ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்

Jeyamohan UK visit 320

உலகத்தில் தொலைந்துபோனவை எல்லாம் கடலடியில் இருக்கும் என்பார்கள், இல்லாதவை அனேகமாக பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கும். பிரிட்டிஷார் இருநூறாண்டுக்காலம் உலகை ஆண்டனர். உலகைக் கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டிருந்தனர். அரியவை அனைத்தும் தங்களுக்கே என்னும் தன்முனைப்புடனும் இருந்தனர். ஆகவே லண்டனின் அருங்காட்சியகங்களில் உலகக் கலைச்செல்வங்களில் பெரும்பகுதி வந்து சேர்ந்தது.

லண்டன் புளூம்ஸ்பரி பகுதியிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் 80 லட்சம் அரும்பொருட்கள் உள்ளன. உலகில் உருவான முதல் தேசியப் பொது அருங்காட்சியகம் இது . 1753ல் அயர்லாந்து மருத்துவரனான   சர் ஹான்ஸ் ஸ்லோன் [Sir Hans Sloane]அவர்களின் சேமிப்புகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இது  1759ல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.  பிரிட்டிஷ் அரசு உலகமெங்கும் பரவுந்தோறும் இவ்வருங்காட்சியகம் கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. இயற்கைவரலாற்று அருங்காட்சியகம் போன்று பல தனி அருங்காட்சியகங்களாகப் பிரிக்கப்பட்டது. 1972 வரை தொல்நூல்களுக்கான காப்பகமும் நூலகமும் இதனுடன் இணைந்திருந்தன, அவை தனியாகப்பிரிக்கப்பட்டன.

Jeyamohan UK visit 232

எகிப்து, கிரேக்கம் , ரோம். மத்தியகிழக்கு, ஆசியா, தென்கிழக்காசிய பகுதிகளுக்கான தனித்தனியான வைப்புக்கூடங்கள், வரலாற்றுக்கு முந்தைய ஐரோப்பாவுக்கான கூடம், ஆப்ரிக்கா மற்றும் தென்னமேரிக்காவுக்கான கூடம் வரைச்சித்திரங்கள் மற்றும் அச்சுக்கான கூடம்,  , நாணயங்கள் மற்றும் பதக்கங்களுக்கான கூடம், ஆவணக்காப்பகங்கள் நூல் சேகரிப்புகள் என பல பகுதிகளாகப் பரந்திருக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஒரு மாபெரும் கலைக்களஞ்சியத்துக்குச் சமானமானது. அதை எந்த மானுடனும் எவ்வகையிலும் பார்த்து முடிக்கமுடியாது. நமக்கு ஆர்வமுள்ள சிறிய பகுதியை முன்னரே வரையறுத்துக்கொண்டு அவற்றை மட்டும் பார்த்துவிட்டு வருவதே உகந்தது. அதைக்கூட பலநாட்கள் சென்று பார்த்துத்தான் சற்றேனும் நிறைவுற அறியமுடியும்.

நான் ஆப்ரிக்கா, எகிப்து, ரோம் மற்றும் கிரேக்க வரலாறு சார்ந்த பொருட்களை பார்த்தேன்.  ஐரோப்பிய வரலாறு நமக்கு இந்திய வரலாற்றுக்குச் சமானமாகவே கற்பிக்கப்பட்டிருப்பதனால் பெரும்பாலான காலகட்டங்களை மிக அணுக்கமாக உணரமுடிந்தது. கிரேக்கப் பளிங்குச்சிலைகளின் எளிமையான நேர்த்தி, ரோமாபுரிச் சிலைகளின் மாண்பும் அலங்காரமும், மறுமலர்ச்சிக்கலைகளில் இருந்த சுதந்திரமும் தத்துவ உள்ளடக்கமும் என ஏற்கனவே வாசித்தவற்றை பொருட்களாக பார்த்துச்செல்வது கனவினூடாகக் கற்பதைப்போன்ற அனுபவம்.  எகிப்த்ய கலைப்பொருட்கள் ஏராளமாக இருந்தன. மிகத் தொடக்க காலத்திலேயே எகிப்தை பிரிட்டன் கைப்பற்றி துல்லியமாகப் புரட்டிப்போட்டு ஆராய்ந்துவிட்டிருக்கிறது. விதவிதமான தொன்ம முகங்கள் விழித்து நோக்கி அமர்ந்திருந்தன. தங்கள் இருப்பாலேயே இருக்குமிடத்தை ஆலயமாக ஆக்கவல்லவை.

Jeyamohan UK visit 245

அருங்காட்சியகங்களை சுற்றிநோக்குவதென்பது ஒரு பயனற்ற செயல் என்று சிலசமயம் தோன்றும். ஏனென்றால் நாம் முதலில் கிளர்ச்சி அடைகிறோம். ஆர்வத்துடன் பார்க்கிறோம். மெல்லமெல்ல உள்ளம் சலிக்கிறது. பின்னர் அரைக்கவனத்துடன் பார்த்துச்செல்கிறோம்.  முன்னரே நாம் பின்னணியை அறிந்து பார்க்கவிரும்பிய பொருளைப் பார்த்தால் மட்டுமே நினைவில் நிற்கிறது. பெரும்பாலானவை மிக விரைவிலேயே நினைவிலிருந்து அகன்றுவிடுகின்றன. ஏனென்றால் உள்ளம் தகவல்களை பதிவுசெய்துகொள்வதில்லை, அதனுடன் ஏதேனும் உணர்வு கலந்திருக்கவேண்டும். அதாவது சொல்வதற்குக் கதை இல்லாத எப்பொருளுக்கும் நம் அகத்தில் இடமில்லை.

ஆனால் அருங்காட்சியகங்கள் மீதான மோகம் ஏறித்தான் வருகிறது. அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் போன்ற பெருநகர்களில் மட்டுமல்லாமல் ராலே போன்ற சிற்றூர்களில் கூட நல்ல அருங்காட்சியகங்களைக் கண்டிருக்கிறேன். சிங்கப்பூர் அருங்காட்சியகமேகூட ஒரு பெரிய கலை-வரலாற்றுத் திரட்டுதான். இந்தியாவின் முக்கியமான அருங்காட்சியகங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலானவை வெறும்பொருட்குவைகள் என்றாலும் பலமுறை சென்று நோக்கியிருக்கிறேன். அருங்காட்சியகங்களை நம் ஆழம் நோக்கிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கு அது ஒரு ரகசியக் கிடங்கு. நான் கண்ட அருங்காட்சியகங்களிலிருந்து பொருட்களைப்பற்றிய நுண்மையான சித்திரங்கள் வெண்முரசு போன்ற ஒரு பெருநாவல்தொடரை உருவாக்கும்போது எங்கிருந்தோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். நவீனநாவலை ‘கலைக்களஞ்சியத்தன்மைகொண்டது’ என விமர்சகர்கள் சொல்வதுண்டு. அது ஒருவகை அருங்காட்சியகம் என்றும் சொல்லலாம்.Jeyamohan UK visit 216

விரிந்துபரந்த அருங்காட்சியகத்தில் எத்தனைக் கூட்டமிருப்பினும் நாம் தனியாக இருக்கமுடியும். எகிப்தியப் பிரிவில் கல்லால் ஆன சவப்பெட்டிகளில் இருந்த மம்மிகளுடன் தனித்து நின்றிருந்தபோது என்னுள் ஒரு நுண்திரவம் நலுங்கியது. ஆப்ரிக்க முகமூடிகளில் காலத்தை கடந்து உறைந்த வெறியாட்டு. செவியறியாமல் அவை எழுப்பும் கூச்சல். ரோமாபுரிச் சக்கரவர்த்தி டைபீரியஸின் மார்புருவச் சிலை அருகே நின்றிருந்தேன். நேரில்பார்ப்பதுபோன்ற சிலை. நரம்புகள்கூடத்  துல்லியமாகத் தெரியும் வடிப்பு. நோக்கி நின்றிருந்தபோது ஈராயிரமாண்டுகளைக் கடந்து அவரும் நானும் விழியொடு விழி நோக்கினோம். இன்றுவரை கனவில் வந்துகொண்டே இருக்கிறார் [இதை ஒரு பயிற்சியாகவே செய்துபார்ப்பதுண்டு. சிலைகளை பத்துநிமிடம் தனியாக மிக அண்மையில் நின்று முகத்துடன் முகம் நோக்கினால் கனவில் அந்த முகம் எழுவது உறுதி]

டக்ளஸ் ஆடம்ஸின் [Douglas Adams] புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரின் நூல்வடிவமான Hitchhiker’s guide to the galaxy என்னிடம் உள்ளது. அவ்வப்போது வாசிப்பது அந்நூல். அறிவியல்புனைகதைகளை பகடிசெய்யும் அக்கதைத் தொடரில் பிரபஞ்சச் செய்திகள் அனைத்தையும் தொகுத்தளிக்கும்  Encyclopedia galaxia என்னும் நூலை தயாரிக்கிறார்கள். பலகோடிப் பக்கங்கள் கொண்டது, ஆகவே பெரும்பாலும் பயனற்றது. அதில் ஒவ்வொரு கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோள்களுக்கு லட்சம் பக்கங்களுக்குமேல் அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு இரண்டு வார்த்தை- mostly harmless. லண்டன் அருங்காட்சியகத்தின் இந்தியப்பகுதி ஒப்புநோக்க பெரிதுதான். அதில் தென்னகத்தின் இடமும் குறிப்பிடும்படி உள்ளது. ஆனால் குறிப்புகள் பெரும்பாலும் சுருக்கமானவை, மேலோட்டமானவை

amaravati_stupa-759
அமராவதி ஸ்தூபம்

இந்தியப்பகுதியில் ஒரு சிறு கற்கோயிலையே பெயர்த்துக் கொண்டுசென்று வைத்திருக்கிறார்கள். கற்சிலைகள், செப்புச்சிலைகள். நடராஜர்கள், உமாமகேஸ்வரர்கள், நின்ற அமர்ந்த பெருமாள்கள். ஒவ்வொரு சிலையும் கைமுத்திரைகளாலும் உடல்நெளிவாலும் விழிகளாலும் பேசிக்கொண்டிருந்தது. காற்றில் நிறைந்திருந்தது உளமறியும் மொழி ஒன்று. உண்மையில் நம்மில் பெரும்பாலானவர்கள் உலகில் எங்கு சென்று நம் சிலைகள் அங்கிருப்பதைப் பார்த்தாலும் கொதிப்பதுண்டு. எனக்கு அவை அங்கே பாதுகாப்பாக இருப்பதும், கலைஆர்வலர்களால் பார்க்கப்படுவதும் நன்று என்றே தோன்றுகிறது. குப்பைக்குவியல்கள் போல இங்கே அவை போட்டுவைக்கப்பட்டிருப்பதைத்தான் அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உதாரணமாக சென்னை அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற அமராவதி ஸ்தூபியின் பளிங்குச்சிலைப் பகுதிகள் பல உள்ளன. புத்தர் தென்னகத்தில் அமராவதி வரை வந்தார் என்பது வரலாறு. நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது ஓர் அதிகாரியின் அறை அச்சிற்பங்களை வரிசையாக அடுக்கிஉருவாக்கப்பட்டிருந்ததை, அவற்றின்மேல் பொருட்கள் சாத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். லண்டன் அருங்காட்சியகத்தில் உலகுக்கே ஒரு செய்தியைச் சொல்ல அமர்ந்ததுபோல அமராவதியின் ஸ்தூபியின் சிலை இருப்பதைக் கண்டபோது எஞ்சியதும் இங்கே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே எழுந்தது.பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி காலின் மெக்கின்ஸி இடிந்துகிடந்த இந்த ஸ்தூபியை ஆராய்ந்து பதிவுசெய்தார். 1845ல் சர் வால்டர் எலியட் அதன் பகுதிகளை சென்னைக்குக் கொண்டுவந்தார். 1859ல் அதன் பல பகுதிகள் லண்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவை சென்னையில் இருந்தால் அழிக்கப்படும் என வால்டர் எலியட் எழுதியிருந்தார். இந்தியர்களை வெள்ளையர்கள் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

டைபீரியஸ்
டைபீரியஸ்

இந்தியர்  பலரும் தேசிய உணர்வுடன் திப்புசுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு பொம்மையை  பார்த்துச்செல்வதைக் கண்டேன். ஒரு வெள்ளையனை புலி கொல்வதுபோன்ற பொம்மை. அழகோ நுட்பமோ அற்றது. அதற்கு ஒரு கேலிக்குரிய வரலாற்றுப்பின்புலம் மட்டுமே உள்ளது

ஆனால் ஐரோப்பியச் சாமானியர்களுக்கு இந்தியக்கலை எவ்வகையிலும் பிடிகிடைக்கவில்லை என்றும் தெரிந்தது. அவர்கள் எகிப்து பற்றி நிறையவே அறிந்திருப்பார்கள். எகிப்தைப்பற்றி வரலாற்று நோக்கில் மட்டுமல்லாமல் திகில்,சாகசக் கதைகளாகக்கூட நிறைய எழுதப்பட்டுள்ளது. பிராம் ஸ்டாக்கர் கூட எகிப்து பற்றிய பரபரப்பு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதைவிட மம்மி வரிசை சினிமாக்களின் பாதிப்பு. ஆகவே அங்கே அவர்களுக்கு ஒரு பரபரப்பு இருந்ததைக் கண்டேன். இந்தியச் சிற்பங்கள் கல்லால் ஆன பொம்மைகள், வெறும் அணியலங்காரப் பொருட்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள்போல. அங்கே நாங்கள் மட்டுமே நின்று நோக்கி நடந்தோம்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள கலைச்செல்வம் விலைமதிப்புக்கு அப்பாற்பட்டது. இருநூறாண்டுகள் உலகை எடுத்து இங்கே கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.  அதைத் திருட்டு எனச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் அவர்கள் அப்படிக் கொண்டுவர முடியாத அனைத்துக் கலைமையங்களையும் பெரும்பொருட்செலவில் பாதுகாத்திருக்கிறார்கள். தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்தியா, பர்மா,தாய்லாந்தில் உள்ள ஆலயங்களையும் விகாரங்களையும் பழுதுநோக்கியிருக்கிறார்கள். மட்டுமல்ல, தங்கள் ஆட்சிக்குக் கீழே வராத டச்சு இந்தோனேசியாவிலுள்ள பரம்பனான் ஆலயவளாகத்தை சீரமைக்கவேண்டும் என கடும் அழுத்தத்தை அளித்து தாங்களும் மீட்புப்பணியில் பங்கேற்றிருக்கிறார்கள்

ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

கீழைநாட்டுச் செல்வம் தங்களுக்குரியது, அது தங்கள் சாகசம் வழியாகத் தேடி அடையவேண்டியது, வரலாற்றின் ஆழத்தில் தங்களுக்காகக் காத்திருப்பது என்னும் எண்ணம் பிரிட்டிஷாருக்கு உண்டு. அவர்களிடமிருந்து அது அமெரிக்கர்களுக்குச் சென்றது. அந்த எண்ணம் ஐரோப்பாவுக்கே பொதுவானது என்றாலும் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் சென்ற இடங்களை சூறையாடி அழித்தபின்னரே கொள்ளைப்பொருட்களை கொண்டுவந்தனர். பிரெஞ்சுக்காரர்களின் உளநிலையும் ஏறத்தாழ அதுவே. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சிசெய்ய நேரிட்டது ஒரு பெருங்கொடைதான், ஐயமில்லை.

ஆர்.எல்.ஸ்டீவன்ஸனின் Treasure Island இளமையில் பலராலும் படிக்கப்பட்ட நூல். இளைஞர்கள் புதையல்நிறைந்த ஒரு தீவைக் கண்டடையும் கதை. பிரிட்டிஷ் உளவியலின் மிகச்சரியான உதாரணம் அந்நாவல். சொல்லப்போனால் அந்த ‘கொள்ளை-சாகச’ மனநிலையை  ‘உலகை உரிமைகொண்டாடும்’ மனநிலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது. அதை முன்னோடியாகக் கொண்டு நூற்றுக்கணக்கான நாவல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பெரியவர்களுக்கான நாவல் என்றால்  King Solomon’s Mines (1885). சர். ரைடர் ஹகார்ட் அவர்களால் எழுதப்பட்டது [  Sir H. Rider Haggard.] சினிமாவாகவும் வந்துள்ளது.

அமெரிக்காவில் இன்றும் அந்த உளமரபு மேலும் மூர்க்கமாகத் தொடர்கிறது, ஜார்ஜ் லூக்காஸின் இன்டியானா ஜோன்ஸ் மிகச்சிறந்த உதாரணம். ‘புதையலைத் தேடி’ச் செல்லும் வெள்ளைக்கார ‘தொல்லியலாளர்’ [அவரை திருடர் என்று மேலும் கௌரவமாகச் சொல்லலாம்] அந்த பாரம்பரியச் சொத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யும் கீழைநாட்டு மக்களையும் தென்னமேரிக்கர்களையும் கொக்குகுருவிகளைப்  போல சுட்டுத்தள்ளி வெற்றிகரமாக ‘பொருளுடன்’ மீள்வதைப்பற்றிய படங்கள் அவை.

ki

புதையல்வேட்டை இன்றும் ஐரோப்பா, அமெரிக்காவில் வணிகசினிமா, வணிக வாசிப்பு, விளையாட்டுக்களில் மிகப்பெரிய கரு. ஆனால் இந்தியாவில் அதற்கு பெரிய மதிப்பில்லை. எந்தக் கதைக்கருவையும் நகல்செய்யும் தமிழ்சினிமா பலமுறை புதையல்கதைகளை எடுத்துள்ளது. பெரும்பாலும் வணிகத் தோல்விதான், மணிரத்னத்தின் திருடா திருடா வரை. அந்த உளவியலை நம் சினிமாக்காரர்களால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனால் அதை எடுத்தால் ஓடாது என அறிந்திருக்கிறார்கள். இன்னொருவர் சொத்தான புதையலுக்காக உயிரைப்பணயம் வைப்பதெல்லாம் நம் உள்ளத்துக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தோன்றுகிறது.

டிரஃபால்கர் சதுக்கத்தில் உள்ள தேசிய கலைக் காட்சியகம் [The National Gallery is an art museum]  இதைப்போல கலைப்படைப்புகளின் பெருங்களஞ்சியம். 1824 ல் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் 2,300 ஓவியங்கள் உள்ளன. சென்ற அறுநூறாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான ஓவியங்களில் பெரும்படைப்புகள் கணிசமானவை இங்குள்ளன. ஐரோப்பாவின் பெரும்பாலான அருங்காட்சியகங்கள் அரசர்களின் சேமிப்புகளிலிருந்து உருவாகி வந்தவை. இந்தக் கலைக்கூடம் பிரிட்டிஷ் அரசு 1824ல் கலைசேகரிப்பாளரான  ஜான் ஜூலியஸ் ஆங்கர்ஸ்டைன் [ John Julius Angerstein] அவர்களிடமிருந்து 38 ஓவியங்களை விலைகொடுத்து வாங்கி உருவாக்கியது. டைடன், ராஃபேல்,ரெம்பிராண்ட் போன்றவர்களை ரசிக்க குழந்தைக்குரிய விரிந்த கண் போதும். பழகிய அழகியல் கொண்ட அவை நேரடியாகவே கனவை விதைப்பவை. கிறித்தவ இறையியலும் ஓவிய அழகியலும் ஓரளவு தெரிந்திருந்தால் மேலும் அக்கனவு விரியும். குளோட் மோனே போன்ற ஓவியர்கள் நிலக்காட்சிகளுக்குள் நம்மைக் கொண்டுசெல்பவர்கள்.

j
John_Julius_Angerstein

இம்ப்ரஷனிச ஓவியங்களைப் பார்க்கையில் நாம் மீள மீள உணரும் வியப்பு ஒன்றுண்டு, நாம் இயற்கைக்காட்சிகளை எப்போதுமே பலவகையான விழித்திரிபு நிலைகளாகவே காண்கிறோம். காலையின் சாய்வெயில், உச்சிவெயிலின் வெறிப்பு, தூசுப்படலம், மழைத்திரை என. ஒருபோதும் நேர்விழிகளால் நாம் இயற்கையை ‘தெள்ளத்தெளிவாக’ பார்க்கும் தருணம் அமைவதில்லை. உண்மையில் அந்த திரிபை அல்லது திரையைத்தான் நாம் அழகு என உணர்கிறோம்.

ஆனால் சில ஓவியர்களை தனியாகப் பயின்றுதான்  அறியவேண்டியிருக்கிறது பால் செசான் நித்ய சைதன்ய யதிக்கு மிகப்பிரியமான ஓவியர். குருகுலத்தில் பல இடங்களில் செசானின் ஓவியங்களின் நகல்களைக் காணலாம். அவரைப்பற்றி நித்யா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். செசானின் ஓவியங்களில் ஒருவகையான  ‘நோட்டுப்புத்தகப் படங்களின் தன்மை’ எனக்குத் தோன்றியதுண்டு. அவை மிக அந்தரங்கமானவை, உணர்வுகளுக்கேற்ற வண்ணக்கலவையும் எளிமையான கற்பனையும் கொண்டிருப்பதனால் கலைத்தன்மை கொள்பவை என்பதை அறிந்தபின்னரே அவை நமக்கு  மெய்யாகத் திறப்பு கொள்கின்றன

மூல ஓவியங்களைப் பார்ப்பது மிகப்பெரிய அனுபவம், குறிப்பாக அவற்றின் பேருருவம். நம்மை முழுமையாக உள்ளே ஆழ்த்திக்கொள்கின்றன அவை. ஓர் ஓவியத்தின் முன் சொல்லடங்கி அமர்ந்திருப்பதை ஊழ்கம் என்றே சொல்லமுடியும். ரெம்ப்ராண்டின் மாபெரும் நாடகக்காட்சியோ குளோட் மோனேயின் பூத்தமலர்களின் நிலவெளியோ நமக்களிப்பது ஒரு கனவை. வாழ்தல் இனிது என காட்டுபவை கலைகள்.

dug
Douglas Adams

முதலில் இத்தகைய மாபெரும் ஓவியத்தொகை உருவாக்குவது மன எழுச்சி. பெரும்படைப்பாளிகளின் அரிய படைப்புகளை நேரில் காண்பதன் விரிவு. மெல்லமெல்ல உள்ளம் பிரமிக்கிறது. அனைவருமே பெரும்படைப்பாளிகள். மானுடத்தின் கலைவெளியில் மைக்கேலாஞ்சலோகூட மிகச்சிறிய குமிழிதான். அது உருவாக்கும் சோர்வு மீண்டும் ஒட்டுமொத்தமாக அந்தப்பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் ஒரு தரிசனமாக எழுகிறது. மானுடப் படைப்பூக்கம் பலதிசைகளில் திறந்துகொண்டு உருவாக்குவது ஒரு பெரும் ஓவியத்தை, ஓவியங்களால் ஆன ஒரு பேரோவியப் படலத்தை.

ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் [ஸ்பானிஷ் உச்சரிப்பு ஹோர்ஹே லுயிஸ் போர்கெஸ்]   எழுதிய அறிவியலின் துல்லியத்தன்மை என்ற சிறுகதை குறித்து நண்பர்களிடம் சொன்னேன். ஒரு நாட்டில் வரைபடக்கலை உச்சத்தை அடைகிறது. ஊரிலுள்ள எல்லாவற்றையும் வரைபடத்திலும் கொண்டுவர முயல்கிறார்கள். வரைபடம் வளர்ந்து ஊரளவுக்கே பரப்பு கொண்டதாக ஆகிவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த அருங்காட்சியகமும் கலைக்கூடமும் அளித்த திகைப்பிலிருந்து விடுபட அச்சிரிப்பு உதவியாக இருந்தது. சும்மா “இந்த உலகமே ஒரு மாபெரும் அருங்காட்சியகம்தானே?” என்று சொல்லி வைப்போமா என யோசித்தேன். அருண்மொழிக்கு முதிராத்தத்துவம் எரிச்சலூட்டும் என்பதனால் சொல்லவில்லை.

முந்தைய கட்டுரைசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு