கருத்துரிமையும் கேரளமும்

meesha

பஷீரும் ராமாயணமும்
மீறலும் ஓங்குதலும்

அன்புள்ள ஜெ

பெருமாள் முருகன் விவகாரம் போலவே கேரளத்தில் ஓர் மதவாத எதிர்ப்பு வெடித்துள்ளதே? மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் மாத்ருபூமி இதழில் எழுதிக்கொண்டிருந்த மீசை என்னும் தொடர் இந்துத்துவர்களின் கடுமையான எதிர்ப்பால் நின்றுவிட்டது. கேரளம் முற்போக்காளர்களின் நாடு. அங்கே இத்தகைய மதவாதம் எப்படி உருவானது? ஆச்சரியமாக உள்ளது. உங்கள் எதிர்வினை என்ன?

செல்வக்குமார்

***

அன்புள்ள செல்வக்குமார்,

கேரளத்தில் முற்போக்குச் சிந்தனையே முதன்மையாக ஓங்கியிருக்கிறது என்பதில் இப்போதும் எந்த ஐயமும் இல்லை. ஆனால் மூன்று மதங்களும் ஏறத்தாழ இணையான எண்ணிக்கைபலம் கொண்டிருக்கும் கேரள மண் எப்போதுமே மதமோதலுக்கான களம்தான். 1941ல் நிகழ்ந்த மாப்பிளாக் கலவரம் இந்தியாவில் நிகழ்ந்த மதக்கலவரங்களுக்கு முன்னோடி என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை. கிலாஃபத் போராட்டத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியர் உருவாக்கிய இந்து எதிர்ப்புக் கலவரம் அது. பலநூறுபேர் கொல்லப்பட்டார்கள். ஆங்கில அரசு அதை கடுமையாக ஒடுக்கியது. அந்த விதைகள் எப்போதும் அங்கே இருக்கும்.

அச்சூழலில் வலுவான மாற்றத்தை உருவாக்கியவை நாராயணகுருவின் இயக்கமும் இடதுசாரிக் கட்சிகளும். அவை உருவாக்கிய ஜனநாயகப் பண்புகளே அந்நிலத்தை கல்வியில்,பொருளியல் வளர்ச்சியில் முன்னிலையில் நிறுத்தின. ஆனால் அன்றும் இன்றும் இரண்டு வலுவாக ஒருங்கிணைக்கப்பட்ட மத அமைப்புகளை இடதுசாரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. கிறித்தவத் திருச்சபை கிட்டத்தட்ட மறுவினா எழமுடியாத அதிகாரம் கொண்டதாகவே என்றும் உள்ளது. ஸுன்னி இஸ்லாமிய அமைப்புகளும்ம் அதே அளவுக்கு ஒருங்கிணைப்பு கொண்டவை. சென்றகாலங்களில் அவை அம்மதங்கள் மீது எழுந்த  சிறு விமர்சனத்தைக்கூட கடுமையாக ஒடுக்கியிருக்கின்றன.

1957-ல் கேரளத்தில் சட்டபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு அமைந்த முதல் கம்யூனிச அரசுக்கு எதிராக எழுந்த ‘விமோசன சமரம்’ என்னும் கலகம் சுன்னி இஸ்லாமிய அமைப்பாலும் கிறித்தவத் திருச்சபையாலும் சில இந்து சாதிய அமைப்புகளாலும் முன்னெடுக்கபட்டது. அதில் அவர்கள் வென்றனர். ஈ.எம்.எஸ் தலைமையிலான கம்யூனிச அரசு 1959 ல் கலைக்கப்பட்டது. மாப்ளா கலவரம்போலவே மிக ஆழமான சமூகப்பாதிப்பு செலுத்திய நிகழ்வு இக்கலவரம்.

பி.எம்.ஆன்டனி என்பவர் 1986 ல் நிகாஸ் கஸண்ட் ஸகீஸ் எழுதிய என்னும் நாவலை ஒட்டி எழுதிய கிறிஸ்துவின் ஆறாம் திருமுறிவு என்னும் நாடகத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புக்கள் உருவாக்கிய பெரும் எதிர்ப்பு இன்னொரு முதன்மை நிகழ்வு. பி.எம். ஆண்டனி சிறையிடப்பட்ட்டார். நாடகம் தடைசெய்யப்பட்டது. 1985ல் ஷா பானு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புக்கள் உருவாக்கிய மாபெரும் சரீ அத் சட்ட ஆதரவு இயக்கம் கேரளத்தை நிலைகுலையச்செய்த ஒன்று.

உண்மையில் கேரளத்தில் இந்துமதம் என்றுமே வலுவாகவே இருந்தது, இருக்கிறது. ஆனால் நெடுங்காலமாக இந்துத்துவ அரசியலுக்கு இடமிருக்கவில்லை- இன்றும்கூட பெரிய இடமில்லை. நாளையும் பெரிய இடம் உருவாகாதென்றே நம்புகிறேன். உருவானால் கேரளம் என்னும் அழகிய பண்பாட்டுச்சூழலின் பேரழிவு அது. கேரள அரசியல்சூழலை அறிந்தவர்கள் அங்கே இந்துத்துவ அரசியலுக்கான விதை வீசப்பட்டது பி.எம்.ஆண்டனிக்கு எதிரான போராட்டம் சரீஅது சட்டப் பாதுகாப்புப் போராட்டம் வழியாகவே என அறிவார்கள்.  இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள், அரசை ஆட்டிப்படைக்கிறார்கள் என்ற இந்துத்துவ பிரச்சாரம் அந்நிகழ்வுகள் வழியாக இந்துக்களில் ஒருசாரார் நடுவே எடுபடத் தொடங்கியது. இன்று பேருருக் கொண்டு வளர்ந்து நிற்கிறது.

சுதந்திரமான கருத்துச் செயல்பாடு கொண்ட கேரளம் சென்ற சில ஆண்டுகளாகவே இத்தகைய மிரட்டல்களின் களமாக ஆகிவிட்டிருக்கிறது. 2017 ஜூலையில் நாவலாசிரியர் கே.பி.ராமனுண்ணி இஸ்லாமியராக மதம் மாறாவிட்டால் கொல்லப்படுவார் என மிரட்டப்பட்டார். அதற்கு முன் 2016 டிசம்பரில் பாஷாபோஷிணி இதழில் பாஸ்கரன் வெளியிட்ட ஒர் ஓவியத்துக்காக கிறித்தவ அமைப்புகளால் அவர் மிரட்டப்பட்டார். ஓவியம் வெளியிடப்பட்ட அனைத்து இதழ்களையும் மூன்றே நாளில் பாஷாபோஷிணி திரும்பப் பெற்றுக்கொண்டது. அதற்குமுன் 2010ல்  பாடத்திட்டத்தில் இருந்த ஒரு கேள்வியை இயல்பாக கேள்வித்தாளில் சேர்த்தமைக்காக கேரளப்பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கையை இஸ்லாமிய வெறியர்கள் வெட்டி வீசினர்.

இத்தகைய சர்ச்சையும் மிரட்டலும் அடிக்கடி நிகழ்கின்றன. மாத்ருபூமியேகூட இதில் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்கிறது.2015 செப்டெம்பரில் எம்.எம். பஷீர் என்னும் இஸ்லாமியர், ஆனால் சம்ஸ்கிருத அறிஞர், எழுதிய ராமாயண விளக்கத்தால் சீண்டப்பட்ட இந்துத்துவர் தெருவிலிறங்கி வசைபாடி போராடி அவரை எழுதவிடாமல் செய்தனர். மாத்ருபூமி அந்த கட்டுரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.  இன்று ஹரீஷின் நாவலுக்கு எதிரான எதிர்ப்பு  அத்தகைய பல நிகழ்வுகளின் தொடர்ச்சியே. ஊடகத்திற்கு உள்ள கட்டாயங்கள் புரிந்துகொள்ளப்படவேண்டியவை. மாத்ருபூமி அந்நாவலை நிறுத்திக்கொண்டது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.ஹரீஷ் அந்நாவலை எந்த சமரசமும் இல்லாமல் எழுதி நூலாக, சொந்தச்செலவிலாவது வெளியிடவேண்டும் என்று எண்ணுகிறேன். அச்சப்பட்டு நிறுத்திக்கொண்டால் இத்தகைய எதிர்ப்புகள் மேலும் மேலும் தொடரும்.  இத்தகைய கும்பல்கள் அடையும் வெற்றிகளிலிருந்தே இந்தவகையான பொறுக்கிக் குழுக்கள் மேலும் ஆற்றல் பெறுகின்றன.

ஆனால் ஒன்று ஆறுதல் அளிக்கிறது. இப்படித் தமிழ்ச்சூழலில் நடந்திருந்தால் நம்மூர் திராவிட இயக்கத்தவரும் முற்போக்கினரும் இந்து இயக்கத்தவரின் செயல்பாடுகளை மட்டுமே எதிர்த்திருப்பார்கள், அதை அடிப்படையாகக் கொண்டு இந்துமதம் அழியவேண்டும் என கூச்சலிட்டிருப்பார்கள். அவர்களின் மேடையில் அப்பட்டமான இஸ்லாமிய கிறிஸ்தவ மதவெறியர்கள் ஏறி இந்துமதத்தை அழிக்கவேண்டும் என்று முழக்கமிட்டிருப்பார்கள். அந்த ஒட்டுமொத்த இயக்கமும் இங்குள்ள இஸ்லாமிய, கிறித்தவ அமைப்புக்களின் நிதியாதரவுடன் நடந்திருக்கும். அதுவே முற்போக்கு என்று அவர்கள் சமூக ஊடகங்களில் கூவிக்கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் சுதந்திர – மதச்சார்பற்ற சிந்தனை என்பது நூறுசதவீதம் இல்லை. இங்கிருப்பது இந்து எதிர்ப்பு மதவாத அரசியலின் கைப்பாவையாக செயல்படுபவர்களின் திரள்மட்டுமே. உண்மையான முற்போக்குத் தரப்பே இல்லை. ஆகவே இங்கு அனைவருமே வெகுவேகமாக ஏதேனும் மத அடிப்படைவாதம் நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் கேரளத்தின் கம்யூனிஸ்டுக் கட்சியும் , கட்சி சாரார்இடதுசாரிகளும் மூன்று மதங்களின் அடிப்படைவாதங்களையும் இணையான தீவிரத்துடன் எதிர்க்கிறார்கள். கூடவே இந்துமதத்தை அடிப்படைவாதிகளின் தெருமுனை அரசியலில் இருந்து பிரித்துநோக்கவும் அவர்களால் இயல்கிறது. கேரளம் இன்றைய அரசியல் முனைப்படுத்தல்கள், மதக்கொந்தளிப்புகளைக் கடந்து எழும் என்னும் நம்பிக்கையை அளிப்பது அதுதான்.

ஜெ

வெறுப்பு அடங்கும் காலம் வரும்! பெருமாள் முருகன்
தீரத்துடன் எழுத்தின் வழியில் முன்செல்க பினராய் விஜயன்
பஷீரும் ராமாயணமும்- கடிதம்
முந்தைய கட்டுரைகம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69