கிளியின் அழகியல்

ra

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு

அன்புடன் ஆசிரியருக்கு

நலமா?

இயல்புவாதம் யதார்த்தவாதம் குறித்து தொடங்கிய விவாதம் இலக்கிய வாசகர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும்.

கே.என்.செந்திலின் சகோதரிகள் மற்றும் அது குறித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தை முன்னிட்டு ஒரு விவாதம் நடந்தது. அதிலும் மெலோடிராமா “கண்ணீர்க்காவியம்” போன்ற நக்கலான வார்த்தைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. சகோதரிகள் குறித்த உங்களது கட்டுரை இயல்புவாதம் குறித்த ஒரு விவாதத்தை தொடங்கியிருக்கிறது. என்னளவில் இயல்புவாதம் யதார்த்தவாதம் இரண்டு இலக்கிய வகைமைகள் குறித்து எனக்கிருந்த குழப்பங்களை அக்கட்டுரை தீர்த்திருக்கிறது.

நீங்கள் எழுதிய பெரும்பாலான புனைவுகளை இவ்விரு தன்மைகளுக்குள் பொருத்திப் பார்க்க முடியாது. உங்களுக்கான களம் வேறானது. ஆனால் நீங்கள் கவனப்படுத்தும் ஆக்கங்கள் பல இவ்விரு வகைமைக்குள் வருகிறவை. பூமணியின் பிறகு கண்மணி குணசேகரனின் அஞ்சலை ஆகிய இயல்புவாதப் படைப்புகளை மிகச் சரியாக அறிமுகம் செய்திருந்தீர்கள். இந்த “உண்மைக்கதை” பாணியைத் தாண்டி புனைவின் வெவ்வேறு வகைமைகளில் எழுதப்படும் நிறைய படைப்புகள் செயற்கையாக இருக்கின்றன. மாய யதார்த்தம் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஏன் அத்தகைய படைப்புகள் செயற்கையாகின்றன என்பது குறித்து விரிவாக எழுதியிருந்தீர்கள்.

கதை சொல்லல் என்ற கலை தன்னளவியேயே கொண்டிருக்கும் மாயத்தன்மையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறவை யுவன் சந்திரசேகரின் ஆக்கங்கள். அவரது குள்ளச்சித்தன் சரித்திரம்,வெளியேற்றம்,பகடையாட்டம் ஆகிய நாவல்கள் வெளிப்படுத்தியிருக்கும் புனைவின் சாத்தியங்கள் வியப்பளிக்கக்கூடியவை. யுவனின் எந்தப் படைப்பும் புரிந்து கொள்ள முடியாத எதையும் நேரடியாகப் பேசுவதில்லை.

கரட்டுப்பட்டி,திருவண்ணமாலை,திண்டுக்கல்,தஞ்சாவூர்,பழனி போன்ற ஊர்கள் தான் இப்புனைவுகளில் கதை நிகழும் இடங்களாகின்றன. பெரும்பாலும் மிகச்சாதாரண மனிதர்களே கதை மாந்தர்களாகவும் வருகின்றனர். யாரோ ஒருவர் மற்றொருவரிடம் தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியோ சாலையில் நடந்தபடியோ விவரித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த விவரிப்புகளைக்கூட மாயத்தன்மை உடையதாக சுவாரசியமானதாக மனித வாழ்வில் என்றும் நீடிக்கும் கேள்விகளை நோக்கி நகர்த்துவதாக மாற்றிக் காட்டுவது தான் யுவனின் முக்கியமான வெற்றி என்று நினைக்கிறேன். உங்களுடைய நாவல்களிலும் வடிவச்சோதனை இல்லாத ஆக்கங்கள் பெரும்பாலும் இல்லை. என்னைப் பொறுத்தவரை வெண்முரசு நாவல் வரிசையின் கிராதமும் நீலமும் வடிவ ரீதியாக தமிழ் நாவலின் உச்சங்கள் அடையப்பட்ட படைப்புகள்.

நேற்று கிளி சொன்ன கதை வாசித்தேன். முன்னரே சிலமுறை வாசிக்க முயன்று தோற்ற படைப்பு. ஆனால் இயல்புவாதம் குறித்து வாசித்த பின்னர் மிக எளிதாக வாசித்துச் செல்ல முடிந்தது.

இக்கதையின் மூலம் இயல்புவாதம் குறித்த சில புரிதல்கள்.

1.இயல்புவாதம் பிரதானமாக “பதிவு” செய்யும் கலை. ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழக்கூடிய மக்களின் புழங்கு மொழி பயன்படுத்தும் பொருட்கள் அவர்கள் சடங்குகள் நம்பிக்கைகள் போன்றவற்றை பதிவு செய்வதற்கான வழியை இயல்புவாதம் தன்னுடைய “சாவகாசமாக” கதை சொல்லிச் செல்லும் உத்தியால் சாத்தியப்படுத்துகிறது. பூமணியின் வெக்கை நாவல் இந்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளும். கிளி சொன்ன கதையில் ஒரு வாழ்க்கைச் சூழலின் வெவ்வேறு வகைப்பட்ட நுண்தகவல்கள் வெளிப்பட்ட படியே உள்ளன. சிகப்பி கறுப்பன் என விலங்குகள்,உணவு வகைகள்,மக்கள் வழி மறுமக்கள் வழி என்று சுதந்திரத்துக்கு பிறகு நாயர் சமூகம் எதிர்கொண்ட பிரத்யேக சிக்கல்கள் என படைப்பு மொத்தமும் தகவல்களால் நிறைந்துள்ளது.

2.மனித உணர்வுகளை பிரதானப்படுத்தாத அம்சம். இது யதார்த்தவாதத்தில் இருந்து இயல்புவாதத்தை பிரித்து நிறுத்தும் பண்பு. சூழலின் ஒரு பகுதியாக மட்டுமே மனிதர்கள் வரமுடியுமே ஒழிய புனைவுப்பரப்பை மனிதர்கள் தங்களது உணர்வுகளால் நிரப்பிக் கொள்ள முடியாது. மகாதேவருடன் தங்கப்பன் சொத்து விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வரும் விசாலம் தங்கப்பனை எதிர்த்து பேசுகிறார். அவரை அடித்து உள்ளே தள்ளியபின் பார்த்து பார்த்து சமைத்த உணவு வகைகள் அத்தனையையும் பாண்டங்களை உடைத்து கொட்டிக் கவிழ்க்கிறார். மிகப்பெரிய உணர்வுக் கொந்தளிப்பை இவ்விடத்தில் உருவாக்கி இருக்க இயலும். ஆனால் அந்த சம்பவம் நடந்ததன் சுவடே தெரியாமல் மிக இயல்பாக அந்தக் காட்சி கடந்து செல்கிறது.

3.உணர்வுகள் வெளிப்படும் இடங்கள் மிகக்குறைவாக இருப்பதாலேயே பாலையில் தனித்து நிற்கும் பனை போல அவற்றை உணர்வுகளை துல்லியமாக அடையாளப்படுத்த முடிகிறது. அனந்தனை அவனது அப்பா தங்கப்பன் கையாளாகதவன் என்று சொல்லி அடிக்கும் போது மிக இயல்பாக அனந்தனின் அண்ணன் வந்து அவரைத் தடுத்து நிறுத்தும் இடம். பதிமூன்று வயது சிறுவன் எனினும் வீட்டில் நடப்பதை தன்னிடமும் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்று அவன் காட்டும் உறுதி தங்கப்பனை ஆச்சரியப்படுத்துகிறது. விசாலம் கணவனான தங்கப்பனிடம் நடந்து கொள்வதைப் போன்ற பவ்யத்துடன் சொந்த மகனிடமும் நடந்து கொள்கிறாள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

4.மிகக்குரூரமான உணர்வுநிலைகளை அற்பத்தனங்களை சாதாரணமாகச் சொல்லி குறிப்புணர்த்தும் தன்மை. மகாதேவர் தங்கப்பன் தன் மனைவியை அடித்தபிறகும் சற்றும் கலங்காமல் மீதியிருக்கும் உணவை வந்து பரிமாறச் சொல்வதும் அந்த வீட்டை விட்டு புறப்படும் வரை அவர்களை சுரண்டியுண்ண நினைப்பதையும் மிகச் சாதாரணமான தொனியில் சொல்லிச் செல்கிறது. இத்தகைய இயல்பான தன்மை இவ்வகையில் எழுதப்படும் எல்லாப் புனைவுகளுக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் பின்னணியைக் கொடுத்து விடுகிறது. செடல் நாவலில் செடல் ஊரைவிட்டு தப்பியோடும் சமயத்தில் பூப்பெய்துவது அஞ்சலை நாவலில் அஞ்சலையை அவள் கணவன் ஆறுமுகமும் அவள் சகோதரியும் சேர்ந்து குழந்தையுடன் வீட்டைவிட்டு துரத்துவது போன்ற சித்தரிப்புகள் நினைவில் எழுகின்றன.

இக்குறுநாவலின் கால அளவு ஒரு நாள். முதல்நாள் கிளிப்பாட்டு என்ற ராமாயணக்கதையை அம்மாவுடன் சென்று பார்த்து விட்டு வந்து அனந்தன் எனும் எட்டு வயதுச்சிறுவன் தூங்கி மறுநாள் விழிப்பதில் தொடங்கி அன்று மாலை அவன் அம்மாவுடன் ராமாயணக்கதையை கேட்கச் செல்வது வரையிலான குறைந்த காலத்திற்குள் அந்த சிறுவனின் பார்வையில் சிக்கக்கூடிய ஒரு உலகத்தை இப்புனைவு தனது களமாக்கிக் கொண்டுள்ளது. மிகுந்த நிதானமான சித்தரிப்புகளின் வழியாக வாசகனை உள்ளே அழைத்துச் சென்று அங்கு உலவும் மனிதர்களின் அகம் சொற்களின் வழியே வெளிப்படாமல் அவர்களின் செயல்கள் சூழலை அவர்கள் கவனிக்கும் விதம் போன்றவற்றின் வழியாகவே சொல்லப்படுகிறது. ஒன்பது வயது சிறுவனான அனந்தனின் பார்வையிலேயே மொத்த புனைவும் நகர்ந்தாலும் அவன் வழியாக அச்சூழலினை ஒட்டுமொத்தமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

அவன் காணும் உலகம் அவன் மீது குரூரத்தை செலுத்துகிறது என்பது போன்ற ஒரு வாசிப்புக்கு இப்புனைவில் இடமிருக்கிறது. ஆனால் அனந்தனைத் தாண்டி பார்வையை நகர்த்திச் செல்லும் போது அங்கு நிகழ்கிறவை அனைத்தும் “இயல்பாகவே” தோன்றுகின்றன. அன்றாட வாழ்வின் இயல்பில் உறையும் குரூரத்தையும் மென்மையான உள வன்முறைகளையும் அழுத்தமாக சொல்வதற்கு இயல்புவாதம் சரியான கூறுமுறை என்று எண்ணுகிறேன்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள சுரேஷ்

அந்தக்கதை தன்வரலாற்றுத்தன்மை கொண்டது. குழந்தையின் பார்வையில் அமைந்தது. ஆகவே அந்த அழகியலைத் தெரிவுசெய்தேன். ஆனால் அவ்வடிவு என்னை மேலும் மேலும் கிளர்த்தவில்லை. என் உள்ளம் ஒரு புனைவுத்தளத்தை மீறி எழுந்து சென்று அந்தபுலத்தின் உச்சம் ஒன்றைச் சென்று தொடுவது. நானே உருவாக்கிய புனைவுக்களத்தின் ஒருபகுதியை நானே சிதைத்துத்தான் அந்த உச்சத்தை அடைந்திருப்பேன். ஆகவேதான் கிளிசொன்ன கதையை மீண்டும் தொடரமுடியவில்லை. மேலும் ஐந்து பகுதிகள் எழுதி ஒரு நாவலாக முடிக்க எண்ணியிருந்தேன். பார்ப்போம். வெண்முரசில் இந்த அழகியலில் ஆடி முடிந்தால் மீண்டும் அங்கே திரும்ப முடியலாம்

ஜெ

கிளி சொன்ன கதை -கடிதம்

கிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்

கிளி சொன்ன கதை :கடிதங்கள்

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55