பி.கே.பாலகிருஷ்ணன்

பி.கெ.பாலகிருஷ்ணனின் வீடு திருவனந்தபுரத்தில் இருந்தது. தெருவின் அந்த விசித்திரமான பெயரை எவரும் மறக்க முடியாது – உதாரசிரோமணி சாலை. அதை ஆற்றூர் ரவிவர்மா உதரசிரோமணி சாலை என்பார். நான் ஆற்றூரிடமிருந்து விலாசத்தை தெரிந்துகொண்டு 1987ல் கிறிஸ்துமஸை ஒட்டி காசர்கோட்டில் இருந்து ஊருக்கு வந்தபோது அவரைச்சென்று பார்க்க முடிவுசெய்தேன்.

பி.கெ.பாலகிருஷ்ணன்னை தொலைபேசியில் அழைத்தால் பதிலே இல்லை. என் வயது அப்படி, பேசாமல் நேரில் கிளம்பிச் சென்றுவிட்டேன். பாலகிருஷ்ணன் தனிமை விரும்பி, விருந்தாளிகளை வெறுப்பார் என்று அவரது நெருக்கமான நண்பரான டாக்டர். எம். கங்காதரன் சொல்லியிருந்தார். ஆனால் ஆற்றூர் பெயரைச் சொன்னால் பெரும்பாலும் எந்த வாசலும் திறக்கும் என நான் அறிந்திருந்தேன். குலசேகரத்தில் அண்ணா வீட்டில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம்சென்று ஆ.மாதவனைப்பார்த்துவிட்டு மாதவனிடமே வழிகேட்டு ஆட்டோவில் கிளம்பிச்சென்றேன்.

வீட்டைக் கண்டுபிடித்தேன். மதியம் பதினொருமணி. திருவனந்தபுரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமென்பதனால் நன்றாகவே வேர்க்கும். கதவைத்தட்டிய போது நான் உடைகள் உடலோடு ஒட்ட குளத்தில் விழுந்து எழுந்தவன் போலிருந்தேன். கதவு திறக்கவில்லை, ஜன்னல்வழியாக பி.கெ.பாலகிருஷ்ணன் எட்டிப்பார்த்தார். ஒட்டிய நீண்டமுகத்தில் நாலைந்துநாள் தாடி. களைத்த கண்கள். கையில்லா பனியன் மட்டும் போட்டிருந்தார் ‘’ஆரா?’ என்றார். அந்தக்கேள்வியில் இருந்த கசப்பு என்னை தயங்க வைத்தது.

‘நான்…’என ஆரம்பித்தேன். உடனே புரிந்துகொண்டு ‘நான் வேலையாக இருக்கிறேன். யாரையும் பார்க்க விரும்பவில்லை. போகலாம்’ என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். நான் சீண்டப்பட்டேன். மீண்டும் கதவை தட்டினேன். கோபமாக வந்து ஜன்னல்வழியாக ‘நீ யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார். ‘நான் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளன்’ என்று சொன்னேன். அவரிடம் முட்டிக்கொண்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.

ஆனால் பி.கெ.பாலகிருஷ்ணன் என்னையே கூர்ந்து பார்த்தார். ‘உள்ளே வா’ என்றார். உள்ளே சென்று மரத்தாலான சோபாவில் அமர்ந்தேன். அவர் என் முன்னால் அமர்ந்துகொண்டு என்னை விசித்திரமாக பார்த்தார் ‘நீ என்ன எழுதியிருக்கிறாய்?’ நான் ‘சொல்லும்படி இன்னும் ஏதும் எழுதவில்லை. எழுதுவேன்’ என்றேன். அவர் சட்டென்று முகம் மலர்ந்து சிரித்தார். ‘அது கொள்ளாம்…’ என்று சிரித்தபின் ‘சாயா குடிக்கிறாயா?’ என்றார். சரி என்றேன். ‘வெளியே போவோம். வீட்டில் யாருமில்லை’

சட்டை போட்டு வந்தார். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெயிலில் நடந்தார். ’என்ன பேர் சொன்னாய்?’ நான் அப்போதுதான் பேரைச் சொன்னேன் ‘ஜெயமோகன்’ கொஞ்சநேரம் யோசித்துவிட்டு ‘யாரோ சொல்லியிருக்கிறார்கள்..’ என்றார். ‘’ஆற்றூர் ரவிவர்மா சொல்லியிருப்பார்’’ ‘’ஆமாம்’ என்று சிரித்தார். ’’நீ அவரிடமும் இதைத்தான் சொன்னாயா?’’ என்றார் ‘’இல்லை. நான் பெரிய எழுத்தாளன் என்று அவர்தான் என்னிடம் சொன்னார்’’ என்றேன். மீண்டும் புன்னகை.

அவர் என்னை அழைத்துச்சென்றது ஒரு மதுக்கடையில். பி.கெ.பாலகிருஷ்ணன் அப்போது குடியை நிறுத்திவிட்டிருந்தார். ஆனால் கால்பழக்கமாக அங்கே சென்றுகொண்டிருந்தார். அங்கே அவருக்கென ஓர் இருக்கை. அதில் அவர் ஒருகாலகட்டத்தில் பகல் முழுக்க இருப்பார். அங்கேயே நண்பர்களைச் சந்திப்பார். சண்டைகள் போடுவார். எழுதுவார். குப்புற விழுந்து தூங்குவார். அப்போது அங்கே யாருமில்லை. அவருக்கு தெரிந்த ஓர் இளம் பரிசாரகன் மட்டும். அவன் அவரை இயல்பாக வரவேற்றான்.

அமர்ந்ததும் ‘இரண்டு டீ’ என்றார் பாலகிருஷ்ணன். ‘இங்கே டீ உண்டா?’ என்று ஆச்சரியமாக கேட்டேன். ‘இல்லை. வெளியே சென்று வாங்கி வருவான்’ என்றபின் அமர்ந்துகொண்டார். நான் அவரது ’ஜாதி அமைப்பும் கேரள வரலாறும்’ என்ற விவாதத்துக்குரிய வரலாற்று நூலைப்பற்றி பேசினேன். பள்ளியில் படித்தபின் நான் வரலாற்றில் ஆர்வமே காட்டியதில்லை. அதை காலாவதியான தகவல்களின் குவியல் என்றே நினைத்திருந்தேன்

ஆனால் பாலகிருஷ்ணனின் அந்த நூல் சட்டென்று வரலாற்றாய்வு என்பது வாழ்க்கையை அறிந்துகொள்ளுதல்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியது. வாழ்க்கை என்பது இன்றுநேற்று என பிரிந்து கிடப்பதல்ல. அது ஒரு அறுபடாத ஓட்டம். வரலாற்றாய்வு அந்த ஓட்டத்தின் விதிகளை ஆராய்கிறது. இன்றைக்கொண்டே நேற்றை ஆராய்கிறோம். நேற்றை அறிவது இன்றை அறிவதே. எந்த வரலாற்றாய்வும் வாழ்க்கை மீதான விசாரணைதான்

அபாரமான வாசிப்பனுபவம் அளித்த அந்நூலை எத்தனைமுறை வாசித்தேன் என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட மனப்பாடமாக ஆகிவிட்டது அது. ரோமாபுரியினர் கேரளக்கடற்கரைக்கு சங்ககாலம் முதலே வந்திருக்கிறார்கள். இங்கே உள்ள குருமிளகை விரும்பி வாங்கிச்சென்று அதைப்பற்றி நூல்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அரேபியக்கடற்கரையில் இருந்து சுக்கு வாங்கி சென்றுவிட்டு சுக்கு ஒரு அரேபிய நறுமணவேர் என எழுதியிருக்கிறார்கள்.

சுக்கு அரேபியாவில் விளைவதில்லை. அரேபியர் அதை கேரளக்கடற்கரையில்தான் வாங்கினார்கள். குருமிளகு விற்ற அதே மனிதர்கள் அதே கொடுங்கல்லூர் துறைமுகத்தில் வைத்துத்தான் சுக்கையும் விற்றிருக்கிறார்கள். இது அக்கால வணிகம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் காட்டுகிறது என்கிறார் பி.கெ.பாலகிருஷ்ணன். அரேபியருக்கு யவனரை பழக்கமே இல்லை. அரேபியரும் யவனரும் சேரர்களுடன் பிற தொடர்பு ஏதும் வைத்துக்கொள்ளவில்லை. ஆகவேதான் இத்தனை வணிகம் நடந்தும் எந்தவிதமான பண்பாட்டு பரிமாற்றமும் நிகழவில்லை. சாக்ரடீஸின் சிந்தனையின் துளிகூட செந்தமிழை வந்து சேரவில்லை.

அந்த சித்திரம் ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அதிலிருந்து பற்பல சிந்தனைகளை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். தமிழ்நாட்டில் யவனர்கள் மன்னர்களுக்கும் கோட்டைகளுக்கும் காவலர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் யவனமொழியின் பாதிப்பே சங்கத்தமிழில் இல்லை. அதற்கான காரணமும் இதுதானா? யவனர் நன்கலம் தந்த மதுவை பாடிய ஔவையார் பிளேட்டோ பற்றி கேள்விப்பட்டிருப்பாரா? யவனர்கள் ஏன் காவலர்களாக இருந்தனர்? அவர்களுக்கு மொழியே தெரியாதென்பதனாலா?

சரி , ஒரு நாட்டின் மன்னன் அன்னியரை தனக்கு மெய்க்காவலாக ஏன் வைத்துக்கொண்டான்? அவ்வளவு உக்கிரமான உள்நாட்டுப்போர்களும் துரோகங்களும் அன்றிருந்தனவா? யவனர் தமிழ்நாட்டை பிடிக்க நினைத்திருந்தால் பிடித்திருக்க முடியுமா என்ன? யவனர்கள் எப்போதும் ஊருக்குள் வாழ்ந்ததில்லை. கடலில் நிற்கும் மரக்கலங்களுக்கு அருகே மரத்தால் எழுப்பிய யவனச்சேரிகளில் மட்டுமே வாழ்ந்தனர். அவர்கள் ஊருக்குள் வந்து வாழ்ந்திருந்தால் நம்முடைய வரலாறே வேறாக இருந்திருக்குமா?

நான் வரலாற்றாய்வுகளை வாசிக்க ஆரம்பித்தது அதற்கு பின்னர்தான். இன்றுவரை என்னுடைய வாசிப்பில் பெரும்பகுதி வரலாற்றாய்வுகளே. அதற்கு நான் பாலகிருஷ்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பின்னர் காலச்சுவடு இதழில் அந்நூலின் ஒரு சுருக்கத்தை நான் மொழியாக்கம்  செய்து அளித்திருந்தேன்.

பாலகிருஷ்ணன் என்னிடம் தமிழ்நாட்டைப்பற்றி கேட்க ஆரம்பித்தார். தமிழக அரசியலில் அப்போது ஒருநிலையின்மை இருந்தது. எம்.ஜி.ஆர் 1987 டிசம்பரில்  இறந்துபோய் அரசியல் வெற்றிடம் உருவாகியிருந்தது. நான்ஆ.மாதவனைப் பார்க்க சாலை பஜார் வழியாகச் சென்ற வழி எங்கும் அப்போது பலநாள் கழித்தும்கூட கடைகள் முன்னாலும் சுமைதொழிலாளர் சங்கக்கொடி பறக்கும் இடங்களிலும் முக்காலி போடப்பட்டு எம்ஜிஆர் படங்கள் வைக்கப்பட்டு புதிய மலர்மாலைகள் சூட்டப்பட்டிருந்தன.

ஜெயலலிதாவுக்கும் ஜானகிக்குமான போராட்டம் ஆரம்பித்திருந்தது. என்ன நிலவரம் என்று பாலகிருஷ்ணன் கேட்டார். தமிழ்மக்கள் முறையான திருமண உறவுள்ள ஜானகியையே விரும்புவார்கள் என்றும், அதை மனதில்கொண்டே கொடுமைக்காரியான வைப்பாட்டி வசந்தசேனையாக ஜெயலலிதாவை உருவகித்து கருணாநிதி பிரச்சாரம்செய்கிறார் என்றும் நான் சொன்னேன். மேலும் சிவாஜிகணேசன் வேறு ஜானகிக்கு ஆதரவளிக்கிறார்

பி.கெ.பாலகிருஷ்ணன் சிரித்துக்கொண்டு என்னை மறுத்தார். ’ஜானகி ஓர் அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தியதே இல்லை. தமிழகத்தில் இன்னொரு முக்கியமான மரபுண்டு. மனைவி இல்லத்தரசியாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசுப்பதவி என்பதை ஒரு பொறுப்பு என்பதை விட ஒரு போகம் என்றே மக்கள் நினைப்பார்கள். சட்டென்று முன் அனுபவம் இல்லாத விதவையான ஜானகி அரசப்பதவிக்கு ஆசைப்படுவதை ஒருவகை அடக்க மீறலாக அவர்கள் எண்ண வாய்ப்பிருக்கிறது என்றார்.

ஆனால் ஜெயலலிதா ஏற்கனவே அரசியலில் இருக்கிறார். அவருக்கென ஓர் அடையாளம் உருவாகி இருக்கிறது. அதைவிட முக்கியமாக அவரது உடல்மொழி ஆணவமும் நிமிர்வும் கொண்டதாக இருக்கிறது. அது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஆண்களை நடத்தும் விதம் கண்டிப்பாக தமிழ்ப்பெண்களை கவரும். கிட்டத்தட்ட இந்திரா காந்தி அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றால் ஆச்சரியமில்லை. சிவாஜிகணேசனை மக்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள். அரசியலுக்கு ஒரு பெருந்தன்மை தேவை. சிவாஜி எப்படியோ சுயநலக்காரர் என்ற சித்திரத்தைப் பெற்று விட்டார். மேலும் அவர் கருணாநிதி மாதிரி எம்ஜியாருக்கு எதிரிப்பிம்பம்’

நான் அவர் பேசப்பேச வியப்பிலாழ்ந்தேன். என்னைவிட மிக நுட்பமாக தமிழகத்தை அவர் புரிந்து வைத்திருப்பதாக பட்டது .’தமிழகம் என்றுமே பிரிந்து வாக்களிக்காது. ஒட்டு மொத்த அலையே இருக்கும். ஒரே கட்சிதான் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதா வென்றால் மொத்த ஜானகி அணியும் அவருடன் வந்து சேர்ந்து கொள்ளும்’ என்றார் பாலகிருஷ்ணன். பின்னர் அவர் சொன்ன அனைத்துமே அப்படியே நடைமுறை ஆயின. ‘ஆனால் என்றைக்கு தமிழர்கள் தனித்தனியாகச் சிந்தனை செய்து வாக்களிக்கிறார்களோ அன்றுதான் அங்கே உண்மையில் ஜனநாயகம் வரும். அப்போது அங்கே இம்மாதிரி பெரிய அலைகள் இருக்காது’ என்றார்.

அதன் பின்னர் நான் அதிகம் பேசவில்லை. அவரே உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘தமிழக வரலாற்றாய்வில் ஒர் ஒட்டுமொத்த மாற்றம் நடக்காமல் முன்னகர முடியாது. காலவரிசைப்படி தகவல்களை அமைப்பதை மட்டுமே இன்றுவரை வரலாற்றாய்வாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடிப்படையான பல கேள்விகளுக்கு பதில் இல்லை. தமிழக வரலாற்றில் பாதிப்பங்கு இன்னும் இருளிலேயே இருக்கிறது… களப்பிரர்காலம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஏன் சங்ககாலம் பற்றியேகூட பெரிதாக தெரியவில்லை. அன்றைய அரசியல் சூழல் என்ன? மூவேந்தர்கள் சிறிய மன்னர்கள் மேல் எப்படி மேலதிகாரம் பெற்றார்கள்? ஏதாவது தேர்தல் முறை இருந்ததா?’

நான் பிரமித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘உதாரணமாக திருவிதாங்கூரில் சிறிய ஆட்சியாளர்களான மாடம்பிகள் கூடி மன்னரை தேர்வு செய்யும் முறை மார்த்தாண்டவர்மா காலம் வரை இருந்தது. மார்த்தண்ட வர்மா மாடம்பிகளை ஒழித்து முற்றதிகாரத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன் மாடம்பிகள் வருடம் தோறும் ஒருமுறை அவர்கள் மன்னருக்கு அளிக்கும் ஆதரவை உறுதி செய்யவேண்டும். அதற்கு ஓணவில் என்ற ஒன்று இருந்தது. அந்த வில்லை கொண்டுவந்து மன்னர் சபையில் வைத்தால் அடுத்த ஓணம் வரை ஆதரவு என்று அர்த்தம்….’’

‘அந்த மாதிரி ஏதோ ஒரு வகை தேர்தல்முறை சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழகத்தின் மையநிலப்பகுதிகளில் பல்வேறு படைஎடுப்புகளால் பழையமரபுகள் அழிந்தன. ஆனால் திருவிதாங்கூரில் கோயில்சடங்குகள் விழாக்கள் ஆசாரங்கள் எல்லாவற்றிலும் பழந்தமிழ் மரபே இருந்தது. அந்த மரபை வைத்து சங்ககாலத்தை எளிதில் அறியமுடியும்…’’

 

பாலகிருஷ்ணனின் பேச்சு ஒரு தொடர்பிரவாகம். அவருக்கு எதிராளி இல்லை. ஏன், கவனிக்க ஆள்கூட தேவை இல்லை. சிலர் கூடி அமர்ந்து கேட்க ஆரம்பித்திருப்பதை நான் சற்று நேரம் கழித்துத்தான் பார்த்தேன். ஏழுட்டு டீ. மதியம் அவருக்கு எவரோ சாப்பாடு வாங்கி வந்தார்கள். நானும் சாப்பிட்டேன். மீண்டும் பேச்சு. அப்படியே அந்த இடத்திலேயே சாயங்காலம் ஆகியது.

‘தமிழக வரலாற்றின் ஆகப்பெரிய கேள்வி அன்று உபரி சேகரிப்பதற்கு என்ன வகையான அமைப்பு இருந்தது என்பதே. அந்த கேள்வியை சந்தித்த ஒரு சில வரலாற்றாசிரியர்களே இருக்கிறார்கள். கே.கே.பிள்ளை. நொபுரு கரஷிமா. நான் பிள்ளையை சந்தித்திருக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மேதை அவர். அவர் ஒன்று சொன்னார், அடிமை முறையை அனுமதித்தன் மூலமே நஞ்சை வேளாண்மை செழித்தது. அவ்வாறுதான் சோழர்களின் வெற்றியும் சிறப்பும் உருவானது. மானுட அடிமைகள் இல்லாமல் நஞ்சை வேளாண்மை தொடர்ந்து லாபகரமாக நிகழ முடியாது…. ’

அப்படியே வேளாண்மைக்குச் சென்றார் பி.கெ.பாலகிருஷ்ணன் ‘1883ல் லண்டன் மிஷன் மிஷனரிகள் மார்த்தாண்டம் அருகே அவர்களுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றில் நஞ்சை வேளாண்மை செய்திருக்கிறார்கள். நெல் பயிரிட ஆகும் செலவுகளை முழுக்க பட்டியலிட்டிருக்கிறார்கள். எட்டு வருஷம். எல்லா வேளாண்மையும் நஷ்டமே. என்ன காரணம்? அவர்கள் அடிமைகளுக்கு கூலி கொடுத்தார்கள் அவ்வளவுதான். புலையர்களுக்கு சம்பளம் கொடுத்தால் நெல் விவசாயம்செய்ய முடியாது. அவர்கள் சோறு மட்டுமே உண்ணும் மிருகங்களாக இருந்தால் மட்டுமே அதை வெற்றிகரமாக செய்ய முடியும். நாஞ்சில் நாட்டு செல்வம் என்பது புலையர்களின் குருதிதான்’

மாலை ஐந்தரை மணிக்கு நான் விடைபெற்றேன். என் தலைக்குள் தமிழக வரலாறும், அரசியலும், பொருளியலும், இலக்கியமும் சேர்ந்து சட்டினி அரைக்கும் மிக்ஸிபோல சுழன்று கலங்கிக் கொண்டிருந்தன. எனக்கு மாலை ஆறுமணி வாக்கில் காசர்கோட்டுக்கு ரயில். ரயிலில் படுத்தாலும் நான் பி.கெ.பாலகிருஷ்ணன்னின் சொல்மழையில் நனைந்த படியே இருப்பது போல ஒரு பிரமை. சொற்களின் ஈச்சுழலல். அரைத் தூக்கத்தில் எனக்குள் அவை எங்கெங்கோ ஒலித்துக் கொண்டிருந்தன.

அதன்பினர் நான் மூன்றுமுறை மட்டுமே பி.கெ.பாலகிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறேன். அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தேன். அவருக்கு நீளமான பல கடிதங்களை எழுதினேன். ஓரிருவரிகளில் சில கார்டுகள் மட்டும் அனுப்பியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை நேரில் சென்றபோது உடல்நலமில்லை என்று நரைத்த முள்தாடியும் சோர்ந்த முகமுமாக வந்து கதவைத் திறந்தார். அமரச்செய்தபின் ‘என்ன சொல்கிறீர்கள், தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்?’ என்றார்.

நான் ‘ரப்பர் என்ற நாவல் எழுதியிருக்கிறேன்’ என்றேன். ‘ஓ’ என்றார் ஆர்வமின்றி. நான் அவரது ஆர்வக் குறைவை உடனே புரிந்து கொண்டேன். ரப்பர் என்றதும் ரப்பர் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறேன் என்று புரிந்து கொண்டு விட்டார். ‘பத்துவருஷம் முன்னர் நான் ஒரு தோட்டம் முதலாளி வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ரெம்ப்ராண்டின் ஒரு பெரிய ஓவியத்தை பார்த்தேன். அதுதான் தூண்டுதல்…’ என்றேன். கண்களில் சிறிய மின்னல் தெரிய ‘ஓ’ என்றார் பி.கெ.பாலகிருஷ்ணன். இது வேறு ஒரு ஓ

நான் புன்னகையுடன் ‘ஒரு சாதி எங்கே வசிக்கிறது என்பது முக்கியமானது. அதிகாரத்தில் இருக்கும் சாதி மேடான, மையமான இடங்களில் வசிக்கும். அங்கே கோயில் இருக்கும். தாழ்ந்த சாதி நீர்தேங்கும் இடங்களில் வசிக்கும். நிலத்தின் கடைசித் துண்டுதான் அவர்களுக்கு. ஆனால் ரப்பர் வந்தபோது அதுவரை இல்லாமலிருந்த ஒரு நிலை வந்தது ஊருக்கு வெளியே காட்டில் குடியேறியவர்கள் செல்வந்தர்களானார்கள். விளிம்பு மையமாக ஆகியது. அதைத்தான் எழுதுகிறேன்’ பி.கெ.பாலகிருஷ்ணன் உற்சாகத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார்

நான் ரப்பரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே  சென்றேன். பாலகிருஷ்ணன் குளங்கோரி கதாபாத்திரத்தை ரசித்துச் சிரித்தார்.’நல்ல நாவலில் அந்நாவலின் மையத்துக்கு வெளியே இருப்பவர்கள் நாவலின் மையத்தரிசனத்தை சிறப்பாக பிரதிபலிப்பார்கள்…’ என்றார். குற்றமும் தண்டனையும் நாவலில் அப்படி மையத்தை சரியாகப்பிரதிபலிக்கும் கதாபாத்திரம் ஸ்விட்ரிகைலோவ் என்றார்.

பாலகிருஷ்ணன் ’நாவல் -சித்தியும் சாதனையும்’ என்ற முக்கியமான நூலை எழுதியிருந்தார். ’அதை நீ வாசிக்கவேண்டும்’ என்றார். வீட்டுக்குள் சென்று தேடியும் நூல் அகப்படவில்லை. நான் பல இடங்களில் தேடியும் நூல் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணனின் நூல்கள் அப்போது பல பதிப்புச் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தன. அவரே உருவாக்கிய சிக்கல்கள். மிதமிஞ்சிய முன்பணமும் பங்குப்பணமும் கேட்டார் அவர். நான் அந்நூல் உட்பட அவரது இருநூல்களை மேலும் பன்னிரண்டு வருடம் கழித்தே வாசித்தேன். அவரது ’புளூட்டோ பிரியப்பட்ட ப்ளூட்டோ’ என்ற நாவலை இன்றுவரை வாசித்ததில்லை

’புளூட்டோ பிரியப்பட்ட ப்ளூட்டோ’நாவலை நான் விரும்புவேன் என்றார் சுந்தர ராமசாமி, அது நாயைப்பற்றிய நாவல். அதை நான் பி.கெ.பாலகிருஷ்ணன்னிடம் சொன்னேன். “ஸ்வாமி எப்படி இருக்கிறார்?’ என்றார். அவருக்கு சுந்தர ராமசாமியின் ஜேஜேசிலகுறிப்புகள் மிகவும் பிடித்திருந்தது. அது ஆற்றூர் ரவிவர்மா மொழியாக்கத்தில் மாத்ருபூமி இதழில் அப்போது வெளியாகிக்கொண்டிருந்தது. ’நல்ல வாற்று [சாராயம் வடித்தல்] அது’என்றார். அனுபவத்தை நொதிக்கவைத்து சாராம்சத்தை ஆவியாக்கி குளிரச்செய்து எடுக்கவேண்டும், அதுவே கலை என்று அவர் சொல்வதுண்டு.

பாலகிருஷ்ணன் ‘மாயாத்த சந்த்யகள்’ என்ற ஒரு அற்புதமான நூலை பலவருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார் அது அவர் பழகிய பல எழுத்தாளர்களைப்பற்றிய சித்திரமும் மதிப்பீடும் கொண்ட கட்டுரைகள் அடங்கிய சிறு நூல். அதில் சி.ஜெ.தாமஸ் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஜேஜே சிலகுறிப்புகளுக்கான தூண்டுதலாக இருந்தது என்று சுந்தர ராமசாமி சொல்லியிருந்தார்.சிஜெயின் கலக ஆளுமையின் நுட்பமான சித்திரம் அதில் இருந்தது.

சிஜே இறந்தபோது அவர் நல்லவர் இனியவர் என்ற வகையில் எழுதப்பட்ட பல அஞ்சலிக்கட்டுரைகளை நக்கல் செய்தபடி ஆரம்பிக்கும் அந்தக்கட்டுரை.’சொள்ளேம்ப யோகன்னான் பாதிரியாரைத் தெரியுமா? என்னைவிட மிக நல்லவர். என்னை விட மிகமிக இனியவர். போதாக்குறைக்கு பாதிரியும்கூட. அவர்தான் என் தந்தை. அந்த சத்தியகிறிஸ்தவரைப்பற்றி இந்த ஆசாமிகள் ஏன் அஞ்சலிக்கட்டுரை எழுதவில்லை? நான் எழுதிய நாலு புத்தகங்கள்தானே என்னை அஞ்சலிக்கட்டுரையை அடையச்செய்தன? அப்படியானால அதில் உள்ள என்னைப்பற்றித்தானே எழுதவேண்டும்?’ என்று சிஜெ சொல்லக்கூடும் என்று பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதியிருந்தார்

பாலகிருஷ்ணன் ஜேஜேயை சிஜெயாகவே வாசித்துக்கொண்டிருந்தார். ‘அது அவனேதான்’ என்றார். ‘அப்படியா? அது சுந்தர ராமசாமியின் விருப்ப பிம்பம்தானே?’ என்றேன். ‘அதுவும்தான். சிஜே ஸ்வாமியில் பிரதிபலிக்கிறார். ஸ்வாமி சிஜேயில் தன்னை காண்கிறார்…. நாவலை விடு பாஸ்வலின் ஜாண்சன் கூட அப்படிப்பட்ட சித்திரம்தான்’என்றார் பி.கெ.பாலகிருஷ்ணன். அய்யர்களை கேரளத்தில் ஸ்வாமி என்பார்கள்.

சுந்தர ராமசாமியை நான் சந்தித்தது பேசுவது பற்றி நான் விரிவாக சொல்வேன். சில்லறை வேடிக்கைகளுக்குக் கூட பி.கெ.பாலகிருஷ்ணன் உரக்கச் சிரிப்பார். உண்மையில் பி.கெ.பாலகிருஷ்ணன் எம் கோவிந்தன், கௌமுதி பாலகிருஷ்ணன் ஆகிய இருவரின் உருவாக்கம். அவர்களை ஆதர்சமாகக் கொண்டு உருவான சி ஜெ தாமஸ், சி என் ஸ்ரிகண்டன் நாயர், அய்யப்ப பணிக்கர், பி கெபாலகிருஷ்ணன், ஆற்றூர் ரவிவர்மா, எம் கங்காதரன் ஆகியோரின் வரிசையை சேர்ந்தவர்தான் சுந்தர ராமசாமியும். அவர்களின் அழகியல் கொள்கைகள் சமூகவியல் நம்பிக்கைகள் எல்லாமே ஒன்றுதான்.

நான் பாலகிருஷ்ணனின் ஜாதியமைப்பும் கேரள சரித்திரமும் என்ற நூலை தமிழாக்கம் செய்யலாமா என்று அவரிடம் கேட்டிருந்தேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. அந்நூலை அவரது மனம் தாண்டிவிட்டிருந்தது. மொத்த நூலையும் மறு ஆக்கம் செய்ய எண்ணுவதாக அவர் சொன்னார். நான் மீண்டும் வற்புறுத்தி கடிதம் எழுதினேன். மீண்டும் அவரைச் சந்திக்கச் சென்றேன். ‘வேண்டுமென்றால் இனி நான் உறங்கட்டுமா நாவலை மொழியாக்கம் செய்’ என்றார் பாலகிருஷ்ணன். [இப்போது அது ஆ.மாதவன் மொழியாக்கத்தில் இனிநான் உறங்கட்டும்’ என்றபேரில் சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்திருக்கிறது]

இனி நான் உறங்கட்டுமா? பாலகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல். அதன்பின் அவர் புனைவிலக்கியம் என ஏதும் எழுதவில்லை. அவருக்கு புனைவிலக்கியத்தில் ஆர்வமே இருந்ததில்லை. அவர் கேரளகௌமுதியில் பொறுப்பாசிரியராக இருந்தார். நிரந்தரக் கலகக்காரரும் சுவாரசியமான வசைபாடியுமான பி.கெ.பாலகிருஷ்ணனை நிர்வாகம் ஒரு கட்டத்தில் வேலைநீக்கம் செய்தது. அவருக்காக அன்று கேரள அறிவுலகம் பரிந்து வந்தது. கேரளகௌமுதி பணிந்து பாலகிருஷ்ணனை வேலைக்கு திரும்ப அழைத்தது.

ஆனால் அந்த ஓய்வுநேரத்தில் பி.கெ.பாலகிருஷ்ணன் அந்நாவலை எழுதினார். 1976 ல் வெளிவந்த இனி நான் உறங்கட்டுமா? அன்று மிக மதிப்புமிக்க விருதாக கருதப்பட்ட வயலார் விருதை 1978ல் வென்றது. அன்றுமுதல் இன்றுவரை ஆறுமாதத்துக்கு ஒரு பதிப்பாக வந்தபடியே உள்ளது. அந்த பணத்தின் நிழலில் மிஞ்சிய வாழ்நாள் முழுக்க சுதந்திரமானவராக வாழ்ந்தார் பி.கெ.பாலகிருஷ்ணன். ‘கங்காதரனுக்கு தென்னந்தோப்புண்டு. எனக்கு இந்த நாவல்’ என்று சொல்வார்.

எரணாகுளம் எடவனக்காடு கிராமத்தில் 1926ல் ஒரு ஈழவக்குடும்பத்தில் பணிக்கச்சேரி கேசவ ஆசானுக்கும் மணியம்மைக்கும் மகனாகப்பிறந்த பி.கெ.பாலகிருஷ்ணன் செறாயி என்ற சிறுநகரில் கல்விகற்றார். மிகத்திறன் வாய்ந்த மாணவராக அறியப்பட்ட பி.கெ.பாலகிருஷ்ணன் எரணாகுளம் மகாராஜா கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார். படிப்பு நடந்துகொண்டிருக்கும்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் சூடு பிடிக்கவே அதில் ஈடுபட்டு சிறைசென்றார். அத்துடன் படிப்பு நின்றது. அரசியல் ஆரம்பித்தது.

சிறையில் இருந்து வெளிவந்த பி.கெ.பாலகிருஷ்ணன் காங்கிரஸின் முழுநெர ஊழியராக இருந்தார். நாராயணகுருவின் இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். நாராயணகுருவின் மாணவரும் சமூகசீர்திருத்தவாதியும் நாத்திக இயக்க முன்னோடியுமான சகோதரன் அய்யப்பனின் நெருக்கமான மாணவராக ஆனார். காங்கிடஸில் இருந்து கேரள சோஷலிஸ்ட் கட்சிக்குச் சென்று முழுநேர ஊழியராக பணியாற்றினார். காங்கிரஸ் நடத்திய ஆஸாத் என்ற நாலிதழின் உதவி ஆசிரியராக பணியாற்றி இதழியல் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் எல்லா கட்சிகளிலும் இதழியலையே தன் களமாக கொண்டிருந்தார்

கேரளபூஷணம் இதழிலும் பின்னர் கேரளகௌமுதி இதழிலும் ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் முக்கியமான நூல்களை எழுதினார். 1954ல் நாராயணகுரு தொகுப்பு என்ற நூல் வெளிவந்தது. அதுவே முதல் நூல். நாராயணகுருவைப்பற்றிய ஒரு ஆய்வும் அவரைப்பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுதியுமாக அமைந்த அந்நூல் இன்றும் ஒரு மகத்தான ஆவணமாக கருதப்படுகிறது.

அதன்பின் இலக்கிய விமர்சன நூல்களை பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதினார். மலையாளத்தின் முதல் நாவலாசிரியரான சந்து மேனனைப்பற்றி ‘சந்துமேனன் ஒரு விமர்சன ஆய்வு’ ஒரு நூல். மலையாளத்தின் முக்கியமான கவிஞராகிய குமாரன் ஆசானைப்பற்றிய ‘காவிய கலை குமாரனாசான் வழியாக’ இன்னொன்று. நாவல் பற்றியது மூன்றாவதாக. அவை கேரளசிந்தனையை பரபரக்கச் செய்த நூல்கள். இலக்கியவிமர்சனத்தையே இலக்கியமாக ஆக்கியவை

‘இலக்கியக் கோட்பாடுகளை உருவாக்குவதை விட இலக்கிய நூல்களை பற்றி நல்ல சொற்றொடர்களை உருவாக்குவதே நல்ல விமர்சனம்’ என்று ஒருமுறை சொன்னார் பாலகிருஷ்ணன். நல்ல விமர்சனம் என்பது நல்ல வாசிப்பு. நல்ல வாசிப்பு அந்த இலக்கிய ஆக்கத்தைப் பிரதிபலிப்பதாக ஆகும். கவிதை விமர்சனம் கவித்துவம் கொள்ள வேண்டும். அதுவே எழுத்தாளன் எழுதும் விமர்சனமாக இருக்கமுடியும். எலியட்டும் கூல்ரிஜும் அவருக்கு பிடித்த விமர்சகர்கள் ‘…எனென்றால் அவர்களும் கவிஞர்கள்’

தன் விமர்சனக்கருத்துக்கள் சரி என பாலகிருஷ்ணன் சொல்வதில்லை. ’…..ஆனால் அவற்றில் அசலான அவதானிப்புகள் உள்ளன. அவை வாசகனுக்கு அப்படைப்புகளை மேலும் வாசித்து உள்ளே செல்ல உதவும். கடைசியில் விமர்சனத்தின் பயன் இதுவே. பிற எல்லாமே சும்மா’ நான் என் விமர்சனங்களுக்கும் இந்த வரியையே விதியாகக் கொள்கிறேன்.

பி.கெ.பாலகிருஷ்ணன்னின் நடை பூசலிடும் தன்மை கொண்டது. சிலசமயம் சொற்பொழிவுபோல ஒலிக்கக் கூடியது. ஆய்வாளனுக்குரிய அடக்கம் அவரில் அமைந்ததே இல்லை. ஆனால் வாசகனின் கற்பனையையும் தர்க்கத்தையும் சீண்டி ஒளிரச்செய்தபடியே செல்வது அது. மலையாளத்தில் அவரது கட்டுரை நடை பலவழிகளில் பிரமிளின் நடைக்கு இணையானது. அத்துமீறும், அலையும், ஆனால் அவ்வப்போது பற்றி எரியும், கவித்துவ ஒளிவிடும்.

பி.கெ.பாலகிருஷ்ணன் பேசுவதும் அப்படித்தான். சுட்டுவிரலை தூக்கி மேடைப்பேச்சுக்குரிய பாவனைகளுடன் உரக்க பேசுவார். சில சமயம் சுரேஷ் கோபி கலகக்கார போலீஸ் அதிகாரியாக வந்து பேசும் ஆவேச வசனங்களை கேட்கும்போது நான் பி.கெ.பாலகிருஷ்ணனை புன்னகையுடன் நினைவுகூர்வதுண்டு. ‘தான் சொல்வது எப்போதும் சரியாக இருந்தாகவேண்டும் என்று நினைப்பவன் ஒருபோதும் முக்கியமான எதையும் சொல்லிவிட முடியாது’ என்று சட்டென்று ஒரு புதிய பொன்மொழி பிறந்து வரும். ‘வரலாறு அழிவை உள்ளூர விரும்புகிறது, ஹிட்லரையும் ஸ்டாலினையும் ஆசையுடன் பெற்று முலையூட்டுகிறது’ என ஒரு புரியாத வரி வந்து விழும்

பிரமிப்புடன் பி.கெ.பாலகிருஷ்ணனை பார்த்து அமர்ந்திருப்பேன். என் வரையில் எழுத்துக்கும் பேச்சுக்கும் இடையே வேறுபாடே இல்லாதவராக இருந்தார். என்னை அவர்தான் நாராயண குருவிடம் இட்டுச் சென்றார். அழகான சொற்றொடர்களில் மோகம் கொள்ளவைத்தார். கொஞ்சம் இசகுபிசகாக இருந்தாலும் பரவாயில்லை புதிதாகச் சிந்தனைசெய்து பார்க்கலாமே என்று எண்ண வைத்தார் .

அனைத்துக்கும் மேலாக அவர் எனக்கு அபாரமான தன்னம்பிக்கையை அளித்தார். ‘பூமியில் இன்று வாழும் எந்த சிந்தனையாளனிடமும் எனக்கு தாழ்வுணர்ச்சி இல்லை’ என்ற அவரது வரி என்னை அன்று அதிரச் செய்திருக்கிறது. அந்த தன்னம்பிக்கையை என் ஆயுதமாக , கவசமாக கொண்டேன். எழுத்தை சிந்தனையை அஞ்சும், எழுத்தாளனை எல்லா வழிகளையும் பயன்படுத்தி அவமதித்து எள்ளிநகையாடும் அற்பர்கள் மலிந்த இந்த தேசத்தில் எழுத்தாளன் தன் சொந்த முதுகெலும்பின் பலத்தாலேயே நின்றாக வேண்டுமென அவரிடம் கற்றேன்

பி.கெ.பாலகிருஷ்ணனின் எழுத்துமுறையை நான் சிலசமயம் என் எழுத்தில் காண்பதுண்டு. அவர் நாராயணகுரு பற்றிய நூலில் தீர்க்கதரிசிகளைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசனம் முழுமையாக முன்வைக்கப்பட்டதும் விதையை விட்டுவிட்டு கனி அழுகுவதுபோல தீர்க்கதரிசி மரணம் நோக்கிச் செல்கிறான். ஏசு சிலுவையை நோக்கி, காந்தி துப்பாக்கியை நோக்கி. அவர்கள் முன்வைத்த அந்த ஆதர்சம் என்பது ஒரு கனவு. அந்த மானுடக்கனவை தன் குருதியால் அடிக்கோடிட்டாகவேண்டும். அந்த வரிகளினூடாக மொத்த வரலாற்றையே வேறு ஒரு கனவுச்சூழலுக்கு கொண்டுசென்றார் பாலகிருஷ்ணன். உருவகங்களினூடகச் சிந்திப்பதே எழுத்தாளனின் வழிமுறையாக இருக்கவியலும் என்று காட்டினார்.

பாலகிருஷ்ணனுக்கு மூன்று நெருக்கமான நண்பர்கள் இருந்தார்கள். டாக்டர் அய்யப்ப பணிகக்ர், எம்.கங்காதரன், எம்.கெ.ஸானு மாஸ்டர். இவர்களில் ஸானு மாஸ்டரிடம் எனக்கு அறிமுகம் இல்லை. மற்ற இருவரிடமும் ஆற்றூர் வழியாக அறிமுகம். பாலகிருஷ்ணன் கேரள வரலாற்றின் பல நாயகர்களிடம் நெருக்கமான அறிமுகம் உடையவர். பலரிடம் மோதியவர். எந்தக்கருத்தையும் நேருக்குநேர் சொல்லி விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்று சொல்லிவந்தவர் பாலகிருஷ்ணன்

எழுத்தாளனின் அரசியல் என்று நான் இன்று சொல்லும் வரியை பாலகிருஷ்ணனின் ஆளுமையில் இருந்தே உருவாக்கிக் கொண்டேன். அவர் எந்தக் கட்சி? இதுசாரியா வலதுசாரியா? இடதுகள் அவரை வலது என்றார்கள். வலதுகளுக்கு அவர் இடதுசாரி. உண்மையில் தன் இலக்கியநுண்ணுணர்வைக்கொண்டு சமகால அரசியலை அணுகி தன் நீதியுணர்ச்சிக்கு சரியென்று பட்டதை சொல்லிக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன். ஆரம்பகாலத்தில் அவர் பலகட்சிகளில் இருந்திருக்கிறார். ஆனால் பின்னர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஈழவ அரசியலிலும் அவருக்கு ஈடுபாடு இல்லை.

சுந்தர ராமசாமி அரசியல் பேசவில்லை என்பதில் பாலகிருஷ்ணனுக்கு வருத்தம். ’அரசியலை பேசாமலிருக்கும் எழுத்தாளன் தன் எழுத்துக்களை விமர்சனங்களில் இருந்து பாதுகாக்க விரும்புகிறான். அது ஒரு கோழைத்தனமே’ என்பார். ’எழுத்தாளன் அரசியல் நிபுணனோ அல்லது செயல்வீரனோ அல்ல. ஆனால் பிறர் சொல்லமுடியாத ஒன்றை அவன் சொல்லிவிட முடியும். அவன் பேசாவிட்டால் அந்த இடம் காலியாகவே இருக்கும்’ என்பது பாலகிருஷ்ணனின் தரப்பு.

1991 ல் நான் மதுரைக்குச் சென்று அருண்மொழியைச் சந்தித்துவிட்டு அப்படியே அவரைப்பார்க்க செல்வதாக இருந்தேன். ‘எனக்கு உடல்நலம் சரியில்லை.நீ பிறகு வா’ என்று அவர் பதில் போட்டார். நாகர்கோயில் சென்று சுந்தர ராமசாமியை சந்தித்துவிட்டு மீண்ட நான் பி.கெ.பாலகிருஷ்ணன்னுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். நான் ஒரு பெண்ணை கண்டுகொண்டதாக. பெரிய கண்கள் கொண்டவள், மாநிறமானவள், ஜானகிராமனின் மண்ணைச் சேர்ந்தவள். அவர் எனக்கு ஒரு கார்டில் ‘காதல் கவிதைகள் எழுது. மொழி நெகிழும்’ என்று எழுதினார்.

 

அடுத்த மாதம் மீண்டும் பி.கெ.பாலகிருஷ்ணன்னை சந்திக்கச் சென்றேன், இம்முறை கடிதமேதும் இல்லாமல். சோர்ந்த நிலையில் இருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே பேசினோம். அதை சந்திப்பென்று சொல்லமுடியாது. ‘உடல்நிலை சரியில்லை …ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்’ என்றார். நான் திரும்பிவந்து ஆற்றூர் ரவிவர்மாவிடம் ‘பி.கெ.பாலகிருஷ்ணன்னுக்கு உடம்பு சரியில்லையாம்’ என்றேன். ‘பாலகிருஷ்ணனுக்கு எந்த பிரச்ச்சினையும் இல்லை. 1952ல் நான் அவரை முதலில் சந்திக்கும்போதே உடம்பு சரியில்லை என்றுதான் சொன்னார். அப்படிச்சொல்வது அவருக்கு பிடிக்கும்’ என்றார் ஆற்றூர். மறுநாள் பி.கெ.பாலகிருஷ்ணன் இறந்து போய் விட்டதாக செய்தி வந்தது.

 

 

 மலையாள இலக்கியம்

மறுபிரசுரம் /முதற்பிரசுரம்/Dec 30, 2010

முந்தைய கட்டுரைசென்ற காலங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 47