கண்டவை, கவலைப்பட்டவை

சமகாலத்தைக் கவனிக்கும் எழுத்தாளன் ஒரு விசித்திரத்தை உணர்ந்திருப்பான். பெரிய விஷயங்கள் அவனை உடனடியான மனக்கொந்தளிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன. சிந்தனைகளை கூர்மையாக்கிக் கொள்ளச் செய்கின்றன. ஆனால் சின்னச்சின்ன விஷயங்கள் அவனுள் பூமுள்போல தங்கி நெடுங்காலம் உறுத்தி எப்போதோ கதைகளாக ஆகின்றன.

இந்த மர்மத்தை அவன் ஆராயும்போது ஒன்றைக் கண்டுகொள்வான். பெரியவிஷயங்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை. சிறிய விஷயங்கள் அவனே கண்டடைந்தவை. மேலும் சிறிய விஷயங்கள் என்பவை உண்மையில் மிகப்பெரிய விஷயங்களின் சின்னஞ்சிறு அடையாளங்கள் மட்டுமே.

சென்றவருடம் என்னை மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய செய்திகள் இரண்டு. ஒன்று மாவோயிச பிரச்சினை. அப்பிரச்சினை நிகழும் இடங்களில் விரிவாக பயணம்செய்தவன், ஓரளவு அச்சூழலை அறிந்தவன் என்றமுறையில் ஊடகங்கள் மிக பொய்யான ஒரு சித்திரத்தை காட்டுகின்றன என்பது என் எண்ணம். அக்கிளர்ச்சிகள் கண்டிப்பாக அங்குள்ள பழங்குடிகளின் கிளர்ச்சி அல்ல. அவர்களுக்கு அந்த அளவுக்கு ஒற்றுமையோ, அரசியல் பிரக்ஞையோ இல்லை. இருந்திருந்தால் ஜனநாயகத்தின் வாய்ப்புகளையே அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

உண்மையில் அவர்களின் வறிய, கைவிடப்பட்ட நிலையை பயன்படுத்திக்கொண்டு அன்னியக்கும்பல் ஒன்று அவர்களை முன்னிறுத்தி இந்தியாவுக்கு எதிரான ஒருபோரை நிகழ்த்துகிறது. சிந்திக்கும் எவரும் அதை ஊகிக்க முடியும். உணவுக்கே வழியற்ற அம்மக்கள் எப்படி அவ்வளவுபெரிய ஆயுதபல்ம் கொண்ட ராணுவத்தை உருவாக்கி நிலைநாட்டுகிறார்கள்? எங்கே இருந்து அந்த பணம் வந்தது? அது அன்னியதேசத்துப் பணம்.

அந்த மாபெரும் பணத்தைக் கொடுத்து அந்த தீவிரவாத ராணுவத்தை வளர்த்து வைத்திருக்கும் அந்த அன்னியநாட்டின் நோக்கம் என்னவோ அதையே அந்த தீவிரவாத ராணுவம் செய்யும். அம்மக்களுக்கு தேவையானவற்றை அல்ல. இந்தப்போர் அந்த பழங்குடிகளை அழிக்கும். அவர்களுக்கு சம்பந்தமில்லாத இரு பெரும் சக்திகள் நடுவே அவர்கள் யானைச்சண்டைக்கு நடுவே சிக்கிய எலிக்கூட்டம் போல அழிவார்கள்.

ஊடகங்கள், ஊடக வெளிச்சம் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாம் இந்த உண்மைகளை மறைத்துக்கொண்டு நாடகம் காண முயல்கிறார்கள். தங்களுக்கு முற்போக்கு முகம் உருவாகிறதா இல்லையா என்பதைப்பற்றி மட்டுமே அக்கறை கொள்பவர்கள் இவர்கள்.

இன்னொன்று, ஸ்பெக்ட்ரம். ஊழலை அரசாங்கம் பற்றி அறிந்தவர்கள் இதை பெரிய அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் எல்லா துறையிலும் எப்போதும் நிகழும் ஒன்று இது. இது மட்டும் வெளியே தெரிந்திருக்கிறது. இப்படித்தான் முதலாளித்துவம் இயங்க முடியும். ஊழல் செய்யப்பட்டது அநீதி. அது வெளியே தெரிய நேர்ந்தது நல்லவிஷயம். இது ஒன்றும் இலட்சியவாத அரசு அல்ல, இது முதலாளித்துவ அரசு, இதில் தாங்கள் கொடுக்கும் வரிப்பணம் இப்படித்தான் செலவாகும் என மக்கள் அறிந்துகொள்வது நல்லது

முதலாளித்துவ ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் நலன்களுக்காக ஒன்றாக திரண்டு தொடர்ந்து குரலெழுப்பும்போது மட்டுமே அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கும். ஜாதி,மதம், இனம் என தங்களை மந்தைகளாக ஆக்கி ஓட்டுபெற்றுச் செல்லும் அரசியல் வாதிகளுக்கு எதிராக நின்று தங்கள் பொருளாதார நலன்களுக்காக வாதாடும் மனநிலையை இந்த ஊழல்களை அறிந்துகொள்வதன் மூலம் நமது மக்கள் பெற்றுக்கொண்டால் நல்லது

ஆனால் சென்ற வருடம் முழுக்க மனதைச் சோர்வடையச்செய்தவை மக்கள் பணம்பெற்றுக்கொண்டு வாக்களிப்பது பற்றிய செய்திகள். இந்த சட்டச்சபைத் தேர்தலில் அத்தனை வாக்காளர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அளிக்கப்படலாமென்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல்பணத்தில் பாதியே அதற்கு தாராளமாக போதும் என்றும் சொல்கிறார்கள். அதாவது மக்களும் அந்த ஊழலில் பங்குகொள்ள துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மனநிலை மிகவிரைவில் தமிழகத்தை அழிக்கும் என்று படுகிறது.

பெரிய விஷயங்கள். பேசிப்பேசி வளர்பவை. பேசாமல் உள்ளே இருந்துகொண்டிருக்கும் சிறிய விஷயங்கள் பல. உதாரணம் ஈரோட்டில் ஒரு கொலை. ஒருபெண் அவளுக்கு நிச்சயம்செய்யப்பட்ட கணவனுடன் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் செல்கிறாள். தன் காதலன் அறைக்கு வருங்காலக் கணவனைக் கொண்டு செல்கிறாள். அங்கே இருக்கும் காதலனும் நண்பர்களும் சேர்ந்து முன்னால் திட்டமிட்டபடி வருங்காலக் கணவனை கொலைசெய்கிறார்கள். உடலை வீசிவிட்டு சினிமாவுக்குச் செல்கிறார்கள்.

’பயில்முறை’ கொலை. உடனே குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள். வழக்குடன் சம்பந்தப்பட்டவ என் நண்பர் சொன்னார் ‘பெண்ணுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை சார். அதைவிட பெண்ணின் குடும்பத்திற்கும் குற்றவுணர்ச்சியே இல்லை. என் பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே என்றுதான் பெண்ணின் அம்மா அழுகிறாள். இத்தனைக்கும் அந்தக்குடும்பத்திற்கே எந்த வகையான குற்றபின்னணியும் இல்லை. இதை எப்படி விளக்குகிறீர்கள்?’

நீதியுணர்ச்சி மழுங்குகிறது என்றுதான்!. நிலப்பிரபுத்துவகால அறங்கள் நமக்கு இருந்தன. நமக்கு பெரியவர்கள் அவற்றைச் சொல்லி வளர்த்தனர். இன்று நாம் வேகமாக முதலாளித்துவத்திற்குள் நுழைகிறோம். நிலப்பிரபுத்துவ அறங்களை கைவிடுகிறோம். ஆனால் முதலாளித்துவத்துக்கு பல்வேறு அறங்களும் ஒழுக்கங்களும் உண்டு. அவற்றை நாம் கற்றுக்கொள்வதில்லை. இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை இதுவே

[இந்தியா டுடே தமிழ் இதழில் வெளிவந்த விருந்தினர் கட்டுரை]

முந்தைய கட்டுரைபாலகிருஷ்ணன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமருதையப்பாட்டா.