிலேயே கவிஞராக அறிமுகம் ஆனார் வயலார் ராமவர்மா. கேரளத்தில் வயலார் ஒரு முக்கியமான இடம். அங்குள்ள புன்னப்றா- வயலார் கிராமங்களில் விவசாயிகள் நில உடைமையாளர்களுக்கு எதிராக அணிதிரண்டார்கள். கலவரம் வெடித்து பலர் கொல்லபப்ட்டார்கள். ராமவர்மாவும் அந்த போராடத்த்தால் உணர்ச்சிகொண்டு கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ்டுக் கவிஞராகவே அவர் அறிமுகமானார். அன்று கம்யூனிஸ்டுக் கட்சி நாடகங்கள் மூலம் கிராமப்புறங்களில் கருத்தியல் ரீதியாக பரவி வந்தது. அதில் பெரும் பங்காற்றியது கெ.பி.ஏ.ஸி என்ற நாடகக்குழு. அதை நடத்தியவர் தோப்பில் பாசி.

கே.பி.ஏஸியின் நாடகங்களுக்கு இசையமைத்தவர் தேவராஜன். அப்படித்தான் தேவராஜன்,வயலார் ராமவர்மா கூட்டு உருவாகியது. அவர்கள் உருவாக்கி கெ.பி.ஏசி.ஜார்ஜ் பாடிய ”பலிகுடீரங்களே” என்ற பாடல் இன்றும் கேரள கம்யூனிஸ்டு இயக்கத்தின் தேசியகீதம் போன்றது. கே.பி.ஏ.சியின் நாடகப்பாடல்கள் இன்று கேரளப்பண்பாட்டின் அடிப்படையாக ஆகிவிட்டவை. பின்னர் கே.பி..ஏ.சி அப்படியே சினிமாவுக்குச் சென்றது. தோப்பில்பாசிதான் மலையாள திரைக்கதையாசிரியர்களில் முன்னோடி. தேவராஜன் வயலார் ராமவர்மா ஆகியோரும் திரையின் நட்சத்திரங்கள் ஆனார்கள். கெ.பி.ஏ.சியின் பல நடிகர்கள் புகழ்பெற்றார்கள். கெ.பி.ஏ.சி லலிதா அவர்களில் இன்றும் நடிப்பவர்.

வயலார் ராமவர்மாவுக்கும் அம்மாவுக்குமான உறவின் விசித்திரங்களை தொட்டுத்தொட்டுச் செல்கிறது பாரதியம்மாவின் குறிப்புகள். அம்மாவில் நிழலில் வளர்ந்தவர் வயலார். அம்மா சொல்லை ஒரு கணமேனும் தட்டமுடியவில்லை அவரால். அம்மாவுக்கு தன் மகனை எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. சற்று கூட. வயலார் ராமவர்மா பிரபல மலையாள எழுத்தாளர் காரூர் நீலகண்ட பிள்ளையின் சகோதரியை மணக்க விரும்பினார். ஆனால் அம்மாவுக்கு ஒரு நாயர் பெண்ணை அவர் மணப்பது பிடிக்கவில்லை. ஆகவே அந்த எண்ணத்தையே உதறிவிட்டார்.

அம்மாவின் கூற்றுக்கு இணங்க பாரதியின் அக்காவைத்தான் முதலில் மணம் புரிந்தார் வயலார் ராமவர்மா. கிட்டத்தட்ட நான்குவருடங்கள் கழித்துத்தான்தான் அம்மா தன் மகனுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இரவில் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டுப் படுக்கப்போகும்முன்பு தான் வீட்டு விலக்காகிவிட்டதாகச் சொல்வது பாரதியின் அக்காவின் வழக்கம். அதை சந்தேகப்பட்ட அம்மா அவளை மிரட்டிக்கேட்கும்போது உண்மை வெளியாகிறது. அவளுக்கு மாதவிலக்கே வருவதில்லை. அவளால் தாய்மை அடைய முடியாது.

மனைவியை ஆழமாக நேசித்த வயலார் ராமவர்மா தன் அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப அவளை விவாகரத்து செய்கிறார். அவள் அதற்குச் சம்மதிக்க மறுக்கிறாள். அழுகிறாள். ஆனால் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார்கள். அவளை பிறந்தகத்துக்குக் கொண்டுவந்து விடுவிடுகிறார்கள். அங்கே  உள்ளறைகளின் இருட்டில் வாழ்ந்து அவள் மறைந்தாள். பாரதியை வயலார் இரண்டாவதாக மணக்கவேண்டும் என்று அம்மா ஆணையிடுகிறாள். வயலார் ராமவர்மாவை எண்ணி காத்திருந்த காரூர் நீலகண்டபிள்ளையின் சகோதரி மீண்டும் திருமண ஆலோசனையுடன் வந்தபோதும் அம்மா சம்மதிக்கவில்லை.

பாரதியை வயலார் ராமவர்மா மணக்கிறாள். பாரதிக்கு வயலார் ராமவர்மாவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறுவழியே இல்லை. வேறு ஒரு பெண் வயலார் ராமவர்மாவை மணந்தால் அவரை தன்னால் பார்க்கக்கூட முடியாது போய்விடுமே என்று அக்கா அழுதுகொண்டு சொன்னதனால் பாரதி சம்மதிக்கிறாள். ஒரு முறை மூத்தமனைவியை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து விட்டு வந்த வயலார் பாரதியிடம் அதைப்பற்றிச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

அப்போது வயலார் ராமவர்மா திரையுலகில் உச்சத்தில் இருந்தார். எப்போதாவது வீட்டுக்கு வருவதோடு சரி. வந்தால் அம்மாவுடன் மட்டுமே பேசமுடியும். அவர் தன் மனைவியுடன் பேசுவது வெளியே செல்வது எதுவுமே அம்மாவுக்குப் பிடிக்காது. பாரதி வயலார் ராமவர்மாவுக்கு சமைத்துப்போடக்கூட அம்மா சம்மதிப்பதில்லை. கடிதங்கள்கூட வயலார் ராமவர்மா அம்மாவுக்குத்தான் எழுதினார்.  பெயர்கூட எழுதமாட்டார். ‘அம்மா, ராகவப்பறம்பு, வயலார், சேர்த்தலா’ என்றுதான் விலாசம் எழுதுவார். தொலைபேசியில் தினமும் அம்மாவிடம் பேசுவார் வயலார் ராமவர்மா, ஒருமுறைகூட மனைவியிடம் பேசியதில்லை.

சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடந்து வந்தார் பாரதி. நினைவில் சில பயணங்கள் சில அபூர்வ தினங்கள் அல்லாமல் வயலார் ராமவர்மாவுடனான வாழ்க்கையின் ஒளிமிக்க கணங்களே இல்லை. சென்னையிலேயே தங்கிய வயலார் ராமவர்மா குடிகாரர் ஆனார். பெண்பித்தராக அலைந்தார். அவரது பெண்பித்து பற்றி பாரதி கேள்விப்படுகிறார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, அவர்களெல்லாம் அவரது சகோதரிகள்தான் என்று கற்பனை செய்துகொண்டேன் என்கிறார். வேறு என்ன செய்ய முடியும்?

வயலாரை பாரதி நேசித்தாரா? ஆமாம் என்று சொல்கிறார் பாரதி. ஏனென்றால் நேசித்தாகவேண்டும். வேறு உலகமே கிஐயாது. நேசிக்கும்படியாக அவர் வளர்க்கபப்ட்டிருக்கிறார். அவரன்றி நினைவுகள் கூட இல்லை. ஆனால் அது நேசம்தானா? வெறும் கற்பனையா? சொல்ல முடியாது. என் வாழ்க்கையை நரகமாக்கிய வயலாரின் அன்னையை முதுமைக்காலத்தில் நன்றாகவே புரிந்துகொள்வதாகவும், அவர்மீது நேசமும் இரக்கமும் மட்டுமே மனதில் எஞ்சியுள்ளது என்றும் சொல்கிறார்.

குடி வயலார் ராமவர்மாவை வதைத்தது. அதை விட்டுவிட ஒவ்வொருநாளும் விரும்பினார். அதற்காக பலமுறை சபதம் எடுத்தார். புத்தாண்டுகள் தோறும் டைரியில் எழுதிவைத்தார். மனைவியை நேசிக்க முடியாமையைப்பற்றி புலம்பி எழுதினார். ஆனால் அந்த மரணப்பாதையில் சென்றுகொண்டே இருந்தார். அவரை நினைத்து அம்மா மனம் புழுங்கினார். அவருக்காக கோயில்தோறும் வேணிக்கொண்டார்.

ஒருமுறை குடி மூத்து நிற்க முடியாத வயலார் ராமவர்மா தன் வேலையாளிடம் மேலும் மது வாங்க பணம் எடுத்துக் கொடுக்கும்படி பாரதியிடம் சொல்ல பாரதி அழுதபடி மறுக்கிறார். அம்மா வெளியே வந்து ”நீ சீதனம் கொண்டுவந்த பணம் அல்ல அது. அவன் சம்பாதித்த பணம்… போய் எடுத்து கொடுடீ”என்று சீறினாள். பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு பாரதி வந்து பார்த்தபோது அம்மா அறைக்குள் கதறி அழுது கொண்டிருந்தாள்.

”பாரதீ நீ கவலைப்படாதே, அம்மாவின் காலம் முடிந்தபின் நாம் நிம்மதியாக வாழலாம்”என்று போதையில் மனைவியிடம் சொல்லி கண்ணீர்விடுகிறார் வயலார் ராமவர்மா. ஆனால் அம்மாவின் கண்முன் அவர் இறந்தார். ஈரல் கெட்டுவிடிருந்தது. மரணப்படுக்கையில் ”என்னை வேலூருக்குக் கொண்டு செல்லுங்கள்…”என்று கதறினார். கசக்கவில்லை வாழ்க்கை ”இந்த அழகிய நிலத்தில் ஆசை தீர வாழ்ந்து மறைந்தவர்கள் உண்டா?” என்று கேரளத்தைப்பற்றி பாடியவர் அவர்

அம்மா உடைந்துபோய்விடுகிறாள்.  சற்றே மனநலம் பாதிக்கப்பட்டது. தலையில் தண்ணீர் விடமுடியாது, ஜன்னி வரும் . ஆனால் பேரப்பிள்ளைகளை வளர்த்து மேலும் பல வருடங்கள் வாழ்ந்தாள். எத்தனை வீணான வாழ்க்கை. ஏன் அப்படி அது நிகழ்ந்தது?

வாழ்க்கையின் பெரும் புதிர்களை ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச்செல்கிறார் பாரதி. தனித்த வாழ்க்கையின் குரூரங்களை கண்ட அம்மா அதே வாழ்க்கையை ஏன் தன் மருமகளுக்குக் கட்டாயமாக்கினாள்? அம்மாவின் சொல்லை மகன் தட்டமாட்டான் என்று அறிந்திருந்தும் ஏன் மகனை குடிக்கக்கூடாது என்று அம்மா சொல்லவில்லை?

”சொல்லியிருந்தால் மகன் தட்டியிருப்பான் என்று அம்மாவுக்குத்தெரியும்”என்றார் லோகித தாஸ். ”ஓர் எல்லை உள்ளது. அந்த அம்மா அதை மீறிவிட்டார்”. வயலார் ராமவர்மா குடித்து அலைந்தது ஏன்? உள்ளூர அவர் ஏன் நிறைவில்லாதவர் ஆனார்? ”மறுக்கப்பட்ட அன்பை உலகில் எங்குமே மனிதன் கண்டுகொள்ள முடியாது…தேடித்தேடிச் சாகவேண்டும் என்பது விதி…”என்றார் லோகிததாஸ். பேரன்பால் தன் மகன் வாழ்க்கையைத் தின்று அழித்தார் அம்மா. பேரன்பால் தன்னை அம்மாவுக்கு பலிதந்தார் மகன்.

தன் சரிதையில் பாரதி ஜேசுதாஸைப்பற்றி மிகக் கடுமையாகச் சொல்கிறார். உயிருடன் இருந்தவரை ஜேசுதாஸ் வயலார் ராமவர்மாவின் இனிய தம்பியைப்போல இருந்தார். தாஸப்பன் என்றே வயலார் ராமவர்மா அவரைச் சொல்லிவந்தார். எத்தனையோ முறை ராகவப்பறம்புக்குவந்து தங்கி சாப்பிட்டிருக்கிறார். அம்மா அவரை தன் மைந்தனாகவே எண்ணிக்கொண்டிருந்தார். ஜேசுதாஸை திரையுலகில் கைபிடித்து தூக்கியவர் வயலார் ராமவர்மா.

ஆனால் வயலார் ராமவர்மா இறந்தபோது ஜேசுதாஸ் வரவில்லை. பலமுறை அவ்வழியாகச் சென்றும் ஒருதடவைகூட அம்மாவைச் சென்று பார்க்கவில்லை. அம்மா மரணப்படுக்கையில் இருந்தபோது ஒரு முறை ஜேசுதாசைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியனுப்புகிறார். அவர் வரவில்லை.

பின்னர் எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் — ஸி.அச்சுதமேனன் போன்றவர்கள் நிதிதிரட்டி வயலார் டிரஸ்ட் உருவாக்குகிறார்கள். கேரளத்தின் பெரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான வயலார் விருது அவர்களால் அளிக்கப்படுகிறது. அப்போது நிதிகேட்டு ஜேசுதாஸைச் சந்திக்கச் செல்கிறார்கள் .’குடித்து அழிந்த ஒரு ஆசாமிக்கு தர என்னிடம் பணமில்லை’ என்று சொல்லிவிடுகிறார் ஜேசுதாஸ். பின்னர் அதை பத்திரிகையிலும் சொன்னார்.

”நன்றிகெட்டத்தனம் மனிதவடிவம் எடுத்தவர் ஜேசுதாஸ். இன்று தொலைக்காட்சியில் அவர் சத்தியம் கருணை என்றெல்லாம் பேசுவதைக் கேட்க அருவருப்பாக இருக்கிறது’ என்று சொல்கிறார் பாரதியம்மா.

ஏன் ஜேசுதாஸ் அப்படிச் சொன்னார்? அதைப்பற்றிப் பேசும்போது ஒரு இதழாளர் சொன்னார் ”மிக எளிமையான காரணம்தான். ஜேசுதாஸ் ஒரு புர·பஷனலிஸ்ட். அவருக்கு இனி வயலார் தேவையில்லை” இன்னொருவர் ஜேசுதாசை நன்கறிந்தவர். ”பணம்தான் பிரச்சினை. பணம் செலவாகுமென தெரிந்தாலே ஜேசுதாஸ் விலகிவிடுவார்….வயலாரின் குடும்பம் வறுமையை அடைந்திருந்தது ஜேசுதாஸ¤க்குத்தெரியும்”

நான் வேறுமாதிரி சொன்னேன். ”குடிகாரரின் உள்ளம் விசித்திரமானது. வயலார் என்ன செய்தார் என்ன சொன்னார் என நாம் அறிய முடியாது. கால் நூற்றாண்டுக்காலம் தாண்டிவிட்டது… அவர்கள் நடுவே மிக மிகக் கசப்பான ஏதோ ஒன்று நடந்திருக்கலாம்”

”ஒன்றுமே நடக்காமல், ஒரு காரணமும் இல்லாமல், ஒரு ஆழமான மனமுறிவு நடக்காதா என்ன?”என்றார் லோகித தாஸ். ”நடக்கும். மனித உறவுகள் அப்படித்தான். மனிதவாழ்க்கை ஒரு கார்ணமும் இல்லாத ஒரு பெருங்குழப்பம். அதைத்தான் ஈஸ்வர ஹிதம் என்று சொல்லி கைகூப்புகிறார்கள் வாழ்க்கையை அனுபவித்து அறிந்தவர்கள்”

 

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://jeyamohan.in/1130