ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்

sher
ஷெர்லக் ஹோம்ஸின் இல்லம். சிறில் அலெக்ஸ் -ஹோம்ஸ்

மலையாள நகைச்சுவைப் படம் ஒன்றில் கதாநாயகனுக்கு ‘சி.ஐ.டி’ வேலை கிடைக்கிறது, தனியார் நிறுவனத்தில். உடனே அவன் சென்று நீளமான மழைச்சட்டை, உயரமான தொப்பி, தோல் கையுறைகள், முழங்கால்வரை வரும் சேற்றுச்சப்பாத்துக்களை வாங்கிக்கொண்டு  அணிந்துகொள்கிறான். திருவனந்தபுரம் தம்பானூர் வழியாக மேமாத வெயிலில்அதைப்போட்டபடி சிந்தனையில் ஆழ்ந்து நடக்கிறான். நான் லண்டனின் தெருக்களில் நடந்தபோது எனக்கு சுற்றும் நடப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ரகசிய உளவாளிகள் என்னும் மனப்பிராந்திக்கு ஆளானேன். லண்டனே துப்பறிவாளர்களின் நகரம் என்று தோன்றியது.பெரும்பாலானவர்கள் நானறிந்த துப்பறிவாளர்களின் உடைகளை அணிந்திருந்தனர். எஞ்சியவர்கள் குற்றவாளிகளின் உடையை. அத்துடன் அந்த பழைமையான வீடுகள், கல்வேய்ந்த தெருக்கள், மெல்லிய மழையீரம் எல்லாம் மர்மங்களை ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில வாசிப்பே துப்பறியும் கதைகள், சாகசக்கதைகள் வழியாகத்தான் தொடங்கியிருக்கும். அதுவே எளிய வழி. மொழி நம்மைப் படுத்தியெடுத்தாலும் என்ன நிகழ்கிறது என்று அறிவதற்கான ஆவல் வாசிக்கச்செய்திருக்கும். லண்டனில் இருந்து பிரிக்கமுடியாதவர்கள் ஷெர்லக் ஹோம்சும், ஜேம்ஸ் பாண்டும். இளமையில் எனக்கு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தின் பழையதாள் குவியலில் ஏதோ வெள்ளையர் வாசித்து தூக்கிப்போட்ட எர்ல் டெர் பிக்கர்ஸ் [Earl Derr Biggers] எழுதிய சார்லி சான் துப்பறியும் நாவல்களின் பெருந்தொகை ஒன்று கிடைத்தது. அடுத்த இருபதாண்டுகளில் எங்கள் நூலகமே அழிந்துவிட்டிருந்தாலும் அது மட்டும் என் கையில் எஞ்சியிருந்தது. சார்லி சான் என் இளமையில் நாயகன். அவரைவிட அவர் செயல்பட்ட ஹோனலூலு போன்ற நான் முற்றிலும் கற்பனையில் உருவாக்கிக் கொள்ளவேண்டிய நிலங்கள் பெரிதும் கவர்ந்தன.

sher
ஹோம்ஸ் படிப்பறை

உலகமொழிகளின் இலக்கியத்தைக் கூர்ந்து பார்த்தால் பிரிட்டிஷ் இலக்கியத்திற்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு என்பதைக் காணலாம் – வெறும் பொழுதுபோக்குக்கான எழுத்து என்ற தனி வகைமை அங்கே மிகுதி. சொல்லப்போனால் இன்று உலகை ஆளும் வணிக எழுத்தின் எல்லா வகைமாதிரிகளும் பிரிட்டிஷ் இலக்கியச்சூழலில்தான் தொடங்கின. பேய்க்கதைகள், துப்பறியும் கதைகள், உளவாளிக் கதைகள், குற்றப்பரபரப்புக் கதைகள், அறிவியல் புனைகதைகள் ஆகிய அனைத்துக்கும் மிகத் தொடக்ககால மாதிரிகள் பிரிட்டிஷ் இலக்கியத்தில் உள்ளன.. இவை ஒவ்வொன்றிலும் ஓரிரு பெரும்படைப்பாளிகளை நாம் பிரிட்டிஷ் இலக்கியத்தில் குறிப்பிட முடியும். சரித்திரக்கதைகளுக்கு வால்டர் ஸ்காட், சாகசக்கதைகளுக்கு டானியல் டீஃபோ, துப்பறியும் கதைகளுக்கு சர் ஆர்தர் கானன் டாயில், [ஷெர்லக் ஹோம்ஸ்]  உளவாளிக்கதைகளுக்கு இயான் ஃப்ளமிங் [ஜேம்ஸ்பாண்ட்] பேய்க்கதைகளுக்கு பிராம் ஸ்டாக்கர் [டிராக்குலா] அறிவியல் குற்றக்கதைகளுக்கு மேரி ஷெல்லி [பிராங்கன்ஸ்டைன்]

பிரிட்டிஷ் இலக்கியத்தில் இவை உருவாகக் காரணங்கள் பல. முதன்மையாக, ஆங்கிலம் பதினெட்டாம்நூற்றாண்டிலேயே உலகமொழி ஆகத் தொடங்கியது. அதற்கு உலகமெங்கும் வாசகர்கள் உருவானார்கள். ஆகவே பத்தொன்பதாம்நூற்றாண்டில் நூல்வெளியீடு பிரிட்டனின் மிகப்பெரிய தொழிலாக ஆகியது. அது பரவலாக வாசிக்கப்படும் எழுத்துக்கான தேவையை உருவாக்கியது. அதன் எல்லா வகைமாதிரிகளும் சோதனைசெய்து பார்க்கப்பட்டன. அவை பின்னர் அமெரிக்காவில் பேருருக் கொண்டன. பிரிட்டன் மீது ஒரு  மாபெரும் பூதக்கண்ணாடியை வைத்துப்பார்ப்பதே பலசமயம் அமெரிக்காவாகத் தெரிகிறது. பிரிட்டனில் முளைப்பவை அமெரிக்காவில் பல்கிப்பெருகி பெருந்தொழிலாக ஆகிவிடுகின்றன

she
ஷெர்லக் ஹோம்ஸ் இல்லம்

அதைவிட முக்கியமான காரணங்கள் இவ்வகை கேளிக்கை எழுத்து உருவானமைக்குப் பின்னணியில் இருக்கவேண்டும். வரலாற்றையும், சமூகவியலையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைத்துப்பார்க்கும் ஆய்வாளர்கள்தான் அதைப்பற்றி உசாவ வேண்டும். பொதுப்பார்வையில் இரு சமூகவியல் காரணங்களைச் சொல்லலாம். அக்கால பிரிட்டனின் மாபெரும் விருந்தறைப் பேச்சுக்கள் இவ்வகை எழுத்துக்கான தேவையை உருவாக்கியிருக்கின்றன. நெடுநேரம் நீளும் விருந்துகளில் கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அத்தகைய கூட்டுவாசிப்பில்  நுண்ணிய அவதானிப்புகளுக்கு தேவையில்லாமலேயே சட்டென்று உச்ச உணர்ச்சிகளை உருவாக்கும் கதைகள் விரும்பப் பட்டிருக்கின்றன. இன்னொன்று, பிரிட்டிஷ் பேரரசின் ஊழியர்களாக உலகமெங்கும் சென்ற ஆங்கிலேயருக்கு அந்நூல்கள் பிரிட்டனின் நினைவை மீட்டுவனவாக இருந்தன, அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்தலைமுறையில் கல்வியறிவு பெற்றவர்கள். ஆகவே மொழிநுண்ணுணர்வோ இலக்கியப் பயிற்சியோ அற்றவர்கள். அவர்களுக்கான எழுத்து தேவைப்பட்டிருக்கலாம்

மேலும் ஆழ்ந்த  ஒரு பண்பாட்டுக் காரணம் இருக்குமென நான் எண்ணுகிறேன். பிரிட்டன் சீர்திருத்தக் கிறித்தவத்தின் நிலம். நவீன ஜனநாயகக் கருத்துக்களும், மதச்சீர்திருத்தக் கருத்துக்களும், பகுத்தறிவுவாதமும் அங்கே இருநூறாண்டுக்காலம் பேசப்பட்டிருக்கின்றன. அந்தத் தளத்தில் நின்றபடி சென்ற மதஆதிக்கத்தின் இருண்டகாலத்தை பார்க்கையில் உருவாகும் அச்சமும் ஒவ்வாமையும் அவர்களின் உளஇயல்புகளில் உறைந்துள்ளன. அந்த அச்சத்தையும் ஒவ்வாமையையும் பிரிட்டிஷ் பேய்க்கதைகள் பயன்படுத்திக்கொள்கின்றன என்று தோன்றுகிறது. பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலாவே அதற்கு மிகச்சிறந்த உதாரணம். மத்தியகால ஐரோப்பா அவர்களின் கெட்டகனவுகள் பரவிய நிலம்.

lead_large
ஹோம்ஸ் ஒரு பழைய சித்திரம்

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நவீன அறிவியலை புனைவுகள் சந்திப்பதன் விளைவாகவே துப்பறியும் கதைகளும் குற்றக்கதைகளும் உளவாளிக் கதைகளும் உருவாகின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆர்தர் கானன் டாயில் துப்பாக்கிகளைப்பற்றியும் அகதா கிறிஸ்டி நஞ்சைப்பற்றியும் எழுதுவதை வாசிக்கையில் உருவாகும் எண்ணம் இது. குற்றம், துப்பறிதல் இரண்டிலுமே அறிவியல்செய்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட படைப்புகளே பெரும்புகழ்பெறுகின்றன. ஆனால் செய்திகளை விட முக்கியமானது சிறிய தகவல்களினூடாக துப்பறிந்து உண்மையைச் சென்றடையும் அந்தப் பயணம். அது அறிவியலில் இருந்தும் தத்துவத்தில் இருந்தும் இலக்கியத்திற்கு வந்தது

பேராசிரியர் ஜேசுதாசன் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸின் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். Ivor Armstrong Richards (1893 1979) நவீன இலக்கியவிமர்சனத்தின் பிதாமகர்களில் ஒருவர். இலக்கியப்படைப்பை நுணுகி ஆராய்ந்து அதில் ஆசிரியரின் நோக்கத்தை, அவருடைய உத்திகளை, அவர் தன்னைக் கடந்துசெல்லும் தருணங்களைக் கண்டடைவது அவருடைய விமர்சன முறை. படைப்பில் ஒளிந்திருக்கும் சிறுசிறு தகவல்களைக்கூட கருத்தில்கொண்டு, படைபாளி நுட்பமாக ஒளித்துவைத்தவற்றை கண்டுபிடித்து விரித்துக்கொண்டு வாசிக்கும் இந்த முறையே பின்னாளில் அமெரிக்காவில்  ‘புதுத்திறனாய்வு’முறையாக உருவாகியது. இது பிரதிஆய்வு விமர்சனமுறை எனப்படுகிறது. ரிச்சர்ட்ஸின் நூல் ஒன்றின் தலைப்பே அவருடைய வழிமுறையை தெளிவாகக் காட்டுவது –The meaning of meaning

I.A. Richards
I.A. Richards

ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் பற்றிப் பேசுகையில் ஜேசுதாசன் சிரித்தபடிச் சொன்னார் “அவரு ஷெர்லக் ஹோம்ஸுல்லா?” கிண்டலாக அல்லாமல் நேரடியாகவே அவ்வாறு விளக்கினார். பதினெட்டாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் சிந்தனையை ஆட்கொண்டிருந்த மைய எண்ணம் என்பது புறவயத்தன்மைதான். எதையும் தர்க்கபூர்வமாக அணுகுவது, புறவயமான ஆதாரங்களை நுட்பமாக சேகரித்து அவற்றைத் தொகுத்து ஒரு விரிவான சித்திரத்தை உருவாக்கி அதன் சாரமாக ஓர் உண்மையை உருவாக்குவது. இரண்டு மூலங்களில் இருந்து தொடங்கியது இந்த ஆய்வுமுறை. ஒன்று, இறையியல்.இன்னொன்று அறிவியல்

அன்றைய சீர்திருத்தவாத கிறித்தவம் விவிலியம் முதலான மதமூலங்களை நுட்பமாக ஆராய்ந்து தரவுகளின் அடிப்படையில் கத்தோலிக்கர்களுடன் விவாதித்தது. மூன்றுநூற்றாண்டுக்காலம் நீடித்த அந்தப் பெருவிவாதம் இறையியலில் ஆக்ஸ்போர்ட் இயக்கம் போன்ற ஏராளமான தரப்புக்களை உருவாக்கியது. பிரதிஆய்வு விமர்சனம் என்னும் பார்வையின் ஆரம்பமே அதுதான். அந்த விமர்சனமுறை பின்னர் தத்துவத்திலும் இலக்கியத்திலும் வேரூன்றியது. பிரிட்டிஷ் அறிவியலாளரான ஃப்ரான்ஸிஸ் பேக்கன் நவீன அறிவியல் முறைமைகளின் தொடக்கப்புள்ளி என்பார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் நிரூபணவாத அறிவியல் கிடைக்கும் தரவுகளைத் தொகுப்பதிலும் அவற்றைக்கொண்டு ஊகங்களை நிரூபிப்பதிலும், அவற்றின் எதிர்த்தரப்புகளுடன் விவாதிப்பதிலும் தெளிவான முறைமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

இவ்விரு  முன்னோடி மனநிலைகளின் இலக்கிய வெளிப்பாடுதான் பிரிட்டிஷ் குற்றப்பரபரப்பு எழுத்துக்களிலும் துப்பறியும் எழுத்துக்களிலும் எழுந்தது. அதன் மிகச்சிறந்த முன்னோடி ஷெர்லக் ஹோம்ஸ்தான். இன்று துப்பறிவாளருக்குரிய ஒரு தொல்படிமமாகவே அவருடைய பெயரும் தோற்றமும் மாறிவிட்டிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் வெறும் துப்பறிவாளர் அல்ல. அவர் மிகமிக பிரிட்டிஷ்தனமான ஒரு நிகழ்வு. பத்தொன்பதாம்நூற்றானின் பிரிட்டிஷ்தன்மையின் ஓர் அடையாளம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொல்லியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், ஆட்சியாளர்கள், சட்ட நிபுணர்கள் அனைவரிடமும் நாம் கொஞ்சமேனும் ஹோம்ஸைப் பார்க்கமுடியும். யோசித்துப்பாருங்கள் கால்டுவெல், [திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்] ஜே.எச்.நெல்சன் [மதுரா கண்ட்ரி மேனுவல்] மார்ட்டிமர் வீலர் அனைவருமே ஒருவகையான ஷெர்லக் ஹோம்ஸ்கள்தானே?

ஐரோப்பாவின் இந்த நுண்ணோக்கி விழிகள்தான் நமக்கு ஒரு புறவய வரலாற்றை உருவாக்கி அளித்துள்ளன. நம் தொன்மையை நவீன முறைமைகளைக் கொண்டு தொகுத்து நமக்கு அளித்துள்ளன. நாம் நம்மைப்பார்க்கும் பார்வையையே அவைதான் ஒருவகையில் வரையறைசெய்துள்ளன. ஐரோப்பாவின் உணர்ச்சிகளற்ற புறவயப்பார்வையின் அடையாளம் ஹோம்ஸ்

Arthur_Conany_Doyle_by_Walter_Benington,_1914

மருத்துவரான சர் ஆர்தர் கானன்டாயில் [859- 1930] எழுதிய துப்பறியும் கதைநாயகன் ஷெர்லக் ஹோம்ஸ். கானன் டாயில் ஏராளமாக எழுதியிருந்தாலும் ஷெர்லக் ஹோம்ஸ் வழியாகவே வரலாற்றில் இடம்பெற்றார். கானன்டாயிலின் A Study in Scarlet என்ற கதையில் 1881ல் முதல்முறையாகத் தோன்றினார்., ஹோம்ஸின் இயல்புகளை மிகத்துல்லியமாக ஆசிரியர் வரையறை செய்தமையால்தான் அவர் அத்தனை புகழ்பெற்றார் எனத் தோன்றுகிறது. ஹோம்ஸ் ஒரு பொஹீமியன் வாழ்க்கைப்போக்கு கொண்டவர் என்று வாட்ஸன் ஓரிடத்தில் சொல்கிறார். வெளியே நோக்கிய உள்ளம் கொண்டவர், ஆனால் தனித்தவர். நெருக்கமானவர்களுடன் மட்டும் இருக்க விரும்புபவர். மிகமிகத் தூய்மையான பழக்கவழக்கங்கள் கொண்டவர். பிரிட்டிஷ் கனவானுக்குரிய மென்மையான குரலும், மரபான பேச்சுமொழியும் கொண்டவர். கிண்டலாக மாறாத உள்ளடங்கிய நகைச்சுவை கொண்டவர். தத்துவம், மதம் ஆகியவற்றில் அறிவார்ந்த ஈடுபாடு கொண்டவர். ஆயுதங்களில் ஈடுபாடுகொண்டவர், ஆனால் வன்முறை மனநிலை அற்றவர். பெண்களிடம் மரியாதையாகப் பழகுபவர், ஆனால் அவர்களிடம் பெரிய ஈடுபாடில்லாதவர். அவர்களை இரண்டாந்தரமான அறிவுள்ள்ளவர்களாக எண்ணுபவர். மொத்தத்தில் ஒரு இலட்சிய பிரிட்டிஷ் கனவான்.

The_Adventure_of_the_Veiled_Lodger_02
The Adventure of the Veiled Lodger

2000 த்தில் நான் ஹோம்ஸ் துப்பறியும் ஒரு கதையை எம்.எஸைக்கொண்டு. மொழியாக்கம் செய்து சொல்புதிது சிற்றிதழில் வெளியிட்டேன். தொடர்ச்சியாக நான் தெரிவுசெய்த உலகச்சிறுகதைகளை எம்.எஸ். மொழியாக்கம் செய்து சொல் புதிது வெளியிட்டுவந்த காலம் அது. அவ்வரிசையில் இக்கதை வந்தது இலக்கிய வாசகர்களை அதிர்ச்சியுறச் செய்தது. பின்னர் எம்.எஸ் மொழியாக்கம் செய்த கதைகளின் தொகுதி வெளிவந்தபோதும் அக்கதை சேர்க்கப்படவில்லை. துப்பறியும் கதை எப்படி இலக்கியமாகும் என அன்று பலர் கேட்டார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் சில உயர்தர இலக்கியமே என நான் பதில் சொன்னேன். அந்த விவாதம் எழவேண்டும் என்றுதான் அக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டது. ஹோம்ஸ் பலசமயம் குற்றத்தை மட்டும் துப்பறிந்து விளக்குவதில்லை, அதற்குப்பின்னாலிருக்கும் உளநிலையை நோக்கிச் செல்கிறார். எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதைவிட எதைக் கண்டுபிடிக்கிறார் என்பது முக்கியமாக ஆகும் கதைகள் அவை. The Adventure of the Veiled Lodger என்ற அக்கதையில் குருதிமணம் பெறும் சிம்மம் ஆழமான ஒரு படிமம் என்பது என் எண்ணம். இந்த அம்சத்தால் கானன்டாயில் வெறும் துப்பறியும்கதையாசிரியர் அல்ல, படைப்பாளி என நான் நினைக்கிறேன்.

லண்டனில் ஹோம்ஸுக்கு ஓர் நினைவுமாளிகை உள்ளது. லண்டனில் 221 பேக்கர் தெருவில் ஹோம்ஸ் வாழ்ந்ததாக கானன் டாயில் தன் நாவல்களில் குறிப்பிடுகிறார். கானன் டாயில் குறிப்பிட்ட அந்த வீடு இருந்ததா என்பதே ஐயத்திற்குரியது. அந்த எண்கொண்ட வீடு வெவ்வேறு கைகளுக்குச் சென்றுவிட்டது. இப்போது ஹோம்ஸ் வாழ்ந்த காலகட்டத்தை ஏறத்தாழ அதேபோன்ற ஒரு கட்டிடத்தில் அப்படியே உருவாக்கி அதை ஒரு சுற்றுலாமையமாக ஆக்கியிருக்கிறார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் சொசைட்டியால் அது இப்போது நிர்வகிக்கப் படுகிறது. கானன் டாயிலின் கதைகளின்படி ஹோம்ஸும் அவர் நண்பர் வாட்ஸனும் இங்குதான் தங்கியிருந்தார்கள்.

இன்று  உலகமெங்குமிருந்து பலநூறு ஹோம்ஸ் ஆர்வலர் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். கீழ்த்தளம் கட்டணச்சீட்டு கொடுப்பதற்குரிய இடமாகவும் நினைவுப்பொருட்கள் விற்கும் இடமாகவும் உள்ளது. சிறிய இடுங்கலான படிகளின் வழியாக மேலேறிச் சென்றால் முதல்தளம் ஹோம்ஸ் காலகட்டத்தின் அனைத்துப் பொருட்களுடனும் அவ்வண்ணமே பாதுகாக்கப்படுகிறது. எக்கணமும் வீட்டு உரிமையாளரும் காப்பாளருமான திருமதி ஹட்ஸன் வந்து “மன்னிக்கவேண்டும், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுவிடக்கூடும் எனத் தோன்றும்

je

முதல்மாடியில் ஹோம்ஸ் அமர்ந்து பைப் பிடித்தபடி பேக்கர் தெருவை நோக்கிக்கொண்டிருக்கும் வழக்கமான தொடக்கக் காட்சி நிகழும் முகப்பறை. பழைமையான கணப்பு. தட்டச்சுப்பொறி. ஹோம்ஸின் ஆய்வகம், அங்கே அவருடைய துப்பறியும் கருவிகள். அவருடைய நீண்ட மழைமேல்சட்டை, deerstalker தொப்பி. ஒவ்வொன்றும் இந்த ஒன்றரை நூற்றாண்டுக்குள் தொன்மத் தகுதியை அடைந்துவிட்டிருக்கின்றன. அந்த சிறிய இல்லத்தில் ஹோம்ஸ் கதைகளின் சில கதைமாந்தர்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. ஹோம்சின் ஆடைகளை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர் பயணிகள்

எனக்கு அந்த வீடுதான் மேலும் ஆர்வமூட்டியது. அங்கே வாழ்ந்த மனிதர் எப்படி அக்காலகட்டத்தின் அடையாளமோ அதைப்போல. ஒவ்வொன்றும் முந்தைய காலகட்டத்தில் உறைந்துபோயிருந்தன.  சென்ற காலம் போல அச்சமூட்டுவது வேறில்லை. அதை நாம் அருகே காணமுடியும், உள்ளே நுழைய முடியாது. குழந்தைத்தனமான எண்ணமாக இளவயதில் உருவாகும் அந்த அச்சம் வயதாகும்தோறும் கூடிக்கூடி வருகிறது. அங்குள்ள பொருட்களை நோக்கிக்கொண்டே சென்றுகொண்டிருந்தேன். இன்றைய லண்டனுக்கு மேல் காற்றென வீசி மறைந்த ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்கிக் கொள்ளமுயன்றேன். பெரிய தோலுறைபோட்ட நூல்களை பூதக்கண்ணாடி கொண்டு நோக்கி ஆராயும் ஆய்வாளர்கள், விருந்துமேஜையில் அமர்ந்து மெல்லியகுரலில் விவாதிப்பவர்கள், உலகமெங்குமிருந்து வரும் செய்திகளை வானொலியில் கேட்டுக்கொண்டிருப்பவர்கள். அறிவியலாளர்கள், தத்துவவாதிகள், துப்பறிவாளர்கள்… இன்றைய லண்டனுடன் நமக்கு பெரிய உறவேதுமில்லை. நமக்கு வந்துசேர்ந்து, இன்றைக்கும் நம்மிடம் எஞ்சியிருப்பது அந்த பத்தொன்பதாம்நூற்றண்டு லண்டன்தான்

முந்தைய கட்டுரைஈரோடு வெண்முரசு சந்திப்பு
அடுத்த கட்டுரைஈரோட்டில் இருந்து…